எதிர்பார்ப்புகளும் பரபரப்புகளும் தி.மு.க.வை நோக்கி குவிந்துள்ள நிலையில்... காவேரியிலிருந்து மெரினாவரை கலைஞரின் கடைசி நிமிடங்களிலும் இறுதிப் பயணத்திலும் தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடைப்பிடித்த அணுகுமுறை தொடரவேண்டும் என்பதே கட்சியினரின் விருப்பமாக உள்ளது.
ஒன்றரை ஆண்டுகளாக அரசியல் களத்திலிருந்து கலைஞர் ஒதுங்கியிருந்த நிலையில் மு.க.ஸ்டாலின்தான் அதிக நெருக்கடிக்குள்ளானவர். கலைஞரைப்போல அவர் செயல்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடமும் மக்களிடமும் அதிகளவில் இருந்தது. குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது.
ஜூலை-27 நள்ளிரவுக்குப் பிறகு கோபாலபுரம் வீட்டிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு கலைஞரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றபோது உடைந்தும் -உறைந்தும் நின்ற மு.க.ஸ்டாலின், அதன்பின் எது நடந்தாலும் தன் தலையில் இடியாகவும் தோளில் சுமையாகவும் இறங்கும் என்பதை உணர்ந்தே இருந்தார். அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனையில் ஸ்டாலினுடன் இருந்த நிலையில், வெளியே பரபரப்புச் செய்திகள் கசிந்தபடியே இருந்தன.
ஆகஸ்ட்-7 மதியம் மெரினாவில் கலைஞருக்கு இடம் கேட்டு முதல்வர் எடப்பாடியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, அழகிரி, கனிமொழி, தமிழரசு, முரசொலி செல்வம் உள்ளிட்டோருடன் ஸ்டாலின் சென்றதில், சூழலை உணர்ந்து செயல்படும் தன்மை வெளிப்பட்டது. மாலையில் கலைஞரின் மரணம் அறிவிக்கப்பட்டு, அண்ணா சமாதியில் இடம் தரமுடியாது என தலைமைச் செயலாளர் அறிவித்தபோது, மருத்துவமனை வாசலிலேயே தொண்டர்கள் கொந்தளிப்பாயினர். கலைஞரின் உடல் கோபாலபுரம் நோக்கிச் சென்ற வழியெங்கும், “"வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்'’என்னும் முழக்கமே அதிகம் ஒலித்து நிலைமையை உணர்த்தியது.
வன்முறை வெடிக்குமோ என்ற நிலையில், உடனடியாக நீதிமன்றத்தை நாடுவதற்கு மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு பதற்றத்தை பெருமளவு தணித்தது. வன்முறைக்கு இடம்தராமல் கலைஞரின் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற அவரது அறிக்கையும் துணை நின்றது. அன்றைய இரவில் ஸ்டாலினிடமிருந்து வெளியான இரங்கல் அறிக்கை கட்சி கடந்து பலரையும் உருக வைத்தது. காரணம்...
"தலைவரே என்று என் வாழ்நாளில் உச்சரித்ததுதான் அதிகம். அதனால் ஒரே ஒருமுறை இப்போது "அப்பா' என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?' என்று நிறைவடைந்த அந்த கண்ணீர் அறிக்கை ஸ்டாலினின் மனதைக் காட்டுவதாக இருந்தது.
இரவில் கோபாலபுரத்திலும் சி.ஐ.டி. காலனியிலுமாக கலைஞரின் உடலை வைத்திருந்து அதன்பின் அதிகாலையில் ராஜாஜி ஹாலுக்கு கொண்டுசென்றது, உடலைச்சுற்றி குடும்பத்தினர் நின்றுகொண்டிருக்காமல் அவரவருக்கான பணிகளைக் கவனிக்கச் செய்தது என ஒவ்வொன்றிலும் ஸ்டாலின் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். அதேநேரத்தில், மெரினாவில் கலைஞருக்கு இடம் என்பதில் அவரது சட்டப்போராட்டமும் மனஉறுதியும் மாறவேயில்லை. மெரினாவில் சட்டப்பூர்வமாக இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி ஆலோசித்தவர், ஒருவேளை தீர்ப்பு வேறு மாதிரி இருந்தால் காந்தி மண்டபம் வரையிலான இறுதி ஊர்வலத்தையே போர்முழக்கமாக மாற்றும் வழிவகைகளையும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்திருந்தார்.
காலையில் அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் எடப்பாடியிடம் முகம் கொடுக்க ஸ்டாலின் தயாராக இல்லை. சம்பிரதாயத்துக்கு வணக்கம் தெரிவித்து, "எங்க வயித்தெரிச்சல் சும்மா விடாது' என எடப்பாடியிடமும் அமைச்சர்களிடமும் சொன்னார். தலைமைச் செயலாளர் கிரிஜாவிடம், "காலம் இப்படியே இருக்காது' என முகத்தில் கோபம் வெடிக்க ஸ்டாலின் சொல்ல... கிரிஜா அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற வேண்டிய நிலை வந்தது.
