வைரலாக பரவிய அந்த ஆடியோவின் பின்னணியில் அ.தி.மு.க.வினரே முதன்மையாக இருந்திருக்கிறார்கள். சேலம் மாவட்டம் மல்லூர் அருகேயுள்ள ஏர்வாடியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். பனைமரத்துப்பட்டி அ.தி.மு.க. ஒ.செ.வாகவும், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய மனைவி அமுதா, ஏர்வாடி ஊராட்சிமன்றத் தலைவர். ஜெகநாதன் சம்பந்தப்பட்டதுதான் அந்த ஆடியோ.
காமாட்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர் தரப்பிலிருந்து மல்லூர் காவல்நிலையத்தில் ஜெகநாதன் மீது புகார் கொடுக்கப்பட்டு, வாபஸும் பெறப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், அந்த விவகாரத்தில் ஜெகநாதன் மன்னிப்புக் கேட்கும் ஆடியோ வைரலானது.
அப்படி என்னதான் நடந்ததென்று உள்ளூர் முக்கியப் பிரமுகர்களிடம் விசாரித்தோம்.
""அத்துமீறலுக்கு ஆளான பெண்ணுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கணவர் சுமைதூக்கும் தொழிலாளி. கடந்த 10ந்தேதி இவர்களது வீட்டருகே, குடிநீர்த்தொட்டிக்காக போர்வெல் போடும் பணிகள் நடந்தது. இதைப் பார்வையிட வந்திருந்த ஜெகநாதனும், அவருடைய சகாக்களும் மது அருந்தினர். சைடு டிஷ் வாங்கிவருவதாகக் கூறிவிட்டு, திடுதிடுப்பென அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து கட்டிலில் உட்கார்ந்த ஜெகநாதன், ""என்னாலே... இத்துனூண்டு வூட்டுக்குள்ள இருக்கறவ. பனைமரத்துப்பட்டி சேர்மன் நான். அரசாங்கத்தோட இலவச தொகுப்பு வீட்டை உனக்குத் தந்து டறேன். உன்னை என் பொண்டாட்டி மாதிரி வச்சு காப்பாத்துறேன்'' என்று வலைவிரித்ததோடு, கையையும் பிடித்து இழுத்துள்ளார்.
இதில் பதறிப்போன அந்தப்பெண், ""நீங்க எனக்கு அப்பா மாதிரி. பசங்க முன்னாடி இப்படியெல்லாம் செய்றது நல்லா இல்ல. இங்கிருந்து கிளம்புங்க''’எனக் கெஞ்சியதும், ""சரி... இப்போ கிளம்புறேன்... நான் கூப்புடும்போது நீ வந்துடணும். சரினு சொல்லி சத்தியம் பண்ணு'' எனப் பிடிவாதம் பிடித்திருக்கிறார். வேறு வழியில்லாமல், அந்தப்பெண்ணும் சத்தியம் செய்திருக்கிறார்’ என்கிறார்கள்.
இந்தக் கொடுமை பற்றி ஜெகநாதனிடம் நியாயம் கேட்கும் ஆடியோ பதிவில், அந்தப் பெண்ணின் கணவர் அப்பா என்றே அவரை மரியாதையாக அழைக்கிறார்.
""உங்கள நம்பிதானே கட்சில இருக்கோம்... நாங்க இல்லாதவங்கதான்.. இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு நாங்க செத்தே போயிட லாம்ப்பா...''’என்று சொல்ல, வார்த்தைக்கு வார்த்தை ""தப்பு செஞ்சிட்டேன், மன்னிச்சிருடா. நேரடியா வந்து மன்னிப்புக் கேட்குறேன். அது எம்புள்ள மாதிரி''’என்கிறார் ஜெகநாதன்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரைச் சந்தித்துப் பேசினோம். “""தப்பு செய்துவிட்டதாகச் சொல்லி, ரெண்டு தரப்பிலும் மத்தியஸ்தம் பேசிய ஒருத்தரோட காலில் விழுந்து ஜெகநாதன் மன்னிப்புக் கேட்டுட்டார். அதனால, நடவடிக்கை எடுக்க வேணாம்னு போலீஸ்கிட்ட எழுதிக் கொடுத்துட்டேன். அவரு அ.தி.மு.க.வுல பெரிய ஆளு. நான் சாதாரண கூலிக்காரன். எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, என்ன பண்றதுன்னு மனைவி பயப்படுறாங்க'' என்றார் விரக்தியுடன்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜெகநாதனிடம் கேட்டபோது, ""நான் வில்லேஜ்ல எப்பவுமே மாமா மச்சானுதான் விசாரிச்சிட்டு இருப்பேன். அன்னிக்குக்கூட முப்பது நாற்பதுபேரு இருந்தாங்க. அங்க சும்மா கைய புடிச்சி பேசிட்டு இருந்தேங்க. ஆண்டவன் பொதுவா நான் தப்பான நினைப்புல பேசலைங்க. என்னுடைய வில்லேஜ்ல எல்லா பொம்பளைங்ககிட்டயும் கையப் புடிச்சும், தோள்மேல கையப் போட்டும்தான் பேசறேன். அந்தளவுக்கு என்மேல நம்பிக்கை இருக்கு. இது எதிர்க்கட்சிக்காரங்களுக்கு பிடிக்கல. இவனோட சேர்ந்தவனுங்க தி.மு.க.காரங்க மூணு பேரு இருக்காங்க. என்னை மாட்டி விடணும்னு எதிர்க்கட்சிக் காரங்க பண்ணின சதிங்க சார்'' என்றவர், பாதிக்கப் பட்ட பெண்ணின் கணவ ரைச் சந்திக்கவில்லை என்றும், மல்லூர் போலீஸ் ஸ்டேஷன் பக்கமே போகவில்லை என்றும் மறுத்தார்.
ஆனால், ‘என்மீது புகார்கூறிய நபருக்கும், அவரது குடும்பத்துக்கும் எந்தத் தொந்தரவும், இடைஞ்சலும் கொடுக்கமாட்டேன்’ என்று 21ந்தேதி மல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்திருக்கிறார் ஜெகநாதன்.
காவல்துறை தரப்பில் கேட்டபோது, ""புகார் தாரரே எந்த நடவடிக்கையும் வேணாமுன்னு, மனுவை திடீர்னு வாபஸ் வாங்கிட்டாரு. அவருக்கு நியாயம் வேணுமுன்னா அவர்தானே நிற்கணும்'' என்றனர். சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் இளங்கோவனிடம் இதைத் தெரியப்படுத்தினோம். ஜெகநாதன் பேசியதாக சொல்லப்படும் ஆடியோவை நான் கேட்கவில்லை. அவர்மீது புகார்கள் வருகிறது எனில், ஊராட்சிமன்றத் தலைவராக தொடர்ந்து நாலஞ்சு முறை அவர்தான் வெற்றிபெற்று வருகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஜெகநாதன் விவகாரம் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு 100 பர்சன்ட் கொண்டு செல்லப்படும்'' என்றார்.
"இது அம்மா வழியில் நடைபெறும் ஆட்சி' என முழங்கும் எடப்பாடி, தனது சொந்த மாவட்டத்தில் சொந்தக் கட்சிக்காரர் மனைவிக்கு, சொந்தக் கட்சி பிரமுகரால் ஏற்பட்ட தொல்லை குறித்து உரிய நடவடிக்கை எடுத்தால்தான் "ப்ளேபாய்'களின் ஆட்டம் அடங்கும்.
-இளையராஜா