"தமிழகம் மீட்போம்', "விடியலை நோக்கி', "அ.தி.மு.க.வை நிராகரிப்போம்' என்கிற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என 234 தொகுதிகளையும் உள்ளடங்கிய குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் நேரடியாகக் களமிறங்கியிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

sta

பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது குறையிருக்கும், அந்த குறைகளுக்காக அரசு சார்பில் மனுநீதி நாள் நடத்தப்படும். வேளாண்மை துறை சார்பில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டங்களில் மனுக்கள் தருவார்கள். மாற்று திறனாளிகள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கெனத் தனித்தனி குறைகேட்பு நிகழ்ச்சிகளும் நடக்கும். காவல்துறையால் பாதிக்கப்படுபவர்கள் எஸ்.பி அலுவலகத்திலும் மனு தருவார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்வு முகாம்களில் மக்கள் நேரடியாக மனுக்கள் தருவார்கள். முதல்வரின் தனிப்பிரிவு வரை மனுக்கள் செல்லும். ஒவ் வொரு இடமாக மனு தந்தும் தங்களது கோரிக்கை மட்டும் நிறைவேறாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ளனர். இது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் மூலமாக ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

கோரிக்கைகளோடும், புகார்களோடும் தமிழகம் முழுவதும் காத்திருக்கும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக 234 தொகுதிகளிலும் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மற்றும் கோரிக்கை மனுவை ஸ்டாலின் வாங்குவது என்றும், ஆட்சிக்கு வந்ததும் மக்கள் குறைகள் நிவர்த்தி துறை ஒன்றை உருவாக்குவது என்றும், அந்தத்துறை முதல்வரின் நேரடி கட்டுப் பாட்டில் இருக்கும் என்றும், புகார் மனுக்களை அந்த துறை பெற்று சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வைப்பது என ஆலோசித்து முடிவு செய்யப்பட்டு அதனை ஜனவரி 25ஆம் தேதி கலைஞர் இல்லத்தில் இருந்து அறிவித்தார் ஸ்டாலின்.

Advertisment

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற தலைப்பில் மக்களிடமிருந்து புகார்களை பெறும் நிகழ்வை ஜனவரி 29ஆம் தேதி பௌர்ணமியன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் தொகுதி மக்களிடமிருந்து மனுக்கள் வாங்க திருவண்ணாமலை நகரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பந்தலுக்கு வெளியே புகார்கள் பெற கவுன்டர்கள் அமைக்கப் பட்டு, அங்கு பொதுமக்கள் தந்த மனுக்களை பள்ளி ஆசிரியர்களை கொண்டு முறையாகப் பதிவு செய் தனர். பிறகு, அந்த மனுவுக்கென ஒரு அடையாள எண்ணோடு கூடிய அட்டை வழங்கினார்கள். அந்த மனுக்கள் மேடையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அடுக்கப்பட்டது.

ஜனவரி 29 வெள்ளிகிழமையன்று 10.30 - 12 ராகுகாலம் என்பதால் நிகழ்ச்சி தொடங்க தாமத மாகும் எனக் கட்சிக்காரர்களே நினைத்த நிலையில், சரியாக 10.40க்கு மேடையேறி ஆச்சர்யப்படுத்தி னார் மு.க.ஸ்டாலின். பெட்டியில் இருந்த மனுக் களில் இருந்து சில மனுக்களை எடுத்து கோரிக்கை தாரர்களின் பெயர்களை படித்து அவர்களைப் பேசச் செய்தார்.

sst

Advertisment

அஞ்சலை என்பவர், ""நான் விதவை. என்னைப் போன்ற விதவைகளை சமுதாயத்தில் மோசமாக பார்க்கிறார்கள். துப்புரவு வேலைக்கு சென்றாலும் தீண்டத்தகாதவரைப் போல் பார்க்கிறார்கள். என் னைப்போன்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தந்து சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்க வழி செய்ய வேண்டும் என்றே மனு தந்துள்ளேன்'' என்றார். மதியழகன், ""விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயிகள் நலிவடைந்த நிலையில் உள்ளார்கள். கரும்பு விவசாயிகள் நொடிந்துள்ள னர், கரும்புக்கு தேவையான சரியான விலை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

பாவுப்பட்டு வாணிஜெயராமன், ""எனக்கு அப்பா, அம்மா, கணவர் கிடையாது, ஒரு மகனுடன் வசிக்கிறேன். எங்களுக்கென உதவ யாருமில்லை. கலைஞர் முதல்வராக இருந்தபோது 3 சென்ட் இடம் தந்தார். அங்கு அரசு திட்டம் மூலம் ஒரு வீடு கட்ட முடியவில்லை. பல அதிகாரி களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் முதல்வரானபின் வீடு கட்டி தரவேண்டும் என்றே மனு தந்துள்ளேன், அப்படி தரவில்லை யென்றால் நீங்களே எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்'' என்றார் அழுகை குரலில்.

