பஞ்சாப் -ஹரியானா எல்லையில் 399 நாட்களாக நெல், கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதார விலை கேட்டுப் போராடிய விவசாயிகளை மார்ச் 19-ஆம் தேதி அடித்துத் துரத்தியிருக்கிறது பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி அரசு.
உத்தரப்பிரதேச யோகி அரசைப் போன்று, போராட் டத்துக்காக விவசாயிகள் ஏற்படுத்தியிருந்த டெண்டுகளை புல்டோசர் கொண்டு சாய்த்தும், போராடிய விவசாயிகளை வலுவில் கலைத்தும், அடித்துத் துரத்தி தன் கோரமுகத்தைக் காட்டியுள்ளது ஆம் ஆத்மி அரசு என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், மார்ச் 19-ஆம் தேதி விவசாயிகளுடன் மத்திய அரசு ஒரு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியது. இந்தக் கூட்டத்தின்போது, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சவுகான், அடுத்த பேச்சுவார்த்தை தேதியான மே 4-ஆம் தேதிக்கு முன்பு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆகும் நிதிச்செலவை ஆய்வுசெய்ய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
அந்த பேச்சுவார்த்தை முடித்து 28 பிரதிநிதிகளும் வெளியே வர, பேச்சுவார்த்தை நடந்த கட்டடத்தை விட்டு அவர்கள் வெளியே வந்ததும் பஞ்சாப் போலீஸ், சர்வான் சிங் பந்தேர், ஜக்ஜீத்சிங் தல்லேவால் இருவரையும் கைதுசெய்து வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுசென்றுள்ளது.
அதேசமயம், போராட்டம் நடக்கும் ஷாம்பு -கனுவாரி சாலைக்கு போலீஸ் படையுடன், புல்டோசர் உள்ளிட்டவை களும் வந்துள்ளன. "டெபுடி மாஜிஸ்திரேட்டை வைத்துக் கொண்டுதான் போராட்டக்காரர் களை அகற்றினோம். எந்த நெருக்கடி யும் தரப்படவில்லை''’என்கிறது பஞ்சாப் போலீஸ்.
ஆனால் போராடும் விவசாயி களின் கருத்துக்களோ வேறு மாதிரி இருக்கிறது. "இதற்கு பா.ஜ.க.வே பரவாயில்லை. அவர்கள் எங்களை டெல்லிக்குள் நுழையவேவிடாமல் பஞ்சாப்- ஹரியானா நெடுஞ்சாலை யில் நெருக்கடி தந்து அமரவைத்தார் கள். இவர்களோ பின்னாலிருந்து தாக்கி முதுகில் குத்திவிட்டார்கள். இதனை பஞ்சாப் மக்கள் மறக்கமாட் டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்''’
என கொந்தளிப்புடன் பேசுகிறார்கள்.
பா.ஜ.க. அரசாக இருந்தா லென்ன,…ஆம் ஆத்மி அரசாக இருந்தாலென்ன,… போராட்டம் போராட்டம்தான். குறிக்கோளி லிருந்து சற்றும் தளராமல், எந்தெந்த காவல் நிலையத்துக்கு போராட்டத் தலைவர்கள் கொண்டுசெல்லப் பட்டார்களோ, அங்கிருந்தபடியே அந்தத் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக் கிறார்கள்.
அதேசமயம் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு, இந்த திடீர் நடவடிக் கைக்கு என்ன காரணம் சொல்கிறது? நீண்டகாலமாக நெடுஞ்சாலையை மறித்துப் போராடும் விவசாயிகளால் வணிகம், தொழில்துறை பாதிக்கப் படுகிறது. இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன என பெரிய பெரிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அதற்கு ஏளனச் சிரிப்புடன் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள், இதெல்லாம் பாதிக் கப்படுவது இத்தனை நாட்களாகத் தெரியவில்லையா என கேள்வி யெழுப்புகின்றன.
அதேசமயம், திடீரென பஞ்சாப் அரசு விவசாயிகளுக்கு எதிராக நட வடிக்கையில் இறங்கியதைப் பார்த்த தும், ஏற்கெனவே விவசாயிகளுக்கு எதிராக இருக்கும் ஹரியானாவும் களத்தில் குதித்துள்ளது. போராட் டத்திலிருக்கும் ஹரியானா விவசாயத் தலைவர்கள் 12 பேரின் வீட்டில், நிலுவையிலிருக்கும் வழக்கு தொடர் பான விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. இரண்டையும் இணைத்துப் பார்க்கும் விவசாயிகள், விவசாயிகளின் போராட் டத்தை முடிவுக்குக் கொண்டுவர, ஆம் ஆத்மியுடன் கைகோத்து போராட்டத்தை நசுக்க பா.ஜ.க. புதிய வழிமுறைகளைப் பரிசீலிப்பதாகக் குற்றம்சாட்டு கிறார்கள்.
ஆனால் பா.ஜ. ஐ.டி. விங்கின் பொறுப்பாளரான அமித் மாள்வியாவோ, "ஒரு காலத்தில் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தண்ணீர், மின்சாரம், வைஃபை வசதிகளைச் செய்துதந்தார். ஆனால் இப்போது பஞ்சாபிலுள்ள ஆம் ஆத்மி அரசு புல்டோசர்களைப் பயன்படுத்தி அவர்களின் கூடாரங்களையும் முகாம்களையும் இடித்துத் தள்ளுகிறது" என்று நாசூக்காக குத்திக்காட்டியிருக்கிறார்.
காங்கிரஸும் களத்தில் இறங்கி, கைதுசெய்த விவசாயத் தலைவர்களை விடுதலை செய் என போராடத் தொடங்கி யுள்ளது. எப்படியாவது விஷயத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர ஆம் ஆத்மி போராடி வருகிறது.
போராட்டக்காரர்களை அகற்றுவதற்கு சில நாட் களுக்கு முன்பாக, பஞ்சாப் தொழிலதிபர்களும் வணிகர் களும் பஞ்சாப் அரசின் முன்னணித் தலைவர்களைச் சந்தித்த தாக செய்திகள் கசிகின்றன. இதுவரை விவசாயிகள் போராட்டத்துக்கு பஞ்சாப் மக்களே துணைநின்றனர். இப்போது தொழிலதிபர்கள் ஒருபக்கமும் விவசாயிகள் ஒருபக்கமுமாக அணி பிரிக்கப்பட்டுவிட்டனர்.
இது இயல்பாக நடந்த விஷயமா?… இல்லை... திட்ட மிட்டு தொழிலதிபர்கள் மாநில அரசிடம் சென்று முறையிடும்படி எந்த நெருக்குதலும் தரப்பட்டதா? என்று பலரும் கேள்வியெழுப்புகிறார்கள்.
எப்படியோ பஞ்சாப் இரண்டுபட்டுவிட்டது. கூடுதல் ஆதாயமாக, ஆம் ஆத்மி அரசின் அசல் முகம் அம்பலமாகி விட்டது என்கிறார்கள்.
இப்போது விவசாயிகளுக்கும் மத்தளத்தைப் போல இரண்டு பக்கமும் இடி! ஒரு பக்கம் மத்திய அரசு. மறுபக்கம் உ.பி., அரியானா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகள். இத்தனை நெருக்கடியில் விவசாயிகள் எப்படி போராட்டத்தை தொடரப் போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.