மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துர்காதேவி என்பவர், தனது கணவர் நவனி மற்றும் குழந்தைகளுடன் கண்ணீர்மல்க மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம், "என் கணவரின் உயிருக்கு ஆபத்து! காப்பாத்துங்க சார்!'' என்று புகார் கொடுக்க, "விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்'' என்று உறுதியளித்தார் எஸ்.பி.
அங்கேயே நின்று அழுதுகொண்டிருந்த பெண்ணிடம், என்ன பிரச்சினையென்று விசாரித்தபோது, "சார், என் கணவர் ஒரு விவசாயி. நீர்நிலை பாதுகாப்பு இயக்கத்தில் உள்ளார். சென்ற வருடம் எங்க குலமங்கலம் ஊர் ஊரணி முழுவதும் கருவேல மரம் மண்டி, ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் வராமல் வறண்டு கிடந்தது. இவர், ஆற்றுத் தண்ணீரை கால்வாய் வெட்டி வரவைப்பதற்காக கிராம இளைஞர்களை ஒன்று திரட்டி மரங்களை வெட்டினார். மேலும், தனியார் தொண்டு நிறுவனங்களிடம் உதவி கேட்டும், டான் அறக்கட்டளை மூலம் உதவிபெற்றும் தண்ணீரை ஊருக்குள் கொண்டுவந்தார். இச்செய்தியறிந்து அமைச்சர் மூர்த்தியே இவரைப் பாராட்டினார். இதுதான் பிரச்சினையின் ஆரம்பம். ஊரில் பெரிய தாட்டியக்காரர் தர்மலிங்கம். இவர் ஊர் பஞ்சாயத்து செயலாளர். அடுத்து, பஞ்சாயத்து தலைவர், உதவி தலைவர் அனைவரும் இவர்மீது காழ்ப்புணர்ச்சியாகி, இவரை செயல்படவிடாமல் தடுத்தனர். இப்போது கொலை மிரட்டல்வரை வந்துள்ளதால் அவர்களுக்கு பயந்து ஒளிந்துவாழ்கிறோம்'' என்றார்.
கணவர் நவனி கூறுகையில், "குலமங்கலம் ஊருக்கு வரக்கூடிய முனியாண்டி கோயில் ரோட்டை 2021ல் தான் 10 லெட்சம் செலவில் போட்டார்கள். தற்போது புதிதாக ரோடே போடாமல், புதிதாகப் போட்டதாகக் காட்டு வதற்காக பழைய கல்வெட்டை பிடுங்கிவிட்டு புதுக் கல்வெட்டை நட்டுள்ளனர். இதுகுறித்து ஆர்.டி.ஐ. போட்டதில், முதலில் போட்ட ரோடு எம்.எல்.ஏ. நிதியென்றும், தற்போது போட்டது ஊரக நகர்ப்புற வளர்ச்சி நிதியென்றும் சொல்கிறார்கள். இதுகுறித்து முத்துராமலிங்கம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்துள் ளார். அடுத்து, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பொய்க்கணக்கு எழுதி லட்சக்கணக் கில் சுருட்டுகிறார்கள். பல லட்சம் சுருட்டுகிறார் கள். வீட்டிற்கு கழிவறை கட்டியதாக ஊழல் நடந்துள்ளது. இதையெல்லாம் கேட்டதற்குத்தான் பஞ்சாயத்து செய லாளர் தர்மலிங்கம் கொலைமிரட் டல் விடுகிறார்'' என்றார்.
