அ.தி.மு.க. அமைச்சர்களில் எந்த பரபரப்பும் இல்லாமல் தான் உண்டு, தனது "லட்சியம்' உண்டு என்று செயல்படுபவர் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. "அமைதியாக இருந்தே அறுவடை செய்திருப்பவர் வேளாண் அமைச்சர்' என்று அ.தி.மு.க.வினரே சர்டிபிகேட் கொடுக்கிறார்கள்.
தஞ்சைமாவட்டம் -ராஜகிரியில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு. திவாகரன் ஆசியோடு சீட் வாங்கி, தனது எளிமையையே மூலதனமாக்கி இரண்டுமுறை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றது, அவருடைய கடும் உழைப்புக்கான சாட்சியம். மூன்றாவது முறை வெற்றிபெற்றபோது மாவட்டத்தின் சீனியர்கள் யாரும் உறுப்பினராக இல்லாதது, துரைக்கண்ணுவுக்கு அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்தது.
தொடக்கத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ஆள் என்பது போன்ற தோற்றத்தோடு வலம்வந்தவர், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு நினைத்ததை சாதிக்கும் லெவலுக்கு தாவினார். தஞ்சை எம்.எல்.ஏ. ரெங்கசாமி, தினகரன் அணிக்கு சென்றதும் அவரிடம் இருந்த மா.செ. பொறுப்பும் துரைக்கண்ணுவுக்கு கிடைத்தது. ஆனாலும் "சசிகலா குடும்பமும், திவாகரனும் இல்லன்னா, எனக்கு இந்த வாழ்க்கையே கிடையாது' என இப்போதும் பலமுறை சொல்வதாக அவருடைய ஆதரவாளர்களே கிசுகிசுக்கிறார்கள்.
துரைக்கண்ணுவோடு நீண்டகாலம் பயணித்து தற்போது வெளியேறியிருக்கும் ஒருவரை துருவினோம்.…""எங்க போனாலும் அவரை நாங்கதான் சைக்கிளில் கூட்டிக்கிட்டு போவோம். இன்றைக்கு விதவிதமா 10 கார்கள் வச்சிருக்கார். அவரது மூத்த மகன் பாண்டியன் வேளாண்மைத் துறையில் பணிபுரிகிறார். அந்தத் துறையில் போஸ்டிங், டிரான்ஸ்பர் எல்லாம் அவருடைய கண்ட்ரோல்தான். இரண்டாவது மகன் ஐயப்பன் பாபநாசம் பகுதியில் குட்டிராஜ்யமே நடத்திக் கொண்டிருக்கிறார். இவரால் ஏற்பட்ட பல பிரச்சனைகளில் அமைச்சரே தலையிட்டு சமாதானப்படுத்த வேண்டியதா போச்சு. முன்பெல்லாம், கட்சிக்காரங்களக் கண்டா இறங்கிப் பேசுவார். சுபகாரியங்களுக்கும், துக்க வீடுகளுக்கும் முதல் ஆளாக போய் நிற்பார். அமைச்சரானதும் மொத்தமும் தலைகீழாக மாறிடுச்சி. கபிஸ்தலம் பயணியர் மாளிகையில் இருந்தாலும் வருவதில்லை.
வாழ்க்கை உள்ளிட்ட பகுதிகளில் மணல்குவாரிகள் அமைப்பதை எதிர்த்து 18 கிராம மக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். தனது பினாமிகளை வைத்து, அந்த கிராமத்தினரிடையே பிரிவினையை உருவாக்குகிறார். இவருடைய ஆட்களுக்கு காவிரி அல்லது கொள்ளிடத்தில் இரவு நேரத்தில் மணல் அள்ளுவதுதான் தொழிலே. அமைச்சர் ஆனதும் பணம் மட்டும்தான் குறியா இருக்கிறார். டெண்டர்களுக்கு முன்கூட்டியே 30% கமிசனைக் கொடுப்பவருக்குத்தான் ஓ.கே. சொல்கிறார். தற்போது பாபநாசத்தில் கோடிக்கணக்கில் சொத்து, திருக்கருக்காவூர், கபிஸ்தலம், இளங்கார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், அரியலூர், சென்னை தி.நகர் என பல இடங்களில் பினாமிகளின் பெயரில் கோடிக்கணக்கில் சொத்துகளைக் குவித்திருக்கிறார். எடப்பாடியை புகழ்ந்து தள்ளியே எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சம்பாதிக்கிறார்''’என்று கொட்டித் தீர்த்தார்.
