அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் தொடர்பாக பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. அமைச்சரானதிலிருந்தே அவர் மீதான புகார்கள் குறித்து, நக்கீரனில் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவரது மகன், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது தொடர்பான ஊழல் புகார் எழுந்தது. அமைச்சருக்கு நெருக்கமான நடராஜன் என்கிற அதிகாரியின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. துறைத் தலைவர் கந்தசாமியை அழைத்து, ராஜகண்ணப்பன் துறையின் லீலைகளை முதல்வர் நேரடியாக அறிந்து கொண்டார். அமைச்சரைக் கூப்பிட்டுக் கண்டித்தார் ஸ்டாலின். முதல்வரது குடும்ப உறுப்பினர் ஒருவரது ஆதரவில் ராஜகண்ணப்பன் தப்பித்தார்.
ஸ்டாலின் துபாயில் இருக்கும்போதே முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந் திரனை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக ராஜேந்திரன் வெளியிட்ட வீடியோ வைரலானது. "ராஜகண்ணப்பனை கைது செய்!' என்ற கோஷத் தோடு தேவேந்திரகுல வேளாளர்கள் போராட்டம் நடத்தினர். இதன் பின்னணியில், நிலங்களை பட்டா செய்வது தொடர்பான அமைச்சர் தரப்பின் நெருக்கடிகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அத்துடன் "தொழிற்சங்கங்கள் நடத்திய போராட் டத்தினால் தமிழகத்தில் 90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை' என்கிற தகவலும் அபுதாபியில் இருந்த முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.
தலைமைச் செயலாளர் இறையன்பு, உளவுத் துறை தலைவர் டேவிட்சன் தேவஆசிர்வாதம், முதன்மை முதல்வர் அலுவலக அதிகாரி உதயசந்திரன் ஆகியோரிடம், "பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் நேரத்தில் கூட பேருந்துகளை இயக்க முடியாமல் போனது எப்படி?'' என முதல்வர் விசாரித்தார்.
போக்குவரத்துத் துறை செயலாளர் கோபாலிடம் அறிக்கை கேட்கப்பட்டது. அவர், "அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அலட்சியம்தான் காரணம்' எனக் குறிப்பிட்டிருந்ததும் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. "வேலை நிறுத்தத்தால் முக்கிய சேவைகள் பாதிக்கக்கூடாது'' என ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டி ருந்தார். அதையும் மீறி இப்படி நடந்ததால் டென்ஷனான முதல்வர்... ராஜகண்ணப்பனை, மாற்றுவதற்கான பைலில் துபாயில் இருந்து வந்தவுடன் கையெழுத் திட்டார். ராஜகண்ணப்பனை மாற்றியது சரிதான். ஆனால் இந்த வேலை நிறுத்த விவகாரத்தை சரியாக கையாளாதது அமைச்சர் மட்டுமல்ல... போக்குவரத்துத் துறை செயலாளரான கோபால் ஐ.ஏ.எஸ். மற்றும் தலைமைச் செயலாளர், உளவுத்துறை தலைவர், முதல்வரின் முதன்மைச் செயலாளர் ஆகியோரும்தான். இவர்கள் மீது என்ன நடவடிக்கை? என கேட்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.
கோபால் ஐ.ஏ.எஸ்., சென்னையில் மழை வெள்ளம் பாதித்தபோது, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். "வேலை நிறுத்தம் போன்ற அவசர சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என அவருக்கு ஏன் தெரியவில்லை? திடீரென வந்த வெள்ளத்தைச் சமாளித்தவர், திட்டமிட்டு வரும் வேலை நிறுத்தத்தை சமாளிக்க முடியாமல் போனது ஏன்?' என கேள்வி எழுப்புகிறார்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தைச் சேர்ந்தவர் கள். தலைமைச் செயலாளர் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார் கோபால்“ என குற்றம்சாட்டுகிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
கோபால் மட்டுமல்ல... கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் சேர்ந்து ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளானவர் குமாரவேல் பாண்டியன் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி. அவரை வேலூர் கலெக்டராக்கி, நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வைத்துள்ளார்கள்.
"குமாரவேலை போலவே, வேலுமணியுடன் இணைந்து ஊழல் புரிந்த கார்த்திகேயன், பிரகாஷ், விஜய்கார்த்தி கேயன் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேல் எந்த ஊழல் வழக்கும் இல்லை. ஆனால் வேலுமணி மீது வழக்குகள் குவிந்து வருகிறது. தி.மு.க. அரசில் அதிகாரிகளைக் காப்பாற்றுவது ஏன்?' என கேள்வி கேட்கிறது தலைமைச் செயலக வட்டாரங்கள்.
அதேபோல் பொங்கல் பரிசு விநியோகத்தில் குளறுபடிகளுக்கு காரணமான நஜீமுதீன் ஐ.ஏ.எஸ். மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமியை செயல்பட விடாமல் செய்து, அவரை நான் மாற்றுவேன் எனச் சொல்லிவரும் செயலாளரான மதிவாணன் ஐ.ஏ.எஸ். மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நெடுஞ்சாலைத் துறையில் அமைச்சருக்கும், செயலாளரான நீரஜ்குமாருக்கும் வெளிப்படையாகவே மோதல் நடக்கிறது. சென்னை மாநகராட்சி கமிஷனரான ககன்தீப்சிங் பேடி வரை ஒரு லிஸ்ட்டே உள்ளது.
"இந்த ஆட்சியில் அதிகாரிகளின் ஆட்டத் திற்கு அளவேயில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகத்தின் செல்வாக்கு இப்போதும் கோட்டையில் உள்ளது. அவரது அட்வைஸ்படி அமைச்சர்களைக் கூட அதிகாரிகள் மதிப்பது இல்லை' என குற்றம்சாட்டு கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.
பல நல்ல அதிகாரிகள் சில குறிப்பிட்ட அதிகாரிகளின் அட்டகாசத்தைத் தாங்க முடியாமல் "எங்களை முக்கியத்துவம் இல்லாத துறைக்கு மாற்றுங்கள்' என கோரிக்கை வைக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்துறை செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ். போன்றவர்கள் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் அமைச்சரவை மாற்றம் நிகழும், அத்துடன் அதிகாரிகள் மாற்றமும் நிகழும் என்கிற ஆரூடம் கோட்டை வட்டாரத்தைச் சுற்றி வருகிறது.