ரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலை, கையில் காசு புழக்கம், பெற்றோரின் செல்லம், சாதித்துக்காட்டுவதற்கான பொறுமையும் தேடுதலும் இன்மை என இன்றைய இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏதோ ஒரு போதைக்கு அடிமையாகி யுள்ளார்கள். இந்த போதை கல்விக்கும் வேலைக்கும் மட்டுமல்லாமல்… சமயங்களில் குடும்பத்துக்கே அவப்பெயரையும் கொண்டுவந்து விடுகிறது.

Advertisment

party

கல்லூரி மாணவ- மாணவிகள், ஐ.டி துறையில் பணியாற்றும் ஆண்-பெண் என பலரும் தற்போது ஹைடெக் போதைப் பழக்கத்திற்கு வாழ்வின் ஒரு கட்டத்தில் அறிமுகமாகின்றனர். ஈ.சி.ஆர். சாலை என்றாலே நமக்கு ஞாபகம் வருவது வீக் என்ட் பார்ட்டிகள்தான். சமீபத்தில் பிரபல கவர்ச்சி நடிகையான யாஷிகாஆனந்த் போதை பார்ட்டியை முடித்துவிட்டு ஈ.சி.ஆர். சாலையில் தனது சொகுசுக் காரில் அதிவேகமாக வந்தபோது கார் விபத்துக்குள்ளானது. அப்போது தன்னுடன் வந்த தோழி காரிலிருந்து சாலையோரம் தூக்கி வீசப்பட்டதே தெரியாமல் உடன்வந்தவர்கள் விட்டுச்சென்றதும், அந்தப் பெண்ணுக்கு உரிய முதலுதவி கிடைக்காததால் உயிரிழந்ததும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் பெரிய இடத்தின் தலையீட்டால் விவகாரம் அப்படியே மூடிமறைக்கப்பட்டது.

இதுபோன்ற ஹைடெக் போதை பார்ட்டிகள் நடப்பது பற்றி நக்கீரன் அவ்வப்போது ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு வருகிறது. ஒருநாள் சாகசமெனத் தொடங்கும் இத்தகைய போதைப் பார்ட்டிகளில் கலந்துகொள்ளும் யாரும், ஒரு நாளோடு வெளியே வந்துவிடுவதில்லை. பலர் உடல்நிலை சிக்கலான பின்பும், இன்னும் சிலர் வாழ்க்கையையே அதற்குப் பலியாகத்தரும் நிலைக்கும் ஆளாகின்றனர். சமூகத்தின் பார்வையில் இழிவு, மனத் தடுமாற்றங்கள், நரம்புத் தளர்ச்சி, வேலையில் தீவிரம் குறைதல் என போதையின் ஆபத்துக்கள் பலப் பல.

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அத்தகையதொரு பார்ட்டி நடக்கப் போவதாக நமது நக்கீரனுக்குத் தகவல் கிடைத்தது.

19-03-2022, சனிக்கிழமை. இரவு 10 மணி:

இளைஞர்களைச் சீரழிக்கும் போதை பார்ட்டி ஈ.சி.ஆர். சாலையில் நடக்கவுள்ளதாக ஒரு பெண் நம்மைத் தொடர்புகொண்டு விவரம் தெரிவித்தார். தவிரவும், தன்னைப் பற்றிய தகவல் எதுவும் தெரிவிக்கவேண்டாமென கேட்டுக்கொண்டார்.

இரவு 10:45: தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவியிடம் நமக்குக் கிடைத்த தகவலைக் கூறினோம். போதை விருந்து நடக்கவுள்ள சென்னையை அடுத்த உத்தண்டி ஈ.சி.ஆர். சாலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருக்குச் சொந்தமான ரிசார்ட் உள்ளே, டெக்னிக்கல் ஹிட்ச் என்ற பெயரில் விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் போதை பார்ட்டி நடக்கவுள்ளதைப் பற்றியும் அதன் பின்னணியையும் தெரிவித்தோம்.

இரவு 11 மணி: தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவியின் உத்தரவின் படி உடனடியாக துணைகமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி தலைமையிலான போலீஸ் டீம், ரவிக்குமார், ரியாஸ், ரவிச்சந்திரன், உதவி கமிஷனர்கள் மற்றும் ஆறு ஆய்வாளர்கள் உள்பட ஐம்பது போலீசார் அடங்கிய டீம் ரிசார்ட்டுக்கு விரைந்தது.

ff

Advertisment

இரவு 11:30 மணி:

உத்தண்டி ஈ.சி.ஆர். சாலை யோரம் உள்ள ரிசார்ட்டை போலீஸ் டீம் வந்தடைந்தது.

