சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியாக சென்ற பாராளுமன்ற தேர்தலில் பயணித்த பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தனது சமூக அமைப்பான வன்னியர் சங்கத்துடன் இணைந்து பல்வேறு கட்டத் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது.
முதலில், மாநிலம் முழுக்க ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகங்களில் அந்தந்த வி.ஏ.ஓ.க்களிடம், 20 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அடுத்து யூனியன் அலுவலகமான ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.களிடம் மனு வழங்கினார்கள். தொடர்ந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு என 5 கட்டமாக மனு கொடுக்கும் போராட்டங்களை நடத்தினார்கள்.இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆலோசனைப்படி ஜனவரி 29-ந் தேதி ஆறாவது கட்டமாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் தமிழகம் முழுக்க நடந்தது.
பா.ம.கவுக்கு வாக்கு வங்கி உள்ள வடமாவட்டங்களில் மட்டுமின்றி, அ.தி.மு.க. கோட்டை என இ.பி.எஸ். நம்பிக்கையுடன் இருக்கும் மேற்கு மாவட்டத்திலும் கூட்டணிக் கட்சியான பா.ம.க தன் பலத்தைக் காட்டியது. ஈரோட்டில் 29-ந் தேதி காலை அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பா.ம.க.வினர் குவியத் தொடங்கினர்.
ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். பா.ம.க.வினர் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து பெருந் துறை ரோடு வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு முழக்கமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். சில நிர்வாகிகள் மட்டும் உள்ளே சென்று மாவட்ட ஆட்சியர் கதிரவனை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதேபோல் நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள். அரசியல் ரீதியாக பா.ம.க.வின் அமைப்பு பல மாக இருப்பதை காட்டவும், வன்னியர் சமூக மக்களுக்கு பா.ம.க. மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் இந்த 20 சதவீத உள் ஒதுக்கீடு கோரிக்கையும் அதன் தொடர்ச்சியாக நடந்த மனு கொடுக்கும் போராட்டங்களும் பா.ம.க.வுக்கு பயன் கொடுத்துள்ளது.
அதேசமயம் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. எதிர்பார்க்கும் தொகுதி கிடைக்குமா அதற்கான நெருக்கடியை இது உருவாக்குமா என்பது போகப்போகத் தெரியும்.