தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களை ஏமாற்றி இரிடியம், வெளிநாட்டுப் பணம் வருகிறது என்று பல வருடங் களாக ஏமாற்றிவந்த கும்பலைக் குறிவைத்து தமிழ்நாடு சி.பி. சி.ஐ.டி. போலீசார் ஒரேநேரத்தில் 47 இடங்களில் சோதனைசெய்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மோசடிப் பேர்வழிகளை கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை ரவிச்சந்திரன். இந்த மோசடி மன்னனைப் பற்றி நக்கீரன் பலமுறை எச்சரிக்கை ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. ஆனால் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
யார் இந்த குடுமி யான்மலை ரவிச்சந்திரன்?
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம், குடுமியான்மலை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான இவர் ஒரு மாற்றுத்திறனாளி. தொடக் கத்தில் புதுக்கோட்டையில் ஒரு கடையில் வேலைசெய்தவர் பிறகு ஜாதகம் பார்க்கத் தொடங்கினார். 2008 கால கட்டத்தில் சவரிமுத்து அருள் தாஸ் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி மோசடியைத் தொடங்கி யுள்ளார்.
ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளையில் உறுப்பினராகச் சேருங்கள்.. கொஞ்ச நாளில் ஒரு கோடி ரூபாய் வெல்லுங்கள்.. என்று இந்த ரவிச்சந்திரன் சொன்னதை கேட்டு பல மாவட்டங்களிலிருந்தும் பல ஆயிரம் பேர் பல லட்சங்கள் கொடுத்துவிட்டு கோடிகள் கிடைக்கும் என்று காத்திருக் கின்றனர்.
இந்த அறக்கட்டளை வளரவேண்டும் என்று நடிகர் கள் ராதாரவி, வடிவேல், செந்தில், தாமு, சார்லி, நடிகை சினேகா மற்றும் ஏராளமான திரை நட்சத்திரங்கள், உள்ளூர் தி.மு.க, அ.தி.மு.க அரசியல்வாதி கள் என பலரும் 2009-ல் விளம்பரம் செய்துவிட்டுச் சென்றனர். “"ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி! நடிகர் நடிகைகளே சாட்சி!'’என்ற தலைப் பில் 2009-ல் நக்கீரனில் செய்தி வெளியிட் டிருந்தோம்.
அதன்பிறகு அறக்கட்டளை உறுப் பினர்கள் பலரும் எங்கள் பணத்தை திருப்பிக் கொடுங் கள் என்று ரவிச் சந்திரனை நெருக்கி னார்கள். வெளி நாட்டுப் பணம் ரூ.1500 கோடி வந்ததும், சொன்ன படி கோடிகளைத் தருகிறேன் என்று சமாதானம் செய்து அனுப்பினார். இவருடன் பல காக்கிகளும் இருந்த தால் பணம் கொடுத்தவர்கள் பேசாமல் சென்றனர். காரைக்குடி, புதுக்கோட்டை, துவரங்குறிச்சி, மணப்பாறை பகுதிகளில் சிலர் போலீஸில் புகார்கொடுக்க, அவர்களிடம் "போலீசுக்குப் போனால் உங்க பணம் வராமல்போயிடும். இன்னும் 15 நாளில் வரவேண்டிய பணத்தை இழக்காதீங்க' என்று சமாதானம் பேசி புகார்களை வாபஸ் வாங்க வைத்துள்ளார். பல ஆண்டுகளாக பணம் வருமென்று நம்பி அவர் கொடுத்த செக்கை பார்த்துக்கொண்டு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டு பலரும் காத்திருக்கின்றனர்.
எந்த மாவட்டத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கிறார்களோ அந்த மாவட்டத்தில் ஏதாவது ஒரு வங்கிக் கிளையில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கி அவர்களது பெயரில் செக்புக் வாங்கிக் வைத்துக்கொள்வதும் உண்டு. புதுக்கோட் டை ராஜகோபாலபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் 500-க்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட் டுள்ளன. அதேபோல ஈரோடு மாவட்டத்தில் கோபி எஸ்.பி.ஐ கிளையில் 500-க்கும் மேற்பட்ட கணக்கு கள், 2009-ல் ஒரு தனிநபருக்கு இதே புதுக்கோட் டை ராஜகோபாலபுரம் இந்தியன் வங்கிக் கிளை செக்கில் ரூ.160 கோடிக்கு எழுதிக்கொடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான் கடந்த 2011 நவம்பர் 7-ஆம் தேதி, திருச்சி பெமினா ஹோட்டலில் உறுப் பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, "இன்று என் வங்கிக் கணக்கில் கோடிகளை கொட்டப்போகிறார்கள். அந்த பணம் நவம்பர் 15-ஆம் தேதி உங்கள் வங்கிக் கணக்குகளில் வரவுவைக்கப்படும். இனி நீங்க கோடீஸ்வரர்கள் என்று திரண்டுவந்த உறுப்பினர்களை குஷிப்படுத்தினார். அப்போதும் 2011 நவ.12-15 நக்கீரன் இதழில் "தமிழர்கள் கோடீஸ்வரர்களாக மாறும் நாள்! அசத்தும் மனிதர்!'’என்ற தலைப்பில் மோசடி குறித்து அட்டைப்பட செய்திக் கட்டுரை வெளியிட்டிருந் தோம். அதன்பிறகும் யாருக்கும் பணம் கிடைக்க வில்லை. பணம் கட்டி உறுப்பினரானவர்கள் நெருக்கியதால் அந்தப் பகுதியிலிருந்து பெரம்ப லூர், கரூர் என்று வேறு மாவட்டங்களுக்கு மாறினார்.
பிறகு ஈரோடு மாவட்டத்தில் தன் வேலை யை காட்டத்தொடங்கினார். ஈரோடு மாவட்டம் கோபி முடச்சூர் சாலையில் அலுவலகம் அமைத்து வழக்கமான கதைகளைச் சொல்லி சுமார் 600 பேரை உறுப்பினராக்கி பல கோடி களை வசூல்செய்தார். 2013-ல் இங்கு ரூ.10 லட்சம் கட்டி ஏமாந்த ஹார்டுவர்ஸ் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சுபாஸ்சாமிநாதனும், குழந்தை வாசுகியும் கைதுசெய்யப்பட்டனர். அறக்கட்டளை முதன்மை உறுப்பினர் ரவிச்சந்தி ரன் தப்பியோடி முன்ஜாமீனுக்காகக் காத்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் சதுரங்க வேட்டை நடத்தி பல நூறு கோடிகளை அபேஸ் செய்த மோசடிக் கும்பலை கைதுசெய்ய, தமிழ்நாடு அரசு சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் செப்டம்பர் 14-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 43 இடங்களி லும், ஆந்திராவில் 4 இடங்களிலும் என 47 இடங்களில் களமிறங்கினர். இந்த வேட்டையில் 5 மோசடிக் கும்பலைச் சேர்ந்த சென்னை எஸ். எச்.எஸ். இரிடியம் சாமியார் சாமிநாதன், காட் பாடி ஜெயராஜ், குடுமியான்மலை ரவிச்சந்திரன், மணப்பாறை ஞானப்பிரகாசம், திண்டுக்கல் டெய்சிராணி உள்பட 30 பேரை கைது செய் துள்ளனர். ரவிச்சந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ள தகவல் வெளியானநிலையில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு புகார்கள் கூறிவருகின்றனர்.
இதுவரை சுமார் ரூ.500 கோடிக்குமேல் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்திருக்கும் ரவிச்சந்திரனிடமிருந்து, பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுமா?… இல்லை... அது அதோகதிதானா?