பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லையென அறிவித்து விட்டது அ.தி.மு.க. தலைமை. அ.தி.மு.க.விடம் ஒரண்டை இழுத்துக்கொண்டிருந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சைலண்ட்டாகிவிட்டார். இந்த கூட்டணி முறிவால் இரு கட்சித் தொண்டர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகிறார்கள். இந்நிலையில், இக் கூட்டணியைச் சேர்ந்த ஏ.சி.எஸ்., மீண்டும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார் என்கிற தகவலால் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் கடுப்பில் உள்ளனர்.

Advertisment

acs

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம். 2019-ல் அதே வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்திடம் தோல்வியை சந்தித்தார். மூன்றாவது முறையாக வேலூரை குறிவைத்துள்ளார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகளில் தொகுதிக்கு இரண்டு இடங்களில் என 12 இடங்களில் தனது பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 23, 24ஆம் தேதிகளில் தனது மருத்துவக்கல்லூரி மூலமாக மருத்துவ முகாம்கள் நடத்தினார் ஏ.சி.சண்முகம். பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் மருத்துவ முகாம் என அவர் சொன்னாலும், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி யைக் குறிவைத்தே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவரின் பிறந்தநாளான செப்டம் பர் 25ஆம் தேதி, அ.தி.மு.க. தலைமையானது, 'கூட்டணி முறிந்தது, முறிந்தது தான்!' என அறிவித்ததால் அதிர்ச்சியானார். தொகுதி மக்களைக் குறிவைத்து, அடுத்தடுத்து நடத்துவதாக இருந்த நிகழ்ச்சிகளை நடத்தலாமா? வேண்டாமா? எனத் தற்போது யோசிக்கிறார்.

ஏ.சி.எஸ்.சின் செயல்கள், வேலூர், திருப்பத் தூர் மாவட்ட அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "தமிழ்நாட்டில் வேலூர், தென்சென்னை, ஈரோடு, கோவை, நீலகிரி, சிவகங்கை, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளைக் குறிவைத்து கடந்த 7 ஆண்டுகளாகக் களப்பணி செய்துவருகிறோம். யாருடன் கூட்டணி இருந் தாலும், இல்லாவிட்டாலும், 2024 தேர்தலில் இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்துவைத்துள்ளோம். வேலூர் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளராக மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்பட்டு, அவர் தலைமையில் கட்சிப்பணி நடக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல தேசியத் தலைவர்களை இங்கு வரவைத்து கட்சிக் கூட்டம் நடத்தி, ஆட்சியின் சாதனைகள் குறித்து மக்களிடம் பேசியுள்ளோம். இதையெல்லாம் செய்யக் காரணம், பா.ஜ.க. நேரடியாக இங்கு போட்டியிட வேண்டும் என்பதற்காகத்தான்.

acs

Advertisment

பொதுச்செயலாளர் ஆம்பூர் வெங்கடேசன், மாநில பொதுச்செயலாளர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, வேலூர் மாவட்டத் தலைவர் மனோகரன், பாபு போன்றோர் இங்கு போட்டியிட முயற்சிக்கிறார்கள். பா.ஜ.க.வினருக்கு சீட் தந்தால்தான் தொண்டர்கள் மகிழ்ச்சியடை வார்கள். பா.ஜ.க.வை சேர்ந்தவர் எம்.பி.யாக இருந்தால் இந்தப் பகுதியில் கட்சி வளரும், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் இப்பகுதிகளில் கணிசமான வெற்றி கிடைக்கும். தேர்தலுக்குத் தேர்தல் சின்னத்தை மாற்றிக்கொண் டும், பணத்தை வைத்து வெற்றி பெறலாமென்றும் அரசியல் செய்துவரும் ஏ.சி.சண்முகத்துக்கு சீட் தருவது எங்களுக்கு பின்னடைவு. இதுகுறித்து தேசியத் தலைமையிடம் சொல்லியுள்ளோம். தலைமை என்ன முடிவெடுக்கப்போகுதுன்னு தெரியல'' என்றார்கள் அதிருப்தியுடன்.

அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசியபோது, "கடந்தமுறை பா.ஜ.க.வின் நெருக்கடி, ஏ.சி.எஸ். தந்த பணத்துக்கு மயங்கி எங்கள் தலைமை இவருக்கு சீட் தந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பேசிய ஏ.சி.சண் முகம், அ.தி.மு.க. தொண்டர்களை நம்பிக்கை துரோகிகள் என மறைமுகமாகப் பேசினார். அவருக்கு திரும்ப சீட் தரக்கூடாது. மீறித் தந்தால் நாங்கள் எப்படி வேலை செய்வது?. அ.தி.மு.க.வில் சீட் கேட்பவர்களுக்கு பஞ்சமில்லை. மாநகர மா.செ. அப்பு, வேலூர் புறநகர் மா.செ. வேலழகன், மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜனனி சதீஷ்குமார், அமைப்புச்செயலாளர் ராமு போன்றோர் உள்ளனர். இவர்களில் யாருக்கு தந்தாலும் கோஷ்டி மறந்து வேலை செய்வார்கள்'' என்றனர்.

பா.ஜ.க., அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களின் மனநிலை இவ்வாறு இருக்க, வேலூர் தொகுதியில் தேர்தல் பணியை முன்கூட்டியே தொடங்கிய ஏ.சி.சண்முகம், இப்போது சைலண்ட்டாகியுள்ளார். இதுகுறித்து அவர் தரப்பில் விசாரித்தபோது, "பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இருந்தால் நம்பி தைரியமாகப் போட்டியிடலாம். பா.ஜ.க.வை மட்டும் நம்பி தேர்தல் களத்தில் இறங்கமுடியாது என நினைக்கிறார். மீண்டும் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி உருவானால் கண்டிப்பாகப் போட்டி யிடலாம் என நினைக்கிறார்'' என்கிறார்கள். பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறுகிறார்கள். அதே நேரத்தில், அ.தி.மு.க.வில் எடப்பாடியிடம் செலவுக்கு பணம் தருவதாகக் கூறி டீலிங் பேசிவருவதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதில் இருகட்சித் தொண்டர் களுக்கும் துளியும் விருப்பமில்லை என்பதே தற்போதைய நிலவரம்!