மெட்ரோ நகரங்களில் மேல்வர்க்கத்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்களிடையே பரவி வரும் புதுவித போதை கலாச்சாரம், தற்போது முதல்வர் எடப்பாடி பழனி சாமியின் சொந்த மாவட்ட மான சேலத்திலும் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருப் பது, காவல்துறைக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி. திருநாவுக்கரசுவுக் குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஆய்வாளர் அம்பிகா தலைமையில் காவலர்கள் தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் சுங்கச்சாவடி அருகே, அண்மையில் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டனர். சந்தேகத்தின்பேரில், மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளை ஞர்களை தடுத்து, அவர்களிடம் பையை சோதனை செய்தபோது 2.60 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. ஒரு இளைஞரின் பேன்ட் பாக்கெட்டில் உள்ள பொருள் களை எடுத்து சோதித்தபோது, அதில் தபால்தலை வடிவத்தில் உள்ளங்கை அளவிலான ஒரு அட்டையைக் கைப் பற்றினர்.

st

விசாரணையில், அது தபால்தலை வடிவிலான போதைப்பொருள் என்பதை அறிந்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சேலம் போதைப்பொருள் காவல் துறைக்கு, அந்த வடிவிலான போதைப் பொருள் பிடிபடுவது இதுதான் முதல்முறை என்பதோடு, அப்படியான பொருளும் சேலம் கள்ளச்சந்தையில் புழங்கி வருவதும்கூட அவர்களுக்கு புதிய தகவலாக இருந் தது. பிடிபட்டவர்களில் ஒருவர், சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த சரண் (22); மற்றொருவர், ஓமலூரைச் சேர்ந்த கோகுல் (25).

Advertisment

இவர்களில் கோகுல், பி.எஸ்சி., மல்டி மீடியா முடித்துவிட்டு, பெங்களூருவில் தனியார் நிறுவனத் தில் பணியாற்றி வந்திருக்கிறார். மற்றொரு குற்றவாளி யான சரண், பி.இ., மெக்கானிக்கல் படித்துவிட்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் திரிவேணி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட தபால்தலை வடிவி லான பொருள் எல்.எஸ்.டி. எனப்படும் (Lysergic Acid Dyethylamide)"லைசர்ஜிக் ஆசிட் டைஎத்திலமைடு' என்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருள் என்பது தெரிய வந்துள்ளது.

st

இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ""வழக்க மாக கஞ்சா, கொகெய்ன், அபின் போன்ற போதைப்பொருள்கள் நடமாட்டம் தமிழகத்தில் இருக்கிறது. எங்களுக்குக் கிடைக்கும் தகவலின்பேரில் அத்தகைய போதைப் பொருள்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகிறோம். ஆனால், எல்.எஸ்.டி. போதைப் பொருள் பயன்பாடு என்பது, கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் இதுபோன்ற எல்.எஸ்.டி. பொருளை விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு முன்பு கோவையில் இதுபோல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Advertisment

இந்த வழக்குகளில் பிடிபட்ட எல்லோருமே 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்ற ஒற்றுமை மட்டுமின்றி, பெங்களூரு, கோவா, புனே நகரங்களில் இருந்து ஸ்டாம்ப் வடிவத்தில் எல்.எஸ்.டி.போதைப் பொருளை வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இப்போது சேலத்திலும் அதேபோன்ற வழக்கில் இரு வர் பிடிபட்டுள்ளதைப் பார்க்கையில், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, திருப்பூர், ஓசூர் போன்ற முக்கிய நகரங்களை குறிவைத்து ஒரு கும்பல் கள்ளச் சந்தையில் எல்.எஸ்.டி. போதை வஸ்துவை புழக்கத்தில் விட்டு வருவதாக சந்தேகிக்கிறோம்,'' என்கிறார்கள்.

சேலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி. திருநாவுக்கரசுவிடமும் பேசினோம்.

""எங்களிடம் பிடிபட்ட கோகுல், சரண் இருவருமே நெருங்கிய நண்பர்கள். ரெண்டு பேருமே சாதாரண குடும்பத்து பசங்கதான். கைது செய்யப்படுவதற்கு நான்கு நாள்களுக்கு முன்புதான் அவங்க கோவாவுக்கு டூர் போயிருந்திருக்காங்க. அங்கே இருந்துதான் எல்.எஸ்.டி. போதைப் பொருளை வாங்கி வந்ததாகச் சொன்னார்கள். பறிமுதல் செய்யப் பட்ட எல்.எஸ்.டி. போதைப்பொரு ளின் மொத்த எடையே 0.400 கிராம் தான். எல்லாமே குட்டி குட்டி ஸ்டாம்ப் போல ஒரு அட்டையில் வைத்திருந்தனர். (செல்போனில் எடுக்கப்பட்ட படத்தைக் காண் பித்தார்).

