புதுச்சேரி சட்டமன்றத்திற்கு பாண்டிச்சேரி மாவட்டத்தில் 23, காரைக்கால் மாவட்டத்தில் 5, மாஹி, ஏனாம் தலா 1 என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த 30 தொகுதிகளுக்கு தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க., மாநில கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை தீவிரமாக அரசியல் செய்துவருகின்றன. கம்யூனிஸ்ட்கள், பா.ம.க., வி.சி.க., த.வெ.க. போன்றவை தங்கள் இருப்பை காட்டிவருகின்றன. இக்குட்டி பிரதேசத்தில் இத்தனை கட்சிகள் அரசியல் செய்துவரும் நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு மாதம் ஒரு கட்சி எனப் புதிது புதிதாக கட்சிகள் தொடங்கப்பட்டுவருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு களமிறங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ், லட்சிய ஜனநாயக கட்சியைத் தொடங்கி, புதுவையில் ஆட்சியை பிடிக்கப்போவதாக வலம் வருகிறார். இந்திய வனத்துறை அதிகாரியாக இருந்த சத்யமூர்த்தி, அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் களத்திற்கு வந்தவர், பா.ஜ.க. மாநிலத்தலைவர் பதவிக்காக காய்நகர்த்தினார். கவர்னர் கைலாசநாதன் அவருக்கு சப்போர்ட் செய்தார். அவருக்கு பதவி கிடைக்காத நிலையில், எம்.எல்.ஏ. சீட் வாங்கி போட்டியிடுவதற்காக கவர்னர் வழியாக முயற்சி செய்தார். இந்நிலையில் போலிமருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், தனக்கு மஞ்சள் காமாலை எனக் கூறி ஜாமீன் பெற்றவர், பிப்ரவரி 1ஆம் தேதி, "செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகம்' எனப் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார்.
உருளையான்பேட்டை தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நேரு என்கிற குப்புசாமி. இவர் "மனிதநேய மக்கள் இயக்கம்' என்கிற அமைப்பை நடத்திவந்தார். அதனை இரண்டு மாதத்துக்கு முன்பு "நமது மக்கள் கழகம்' என அறிவித்துள்ளார். புதுவையில் தலித் போராளியாக தன்னை வெளிப்படுத்திவரும் சுவாமிநாதன், "புதுச்சேரி மாணவர் கூட்டியக்கம்' என்கிற அமைப்பை நடத்திவந்தார். அவரும் கடந்த மாதம் "தேசிய மக்கள் முன்னணி' என்கிற கட்சியை தொடங்கியுள்ளார். புதுச்சேரி முன்னாள் எம்.பி. ராமதாஸ் நடத்திவரும் "புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக'த்தின் நிர்வாகியாக இருந்த வெங்கட்ராமன், கடந்த மாதம் "ஆர்.எல்.வி. மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை தொடங்கி யுள்ளார். இன்னும் பல கட்சிகள் உருவாகு மென்கிறார்கள் புதுவை அரசியல்நோக்கர்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/05/pondy1-2026-02-05-18-02-31.jpg)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க.வுடன் இணக்கமாகி விட்டார். அவருக்கு புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி தரப்பட்டுள்ளது. புதுவை மாநில தலைவர் வைத்தியலிங்கம் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, "புதுச்சேரி மல்லாடி மக்கள் கட்சி' என்ற புதுக்கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரியின் காங்கிரஸ் முகமாக இருந்து பா.ஜ.க.வாக மாறி, 2023-ல் மறைந்த கண்ணனின் மகன் விக்னேஷ், பா.ஜ.க.விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தும் இணையாமல் உள்ளார். ராஜ்பவன் தொகுதியை குறிவைத்து பணிகள் செய்துவருகிறார். அவரை நாராயணசாமி -வைத்தியலிங்கம் கோஷ்டிகள் இணைந்து எதிர்ப்பதால், தனிக்கட்சி தொடங்க ஆலோசித்துவருகிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/05/pondy2-2026-02-05-18-02-48.jpg)
இதுபற்றி புதுவை அரசியல் பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது, "தனிக்கட்சி தொடங்கிய ஒவ்வொருத் தருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கு. கடந்த வாரம் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்துப் பேசும்போது, சிட்டிங் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொகுதி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சந்திர ப்ரியங்காவின் தொகுதியை கேட்டுள்ளார். அதனை மறுத்தவர், கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளிலேயே இம்முறையும் எல்லாரும் போட்டியிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார் என்.ஆர். இதனை புதுவை பா.ஜ.க. விரும்பவில்லை. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்கத்தான் இரு கட்சிகளும் மாறி, மாறி புதுக்கட்சிகளை தொடங்கச் செய்கின்றன.
முதலமைச்சர் ரங்கசாமியை மிரட்ட சார்லஸ் மார்ட்டினை புதுவையில் இறக்கியது பா.ஜ.க. அதேபோல் புதுச்சேரியில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்த கே.கே. ப்ளான் போட்ட கவர்னர் கைலாசநாதனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் சத்யமூர்த்தி. இவர் புதுக்கட்சி தொடங்கியதற்கு பா.ஜ.க. காரணமென்று நினைக்கிறது என்.ஆர்.காங்கிரஸ். அதேபோல் பா.ஜ.க.வை மிரட்ட சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவை பயன்படுத்திக் கொள்ளும் முதலமைச்சர் ரங்கசாமி, இப்போது அவரை கட்சி தொடங் கச் செய்துள்ளார். என்.ஆர்.சி.யும், பா.ஜ.க.வும் இணைந்து காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் அதனை வீக் செய்யவே மல்லாடியை தனிக்கட்சி தொடங்கச் சொல்கிறார்கள். தனிக் கட்சி துவங்கியுள்ள சுவாமிநாத னுக்கு தலித் வாக்குகளை பிரிக்கவும், அவரை ஒரு தொகுதியில் நிற்கச் சொல்லியும் அசைன்மெண்ட் தந்துள்ளார் பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயம். தனது அப்பா கண்ணனை அரசியலில் ஏமாற்றிய அமைச்சர் லட்சுமிநாராயணனை அரசியல்ரீதியாகத் தோற்கடிப்பதற் காகவே தேர்தலில் நிற்க நினைக் கிறார் விக்னேஷ். இப்படி புதியதாக அரசியல் கட்சிகள் தொடங்கியதன் பின்னால் சிலரின் சுயநலமும், கூட்டணிக் கட்சிகளை மிரட்டும் அரசியலும் இருக்கிறது'' விவரித் தார்.
புதுவையின் சட்டமன்றத் தொகுதிகளை விட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி விடும்போல... மக்கள்தான் பாவம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/05/pondy-2026-02-05-18-02-21.jpg)