ஆதாரை நிர்வகிக்கும் உதய் அமைப்பு, “"தனியார் அமைப்புகள், ஓட்டல்கள், நிறுவனங்கள், இதர அமைப்புகளுக்கு ஆதார் நகலைக் கொடுக்காதீர்கள். அது தவறாகப் பயன்படுத்தப்படலாம்'” என அறிவிப்பு வெளியிட, ஒரே நாளில் ஒன்றிய அரசு அந்த அறிவிப்பை வாபஸ் பெற, மக்களிடையே குழப்பம் அதிகரித்திருக்கிறது.
2014-ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, அதற்கு முன்புவரை காங்கிரஸால் முன் மொழியப்பட்ட ஆதார் அட்டை திட்டத்தை எதிர்த்துவந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த வேகத்திலே அதைச் செயல்படுத்துவதற்கு துடிப்பாகக் களமிறங்கியதுடன் ஒன்றிய அரசின் நலத்திட்டங்கள் அனைத்துக்கும் நம்பகமான ஆவணமாக ஆதாரை முன்மொழிந்தது.
ஆதாருக்கு எதிராகப் போராடியவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியபோது, அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்காத நீதிமன்றம், அதேசமயம், “"ஆதாரை எந்த விஷயத்திற்கும் கட்டாயப்படுத்தக்கூடாது. ஆதார் இல்லையென்பதற்காக எந்த சேவையும் மறுக்கப்படக் கூடாது'’ என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியது. ஆனால், இன்றைக்கு சிம் கார்டு பெறுவதில் தொடங்கி, பல்வேறு விஷயங்களுக்கும் ஆதார் நகலோ, எண்ணோ கோரப்படுகிறது. அதைக் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறாது என்பதுதான் நிஜம்.
இந்நிலையில்தான் ஆதார் அட்டைகளை விநியோகித்துவரும் உதய் நிறுவனத்தின் பெங்களூரு மண்டல அலுவலகம் மே29-ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “"பொதுமக்கள் ஆதார் அட்டையின் நகலை எந்தவொரு அமைப்புடனும் தனியார் நிறுவனத்துடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஒருவேளை அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம்'’ என்றிருந்தது.
தவிரவும், பகிரவேண்டிய அவசியம் வந்தால் மாஸ்க்டு ஆதார் எனும் ஆதார் எண் மறைக்கப்பட்ட நகலைப் பகிர பரிந்துரைத்தது. அதேபோல கம்ப்யூட்டர் சென்டர்களில் இ-ஆதாரை தரவிறக்கம் செய்யும்போது, அவற்றை சேமித்துக்கொண்டவுடன் அந்த பிரதியை டெலிட் செய்யவும் வலியுறுத்தியது. "ஒரு தனியார் நிறுவனம் ஆதார் அட்டையைப் பெறவோ பார்க்கவோ விரும்பினால், அது உதய் நிறு வனத்திடமிருந்து சரியான பயனர் உரிமம் பெற்றுள்ளதா என்பதைச் சரி பார்க்கவும்'’ எனவும் எச்சரித்திருந்தது.
இதனால் பெருவாரியான மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆதார் நகலைப் பகிர்ந்துவரும் நிலையில் திடீரென இப்படி அறிவிப்பு வருவது அவர்களை குழப்பத்துக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில்தான் ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை திடீரென இவ்விவகாரத்தில் தலையிட்டு, உதய் நிறுவன அறிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும், ஆதாரின் தொழில்நுட்பம், ஆதார் வைத்திருப்பவரின் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது எனவும் விளக்கமளித்துள்ளது.
ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை, தனியார் அமைப்புகள், வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் சாதாரணமாகக் கிடைக்கிறது எனும் குற்றச்சாட்டுக்கு நடுவில் இதுவும் சேர்ந்துகொள்ள, ஆதாரோட ஒரே பேஜாராப் போச்சு என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்!