தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்பது தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம். ஆவின் எனும் வணிகப் பெயரில் இயங்கும் இந்த நிறுவனம், தமிழக பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
போலி ஆவணங்கள் மூலம் ஆவின் சேர்மன் பதவியை கைப்பற்ற முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி துடிப்பதாகவும், சேர்மன் பதவி நியமன வில்லங்கங்களில் அமைச்சர்களும் ஆளும் கட்சி பிரமுகர்களும் முட்டி மோதுவதாகவும் குற்றச்சாட்டுகள் பரபரக்கின்றன.
ஆவின் ஊழல்களுக்கு எதிராக போராடி வரும் வழக்கறிஞர்கள் நம்மிடம், ""தமிழகத்தில் 25 மாவட்ட பால் ஒன்றியங்கள் இருக்கின்றன. இவற்றில் உள்ள 25 சேர்மன்களும் ஆவின் நிறுவனத்தின் மாநில இயக்குநர்களாக பொறுப்பேற்பார்கள். அவர்களிலிருந்து ஒட்டுமொத்த ஆவினின் சேர்மனாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆவின் எம்.டி. பதவியைவிடவும் சேர்மன் பதவி செல்வாக்கும் அதிகாரமும் கொண்டது. அந்தப் பதவி தற்போது காலியாக இருப்பதால், அதனை கைப்பற்ற முட்டல் மோதல்களும் முறைகேடுகளும் அதிகரித்து வருகின்றன'' என்கிறார்கள் ஆவேசமாக.
தமிழக பால் உற்பத்தியாளர் சங்கங்களின் தலைவர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, ‘’ஒன்றிய சேர்மன்தான் இயக்குநராகி, மாநில சேர்மன் ஆகமுடியும். அதற்கேற்ப, வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து திருவண்ணாமலை பால் ஒன்றியத்தை 22-8-2019-ல் உருவாக்கு கிறார்கள் ஆவின் உயரதி காரிகள். அதனையடுத்து, 27.8.2019 ந்தேதி ஏலாத்தூர் பால் உற்பத்தியாளர் சங்கத் திற்கு தேர்தல் நடத்துமாறு சென்னையிலுள்ள ஆவின் தலைமையகத்திலிருந்து திருவண்ணாமலை துணைப் பதிவாளர் ராமச்சந்திரனுக்கு இரவோடு இரவாக உத்தரவு போடப்படுகிறது. மறுநாள் 28-8-2019-ந் தேதி ஏலாத்தூர் பால் சொசைட் டிக்கு தலைவராகிறார் அக்ரிகிருஷ்ணமூர்த்தி.
அதே 28-8-2019-ந் தேதி அக்ரி கிருஷ்ணமூர்த்தி உட்பட ஒன்றியத்தின்கீழ் வரும் 17 சங்கங்களின் தலை வர்களையும் இணைத்து ஒன்றியத்தின் இயக்குநர் களாக நியமிக்கும் உத்தர வும் அவசரம் அவசரமாக பிறப்பிக்கப்படுகிறது. அதே நாளில், அந்த 17 இயக்குநர் களிலிருந்து ஒன்றியத்தின் தலைவராக அக்ரி கிருஷ்ண மூர்த்தியையும், துணை தலைவராக பரிபாபுவையும் நியமித்து ஆணை பிறப் பிக்கிறார் துணைப்பதிவாளர் ராமச்சந்திரன். இதெல்லாமே வேகம் வேகமாக நடந்து முடிந்துள்ளது'' என்கிறார்கள் ஆவேசமாக.
அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் நியமனத்தை எதிர்த்து வானாபுரம் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பச்சமுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அவரிடம் பேசியபோது, ""ஒரு சொசைட்டியின் தலைவராக போட்டியிட வேண்டுமாயின் குறிப்பிட்ட சங்கத்தில் உறுப்பினராகவும், சொசைட்டியில் தினமும் பால் ஊற்றி வருவ துடன் 90 நாட்களில் 120 லிட்டர் பால் சப்ளை செய்திருப்பவ ராகவும் இருக்க வேண்டும். இந்த தகுதி அக்ரி கிருஷ்ண மூர்த்திக்கு இல்லை. அவர் தேர்வான ஏலாத்தூர் பால் சொசைட்டி செயல்படவில்லையென ஏற்கனவே மூடப்பட்டு விட்டது. அக்ரியை தலைவராக்குவதற்காகவே சொசைட்டியை திறப்பது போல திறந்து, ஒரு தேர்தல் நாடகம் நடத்தப்பட்டுள்ளது'' என்கிறார் அழுத்தமாக.
