எல்லோரும் எதிர்பார்த்தபடி, தி.மு.க.வில் சர்ச்சைகளுக்கும் சலசலப்புகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் மு.க.அழகிரி. கலைஞர் நினைவிடத்துக்கு கடந்த 13-ஆம் தேதி தனது மனைவி, மகன், மகள் மற்றும் தனது மதுரை ஆதரவாளர்களுடன் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, மீடியாக்களின் முன்பு பேச ஆரம்பித்தார்.
""எனது மனதில் இருக்கும் ஆதங்கத்தை என் அப்பாவிடம் சொல்லிவிட்டேன். அந்த ஆதங்கம் என்ன என்பது இப்போது புரியாது. கலைஞரின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள்'' என லைட்டாக போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார். அதன் பின் கோபாலபுரத்துக்கு அவர் சென்றபோது, அங்கிருந்த ஸ்டாலின் இவரை எதிர் கொள்ள விரும்பாமல் உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்த அழகிரி, ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ""கட்சியில் எனக்கு பொறுப்பு கொடுத்தால் நான் வளர்ந்துவிடுவேன் என ஸ்டாலின் பயப்படுகிறார். இப்போது கட்சிப் பதவிகள் விலை போகின்றன'' என சுதியைக் கூட்டினார்.
கடந்த சில நாட்களாகவே முரசொலி செல்வம், கலைஞர் மகள் செல்வி, கலாநிதி, தயாநிதி ஆகியோர் அழகிரியை சமா தானப்படுத்தும் வகையில் பேச்சு வார்த்தையை நடத்தினார்கள். கட்சியில் தனக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி தரவேண்டும். தனக்கு பதவி தர விருப்பமில்லை என்றால் தனது மகன் துரை தயாநிதிக்கு இளைஞர் அணி பதவி தரவேண்டும், தி.மு.க. அறக்கட்டளையில் உறுப்பினராக்க வேண்டும் என்பதுதான் அழகிரியின் முக்கிய நிபந்தனை.
இந்த நிபந் தனைகளெல்லாம் ஸ்டாலின் தரப்புக் கும் தெரியப்படுத் தப்பட்டது. ஸ்டாலின் தரப்போ, ""இந்த நேரத்தில் கட்சியில் குடும்பரீதியாக எந்த சலசலப்பும் சர்ச்சையும் தலை தூக்கக் கூடாது. எம்.பி. எலெக்ஷன் மட்டுமல்ல, எந்த நேரத்தில் எந்த தேர்தல் வந்தா லும் களம் காண் பதற்கு கட்சியைத் தயார் நிலையில் வைத்திருப்பது ரொம்ப முக்கியம். இப்போதைக்கு அழகிரி விஷயத்தில் எந்த முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்'' என சமாதான தூதர்களிடம் விளக்கியது.
மதுரையில் இருக்கும் அழகிரி ஆதரவாளர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, ""காவேரி ஆஸ்பத்திரியில அழகிரி அண்ணனும் ஸ்டாலினும் கைகளை இறுகப் பற்றிக் கொண்டதை அங்கு வந்த கனிமொழி அக்கா பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டார். பிறகு மூவரும் ஒரு அறைக்குச் சென்று பேசிய பின்தான் எடப்பாடியை பார்க்கச் சென்றார்கள். அண்ணனைப் பொறுத்தமட்ல மாநில அளவுல கட்சிப் பொறுப்பு, துரை தயாநிதிக்கு இளைஞரணி யில பொறுப்பு. இதுதான் அவரின் எதிர்பார்ப்பு'' என்கிறார்கள்.
எந்த தரப்பையும் சாராத நடுநிலை உ.பி.க்களோ, ""கலைஞர் உடல் ராஜாஜி ஹாலில் இருந்த போதும் சரி, அண்ணாவின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்ட போதும் சரி, அழகிரியிடம் ஸ்டாலின் பெரியளவில் நெருக்கம் காட்டாதது கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. இரண்டு பேரும் விட்டுக் கொடுத்துப் போனால் கெட்டுப் போவதில்லை. அழகிரியை கட்சியில் சேர்க்காமல் போனால் வரப் போகும் தேர்தல்களில் தென்மாவட்டங்களில் கட்சிக்கு சேதாரத்தை ஏற்படுத்த முயற்சிப்பார் என்கிறார்கள்.
கலைஞர் இருக்கும் போது நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் உட்பட 40 பேர் தென்மாவட்டங்களில் தோல்வியைத் தழுவினார்கள்.
அதேபோல் 2016 தேர்தலிலும் தனது வீட்டு மொட்டை மாடியில் கூடிய நிர்வாகிகளிடம் "இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள்' என்றார் அழகிரி. ஆனால் அழகிரியிடம் அப்போது இருந்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை இப்போது ரொம்பவே குறைந்து விட்டது. இது அழகிரிக்கும் தெரியும். இனியாவது தனது முரட்டுப் பிடிவாதத்தை கைவிட்டுவிட்டு, கட்சியின் நலனைப் பார்ப்பதுதான் சரி என்கிறார்கள்.