கலசப்பாக்கம் கனிமொழி, ""வங்கியில் கல்வி கடன் வாங்கி படித்தோம். படித்து முடித்துவிட்டு இப்போது எங்கே போனாலும் வேலை காலியில்லை என்றே சொல்கிறார்கள். அரசாங்கமும் வேலை தரவில்லை, தனியார் தொழிற்சாலைகளும் நம் மாநிலத்துக்கு வரவில்லை. வேலையில்லாமல் மனஉளைச்சலில் உள்ளோம். நீங்கள் முதல்வ ரானதும் கல்வி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கலசப்பாக்கம் தொகுதியில் மகளிர் கல்லூரி கொண்டு வருகிறேன் என்றார் இப்போதைய ஆளும்கட்சி எம்.எல்.ஏ அதை செய்யவில்லை, நீங்கள் உருவாக்கி தரவேண்டும்'' என்றார் விளக்கமாக. செங்கம் சென்னம்மாள் என்பவர், ""எங்கள் செங்கம், புதுப்பாளையத்தில் பூ உற்பத்தி அதிகம், பூக்கள் சேமிப்பு மற்றும் பதப்படுத்தல் கிடங்கும், பூக்களை கொண்டு சென்ட் தயாரிக்கும் தொழிற் சாலையும் உருவாக்கி தரவேண்டும்'' என்றார். குணசேகர், ""டி.ஆர்.பி எக்ஸாம் எழுதி 1500 முதுகலை ஆசிரியர்கள் தகுதி பெற்று 10 மாதங்களாகிவிட்டது, ஆனால் அரசு வேலை இன்னமும் வழங்கவில்லை, நீங்கள் வேலை வழங்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.

இதைப்போலவே ஆரணி சேவூரில் ஆரணி, போளுர், வந்தவாசி, செய்யார் தொகுதி மக்களிடமிருந்து மனுக்கள் பெறப் பட்டது. அங்கு ஸ்டாலின் முன் செய்யார் சைத்தன்னிஷா பேசும்போது, ""செய்யார் அதிமுக எம்.எல்.ஏ தூசி.மோகன் வீட்டுக்கு அருகில் நாங்களும் வசிக்கிறோம். எங்களுக்கும் மற்றொரு வீட்டாருக்கும் இடத் தகராறு நடந்துவருகிறது. இதில் மற்றொரு தரப்புக்கு சாதகமாக எம்.எல்.ஏ நடந்து கொண்டு எங்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டு கிறார். காவல்நிலையத்தில் நாங்கள் புகார் தந்தால் போலீஸ் வாங்க மறுக்கிறது'' என்றார் கண்ணீரோடு. ஸ்டாலின், ""சட்டரீதியாக உங்களுக்கு திமுக துணை நிற்கும்'' என்றார்.

ஆரணி இளம்பெண் எழிலரசி, ""எனது அப்பா, அம்மா இறந்துவிட்டார்கள். எங்கள் அப்பா ஓய்வு பெற்ற இராணுவ வீரர். எங்களுக்கு வரவேண்டிய எந்த பலனும் வரவில்லை, அண்ணனும் வேலையில்லாமல் உள்ளார், இருவரும் வாழ வழியில்லாமல் உள்ளோம்'' என்றார். ""ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்கமாட்டேன், உங்களுக்கு தேவையானவற்றை உடனே செய்யப்படும்'' என்றார் மு.க.ஸ்டாலின்.

ஜனவரி 30ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில், குடியாத்தம் விநாயகமூர்த்தி, ""நெசவு தொழிலாளர்களின் பிள்ளை கள் படிக்க வருடத்துக்கு 1200 ரூபாய் நிதியுதவி வழங்கிவந் தது. அதனை அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்திவிட்டது. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்த கல்வி நிதியுதவியை வழங்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.

மனுதாரர்கள் பேசிய பிறகு, மக்களிடம் ஸ்டாலின் பேசும்போது, ""கால் நூற்றாண்டுக்கும் மேலாக மக்களோடு உள்ளேன், தமிழகத்தில் என் கால்படாத கிராமங் கள், நகரங்கள் இல்லை, அங்குள்ள பிரச்சனைகள் எனக்கும் தெரியும். உங்கள் கவலைகளை, எதிர்பார்ப்பு களை என்னிடம் மனுவாக ஒப்படைத் துள்ளீர்கள், அதாவது என் முதுகில் ஏற்றி வைத்துள்ளீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள், திமுக ஆட்சி அமைந்தவுடன் தனித்துறை உருவாக்கி அடுத்த 100 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும்'' என நம்பிக்கை தந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் பேசும்போது, இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன், கோயில் சிலைகள் திருடு போனதற்கு துணை நின்றவர் என்றார். வேலூரில் பேசும்போது, வணிகவரித்துறை அமைச்சர் வேலூரில் நிலம் அபகரிப்பு, சொந்த கல்லூரி கட்ட பாலாற்றில் மணல் கொள்ளை, வருமானவரித்துறை சோதனையில் சிக்கியவர் என அமைச்சர்களின் கலெக்ஷன் - கரப்ஸன் - கமிஷன் குறித்து அம்பலப்படுத்தினார்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் சுமார் 18 ஆயிரம் மனுக்கள் பெற்றுள்ளதாக ஐபேக் டீமிடம் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட் டத்தில் 9 ஆயிரம் மனுக்களும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளதாக கூறுகின்றனர். தன் முதுகில் ஏற்றப் பட்ட பொறுப்பை நிறைவேற்ற தேர்தல் கள வெற்றி எனும் கடும் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதையும் ஸ்டாலின் அறிந்தே இருக்கிறார். தி.மு.க. நிர்வாகிகளும் அறிந் திருக்க வேண்டும்.

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்

__________

முதல் வெற்றி!

திருவண்ணாமலையில் தாயை இழந்த பெண் ஒருவர் தனக்கு உதவி கோரி ஸ்டாலினிடம் மனு கொடுத்திருந்தார். தி.மு.க. உதவும் என ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அ.தி.மு.க அரசு உடனடியாக 2 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியது. இதுபற்றி, தி.மு.க.விடம் கேட்டால்தான் அரசின் காதில் விழுகிறது என ட்வீட் செய்துள்ளார் ஸ்டாலின்.