"மெரினாவில் கலைஞருக்கு அனுமதி' என்கிற தீர்ப்பு வந்தபோது, ராஜாஜி ஹாலில் உள்ள ஓர் அறையில் இருந்த ஸ்டாலினிடம் அதை ஆர்வத்துடன் முதலில் சொன்னவர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. துக்கமும் ஆனந்தமும் கலந்த கண்ணீருடன் குலுங்கிய ஸ்டாலின், அங்கிருந்து கலைஞர் உடல் அருகே வர... எதிரே திரண்டிருந்த லட்சக்கணக்கானோர் வெற்றி முழக்கம் எழுப்பினர். அதில் பரவசப்பட்டு கண்ணீர் வடித்த ஸ்டாலின் அப்படியே குலுங்கி அழுததில், போலித்தனமில்லாத உணர்வு வெளிப்பட்டது என்கின்றனர் அருகிலிருந்தவர்கள்.
கட்டுக்கடங்காமல் அதிகரித்த கூட்டத்தினைப் பார்த்ததும், மைக்கை வாங்கி, “""மரணத்திலும் தலைவர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் வென்றிருக்கிறார். அவரை நல்லடக்கம் செய்ய நீங்கள் அமைதியாக ஒத்துழைக்க வேண்டும். உங்களில் ஒருவனாக வேண்டிக் கேட்கிறேன்'' என ஸ்டாலின் சொன்னது, நேரலையில் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வன்முறை ஏதுமற்ற இறுதிப்பயணம், அண்ணா சதுக்கத்தில் குடும்பத்தினர் -கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் சம உரிமை வழங்கிய கடைசி நிகழ்வுகள், மறுநாள் இரவில், குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி, செயற்குழு தொடர்பாக பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்குச் சென்று ஆலோசனை, அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் என ஸ்டாலினின் செயல்பாடுகளில் முதிர்ச்சி தெரிந்தது.
செயற்குழுவுக்குப் பிறகு பொதுக்குழுவில் முறைப்படி தி.மு.க.வின் தலைவராகப்போகும் ஸ்டாலின் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் நெருக்கடிகளும் ஏராளம். ஒவ்வொரு கட்டத்திலும் முதிர்ச்சியான அணுகுமுறையையும் ஒருங்கிணைப்பான செயல்பாட்டினையும் ஸ்டாலின் வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
-கீரன்
நினைவிடக் காவலர்கள்!
மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்து ஒரு மணி நேரமாகியும், பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் அந்த இடத்துக்கு வரவில்லை. காந்தி மண்டபம் அருகிலோ, அண்ணா சமாதி அருகிலோ, எங்கே இடம் கிடைத்தாலும், எப்படி செயல்படுவது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தது தி.மு.க. தலைமை. அதற்குத் தோதாக பொக்லைன் எந்திரத்தையும் வேலை ஆட்களையும் 07-ஆம் தேதி இரவே மெரினாவில் தயார் நிலையில் வைத்திருந்தார் தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மாஜி அமைச்சருமான எ.வ.வேலு.
கலைஞருக்குச் சாதகமாக கோர்ட் உத்தரவு வந்ததும், உடனடியாக எ.வ.வேலுவை மெரினாவுக்கு கிளம்பிப் போகச்சொன்னார் மு.க.ஸ்டாலின். அதைத் தொடர்ந்து துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோரும் மெரினாவுக்குச் சென்றனர். ஸ்பாட்டில் வேலைகளை முடுக்கிவிட்டுக் கொண்டே, கலைஞருக்கான சந்தனப் பேழையை தயார் செய்யும் பணியில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்'’என்ற வாசகத்தையும் பொறித்து கச்சிதமாக முடிக்கச் செய்தார் எ.வ.வேலு. பேழையில் வைக்கப்பட்ட கலைஞரின் உடல், அலுங்காமல் குலுங்காமல் மண்ணுக்குள் இறங்குவதற்காக முதன்முதலில் லிஃப்ட் பயன்பாட்டையும் செய்தார்.
ஆக. 08-ஆம் தேதி இரவு 7.30-க்கு கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது முதலே தி.மு.க. நிர்வாகிகள் அந்த இடத்தைப் பராமரிக்கத் தொடங்கிவிட்டனர். தினம்தோறும் கட்சியினரும் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் வந்து அஞ்சலி செலுத்தியபடியே இருக்கிறார்கள். சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கலைஞரின் நினைவிடத்தில் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, வரிசையாக அனுப்புவது, மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதிகளைச் செய்து தருவது, மதிய நேரத்தில் உணவு வழங்குவது ஆகியவற்றை எம்.எல்.ஏ.க்களான எ.வ.வேலு, சேகர்பாபு இருவரும் கர்மசிரத்தையாக கவனித்து வருகின்றனர்.
-பரமேஷ்