நாம் முத்துராமலிங்கத்திடம் கேட்டோம். "ஆமாம் சார். குலமங்க லம் ஊராட்சி முறைகேடு தொடர் பாக விசாரணை கோரிய வழக்கில், மதுரை மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குலமங்கலம் ஊராட்சியில் நான் வீடு கட்டுவதற்கு அப்ரூவல் கேட்டு பஞ்சாயத்தில் விண்ணப்பித்தேன். அப்போது செயலாளர் தர்மலிங்கம், நான் செய்து தரு கிறேன் எனக்கூறி 20 ஆயிரம் வாங்கினார். அந்த பணத்தை அவரது வங்கிக்கணக்கில் செலுத்தி னேன். அடுத்து இரண்டே வாரத்தில் தலைவர், அரசு பி.டி.ஓ., செயலர் அனைவரும் கையெ ழுத்து போட்ட அப்ரூவல் ரசீதை என்னிடம் கொடுத்தார். ஆனால், என்னோட பணத்தை அரசு நிர்ணயித்த தொகைக்கு செலுத்தவில்லை யென்றும், இவர்களாகவே கையெழுத்து போட் டுக் கொடுத்துள்ளார்கள் என்றும் தெரியவந்தது. அதேபோல், இவர்கள் போட்ட ரோடு தொடர் பாக ஆர்.டி.ஐ.யில் போட்டுப்பார்த்த போது, சம்பந்தப்பட்ட பி.டி.ஓ. என்னை அழைத்து, "ஏதோ தவறுதலாக வேறு ரோட்டிற்கு பதிலாக கல்வெட்டை இந்த ரோட்டிற்கு வைத்துவிட் டார்கள். இனி இதை சரிசெய்து விடுகிறேன்' என்றார். அதிலிருந்தே அனைவரும் சேர்ந்து இந்த முறைகேட்டை செய்திருப்பது தெரிய வந்தது. அதனால் தான் வழக்கு தொடர்ந்தேன். கடந்த 10 வருடத்தில், கழிப்பறை கட்டுவதில் ஊழல். 100 நாள் வேலைவாய்ப்பில் பல லட்சம் ஊழல். வீடு கட்ட அரசு பி.டி.ஒ.க்கள் தான் அப்ரூவல் தருவார்கள். அது பஞ்சாயத்து தலைவர்களின் கைகளுக்கு போனதால் லஞ்சமும் பெற்றுக்கொண்டு, அரசுக்கு கட்டவேண்டிய பணத்தையும் கட்டுவதில்லை. இதை நவனி கேள்வி கேட்டதற்குத்தான் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்'' என்றார்
இதுகுறித்து கிராம பஞ்சாயத்து செயலர் தர்மலிங்கத்திடம் கேட்டோம். "நான் நவனி யிடம், என்னப்பா ஒரே ஊரு, நீ இப்படி செய் கிறாயேன்னு சத்தம் போட்டது உண்மைதான். ஒரே ஊர்க்காரர்கள் என்ற உரிமையில் பேசிவிட்டேன். அவனும் போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டான். மற்றபடி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இதுகுறித்து பேச முடியாது சார்'' என்றார்.
குலமங்கலம் பஞ்சாயத்து தலைவி ராணியின் கணவர் ராஜாராமிடம் பேசினோம். "சார், நவனி மற்றும் முத்துராம லிங்கம் சொல்வதெல்லாம் நீதிமன்றத்தில் உள்ளது. எந்த முறைகேடும் நடக்கவில்லை... அவ்வளவுதான் சொல்வேன்'' என்று முடித்துக்கொண்டார்
நாம் நவனியிடம், "நீங்கள் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டீர்கள் என்கிறாரே தர்மலிங்கம்?'' என்றதற்கு... "சார், அது முதன்முதலில் அவர் என்னை மிரட்டியது குறித்த புகார். முக்கியஸ்தர்கள் பலர் வந்து என்னிடம் பேசி மிரட்டி பணிய வைத்தார்கள். ஆனால் அடுத்தடுத்து ஊழல்கள் தெரியவந்து, கொலை மிரட்டல் விடுத்ததால்தான் தற்போது மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம் என் மனைவி துர்காதேவி புகார் கொடுத்துள்ளார்'' என்றார்.
சமூக ஆர்வலர்களின் செயலை முடக்கும் அதிகார வர்க்கத்தை அடக்குமா தமிழக அரசு?