குஜராத் என்ற சொந்த மாநில பாசமும், மோடிக்கு ஆதரவாக அதானி எடுத்த இந்துத்வ நிலைப்பாடுகளும், மோடியின் அரசியல் வளர்ச்சிக்கு பொருளாதார ரீதியில் பின்பலமாக நிற்பதாலும், பிரதமர் மோடிக்கும் தொழிலதிபர் அதானிக்குமான நட்பு நாளுக்கு நாள் வலுவடைந்துவருகிறது. பிரதமரின் செல்லப்பிள்ளையாக வலம்வருவதால், அசுர வேகத்தில் அதானி வளர்ச்சியடைந்து வருவதை இந்தியர்கள் அனைவரும் அறிவர். தற்போது அந்த நட்புக்குக் களங்கமான ஒரு செயல், பக்கத்திலுள்ள குட்டியூண்டு நாடான இலங்கையில் நடந்துள்ளது.
இலங்கையில், அங்குள்ள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போரில், தங்களுக்கான தொழில்வாய்ப்புகளை எதிர்பார்த்தே இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கை அரசுக்குக் கைகொடுத்தன. இலங்கையில் இறுதி யுத்தம் நிறைவடைந்தபின்னர், சீனா தனது ஆதிக்கத்தை இலங்கையில் வலுவாக நிலைநிறுத்தத் தொடங்கியதால் எல்லைப்புற அச்சுறுத்தல் அதிகரிக்கவே, இந்தியாவும் அங்கே தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இலவச வீடுகள், சொகுசு ரயில் சேவை தொடங்க உதவி, பண உதவி எனப் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அதன் பிரதி பலனாக அதானி, அம்பானி உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்களின் தொழில் வளர்ச் சிக்கான ஒத்து ழைப்பினை இலங்கை வழங்கியது.
அதன்படி, கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக கொழும்பு நகரில் அமைந்துள்ள முக்கிய துறைமுகத் திட்டம் ஒன்றை அதானி குழுமம் கைப்பற்றியது. கடந்த 2021, செப்டம்பர் மாதத்தில், இலங்கையி லுள்ள கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை (Colombo West International Container Terminal) அபிவிருத்தி செய்ய, ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings) மற்றும் இலங்கை துறைமுக ஆணையத்துடன்(Sri Lanka Ports Authority) கூட்டு சேருவதாக, அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (APSEZ) நிறுவனம் அறிவித்தது. இதற்காக, மொத்தம் 51% பங்குகளுடன், இலங்கையின் முதல் இந்திய துறைமுக ஆபரேட்டராக அதானி குழுமம் மாறியது. இதற்கு அடுத்ததாக, இலங்கையின் வடமேற்கு கரையோரத்தி லுள்ள மன்னார் மற்றும் யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு அருகே மிக பிரம்மாண்ட மான காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டத்தை கூட் டாக நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தத்தை அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் கைப்பற்றியது. இத்திட்டத்துக்கான ஒப் பந்தம்தான் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. இலங்கையின் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மன்னார் காற்றாலைத் திட்டத்தை இலங்கை முதன்முதலாக அறிவித்தபோது அத்திட் டத்தைக் கைப்பற்ற இந்தியா நினைத்தது. ஆனால் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் அத்திட்டத்தை கைப்பற்றியது. இந்தியாவுக்கு அருகிலுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் சீனாவின் ஆதிக்கம் ஏற்படுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்பதால், இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இப்படியான சூழலில், திடீர் திருப்பமாக, சீனாவிடமிருந்து பறிக்கப்பட்ட இத்திட்டம், இந்தியாவில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இப்படி இத்திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி கள் குறித்து கருத்து வெளியிட்ட, சண்டே டைம்ஸ், சண்டே மார்னிங் உள்ளிட்ட இலங்கையைச் சேர்ந்த பத்திரிகைகள், இந்த ஒப்பந்தம் குறித்த முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம்சாட்டின. இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. மேலும் 2 பில்லியன் டாலர் அளவுக்கு நிதியுதவிகளை வழங்குவதாக இந்தியா உறுதியளித்தது. அதேவேளை, தொடர்ச்சி யாகச் செய்துவரும் உதவி களுக்குப் பிரதிபலனாக இலங்கை யை ப்ளாக்மெயில் செய்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைக்க இந்தியா முயல்வதாக இப்பத்திரிகைகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், இத் திட்டத்தை அதானி குழுமத்துக்கு எந்த அடிப்படையில் கொடுத்தீர்கள் என்று இலங்கை பாராளுமன்ற விசாரணைக் குழு, இலங்கை மின்சார வாரியத்தின் (ஈஊஇ) தலைவர் எம்.எம்.சி. ஃபெர்டினாண்டோவிடம் விசாரணை நடத்தியது. விசாரணையில் பதிலளித்த ஃபெர்டினாண்டோ, "500 மெகாவாட் மன்னார் காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டத்தை அதானி குழுமத்துக்கு நேரடியாக அளிக்க, இந்திய பிரதமர் மோடி, இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவை வற்புறுத்தியதாக தம்மிடம் கோத்தபாயவே கூறி னார். கடந்த 2021-ஆம் ஆண்டு, நவம்பர் 24-ஆம் தேதி, நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அதிபர் என்னை வரவழைத்து, திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறினா ரென்று பதிலளித்தார். இதையடுத்து, இந்திய பிரதமரின் மிரட்டலுக்குப் பயந்து இத்திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கிவிட்டதாக இலங்கை முழுவதும் கோத்தபாய மீது கடுமையான விமர்சனம் எழுந்தது.
