"நாங்க 600 குடும்பங்கள் வசிக்கிறோம்... எங்கள் தீர்த்தக்காட்டுக்கு பாதை இல்லை... தண்ணீர் இல்லை... மின்சாரமேயில்லை!'' என்று நமக்கு வந்த தகவல் நம்மை ஆச்சர்யப்படுத்த, மதுரை தீர்த்தக்காடு கிராமத்தை தேடிச் சென்றோம்!
மதுரையில் பெரும் பணக்காரர்கள் வாழும் அண்ணாநகருக்கு அடுத்து வண்டியூர்.
அதற்கடுத்து சவுராஸ்ட்ராபுரத்தில் விசாரித்து நாம் தீர்த்தகாடு பகுதிக்கு வந்ததும், இருள் சூழும் நேரத்தில் ஒரு பெண், குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். "சார், என் பெயர் மேனகா. நான் பி.காம் படித்துள்ளேன். இந்த ஊரில் 3 பெண்கள் டிகிரி படித்துள்ளோம். ஆண்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் டிகிரி படித்துள்ளார்கள். இங்க கரண்ட் இல்லாததால, சூரியன் மறையறதுக்குள்ள படிச்சாகணும்... ராத்திரியானா சிம்னி விளக்கு வெளிச்சத்துல தான் படிச்சாகணும். நான் அப்படித்தான் படிச்சேன். எங்க கிராமத்துக்கு மின்சார வசதிக்காக எவ்வளவோ போராடிப் பார்த்துட்டோம்... இங்க வாழ்ற எல்லாருமே பட்டியலின மக்கள் தான் சார்.'' என்றவர், தீர்த்தக்காடு குறித்து தெரிந்து வைத்திருக்கும் தங்கபாண்டியன் என்பவரை அறிமுகப்படுத்த, தங்கபாண்டியன் நம்மை ஒவ்வொரு வீடாக அழைத்துச்சென்றார்…
இருள் சூழ ஆரம்பித்ததும் வீடுகளில் சிம்னி விளக்கு ஏற்றத் தொடங்கினர். அனைத்து வீடுகளுமே கூரை அல்லது ஓடு மற்றும் தகர ஷீட்டுகளால் இருந்தன.
"1940லிருந்து இப்பகுதியில் பட்டியலின மக்கள் வாழ்ந்துவந்தார்கள். 1969க்கு பிறகு கலைஞர் ஆட்சியில் 320 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அப்போது இப்பகுதியை சுற்றி 5 கிலோமீட்டருக்கு மின்சார வசதியே இல்லாததால் தீர்த்தக்காடு மக்களும் அதை பெரிதாக நினைக்கவில்லை. காலப்போக்கில், சுற்றியுள்ள பகுதிகளுக்கெல்லாம் மின்சார வசதி வர, தீர்த்தக்காட்டுக்கு மட்டும் தரப்படவில்லை. தொடர் போராட்டங்கள் பயனளிக்காத நிலையில் அடுத்த தலை முறையினரில் பலர் இங்கிருந்து வெளியேறினாலும் மூத்தவர்கள் இங்கேயே வாழ்கிறார்கள். தற்போது 2,300 பேர் இங்கே வாக்காளர் அட்டையோடு வசித்துவருகிறார்கள். என்போன்ற இளைஞர்கள் மின்சாரத்துக்காக கலெக்டர் ஆபீஸுக்கும், மாநகராட்சிக்கும் மக்களைத்திரட்டி மனு கொடுத்தும், செய்கிறோமென்று சொல்லிவிட்டு இதுவரை அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை. எங்களுக்கு தேவை, குடிநீர், சாலைவசதி, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் தான். இங்கு மின்சார விளக்கே பார்க்காத ஆறாவது தலைமுறையும் வசித்துவருவது வேதனை!
தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் மூர்த்தியிடமும் அனைவரும் முறையிட்டோம். அரசின் ஒவ்வொரு துறையும் ஃபைல் அங்கு சென்றுவிட்டது, இங்கு சென்றுவிட்டதென்று எங்களை அலைக்கழிக்கத்தான் செய்கிறார்களே ஒழிய தீர்வு கிடைக்கவில்லை. இன்னமும் கற்கால மனிதர்களைப்போல வாழ்கிறோம். தற்காலத்தில், ஃபேன், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், செல்போன் இல்லாமல் யாராலும் வாழவே முடியாது என்ற சூழலில் கடந்த நூறாண்டுகளாக நாங்கள் அப்படித்தான் வாழ்ந்துவருகிறோம்'' என்றார் தங்கபாண்டியன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/03/village1-2026-03-03-12-55-00.jpg)
சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவி, "மின்சாரம் இல்லாததால் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கவேண்டிய நிலை தொடர் கிறது. பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய அவலமும் நிலவுகிறது. பணம் கொடுத்து தான் குடிநீர் வாங்குகிறோம். செல்போன் சார்ஜ் ஏற்ற டவுனுக்கு சென்று 10’ரூபாய் கொடுக்கவேண்டிய நிலை இருக்கிறது'' என்றார்.
அழகுபொண்ணு என்பவரோ, "அம்பது வருசமா இந்த வீட்டில்தான் இருக்கிறோம். இங்க டிவி, ஃபேன் எதுவுமே இல்லை சார். கரண்ட் கிடையாது. தெருவிளக்கு கூட இல்லை. ராத்திரி கொசுக்கடியில தான் தூங்குறோம். டிவி பாக்குறதுக்காக சவுராஸ்ட்ரா புரத்தில் இருக்கும் வீடுகளுக்கு போகணும்...
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/03/village2-2026-03-03-12-55-14.jpg)
அவங்க டெய்லி எப்படி சார் அனுமதிப்பாங்க? இதோ, என் மகள் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கா'' என்றதும், அம்மாணவியிடம் நாம் பேசினோம். "நைட் வந்து ஹோம்ஒர்க் எழுதணும்னா, படிக்கணும்னா ஒண்ணும் செய்ய முடியாது சார். இந்த சிம்னி விளக்குல தான் படிக்கணும்'' என்றவர், "எனக்கு இப்ப காலேஜ்ல லேப்டாப் கொடுத்தாங்க சார். இதுக்கு இப்ப சார்ஜ் போட கரண்ட் இல்ல சார். டவுனுக்கு போய் சார்ஜ் போடணும். லேப்டாப்புக்கு சார்ஜ் போட 20 ரூபா. இதுக்கெல்லாம் எப்ப சார் விடிவு வரும்?'' என்றார் பரிதாபமாக.
அந்த வீட்டிலிருந்த பாட்டியம்மா, "சார், என் பேரு ஆறுமுகம்மாள். பேரன், பேத்தியெல்லாம் எடுத்துட் டேன். மழை வந்தா ரொம்ப கஷ்டம் தம்பி. வீடெல்லாம் ஒழுகும்.'' என்றார். அடுத்த வீட்டிலிருந்த ஏழம்மாள், "என் புருஷன் எப்பவுமே கலைஞர் கட்சிதான். நானும் அவருக்குதான் ஓட்டு போடுவேன். போன தேர்தலில் அமைச்சர் மூர்த்தி ஓட்டு கேட்டப்ப, கட்டாயம் உங்க வீட்டிற்கெல்லாம் கரெண்ட் வந்துரும்னு சொன்னாரு. இதுவரைக்கும் வராததால போன வாரம் பக்கத்து ஏரியாவுக்கு அவரு வந்தப்ப கூட்டமா போய் அவர்ட்ட எங்க குறைய சொன்னோம். "போம்மா... ஓட்டுக்கு பணம் வாங்கினல்ல, இப்ப மாதாமாதம் ஆயிரம் ரூபா வருதா? அப்புறம் என்ன?'ன்னு விரட்டுறார் தம்பி.'' என்றார். அருகிலிருந் தவர், "என் பேரு சேங்கையம்மாள். மழை பெஞ்சா இந்த தீர்த்தக்காட்டில் வாழ முடியாது தம்பி. சேறும் சகதியுமா ஆகிடும். வீட்டுக்குள்ளயே போக முடியாது. இப்பகூட பாம்பு கடித்து ஒருவர் இறந்துட்டார்.'' என்றார் பரிதாபமாக. என்றைக்கு இவர்கள் வாழ்வில் வெளிச்சம் வருமோ?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/03/03/village-2026-03-03-12-54-49.jpg)