மு.க.ஸ்டாலின் தலைவரான பிறகு தி.மு.க. நடத்தும் முதல் முப்பெரும் விழா செப்டம்பர் 15-ல் விழுப்புரத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், தங்கள் மாவட்டத்தில் தலைகீழ் மாற்றங்களை, கட்சித்தலைமை உண்டாக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வினர்.

வட மாவட்டங்களில் மிகப்பெரியது விழுப்புரம் மாவட்டம். மொத்தம் பதினோரு சட்டமன்றத் தொகுதிகள். இவற்றில் ஏழு தொகுதிகளை கடந்த தேர்தலில் தி.மு.க. வென்றது.

விழுப்புரம் மாவட்டத்தை தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டம் என்று மூன்றாக பிரித்திருக்கிறது தி.மு.க.

வடக்கு மா.செ.யாக செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தானும், தெற்கு மா.செ.யாக முன்னாள் எம்.எல்.ஏ. அங்கயற்கண்ணியும், மத்திய மா.செ.யாக முன்னாள் அமைச்சர் பொன்முடியும் உள்ளார்கள்.

Advertisment

dmk-admk

விழுப்புரம் வடக்கு மாவட்டம் :

மா.செ.யாக உள்ள மஸ்தான், படிப்படியாக முன்னேறியவர். செஞ்சி பேரூராட்சியின் சேர்மனாக ஐந்து முறை வென்றவர். தனக்குக் கீழுள்ள நிர்வாகிகளோடும், தொண்டர்களோடும் மிக நெருக்கமாக இருந்தவர்.

""இப்ப ரொம்ப மாறிவிட்டார். தி.மு.க.வினரைவிட அ.தி.மு.க. அமைச்சர் சி.வி. சண்முகத்தோடும், அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலையோடும்தான் இப்போது நெருக்கம் பாராட்டுகிறார். ஒரு மேடையில் "யோவ்... நீங்க எப்ப வேணாலும் இவங்க பக்கத்துல நிக்கலாம், நான் இப்பத்தான் நிக்கமுடியும்... தள்ளுய்யா'னு சொல்லிக்கொண்டே அமைச்சர் சண்முகத்துக்கும் எம்.பி. ஏழுமலைக்கும் நடுவில் இடம்பிடித்து நிற்கிறார். அரசியல் நாகரிகத்திற்காக நிற்கட்டும், ஆதாயத்திற்காக நிற்கக்கூடாது இல்லையா? இவர் மட்டுமில்லை... எல்லா எம்.எல்.ஏ.க்களையும் சொல்கிறோம்'' என்கிறார்கள் செஞ்சிப் பகுதி தி.மு.க.வினர்.

இதுபற்றி வடக்கு மா.செ. மஸ்தானிடம் கேட்டோம்.

""நான் பொதுமக்களோடும், தி.மு.க. தொண்டர்களோடும் எப்போதும் நெருக்கமாக இருப்பவன். கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத்தில் 9,500 கேள்விகள் கேட்டவன். அரசு விழாக்களில் கலந்துகொள்கிறேன்... மக்கள் பிரச்சினைகளுக்காக அதிகாரிகளோடும் அமைச்சர்களோடும் பேசி வலியுறுத்துகிறேன். என் மாவட்டத்தில் மூன்று தொகுதிகள். மூன்றிலும் தி.மு.க. வென்றிருக்கிறதே? தளபதியிடம் நல்லபெயர் எடுத்தவன் நான்'' என்றார்.

விழுப்புரம் மத்திய மாவட்டம்!

மா.செ.யாக உள்ள பொன்முடி, நான்குமுறை எம்.எல்.ஏ.வாகவும், மூன்று முறை அமைச்சராகவும் இருந்தவர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒன்றிணைந்த கட்டடங்கள் என விழுப்புரம் நகரின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். விழுப்புரம் நகரம் வளர்ந்த அளவு தி.மு.க. வளரவில்லை என்றே கூறவேண்டும்.

""2011 தேர்தல்ல விழுப்புரத்தில் தோற்றுப்போய்விட்டார் பொன்முடி. அதனால்தான் இந்தத் தேர்தலில் தனது சொந்த ஊர் உள்ள திருக்கோயிலூரில் போட்டியிட்டு வென்றார். 2016-ல் விழுப்புரம் தி.மு.க. ந.செ. செல்வராஜை கொலை செய்துவிட்டார்கள். அதன்பிறகு யாரையும் ந.செ. ஆக்கவில்லை. இப்பதான் சக்கரை என்பவரை பொறுப்பாளர் ஆக்கியுள்ளார்கள். கட்சிக்காரர்களோ, மக்களோ பிரச்சினை என்று போனால் லெட்டர்பேடில் சிபாரிசு செய்கிறார். அதனால் யாருக்கும் பயனில்லை. கட்சித் தலைமையோட நெருக்கமா இருக்கிறார். பிறகென்ன? மாவட்ட செயலாளர் பதவியை விட்டுவிட்டு தலைமைக் கழகப் பதவிக்குப் போகவேண்டியதுதானே?'' என்கிறார்கள் விழுப்புரம் தி.மு.க.வினர்.

