பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அ.தி.மு.க. இமேஜ் உடைந்து சரிந்து கிடப்பதுபோல் பாலியல் விவகாரத்தில் தி.மு.க.வின் இமேஜை உடைக்க அ.தி.மு.க., அரக்கோணம் இளம்பெண்ணின் புகாரைக் கையிலெடுத்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன்- பவானி தம்பதியின் மகள் ப்ரீத்தி. ஆட்டுப்பாக்கத் திலுள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு படித்துவருகிறார். இவர் தன்னை தி.மு.க.வைச் சேர்ந்த அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞரணி துணை யமைப்பாளர் தெய்வா என்கிற தெய்வச் செயல் மிரட்டி திருமணம் செய்து கொண்டு, முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தாக்க முயன்றார் எனப் பரபரப்பு குற்றச்சாட்டினைச் சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து நாம் ப்ரீத்தியிடம் பேசியபோது, என் அப்பா சென்னை யில் பழவியாபாரம் செய்கிறார். ஒரு அண்ணன் இருக்கிறார். எனக்கு முதல் திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிறது, அவன் என்னை வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்ததால் 3 மாதத் திலேயே அங்கிருந்து வந்துவிட்டேன். அதற்கான விவாகரத்து வழக்கு நீதிமன் றத்தில் நடக்கிறது. எங்கள் குடும்பப் பிரச்சனை ஒன்றுக்காக என் தோழியின் மாமாவான தெய்வச்செயலை, கடந்த 2024, நவம்பர் மாதம் சந்திச்சேன். நான் தி.மு.க.வுல பெரிய பொறுப்புல இருக்கேன்னு சொன்னான். அரக் கோணத்தில் ஆபீஸ் வச்சுக்கிட்டு ரியல் எஸ்டேட் செய்றான். அவனுக்கு 35 வயதுதான் ஆகறதா சொன்னான். அவனை அங்கிள்னுதான் கூப்பிடுவேன்.
சில நாள் பழக்கத்துலயே என்னை கல்யாணம் செய்துக்கோன்னு டார்ச்சர் செய்தான். என்னோட அம்மா அவன்கிட்ட "வேணாம்ப்பா, கொஞ்சநாள்' போகட்டும் அப்படின்னு சொன்ன தைக் கேட்காம 2025, ஜனவரி 31-ஆம் தேதி, கோவில்ல வச்சி கல்யாணம் செய்துக்கிட்டான். நான் என் வீட்ல இருந்தேன், அவன் அவனோட வீட்ல இருந்தான். பிப்ரவரி மாதம் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், கல்வித்துறை அமைச்ச ரோட பி.ஏ. உமாமகேஷ்வரன் வீட்டுக்கு அழைத் துச்சென்று என்னை மனைவின்னு அறி முகப்படுத்தினான். உன்னையைவிட சின்னப் பொண்ணா இருக்குன்னு அவங்க கேட் டப்ப, என் அக்கா பொண்ணு, இதுதான் முதல் மனைவி அப்படின்னு சொன்னான்.
மார்ச் மாதம் 19-ஆம் தேதி என் னோட அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. கூட வான்னு குணவதி ஆஸ்பத்திரிக்கு அழைச் சுக்கிட்டுப் போனான். அங்க பரானா அப்படிங்கற பொண்ணு என்னைப் பார்த் துட்டு "அவனை நம்பாத, என்னையும் நம்ப வச்சி ஏமாத்துனான். அவனோட முதல் மனைவி கனிமொழி'ன்னு சொல்லுச்சி. "அவன் டார்கெட்டே 20-ல் இருந்து 25 வயதுப் பெண்கள்தான். 20 வயசுல பொண்ண கல்யாணம் செய்துக்குவான், 25 வயசுல விட்டுட்டு அடுத்த பொண்ணு கிட்ட போய்டுவான். நானே அவனுக்கு 15-வதுன்னு சொல்லியிருக்கான்' அப்ப டின்னு சொன்னதும் எனக்கு அதிர்ச்சி யாகிடுச்சி. அந்த பொண்ணு எங்கிட்ட பேசுனதை தெரிஞ்சுக்கிட்டு என்னை அப்படியே ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு வந்துட்டான். அந்த பொண்ணுதான் என்னை எங்க வீட்ல கொண்டுவந்து விட் டுட்டுப் போச்சு. இதைப்பத்தி அவன்கிட்ட கேட்டதுக்கு, அவளுக்கு புருஷன் இல்ல, அதுக்கு உதவி செய்தேன். இப்போ செய்யல, அதனால தப்பா சொல்றா'ன்னு சொன்னான். "கனிமொழி யாருன்னு கேட்டதுக்கு. "என்னோட முதல் மனைவி. குழந்தை பிறந்து இறந்துட்டதால அவ மனநோயாளி யாகிட்டா. நீ மட்டும்தான் என் மனைவி' அப்படின்னு சொன்னான்.