ஒவ்வொரு போதை ஸ்டாம் பும் 1500 ரூபாய்க்கு விற்கப்படுவது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் மதிப்புள்ள 20 போதை ஸ்டாம்பு களை பறிமுதல் செய்திருக்கிறோம். சேலத்தில் சில கல்லூரி மாணவர்களிடம் விற்பதற்காகத்தான் வாங்கி வந்திருக்கிறார்கள். சம்பவத்தன்று காலை 7.30 மணியளவில் அவர் களை கைது செய்து, அன்று மாலையிலேயே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துவிட்டோம். நல்லவேளையாக ஆரம் பத்திலேயே அவர்களின் முயற்சியைத் தடுத்து விட்டோம்,'' என்கிறார் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு.

நமது கள விசாரணையில், சேலத்தில் உள்ள மூன்று தனியார் கலை அறிவியல் கல் லூரி மற்றும் ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி யில் படித்து வரும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் சிலருக்கு எல்.எஸ்.டி. போதைப்பொருள் நுகரும் பழக்கம் இருந்து வருவதும், அவர்களிடம் பிடிபட்ட இரு இளைஞர்களும் ஒவ்வொரு போதை ஸ்டாம்பையும் தலா 2000 ரூபாய் வரை பேரம் பேசி விற்று வந்திருப்பதும் தெரிய வந்தது. காவல் துறை தரப்பில் கேட்டபோது, இப்போதுதான் கோகுலும், சரணும் முதன்முதலாக இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவ தாகச் சொல்கிறார்கள். உண்மையில், போதை ஸ்டாம்ப் விற்பனையில் வேறு சில குழுக்களும், உள்ளூர் காவல்துறை ஆசியுடன் எவ்வித தடையுமின்றி உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன என்கிறார்கள் போதை உலகவாசிகள்.

ஹான்ஸ் புகையிலையை உதட்டை இழுத்து உள்ளே சொருகிக் கொள்வதுபோல எல்.எஸ்.டி.க்கு மெனக்கெட வேண்டியதில்லையாம். எல்.எஸ்.டி. பவுடர் தடவிய போதை ஸ்டாம்பை நாக்கில் ஒட்டிக்கொண்டால், அடுத்த 8 மணி நேரத்திற்கு அரை மயக்க நிலைக்குச் சென்று விடுவார்கள் என்கிறார்கள் இதன் வீரியம் அறிந்தவர்கள்.

எல்.எஸ்.டி. போதைப்பொருளின் தன்மைகள் குறித்து சேலம் அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் ஜோதி ஆனந்திடம் கேட்டோம்.

""எல்.எஸ்.டி. என்பது முழுக்க முழுக்க போதைக்காகத் தான் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொண்டவர்கள், பிரமை (ஹாலுசினேஷன்) பிடித்தவர் போல் இருப்பார்கள். அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்படும். அந்தரத் தில் பறப்பது போன்ற உணர்வென்பது சிலருக்கு மோச மான பயணம்போலவும் அமைந்து விடும். எல்.எஸ்.டி.யின் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், இவ்வகை போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதை உட் கொள்ளாதபோதும்கூட போதையில் இருப்பதுபோலவே உணர்வார்கள். பவுடர், ஊசி மருந்து வடிவத்திலும் கிடைக்கிறது. இந்த போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வருவது கடினம். மது அருந்தினால் மற்றவர்களுக்கு தெரிந்து விடும். இந்த வகை போதையை எடுத்துக்கொண்டால் யாருக்குமே தெரிய வராது. யு.எஸ். போன்ற நாடுகளில் இவ்வகை போதை பயன்பாடு அதிகம். இந்தியாவில் கூட வசதியான வீட்டுப் பையன்கள், படிக்கும் காலத்தில் இத்தகைய போதைக்கு அடிமையானதுண்டு. ஆனால் சேலத்தில் எல்.எஸ்.டி.யுடன் 2 பேர் பிடி பட்டுள்ளனர் என்பதே ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது,'' என்றார் மருத்துவர் ஜோதி ஆனந்த்.

"விவசாயி மகன்', கொஞ்சம் போதை விஷச்செடி களையும் அகற்ற கவனம் செலுத்த வேண்டும் என்பதே எண்ணற்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

-இளையராஜா