அழகிரியோ, கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தராவிட்டால், ரஜினி பக்கம் நின்று ஸ்டாலினுக்கு சவால் விடுக்கும் வேலைகளைச் செய்ய நினைக்கிறார். காவேரி ஆஸ் பத்திரியில் தன்னை ரஜினி சந்தித்தது, கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கோபால புரத்துக்கு வருமாறு ரஜினிக்கு தகவல் கொடுத்தது, அதிகாலையிலேயே ராஜாஜி ஹாலுக்கு ரஜினியை வர வைத்தது என அழகிரி தரப்பு தொடர்ச்சியாக ரஜினியை சார்ந்து நிற்கிறது.
பா.ஜ.க.வின் பின்னணியில் ரஜினி, அவரின் பின்னால் இருக்கும் அழகிரி, இதையெல்லாம் ஸ்டாலின் தரப்பு கொஞ்சமும் ரசிக்கவில்லை. இந்த நிலையில்தான், நடிகர் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலினிடம் ரஜினி காட்டிய நெருக்கம் கூர்ந்து கவனிக்கப்பட்டது. அதேபோல் கலைஞர் இருந்த போது அழகிரி விஷயத்தில் பரிவு காட்டிய கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியருக்குக் கூட, இப்போது மாறுபட்ட கருத்து உள்ளது. நிலைமை இப்படி போய்க் கொண்டிருக்க, சமூக வலைத்தளங்களில் திருவாரூரில் உதய நிதி, திருப்பரங்குன்றத்தில் துரைதயாநிதி’ என கச்சை கட்டப்படுகிறது.
அடுத்தடுத்து அழகிரி வெளிப்படுத்தும் அதிரடி கருத்துகள் மீடியாக்களில் தொடர் விவாதமாகும்போது அது தி.மு.க.வுக்கே நெருக்கடியை உருவாக்கும். இதை சைலண்ட் டாகவே எதிர்கொள்ளும் ஸ்டாலின், தன்னிடம் உள்ள பொருளாளர் பதவியை யாருக்கு தருவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார். துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோர் பெயர் அடிபடும் நிலையில், கலைஞரை விட மூத்தவரான பேராசிரியர் தன் உடல்நிலை கருதி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஒதுங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அந்த இடத்திற்கும் சீனியர்களின் லிஸ்ட் ரெடியாகிறது.
இவை பற்றியெல்லாம் விவாதிக்கப்படும் நிலையில், அழகிரி ஏற்படுத்தும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க வேண்டுமென்றால் தேர்தல் களத்தில் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்பதை ஸ்டாலின் உணர்ந்தே உள்ளார். அதற்கான வியூகங்களில் ஸ்டாலின் தீவிரமாக இருக்க, அழகிரியின் மூவ்களால் தி.மு.க. கலங்குமா, தெளியுமா என்பதை பா.ஜ.க., அ.தி.மு.க. உள்பட எல்லாத் தரப்பும் எதிர்பார்த்திருக்கிறது.
-ஈ.பா. பரமேஷ்வரன், அண்ணல்
__________________________
உயிரை காப்பாற்றிய பேரன்!
கலைஞரின் சி.ஐ.டி. காலனி வீட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு பணியில் இருப்பவர் மேக நாதன். கோபாலபுரத்திலிருந்து கலைஞரின் உடல் சி.ஐ.டி. காலனி வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட நேரத்தில், மேகநாதன் அதிர்ச்சியாகி மயங்கிவிழுந்தார். பரபரப்பான அந்த சூழலில் சம யோசிதமாக செயல்பட்ட கனிமொழியின் மகனும் கலைஞரின் பேரனுமான ஆதித்யா, உடனடியாக மேகநாதனுக்கு பிளட் பிரஷரை செக்கப் செய்து, முதலுதவி அளித்து உடல் நிலையை சீர்செய்தார். "சிங்கப்பூரில் படித்துவரும் ஆதித்யா, அந்நாட்டின் சட்டப்படி ராணுவப் பயிற்சி, முதலுதவி-தீயணைப்பு பயிற்சிகளைப் பெற்றிருப்பதால், உரிய நேரத்தில் அதனைப் பயன்படுத்தி உயிர் காத்துள்ளார்' என்கிறார்கள் அங்கிருந்தவர்கள்.
-இளையர்
_______________________
திருவாரூரில் ஜெய் ஆனந்த்!
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்களில் அ.ம.மு.க. போட்டியிடும் என தினகரனும் அ.தி.க. போட்டியிடும் என திவாகரனும் அறிவித்துள்ளனர். திருவாரூரில் அ.ம.மு.க. மா.செ. எஸ்.காமராஜ், குடவாசல் எம்.ஆர். ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்கலாம். இந்த நிலையில் புதுக்கோட்டை போஸ் மக்கள் பணியகத்தின் சார்பில் நடந்த நலத்திட்ட விழாவுக்கு வந்த திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், "கட்சித் தலைமை(!) அனுமதித்தால் திருவாரூரில் போட்டியிடுவேன்' என்ற பிட்டைப் போட்டுள்ளார்.
-பகத்