தலைமைச்செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, ""ஆவின் நிறுவனத்தின் மாநில சேர்மனாக ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டவர் முன்னாள் அமைச்சர் மில்லர். அவரது பதவிக்காலம் முடிந்ததால், அவரையே மீண்டும் கொண்டுவர பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்து விவாதித்தார் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி. ராஜேந்திரபாலாஜியும் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில்தான், முன்னாள் அமைச்சரும் தற்போ தைய டெல்லி பிரதிநிதியுமான தளவாய்சுந்தரம், அவரது உதவியாளர் லஷ்மிநாராயணன், ஆவினின் முன்னாள் பொது மேலாளர் செல்வம் ஆகிய மூவர் கூட்டணி, அக்ரி கிருஷ்ண மூர்த்திக்காக களமிறங்கியது. முன்னாள் அமைச்சர் தொட்டியம் சிவபதி, இந்நாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர் செல்வம். ஆவினில் பவர் புரோக்கராக செயல்பட்டதால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியால் கடுமையாக கண்டிக்கப்பட்ட செல்வம், ஆவினிலிருந்து வி.ஆர்.எஸ். வாங்கி ஓடிப்போனார். அதன்பிறகு தளவாய்சுந்தரம் மற்றும் லஷ்மிநாராயணன் கேங்கில் இணைந்து கொண்டார். கோட்டையை ஆட்டிப்படைத்து வரும் இந்த மூவர் கூட்டணி, முதல்வர் எடப்பாடியின் வலதுகரமாக இயங்கிய சேலம் இளங்கோவனின் உதவியுடன் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கடி தந்து வருகிறது. ஆவினிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையிலும், நந்தனத்திலுள்ள ஆவின் தலைமையகத்தின் 6-வது மாடியில் இருந்த செல்வத்தின் தனி அறை இப்போதும் அவருக்காகவே இயங்குகிறது. முதல்வருடன் வெளிநாட்டு பயணத் தில் ராஜேந்திரபாலாஜி இருந்த நாட்கள் முழுவதும், ஆவின் தலைமையகத்தில் கோலோச்சிய செல்வம், அக்ரிகிருஷ்ணமூர்த்தியை சேர்மனாக்கும் திட்டங்களை அதிகாரிகளுடன் விவாதித்தபடி இருந்தார்.
ஆவின் நிர்வாக இயக்குநரான காமராஜ் ஐ.ஏ.எஸ்., இதனை எப்படி அனுமதித்தார் என்பது தான் சந்தேகமாக இருக்கிறது. அக்ரிகிருஷ்ண மூர்த்தியை சேர்மனாக்கி, பி.ஏ.வாக செல்வத்தை நியமிக்கவே அனைத்து திட்டங்களையும் போட்டு வருகிறது மூவர் கூட்டணி. இதற்கிடையே, சேர்மன் பதவியை கைப்பற்ற களமிறங்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமான திருச்சி மாவட்ட பால் ஒன்றிய சேர்மன் கார்த்திகேயன். இதனால், போட்டியும் முட்டல் மோதலும் சத்தமில்லாமல் வெடித்தபடி இருக்கின்றன.
தேனி ஒன்றிய சேர்மன் ஓ.ராஜா, மதுரை சேர்மன் பதவி வகிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ள நிலையில், அதே குற்றச்சாட்டுகளும் தில்லுமுல்லுகளும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனத்திலும் நடந்துள்ளன'' என குமுறுகின்றனர் கோட்டை அதிகாரிகள்.
ஆவின் வர்த்தகத்தில் ஒரு நாளைக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை யாகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 72 கோடி ரூபாய் புழங்குகிறது. வருடத்துக்கு 26,280 கோடி ரூபாய் புழங்குவதை கணக்கிட்டே ஆவின் நிறுவனத்தின் அதிகாரத்தை கைப்பற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் அவருக்கு துணையாக மூவர் கூட்டணியும் களத்தில் குதித்துள்ளன. இதன் பின்னணியில் 500 கோடி விளையாடுகிறது.
""ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வேளாண்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி இருந்த போது, வேளாண் பொறியியல் துறையில் டிரைவர் பணியிட நியமனங்களில் பணி நிய மனம் செய்யப்பட்டவர்களிட மிருந்து பணம் பெற்றுத்தருமாறு நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமிக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடியால் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் பதவியிலிருந்து கிருஷ்ணமூர்த்தியை நீக்கினார் ஜெயலலிதா. அப்படிப்பட்டவரைத்தான் ஆவின் சேர்மனாக்க சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறார்கள்'' என்கிறார்கள்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமன வில்லங்கம் குறித்து துணைப்பதிவாளர் ராமச்சந்திரனை தொடர்புகொண்டு கேட்டபோது, ""போனில் எதையும் நான் சொல்வதிற்கில்லை'' எனச் சொல்லி தொடர்பை துண்டித்துக்கொண்டார். இதற்கிடையே, போலி ஆவணங்கள் மூலம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டதாக துணைப்பதிவாளர் ராமச்சந்திரன் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆலோசித்து வருகிறார்கள்.
-இரா.இளையசெல்வன்