தழியல் துறையில் உண்மையும் அறமும் ஒருசேர பயணித்து சர்வதேச அளவிலான பத்திரிகையாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் முதன்முறையாக இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது தி.மு.க. அரசு. இந்த நிறுவனத்தை 25-ந் தேதி தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

Advertisment

இந்த நிகழ்வில் துணைமுதல்வர் உதயநிதி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.க.தலைவர் கி.வீரமணி, இதழியல் நிறுவனத்தின் தலைவர் ரவி, தலைமை இயக்குநர் ஏ.எஸ். பன்னீர்செல்வன், தமிழக அரசின் மாநிலத் திட்ட குழுத் துணைத்தலைவர் ஜெயரஞ் சன், மூத்த பத்திரிகையாளர்கள் நக்கீரன்கோபால், குணசேகரன், திருமாவேலன், கார்த்திகைச்செல்வன், செய்தித் துறையின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

ஓராண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma in Journalism) 2025-2026 கல்வியாண்டான இந்த வருடம் முதல் தொடங்கியுள்ளது. இதழியல் கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்துவதும், தமிழக மாணவர்களை மிகச் சிறந்த இதழாளர்களாகவும், கல்வியாளர் களாகவும் உருவாக்குவதே இதன் நோக்கமாகும். படைப்பாற்றலையும், பல்துறை திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செயல்திறன் கூடிய நவீன கல்வி முறையை இந் நிறுவனம் அறிமுகப்படுத்து கிறது. 

இந்திய அளவில் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேசன் எனும் அரசு நிறுவனத்தை இதழியலுக்காக ஒன்றிய அரசின் தகவல் தொடர்புத்துறை நடத்தி வருகிறது. ஆனால், எந்த ஒரு மாநில அரசும் இப்படி ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தவில்லை. அந்த வகையில், தமிழக பட்டதாரிகளுக்காக இந்த நிறுவனத்தை தி.மு.க. அரசு தொடங்கியிருப்பது தேசிய அளவில் உற்றுநோக்கப்படுகிறது. 

Advertisment

இதழியல் துறைக்காக சிறப்பான ஒரு கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டிருப்பது குறித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்துப் பேசியபோது, "சுதந்திரத்தின் பயன்பாட்டை புரிந்துகொள்ள இதழியல் துறை பெரும் பங்காற்றுகிறது. தரவுகளின் அடிப்படையில் கொடுக்கப்படும் நம்பிக்கைக்குரிய செய்திகளே உரிமைக்கான முதல்படி. அதனை இலக்காகக் கொண்டு உண்மையும் அறமும் நேர்மையும் இதழியல் துறையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 

mediacourse1

இதழியல் துறையில் முழுமையான பயிற்சிபெற்று திறமையான பத்திரிகையாளர் களாக, ஊடக வியலாளர்களாக, கல்வியாளர் களாகத் தமிழக மாணவர்கள் உருவாவதற்கு இந்த நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இதழியல் துறை என்பது மெத்தப் படித்தவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்குமே உரியது என்கிற மாயையில், அதெல்லாம் எட்டாக்கனி என நினைத்துக்கொண்டிருக்கும் ஏழை மாணவர் களுக்கு, இதழியல் துறை உங்களுக்கு எட்டும் கனிதான் என்கிற நம்பிக்கையை விதைப்பதற்       கான முயற்சிதான் இந்த நிறுவனம். மிக மிகக் குறைவான கட்டணத்தில் சர்வதே அளவிலான பாடத் திட்டங்கள் இங்கு பயிற்றுவிக்கப்பட விருக்கிறது. 

Advertisment

 இந்தத் துறையில் சேர்வதற்கு நடப்பாண்டில் 90 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியின் அடிப்படையிலும் இடஒதுக்கீட்டின் அளவுகோலிலும் 60 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு வருட முதுநிலை பட்டயப் படிப்பு. இந்த படிப்பு இரண்டு செமஸ்டர்களை உள்ளடக்கியது. பயிலும் மாணவ மாணவிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன'' என்கிறார் பெருமிதமாக.

mediacourse2

இதழியல் கல்வி நிறுவனத் தின் தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனை சந்தித் துப் பேசியபோது, ’"தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு, கடந்த 2022-23 நிதியாண்டில் அரசுத் துறைகளில் நமக்கான இடைவெளி எங்கெல்லாம் இருக்கிறது என ஒரு ஆய்வை மேற்கொண்டபோது, தமிழகத்தில் இதழியல் துறையில் மாறுபட்ட சூழல் இருப்பதை கண்டறிந்தது. குறிப்பாக, பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இதழியல் பட்டப்படிப்பு இருந்தாலும், ஒன்றிய அரசு மற்றும் யூ.ஜி.சி.யின் தலையீடுகள் இருக்கவே செய்கின்றன. இதழியல் துறையில் சுதந்திரமும், நேர்மையும் அவசியம். அதனால், தமிழக மாணவர்களுக்காக நாமே ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்கலாம் என்கிற கொள்கை முடிவின்படி உருவானதுதான் இந்த நிறுவனம்.