இரவு 11:45 மணி:

ரிசார்ட் மேலாளர் சைமன் மற்றும் அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் போலீசாரைப் பார்த்து, இது யார் ரெசார்ட் தெரியுமா? டெல்லி வரை பவர்ஃபுல்லானவர் எங்க முதலாளி என்று முடிந்தவரை தடுத்துநிறுத்தப் பார்த்தனர். அதைக் கடந்து துணை கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி டீம் உள்ளே நுழைந்தது. ரிசார்ட்டின் உள்ளே சுமார் நானூறுக்கும் மேற் பட்ட கார்களும் பைக்குகளும் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தன. அதைக் கடந்ததும் அதே ரிசார்ட்டில் ஆயிரம் பேர் கூடும் அளவிற்கு பிரம்மாண்டமான தற்காலிகக் கூடாரம் அமைக்கப் பட்டிருந்தது.

அதனுள் மிக அதிக சத்தத்துடன் டி.ஜே. பார்ட்டி நடந்துகொண்டிருந்தது. லேசர் லைட், பார்ட்டி களுக்கே உரிய பிரத்யேக ஒளி-ஒலியமைப்புகள் பார்ப்பவரை திகைக்கவும் உற்சாகப்படவும் வைக்கும் விதத்திலிருந்தன.

பல்வேறுவிதமான சரக்குகளின் போதையி லிருந்தவர்களை உள்ளே புகுந்த போலீஸ் டீம் சுற்றிவளைத்தது. சுமார் 800 பேர் இருந்த அந்த பார்ட்டியில் பெண்கள் மட்டும் 50-க்கும் அதிக மான எண்ணிக்கையில் காணப்பட்டனர். உள்ளே நுழைந்தபோது ஆண்கள்- பெண்கள் யாரும் தெளிவான நிலையில் இல்லை. பார்ட்டிக்கே உரிய கிளுகிளுப்பான ஆடை களில், போதையும் சேர்ந்து கொள்ள பல ஆண்களும் பெண்களும் கண்கொண்டு காணச் சகிக்காத கோலத்திலிருந்தனர்.

நள்ளிரவு 12:45 மணி:

தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி ஸ்பாட்டுக்கு வருகை தந்தார்.

ravi

இரவு 1 மணி :

பெண்கள் உள்பட அனைவரையும் சுற்றிவளைத்த போலீசார், தனித்தனியாகச் சோதனையிட்டனர். நூற்றுக்கணக்கில் வெளிநாட்டு மதுபானங்களும் போதைப் பொருட்களும் சிக்கின. ஆனால் போலீசார் கேட் அருகே வந்து குவிந்தபோதே பார்ட்டியை நடத்தியவர்கள் உஷாராக, போலீஸ் கேள்வியெழுப்பக்கூடிய போதைப் பொருட் களை எல்லாம் பதுக்கிவிட்டனர். இதனால் விடிய விடிய சோதனை நடத்தியும் போலீசாருக்கு பெரிய அளவில் ஹைடெக் போதைப் பொருட்கள் சிக்கவில்லை. ஆனாலும் சட்டவிரோதமாக நடந்த இந்த பார்ட்டியை நடத்தியவர்கள் அதிரடியாக கைதுசெய்யப் பட்டனர்.

பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் போதையின் தாக்கத்தில் இருந்ததால், அங்கேயே வைத்திருந்து விடிந்து கொஞ்சம் தெளிவான நிலைக்கு வந்தபின்பே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை

காலை 6:30 மணி:

இந்தச் சோதனையில் சிக்கியவர்களில் பலர் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்பதால் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவுப்படி அனைவரையும் எச்சரித்து முகவரி, செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு "இனி இதுபோன்ற போதை பார்ட்டிகளில் பங்கேற்க மாட்டோம்'' என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பினர்.

காலை 7 மணி:

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அனைவரையும் நிற்க வைத்து அறிவுரை கூறி, அவர்களின் எதிர்கால வாழ்வைக் கருதியே எச்சரித்து மன்னித்து விடுவிக்கிறோம். மீண்டும் இதுபோன்ற பார்ட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறி அனைவரையும் அனுப்பிவைத்தார்.

