ழைப்பின் பலன் என்ன என்பதை அரசியல் களத்தில் உணர்த்தியிருக்கிறார் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க விருக்கும் மு.க.ஸ்டாலின். இடைவிடாத தனது உழைப்பால்-வியூகத்தால் 1996-க்குப் பிறகு தி.மு.க.வை தனிப் பெரும்பான்மை யுடன் ஆட்சிக்கட்டிலுக்கு கொண்டு வந்திருக்கிறார். கலைஞர் இல்லாத தி.மு.க.வுக்குத் தலைமையேற்று, சவாலான பாதையில் பயணித்து வெற்றிக் கோட்டையைப் பிடித்திருக்கிறார்.

stalin

மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க- மாநில ஆளுங்கட்சியான அ.தி.மு.க. என அதிகாரமிக்க கட்சிகளின் கூட்டணிக்கு எதிராக, தொடர்ந்து 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி யாக இருக்கும் தி.மு.க வகுத்த தேர்தல் வியூகத்தில் முக்கியமானது, தோழமைக் கட்சிகளை அரவணைத்த பாங்கு. அவர் களுடனான தொகுதிப்பங்கீடு-வெற்றி வாய்ப்பு அனைத்திலும் விட்டுக்கொடுத்து சுமூகமான உடன்பாட்டை எட்டினார்.

மக்களிடமிருந்து விலகி இருந்த தி.மு.க. வினரை மீண்டும் மக்களுடன் இணைக்கச் செய்யும் வகையில் "ஒன்றிணைவோம் வா', "கிராமசபை கூட்டம்', "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனத் தொடர் நிகழ்வுகள் மூல மாக பொதுமக்களுடனான தி.மு.க.வினரின் உறவை மேம்படுத்தினார். பழைய தவறுகளி லிருந்து பாடம் கற்று, புதிய வீச்சுடன் செயல்படும் வகையில் ஸ்டாலினின் வியூகம் இருந்தது. இந்த வியூகங்களைத் தாண்டி, இன்றைய அரசியல் சூழலுக்கேற்ப ஐ-பேக் நிறுவனத்துடனான வெளிப்படையான ஒப் பந்தம் மூலம் தேர்தல் வியூகங்கள் -பரப்புரை நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisment

களத்தில் நின்ற அரசியல் தலைவர் களில் ஸ்டாலினுக்குத்தான் தமிழக மக்க ளிடம் கூடுதல் செல்வாக்கு இருந்தது. அது நம்பிக்கையாகவும் மாறியது. அந்த நம்பிக்கை தேர்தலில் வாக்குகளாகி, வெற்றியாக விளைந்திருக்கிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக பொதுவாழ்வில் தொடர்ச்சியாக இயங்கிவரும் மு.க.ஸ்டாலின், கடுமையாக சவாலைக் கடந்து இந்த வெற்றியை சாதித்துள்ளார்.

இந்த சாதனையைத் தொடர்ந்து சவால்கள் அணிவகுத்துள்ளன. தலைக்கு மேல் கத்திகள். தமிழகத்தை கொரோனா இரண்டாவது அலை ஆட்டிப் படைக்கின்ற காலம். தொற்று எண் ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. உயிரிழப்பு களும் கூடுகின்றன. இதனைத் தடுக்க வேண்டிய போர்க்கால நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய சவாலான பணி ஸ்டாலின் முன் காத்திருக்கிறது.

தமிழகத்தின் நிதிநிலை மோசமாகி, கடன்சுமை கூடியுள்ள நிலையில்... அதனை சரிப்படுத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பெரும்சுமையும் அவர் தோளில் ஏறுகிறது. நீட் தேர்வு உள்பட கடந்த 4 ஆண்டு களில் மத்திய அரசால் பறிக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

Advertisment

இவற்றைத்தாண்டி, அமைச்சரவையில் தொடங்கி அதிகாரிகள் நியமனம் வரை ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவுகள் சுதந்திரமானவையா? கட்சியினர் -குடும்பத்தினர் சிபாரிசுகளுக்குட் பட்டதா? என்பதே அவர் மீதான நம்பிக்கைக்கு எந்தளவு பாத்திரமாக இருக்கிறார் என்பது தெளிவாகும். 10 ஆண்டுகளுக்கு முந்தயை தி.மு.க. ஆட்சி பற்றிய விமர்சனங்களை ஆளுந்தரப்பினர் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கின்ற அளவுக்கு தேர்தல் களம் இருந்தது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அமைந்துள்ள தி.மு.க. அரசு அதிலிருந்து முற்றிலும் மாறு பட்டதாக இருக்குமா என்ற எதிர்பார்ப்புக்கான விடை, ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது. சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கும் ஸ்டாலின், சாட்டையை எடுக்க வேண்டிய நேரம் இது.

-கீரன்

---------------------

சட்டம்-ஒழுங்கு! எந்த அதிகாரி கையில்?

stalin

தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் மாற்றப்படவிருக்கிறார்கள். தமிழக டி.ஜி.பி.யாக இருக்கும் திரிபாதி, நடப்பு மாதத்தோடு ஓய்வு பெறுகிறார். இதனால் "புதிய டி.ஜி.பி. யார்?' என்கிற விவாதம் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடத்தில் எதிரொலிக்கிறது.

இது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, " டி.ஜி.பி. அந்தஸ்தில் 1987-ஆம் வருட பேட்ஜில் சைலேந்திரபாபு, கரன்சின்கா, பிரதீப் பிலிப், 1988-ஆம் வருட பேட்ஜில் சஞ்சய் அரோரா, சுனில்குமார்சிங், 1989-ஆம் வருட பேட்ஜில் கந்தசாமி, ஷகில் அக்தர், ராஜேஷ்தாஸ், பி.கே.ரவி ஆகியோர் இருக்கின்றனர்.

இவர்களில் பாலியல் குற்றச்சாட்டுகளில் ராஜேஷ்தாஸ் சிக்கி அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த 9 அதிகாரிகளின் பட்டியல் மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களில் சீனியாரிட்டிபடி மூன்று பேரைத் தேர்வு செய்து தமிழக அரசிடம் தேர்வாணையம் ஒப்படைக்கும். அவர்களில் ஒருவரை ஸ்டாலின் தேர்வு செய்வார்'' என்கின்றனர்.

மேலும், "தமிழகஅரசின் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் டி.ஜி.பி. யாக அதாவது தமிழக காவல்துறையின் தலைவராக நியமிக்கப்படுபவர் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருக்க வேண்டும்; வட இந்திய அதிகாரிகளுக்கு வாய்ப்பு தந்துவிடாதீர்கள்' என இப்போதே ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர், பல ரூட்டுகளில் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பி வைத்துள்ளனர். அதேசமயம், தி.மு.க. ஆட்சியில் எப்போதும் சட்டம்-ஒழுங்கு குறித்து விமர்சனங்கள் வைக்கப்படும் என்பதால், "தமிழக அதிகாரியாக இருந்தாலும் சரி... வடஇந்திய அதிகாரியாக இருந்தாலும் சரி... இதுவரை பாலியல் குற்றச்சாட்டுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத நேர்மையான அதிகாரியை நியமியுங்கள்; அதுதான் உங்கள் ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்' என்று ஓய்வுபெற்ற அதிகாரிகள் சிலர் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பி வைத்தபடி. இருக்கின்றனர்.

-இளையர்