தொண்டர்களை விட்டு எங்கோ போய்விட்டதாகத்தான் சொல்கிறார்கள்.

விழுப்புரம் தெற்கு மாவட்டம்!

தெற்கு மா.செ. அங்கயற்கண்ணிக்கு சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியனைத் தவிர வேறு யாரும் ஆதரவு தருவதில்லை. ஒ.செ.க்கள் வசந்தவேலு, ராஜவேலு உட்பட பலரும் மா.செ. நாற்காலிக்குத் தயாராகிக்கொண்டிருப்பதால், அங்கயற்கண்ணி செயல்படா மா.செ. எனும் முத்திரை குத்தும் பணியைத்தான் செய்கிறார்கள்.

""அடுத்த மா.செ. அண்ணன் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. கார்த்திகேயன்தான். தளபதியின் ஆதரவு பெற்றவர். 12 பேர் கொண்ட ஆய்வுக் கமிட்டியில் எங்கள் கார்த்திகேயனையும் நியமித்திருக்கிறார்'' என்று காரணம் சொல்கிறார்கள் எம்.எல்.ஏ.வின் ஆதரவுத் தம்பியர். ஆனால், சமீபத்தில் சங்கராபுரத்தில் கலைஞரின் 95-ஆவது பிறந்தநாள் கூட்டம் து.பொ.செ. சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடந்தது. அதை திட்டமிட்டு புறக்கணித்தார் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

சிலநாட்கள் முன்பு கல்வராயன் மலையில் கோடைவிழா நடந்தது. இதில் கலந்துகொண்ட சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன், அமைச்சர்களை புகழ்ந்து பேசியதோடு அ.தி.மு.க. மா.செ. குமரகுருவுடன் சென்று முதலமைச்சர் எடப்பாடியைச் சந்தித்து சலுகைகள் பெற்றதாக தொகுதி முழுக்க செய்தி உலா வருகிறது. இது குறித்த பரபரப்பு புகார் கழகத் தலைமைக்குச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

உண்மைதானா? எம்.எல்.ஏ. உதயசூரியனிடம் கேட்டோம்...

""நான் பாரம்பரியத்தில் தி.மு.க.காரன். கொள்கையே எனக்கு முக்கியம். முதலமைச்சர் எடப்பாடியைப் பார்த்து, தனிப்பட்ட முறையில் சலுகைகள் பெறவேண்டிய அவசியம் எனக்கில்லை. இதை யாராவது நிரூபித்தால் என் தலையை நானே எடுத்துக்கொள்வேன். பொறாமையால் சில சக்திகள், என்மீது கற்பனையான விஷயங்களைப் பரப்பி புழுதிவாரித் தூற்றுகின்றன. நான் மக்களோடு மக்களாக உள்ளதால் தலைமை என்னை நான்குமுறை எம்.எல்.ஏ. ஆக்கியது'' சற்றே கோபத்தோடு சொன்னார் உதயசூரியன்.

விழுப்புரம் தெற்கு, வடக்கு, மத்தியில் தி.மு.க.வுக்குள் புகைச்சலும் எரிச்சலும் மண்டிக்கிடப்பதைக் காணமுடிகிறது.

""வட மாவட்டங்களில் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை உருவாக்கும் பெரும்பான்மை சக்தியாக வன்னியர்கள் இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க. கட்சிப் பதவிகளில் புகழ்பெற்றிருந்தாலும் வன்னியர்களை கொண்டுவருவதில்லை. அதனால்தான் இன்றைய இளைஞர்கள் பா.ம.க.வின் பின்னால் போகிறார்கள். இதை தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்ற கோரிக்கையை பரவலாகக் கேட்க முடிந்தது.

தி.மு.க.விலிருந்து தே.மு.தி.க. சென்று மீண்டும் தி.மு.க.வுக்கு வந்த முகையூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத், தனது ஆதரவாளர்கள் சிலருடன் மு.க.அழகிரியின் அஞ்சலி ஊர்வலத்திற்கு சென்று வந்திருக்கிறார்.

இந்த மாவட்டங்களில் டி.டி.வி. தினகரன் கட்சியினரும் சீராக வளரத் தொடங்கியுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார்கள் முப்பெரும் விழாவுக்கு ரெடியாகிவரும் உடன்பிறப்புகள்.

-எஸ்.பி.சேகர்