இன்றைய ஊடகம், அச்சு, ஒலி-ஒளிபரப்பு, இணையம் என பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதனை யொட்டி, வளர்ந்து வரும் சமூக ஊடகப் பார்வையையும் இணைத்து தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் திறமையான இதழாளர்களை உருவாக் கும் பணியில் ஈடுபடுத்திக்கொள்கிறது இதழியல் கல்வி நிறுவனம். தமிழும் ஆங்கிலமும் தெரிந்த சர்வதேச நிபுணர்களைக் கொண்டு கல்வி கற்றுத்தரப்படுகிறது. அதற்கேற்ப பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறந்த இதழாளர்கள், நிபுணர்கள், அறிஞர்கள், செயற்கை நுண்ணறிவு, அறிவியல், சமூக அறிவியல், சட்டம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளிலிருந்து வல்லுநர்களையும் அழைத்து சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படவுள்ளன.  

mediacourse4

இந்த நிறுவனம், நிறுவன சட்டவிதிகளின்படி பதிவு செய்யப்பட்டிருப்பதால், தனித்த அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பாகும். அரசு தலையீடோ, அரசியல் தலையீடோ துளியளவு கூட இருக்காது. நிறுவனத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மட்டுமே அரசின் செயல்பாடாக இருக்கும். மேலும், அரசின் இடஒதுக்கீடு முறையை முழுமையாக கடைப்பிடிக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்திலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அளவை விட அதிகமாகவே இந்த முறை மாணவ -மாணவி களை சேர்த்திருக்கிறோம். 

mediacourse3

உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், 1 இடம் கொடுக்கப்பட வேண்டிய பழங்குடியினருக்கு 2 இடங்கள் தரப்பட்டுள்ளது. அதேபோல, 9 இடங்கள் தரப்பட வேண்டிய பட்டியிலினத்தவர்க்கு 15 இடங்           களும், 16 இடங்கள் தரப்பட வேண்டிய பிற்படுத்தப்பட்டோருக்கு 31 இடங்களும், 12 இடங்கள் தரப்பட வேண்டிய மிகவும் பிற்படுத் தப்பட்டோருக்கு 14 இடங்களும் அதிகரித்துத் தந்திருக்கிறோம். அதேபோல, பொதுப்பட்டியலில் போட்டியிடும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு சலுகைகள் எந்த வடிவத்திலும் மறுக்கப்படவில்லை.   

கல்விக்கட்டணம் என்கிற முக்கியமான ஒரு விசயம் இருக்கிறது. அதாவது இதழியல் கல்வி நடத்தும் ஒன்றிய அரசின் நிறுவனத்தில் பி.ஜி.டிப்ளமோ படிப்பை படிக்க வருடத்துக்கு 1,15,000 ரூபாயை கல்விக்கட்டணமாக வசூலிக்கிறது ஒன்றிய அரசு. 

தனியார் கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் வசூலிக்கின்றன. ஆனால், இதே பி.ஜி.டிப்ளமோ படிப்பை தமிழக அரசின் இதழியல் கல்வி நிறுவனம் ஆண்டுக்கு 10,000 ரூபாய் மட்டுமே கல்விக்கட்டணமாக நிர்ணயித்திருக்கிறது. 

 இதழியல் துறையில் இந்திய மொழிகளுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தமிழ்மொழிக்கு இல்லை. ஆங்கில இதழியலுக்கும் தமிழ் இதழியலுக்குமான இடைவெளி அதிகம். அதனை குறைத்து, வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வது இந்த நிறுவனத்தின் தலையாய பணி. நிச்சயம் இதழியல் துறையில் ஒரு புரட்சியும் மறுமலர்ச்சியும் இந்த நிறுவனம் ஏற்படுத்தும்'' என்கிறார் உணர்வுப்பூர்வமாக!