தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினசரி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வருகின்றனர். 24 மணி நேரமும் பிஸியாக உள்ள கிரிவலப்பாதை, குற்றவாளிகளின் புகலிடமாக மாறியிருப் பது மக்களை கவலையடையச் செய்துள்ளது.
சென்னை ஓட்டேரியை சேர்ந்த காதல் தம்பதி வாணி -ரமேஷ். இவர்களுக்கு கௌதம், ஹரிஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். ரமேஷ் குடிக்கு அடிமையானவர். மனைவி மீது சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. 2021, டிசம்பரில் மனைவியை கொலை செய்துவிட்டு எஸ்கேப்பானார் ரமேஷ். சென்னையிலிருந்து திருவண்ணா மலை வந்து காவி உடை, கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டு சாமியாராக வலம் வந்துள்ளார்.
இங்குள்ள காவி அணிந்த யாசகர்கள், பௌர்ணமி, தீபத் திருவிழா தவிர்த்த மற்ற நாட்களில் நாட்டின் முக்கிய கோவில்களுக்கு சென்று யாசகம் பெற்று சம்பாதிப்பார்கள். ரமேஷ், வடஇந்தியாவிலுள்ள கோவில்களுக்கு சென் றுள்ளார். டெல்லி அஜ்மேரிகேட் பகுதியிலுள்ள ஹரிஹரசுதன் என்கிற ஆசிர மத்தில் தங்கியிருக் கிறார். கொலை நடந்த ஒரு வருடத்துக்கு பின்பு ஜிபே வழியாக சென்னையில் உள்ள தனது நண்பருக்கு 1,800 ரூபாய் அனுப்பி, தன் மகனிடம் தரச்சொல்லியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தன்னுடன் உள்ள ஒரு சாமியாரின் மொபைல் எண்ணை தன் நண்பரிடம் தந்து, முக்கியமான விஷ யம் என்றால் இந்த எண்ணில் தொடர்புகொள்ளச் சொல்லியுள்ளார். இந்தத் தகவல் போலீசுக்கு சென்றது. அவர்கள் அந்த எண்ணை வாங்கி ட்ரேஸ் செய்துள்ளனர். கடந்த ஜூன் 5ஆம் தேதி, பௌர்ண மிக்காக ரமேஷ் தந்த எண் திருவண்ணாமலையில் இருப்பதை செல்போன் டவர் லொக்கேஷன் காட்டியது. புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான டீம், அந்த மொபைல் நம்பரை பாலோ செய்து ஒன்றரை ஆண்டுகளாக திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் பதுங்கியிருந்த ரமேசை கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களுரூ சுங்கத்தடே பகுதியை சேர்ந்தவன் நாகேஷ். அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஒருதலையாகக் காதலித்ததோடு, அந்த பெண்ணிற்கு காதல் தொந்தரவுகளைத் தந்துள்ளான். 2022, ஏப்ரல் 28ஆம் தேதி, "என்னை காதலிக்கலன்னா உன் முகத்தில் ஆசிட் ஊத்திவிடுவேன் என மிரட்டியும், பணியாததால் அவள்மீது ஆசிட் ஊற்றிவிட்டு எஸ்கேப்பானான். நாகேஷை பிடிக்க 4 தனிப் படைகளை அமைத்தது பெங்களுரூ காவல்துறை. பெங்களுரூவிலிருந்து தப்பி திருவண்ணாமலை வந்து காவி வேட்டி அணிந்துகொண்டு சாமியார் வேடத்தில் ரமணர் ஆஸ்ரமத்தில் தியானம் செய்து வந்துள்ளான். அவனை அடையாளம் கண்டு கொண்ட பெங்களூர் பக்தர் ஒருவர், பெங்களூர் போலீசுக்கு தகவல் தர, தனிப்படை போலீஸார், ரமணாஸ்ரமம் தியான மண்டபத்தில் வைத்து நாகேஷை கைது செய்தனர்.
இதேபோல், கொலை, கொள்ளையில் ஈடுப்பட்டு தலைமறைவாகி திருவண்ணாமலையில் சாமியாராக வலம் வந்த குற்றவாளிகளை சென்னை, புதுச்சேரி போலீசார் சத்தமில்லாமல் பிடித்துச் சென்றுள்ளனர். குற்றம் செய்பவர்களின் தலை மறைவு வாழ்க்கைக்கு திருவண்ணாமலை கிரி வலப்பாதை தோதாக இருக்கிறது. கிரிவலப் பாதையில் ஆயிரத்துக்கும் மேலான சாமியார்கள் உள்ளனர். இவர்களுடன் குற்றவாளிகள் கலந்துவிடு கின்றனர். உணவு, தங்குமிடம் இலவசமாகக் கிடைப்பதால் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஏதாவது பிரச்சனையென்றால் மட்டுமே இந்த சாமியார்கள் மீது போலீஸ் கவனம் செலுத்துகிறது. மற்றபடி அவர்கள் நிம்மதியாக இங்கே காலத்தை ஓட்டலாம்.
சாதுக்களுக்காக அறக் கட்டளை நடத்தும் மோகன் சாதுவிடம் பேசியபோது, "சில ஆண்டுகளுக்கு முன்பு சாதுக் களுக்கு மாவட்ட நிர்வாகம் ஐ.டி. கார்டு தந்தது, அதன்பின் தரவில்லை. குற்றப் பின்னணி உள்ளவர்கள் காவி வேட்டி கட்டிக்கொண்டு இங்கு வந்துவிடுகிறார்கள். சாதுக்களை வைத்து ஆன்மீகப் போர்வையில் சிலர் போதைப்பொருள் விற்கிறார்கள். இதனைத் தடுக்க வேண்டுமென்றால், சாதுக்களுக்கு வாரியம் உருவாக்கி அவர்களுக்கு அடையாள அட்டை தந்து கண்காணிக்கவேண்டும்'' என்றார்.
திருவண்ணாமலை சமூக ஆர்வலர் ராகவன், "சில மாதங்களுக்கு முன்பு கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாதுக்களின் கைரேகை உட்பட அவர்களின் அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்தோம். பதிவு நடக்கும்போது 300க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய்விட்டார்கள். இப்போதுவரை 900 பேரின் டேட்டாக்களை பதிவு செய்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளோம். இன்னும் 30 சதவீதத்தினரின் தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது. இவர்களுக்கு அடையாள அட்டை தந்துவிட்டால் அவர்களை, கண்காணிக்க, விசாரணை நடத்த காவல்துறைக்கு எளிதாக இருக்கும். ஐ.டி. இல்லாதவர்கள் இங்கே தங்க முடியாத நிலை வரும்'' என்றார்.
எஸ்.பி. அலுவலகத்தில் விசாரித்தபோது, "சாமியார்களின் டேட்டா குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எஸ்.பி. அனுப்பி விட்டார். அடையாள அட்டையை அளித்தால், அதை வைத்து வெளியூர்களில் ஏதாவது சிக்கலை உருவாக்கினால் என்ன செய்வது என்ற சிந்தனையில் இதில் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார் கலெக்டர்'' என்கிறார்கள்.
கிரிவலப் பாதையிலிருந்து குற்றவாளிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்!