பாபநாசத்தை சேர்ந்த வணிகர் சங்க பிரமுகர் ஒருவர்,…""பாபநாசம் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தமிழகத்திலேயே மிகவும் மோசமான சாலை எதுன்னா தஞ்சாவூர் -கும்பகோணம் சாலைதான். பாழடைந்த கட்டடத்தில்தான் பாபநாசம் பேரூராட்சி செயல்படுது. நல்ல நிலையில் விஸ்தாரமாக இருந்த பேருந்து நிலையத்தை சுருக்கி பணத்திற்காக கட்டடங்களை கட்டியிருக்கிறார்.அமைச்சராகி தொகுதியை வளப்படுத்திடுவார்னு நினைத்தோம். ஆனால் நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டு தன்னை வளப்படுத்திக்கிட்டார்''’என்கிறார்.
விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான பாலகுரு,…""முதன்முறையாக போட்டியிட்டபோது, "நான் எம்.எல்.ஏ.வானால், விவசாயப் பகுதியான பாபநாசம் தொகுதியில் வேளாண்மைக் கல்லூரி கொண்டு வருவேன்' என வாக்குறுதி கொடுத்து ஜெயித்தார். ஆனால், சமீபத்தில் திருவையாறு தி.மு.க. எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் "வேளாண்மை கல்லூரி வேண்டும்' என்றபோது, "புதிதாக கல்லூரி துவங்கும் எண்ணம் இல்லை' என்கிறார் அமைச்சர். "குறுவை சாகுபடிக்கு உரியநேரத்தில் தண்ணீர் திறக்கணும்' என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். கும்பகோணம் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் "காவிரி தண்ணீர் என்ன என்னோட பாக்கெட்லயா இருக்கு?' என்று கிண்டலாகப் பேசுகிறார்''’என்கிறார் வேதனையுடன்.
அமைச்சர் வீட்டு எதிரே இரண்டு ஆறுகளின் குறுக்கே பாலம் இல்லாமல் பாபநாசத்தைச் சுற்றிக்கொண்டு போகும் அவலத்தை சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். ""அந்தப் பாலத்தைக் கட்டினால் 30 கிராமங்கள் பயனடையும் என்று தெரிந்தும் அதைப்பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறார். காவிரியின் குறுக்கே இளங்கார்குடியையும் கபிஸ்தலத்தையும் இணைக்க இரண்டு ஆண்டுகளுக்குமுன் பாலம்கட்டும் வேலையத் தொடங்கினாங்க. ஆனால் இன்னும் பாதி வேலைகூட நடக்கல'' என்கிறார்கள்.
""தனது தொகுதியில் நடக்கும் அனைத்து பொதுப்பணித்துறை வேலைகளுக்கும் கொள்ளிடத்தில் இருந்தே மணல் எடுத்துகொள்ள அமைச்சர் மறைமுக அனுமதி கொடுத்திருக்கிறார். எவ்வளவு மணல் அள்ளினாலும் பாதிபணம் அமைச்சர் தரப்புக்குப்போயிடணும்'' என்கிறார் ஒப்பந்தக்காரர் ஒருவர்.
இதுகுறித்து விளக்கம் கேட்க அமைச்சர் துரைக்கண்ணுவை தொடர்புகொண்டோம். போனை எடுத்தவர், "அமைச்சர் ரொம்பப் பிசி'’என்று போனை துண்டித்து, அதிர்ச்சி தந்தார்.
-க.செல்வகுமார்