ரிசார்ட் தரப்பில் விசாரித்தபோது, ரிசார்ட்டின் மேலாளர் என்று சொல்லிக்கொண்ட துரை என்பவர், "“நாங்கள் ஒரு தனியார் ஈவண்ட் மேனேஜ் மெண்ட் நிகழ் வுக்கு வேண்டு மெனக் கேட்ட தால் லீசுக்கு விட்டோம். எங்க ளுக்கும் இந்தப் பார்ட்டிக்கும் நேரடித் தொடர்பு கிடையாது''” என நழுவப் பார்த்தார்.

Advertisment

ff

இந்த பார்ட்டியை ஆத்மா என்பவரும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களும் நடத்தியுள்ளனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சில குழுக்கள் சென்னை, கோவை பகுதியில் சட்டவிரோதமாக இத்தகைய பார்ட்டிகளை நடத்திவருவது தெரியவந்துள்ளது. இவர்கள் இஸ்ரேலிலிருந்து டூரிஸ்ட் விசாவில் வந்து கோவாவில் தங்கியபடி சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் இளைஞர்களைக் குறிவைத்து புதுவித போதை பழக்கத்தை அறிமுகம் செய்கின்றனர்.

ரகசிய குறியீடுகளுடன் இந்த ஹைடெக் போதை நெட்வொர்க் செயல்படுகின்றது. இத்தகைய பார்ட்டிகளில் போலீஸ் தலையீடு நிகழும்போது, சம்பந்தப்பட்டவர்கள் கைதாவது கிடையாது. இவர்களிடம் காசுவாங்கிக்கொண்டு, பார்ட்டி களை ஏற்பாடு செய்யும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட ஒருங் கிணைப்பாளர்களே சிக்குகின்றனர். இதன் பின்னணியில் பெரிய சதிவேலைகள் நடக்கின்றன. மத்திய உளவுத்துறை இவர்கள் நடமாட்டத்தின் மீது ஒரு கண் வைத்துள்ளது.

-அர்ஜூன்

________________

இறுதிச்சுற்று!

தொடரும் மர்மம்!

75 நாட்கள் அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா, சவப்பெட்டியில்தான் வெளியில் எடுத்து வரப்பட்டார். அவரது மரணத்திலிருக்கும் மர்மத்தை வெளிக்கொணர ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷனை அமைத்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

"ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்றும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும்' ஜெயலலிதா மரணம் குறித்து முதன்முதலில் சந்தேகத்தைக் கிளப்பியவரே ஓ.பன்னீர்செல்வம்தான். அப்போது சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்தார். ஆனால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 8 முறை சம்மன் அனுப்பப்பட்டும், ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் ஆஜராகாமல் தவிர்த்துவந்தார். இந்நிலையில் முதன்முறையாக, கடந்த மார்ச் 21-ம் தேதி, ஆறுமுகசாமி கமிஷனில் ஓ.பி.எஸ். ஆஜராகி, "ஜெ.வுக்கு அளித்த சிகிச்சை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது' என வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

சசிகலாவின் அண்ணி இளவரசியும் சாட்சியம் அளித்தார். 75 நாளும் மருத்துவமனைக்கு சென்றபோதும், ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக பார்த்ததாகவும், சசிதான் உடனிருந்து கவனித்துக்கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார் இளவரசி. இதன்மூலம் ஜெயலலிதா மரண மர்மத்தில் கூடுதல் தகவல்கள் கிடைக்குமா, சசிகலா குடும்பத்தினர் குறித்து ஏதும் புகார்கள் வருமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

-கீரன்

துபாயிலும் கோஷ்டியா?

துபாய் செல்லும் முதல்வருக்கு தி.மு.க.வின் அயலக அணியுடன் அமீரக தி.மு.க. அமைப்பு, வெளிநாடு வாழ் இந்தியத் தமிழர் சங்கம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட அணிகள் தனித்தனியாக வரவேற்பளிக்க ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு முதல்வர் வரும் நிலையில், தனித்தனியாக வரவேற்பு அளிப்பது கோஷ்டிகளுக்கே வழிவகுக்கும் என்றும், முதல்வரும் அவரது நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள்-கட்சி நிர்வாகிகள் இதனை உடனே சரி செய்திட வேண்டும் என்றும் துபாயில் வாழும் உணர்வுப்பூர்வமான தி.மு.க.வினர் வலியுறுத்துகின்றனர்.

-மகேஷ்