மார்ச் மாதம் 28ஆம் தேதி அரக்கோணத்தில் தனியா ஒரு வீடெடுத்து என்னை கட்டாயப்படுத்தி அங்கே அழைச்சிக்கிட்டுப்போய் தங்கவச்சான். ராத்திரியெல்லாம் என்னை பாலியல் டார்ச்சர் செய்வான், அங்கங்க கடிச்சுவச்சான். நான் கத்தறதைப்பார்த்து மறுநாள் அக்கம்பக்கத்துல கேட்பாங்க. அவ சாயந்தரம் 6 மணியானா இப்ப டித்தான் நடந்துக்குவான்னு சொல்லிவச்சிருக்கான். தினமும் ராத்திரியில என்னை டார்ச்சர் செய்வான். நான் எங்கம்மாகிட்ட சொன்னேன். அவங்க வீட்டுக்கு வந்துட்டாங்க, என்னைக் கதவு திறக்கக்கூடாதுன்னு சொல்லி டார்ச்சர் செய்தான். அவங்க விடாம கதவு தட்ட நான் திறந்தேன், என் நிலைமையைப் பார்த்து அழுதுட்டாங்க. அவங்களை வெளியில போகச்சொல்லி கெட்ட வார்த்தையில திட்டினான்.
நான் அவனோட இருக்கமுடியாதுன்னு எங்க வீட்டுக்கு வந்துட்டேன். ஏப்ரல் 5-ஆம் தேதி தற்கொலை செய்துக்க தூக்கமாத்திரை போட்டுக் கிட்டேன். என்னை திருவள்ளூர் மருத்துவமனை யில் சேர்த்தாங்க. அங்க வந்த தெய்வச்செயல், என்னை டாக்டர்கிட்ட பேசி அழைச்சுக்கிட்டு வந் துட்டான். 3 நாள் பொறுத்து என் அண்ணன்கிட்ட கெஞ்சிப் பேசி திரும்பவும் என்னை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போனான். ஏப்ரல் 17-ஆம் தேதி கனிமொழி போன்செய்து எங்கம்மாகிட்ட, "நான்தான் தெய்வச்செயலோட முதல் மனைவி, அவன் அப்படித்தான் பண்ணுவான். நீ ஏதாவது செய்தா நாங்க எஸ்.சி. ஜாதிக்கலவரம் உருவாக்குவோம்'னு சொல்லி மிரட்டுறாங்க.
ஏப்ரல் மாதம் எங்கிட்ட "நான் சொல்ற ஆளுங்ககிட்டயெல்லாம் நீ ‘போகணும்' அப்ப டின்னு சொன்னான். முடியாதுன்னு சண்டை போட்டேன், என்னை அடிச்சி கொடுமைப்படுத்து னான். யார்கிட்ட போகணும்னு சொல்லல. நான் போறேன்னு ஒத்துக்கிட்டிருந்தா சொல்லியிருப் பான்னு நினைக்கறேன். மே 5-ஆம் தேதி அவன் மேல அரக்கோணம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் தந்தேன். எஸ்.பி. ஆபிஸ்ல புகார் தந்தேன். எங்கே யும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. புகார் தந்ததும் உன்னை கார் ஏத்திக் கொன்னுடுவேன், குடும்பத்தையே கொன்னுடுவேன்னு மிரட்டினான்.