இது, இந்திய பிரதமர் மோடிக்கும் தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியது. இலங்கையின் உள்விவகாரத்தில், தனது பெயர் அடிபடுவதும், அதுவும் அதானிக்காகத் தான் பரிந்துரைத்ததாக குற்றச்சாட்டு எழுவதும் இந்தியாவில் தனது அரசியல் இமேஜைப் பாதிக்குமென மோடி சங்கடப்பட்டார். உடனே ஃபெர்டினாண்டோவின் கருத்தை மறுத்து ட்விட்டரில் பதிவிட்டார் கோத்தபாய. அடுத்த இரண்டே நாட்களில் காட்சி மாறியது. மின்சார வாரியத் தலைவர், மோடி குறித்த தனது தவறான கருத்துக்காக மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்த அவரது மறுப்பில், 'எதிர்பாராத அழுத்தத்தால், உணர்ச்சிவசப்பட்டு, மன்னார் காற்றாலைத் திட்டத்தை அதானி குழுமத்துக்குத் தருமாறு இந்திய பிரதமர் வலியுறுத்தியதாகக் கூறிவிட்டேன். எனது கருத்து முற்றிலும் தவறானது' என்று குறிப்பிட்டார். ஃபெர்டினாண்டோ மன்னிப்பு கேட்ட நிலையில், மின்சார வாரியத் தலைவர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை இலங்கை மின்சாரத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதை வாசிக்கும்போது, 'ஆடு களவு போனதாகக் கனவு கண்டதாக, வரும் சூனாபானா காமெடி உங்கள் நினைவுக்கு வரக்கூடும்.
இலங்கைக்கு இந்தியா செய்துவரும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான உதவிகள் அனைத்துமே இந்தியர்கள் அனைவரின் வரிப்பணமே ஆகும். ஆனால் நம்முடைய வரிப்பணத்தால் கிடைக்கும் உதவிக்கு பிரதிபலனை அதானி போன்ற தொழிலதிபர் களுக்கு மாற்றிவிடும் பிரதமர் மோடியின் ராஜதந்திரம், தற்போது இந்தியாவிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் எல்லைகடந்து அதானிக்கான உதவிகளை மோடி பெற்றுத்தருவதும், அது தொடர்பாக அந்த நாடுகளில் எதிர்ப்புகள் எழுவதும் புதிதான செய்தியில்லை. ஏற்கெனவே, 2010-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில், கலீலி ஆற்றுப்படுகையில் அதானி குழுமம் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவதற்காகக் கையெழுத்திடப்பட்டும், சுற்றுச்சூழல் சீர்கேடுகள், பழங்குடியினரின் வாழ்வாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்புகளால் அதனைத் தொடங்குவதற்கான அனுமதி யைப் பெறமுடியாமல் ஆண்டுக்கணக்கில் அதானி தத்தளித்தபோது, அதைச் சரிசெய்வதற்காக, 2014-ஆம் ஆண்டில் பிரதமராகப் பொறுப்பெற்ற மோடி, அதானியோடு ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அந்நாட்டுத் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதேபோல், தனது தொழிலுக்காக வாங்கிய வங்கிக்கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தாமல் பல்லாயிரம் கோடி வாராக்கடன்களை வைத்திருந்ததால், அதானிக்கு கடன் கொடுக்க உலக வங்கிகள் தயங்கி பின்வாங்கின. இந்நிலையில், ஒன்றிய அரசின் ஆசியுடன், அதானிக்கு 6,100 கோடி ரூபாய் வங்கிக்கடன் தருவதற்கு நம்முடைய ஸ்டேட் பேங்க் முன்வந்தது. இப்படியெல்லாம் தொழிலதிபர்களுக்கு வாரிக்கொடுக்கும் வங்கிகள்தான், விவசாயிகளிடமும் சாமானியர்களிடமும் கறார் காட்டி தற்கொலைக்குத் தள்ளுகிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தோணுகிறது. மோடி - அதானி நட்பின் தொடர் முயற்சியால் பத்தாண்டுகாலப் போராட் டத்துக்குப்பின், 2019-ம் ஆண்டில் ஒருவழியாக ஆஸ்திரேலிய அரசு, அதானியின் சுரங்கத் தொழிலுக்கான அனுமதியை அளித்தது.
அதுசரி, திட்டத்தைத் தொடங்கி, உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை மார்க்கெட்டிங் செய்தாக வேண்டுமே? திட்டத்துக் கான அனுமதியைப் பெற்றபோது, சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை சரிவைச் சந்தித்தது. எனவே அதானியின் ஆஸ்தி ரேலிய நிலக்கரியை இந்தியாவிற்கு பெருமளவு ஏற்றுமதி செய்வதற் கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நிலக்கரி இறக்கு மதியை அதிகரிப்பதற்கேற்ப இந்தியாவில் செயற்கையாக நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்படுத்தப் பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. நிலக்கரியை இறக்குமதி செய்ய மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன. அதே போல, உள்நாட்டில் அதானியின் சூரிய மின்சக்தி, காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தவும், அதானி குழுமத்தின் விமான நிலைய ப்ராஜெக்டுகளை வளர்த் தெடுக்கவும், ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடுகளும், வளர்ச்சித் திட் டங்களும் தொடர்ந்தபடியேதான் இருக்கின்றன. ஆம், கடலலை ஓய்ந்தாலும் அதானி அலை ஓயவே ஓயாது!