மே 15-ஆம் தேதி அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவியை வழியில பார்த்து அவர்கிட்ட என் குறையைச்சொல்லி கால்ல விழுந்து உதவி செய்யச்சொல்லி கேட்டேன். அவர் போலீஸ்ல விசாரிச்சப்ப அவன்மீது 10-ஆம் தேதியே வழக்குப் பதிவு செய்திருக்கறது எனக்குத் தெரிஞ்சது. அவனைப் பிடிக்க 3 தனிப்படை அமைச்சிருக்கறதா சொன்னாங்க. 15-ஆம் தேதி இரவு என் பின்னாடியே வந்து என்னை மிரட்டினான். 17-ஆம் தேதி டி.ஜி.பி. ஆபீஸ்ல புகார் தந்தேன். என்னை விசாரிக்கும் போலீஸ், 20 பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க அப்படின்னு சொல்றியே அது யார், யாருன்னு கேட்கறாங்க. அவனோட செல்போனை வாங்கி ஆய்வுசெய்தால் யார் யாருன்னு தெரிஞ்சிடப்போகுது. அதைச் செய்யாம என்னையே குற்றவாளி மாதிரி கேள்வி கேட்கறாங்க. அவன் ஆளும்கட்சியில் இருப்பதால் நடவடிக்கை எடுக்கல''” என்றார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லாவிடம் கேட்ட போது, "அவர் 9-ஆம் தேதி புகார் தருகிறார், 10-ஆம் தேதியே எப்.ஐ.ஆர். போடப்பட்டு புகார்தாரர், குடும்பத் தார், அவரது நண்பர்கள், குற்றம்சாட்டப்பட்டவர் எனப் பலதரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் புகார்தாரர் சொல்லியுள்ளதுபோல் கட்டாய திருமணம் செய்துகொண்டார், மிரட்டினார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆதாரங்கள் இருந்திருந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். அப்பெண் மீண்டும் ஒரு எப்.ஐ.ஆர். போடச்சொல்கிறார், ஒரே சம்பவத்துக்கு இரண்டு எப்.ஐ. ஆர். எப்படி போடமுடியும்? அவர் சொல்லும் குற்றச் சாட்டுகளை எப்.ஐ.ஆரை திருத்தி இணைத் துக்கொள்ளலாம். எந்த புகார் வந்தாலும் உடனே எப்.ஐ.ஆர். போடுகிறோம். முறை யாக விசாரணை நடந்துவருகிறது''’என்றார்.
அரக்கோணம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வாசுகி, “"புகார் மீது சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை. ஆளும்கட்சி பிரமுகர் மீதான புகார் என்ப தால் அந்தப் பெண்ணை அலையவிட்டதால் அந்தப் பெண் அரக்கோணம் சமூக சேவகி ஒருவரிடம் உதவிக்காகச் சென்றுள்ளார். அவர் அ.தி.மு.க.வில் இருப்பதால் அப்பெண் ணை மா.செ.வும், அரக்கோணம் எம்.எல்.ஏ.வு மான ரவியிடம் அழைத்துச்சென்றார். அது இ.பி.எஸ். கவனத்துக்குச் செல்ல அதன் பின்பே "அவனால் 15 பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள், 20 பெண்கள் பாதிக்கப்பட் டுள்ளார்கள்' எனச் சொல்ல துவங்கினார் அப்பெண். அதற்கான ஆதாரத்தை அவர் காவல்நிலையத்தில் தரவில்லை''’என்றார்.. இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள அ.தி.மு.க. அரக்கோணத்தில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அரக்கோணம் ஆளும்கட்சி பிரமுகர் களிடம் பேசியபோது, "தெய்வச்செயல் பெண்கள் விஷயத்தில் வீக். கள்ள மது விற்பனை, அரசு அலுவலகங்களில் பணம் வாங்கிக்கொண்டு வேலை முடித்துத்தரும் புரோக்கராக வலம்வந்தவனுக்கு அரக் கோணம் மத்திய ஒன்றிய இளைஞரணி துணையமைப்பாளர் பதவிக்கு சிபாரிசு செய்து வாங்கித்தந்தது ந.செ. ஜோதிதான். பணமிருந்தால் போதுமென பதவி தந்து விடுகிறார்கள். விசாரிப்பதேயில்லை'' ’என்றார்கள். இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி இதுகுறித்து விசாரித்து, தெய்வச்செயலை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணை யம் தானாக முன்வந்து 3 நாட்களுக்குள் தன் எஃப்.ஐ.ஆரின் நகலுடன் விரிவான நடவடிக் கையும் பாரபட்சமற்ற மற்றும் வெளிப் படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.