கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, தமிழின் அழகியலைப் புதிதாகப் புரந்து வருகிறார் வைரமுத்து. அவருடைய திரைப்பாடல்கள் மட்டுமல்லாது, அவர் படைத்தளிக்கும் கவிதைகளும், கட்டுரை களும், புதினங்களும் இன்னபிற படைப்பு களும் தனித்தன்மை பூண்டு, தமிழைச் செம்மாப்போடு புதிய புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்கின்றன. எத்தகைய விமர்சனங் கள் அவரைக் குறிவைத்து எய்யப்பட் டாலும், அவற்றால் சிறு கீறலைக் கூட தன் மேல் வாங்கிக்கொள்ளாத, திடம் மிகுந்த திராவிடப் புலவராகவே வைரமுத்து திகழ்ந்து வருகிறார். இத்தகு தகுதியை மிகுதியாகக் கொண்ட அவர், பகுத்தறிவுக் கும், அறிவியலுக்கும் அனுசரணையான திசையில் இருந்தபடி, திருக்குறளுக்கு எழுதியிருக்கும் உரை, தமிழன்னையின் தலையில் ஒளி மகுடமாக மலர்ந்திருக்கிறது.
கலைஞரின் பகுத்தறிவு மாணாக் கரான வைரமுத்து, அவருடைய உரைக்கு அருகே, திராவிடக் குடையை விரித்த படியே கம்பீரமாக நடைபோடுகிறார். இது வள்ளுவருக்கு மாறானது அல்ல; அறிவுலக வளர்ச்சிக்கு நேரானது. திராவிடம் என்ற சொல், பழைமைவாதத்தைக் கட்டுடைக் கும் கோட்பாடு என்ற பொருளில் இங்கே எடுத்தாளப்படுகிறது.
திருக்குறள் ஒரு கலகக்குரல் என்று, தன் 13 பக்க முன்னுரையைத் தொடங்கியிருக்கும் கவிஞர், வள்ளுவரின் ஆளுமைப் பண்பையும், அவருக்கே உரிய சொல்லாட்சி மாண்பையும் நயம்பட எடுத்துக்காட்டியிருக் கிறார். தான் தீட்டியிருக்கும் உரை எவ்வளவு கவனத்தோடு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை, இந்த முன்னுரையில் தமிழ்கூறு நல்லுலகம் உணரும் வகையில் உணர்த்தியிருக்கிறார் கவிஞர். குறிப்பாக, வள்ளுவர் பயன்படுத்திய உடுக்கை, கருவி என்பது போன்ற சொற்கள், இடைக்காலங்களில் முளைத்த சொற்களை எல்லாம் எதிர்கொண்டு நீந்தி வருவதை, தலைக்குமேல் வைத்துக் கொண்டாடுகிறார் கவிஞர்.
எத்தனையோ சொற்கள் வள்ளுவர் காலத்தில் புழங்கிய போதும், வாழ்வாங்கு வாழும் சொற் களையே அவர், இனங்கண்டு அதிகம் பயன்படுத்தி யிருப்பது வியப்பிற்குரியது. இதைத்தான் காலத்தின் துரு திருக்குறளில் ஏறவில்லை என்கிறார் கவிஞர்.
திருக்குறளின் முதல் அதிகாரத்தைப் பலரும் ‘கடவுள் வாழ்த்து’ எனக் கைகூப்பி வந்த போது, கலைஞர் அதற்கு ’வழிபாடு’ என்று பெயர் சூட்டினார்.
நம் கவிஞரோ அறிவு வணக்கம்’ என்னும் பெயரை அணிவித்து அழகு செய்திருக்கிறார்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)
-இக்குறளில் நேரடியாக வரும் ’இறைவன்’ என்ற சொல்லுக்குப் பொருள் சொல்லப் புகும் கவிஞர், எந்த மறைப்பின் பின்னாலும் ஒளிந்து கொள்ளாமல், அப்பட்டமாக ’ இறைவன் என்பது ஒரு கருத்துரு. அது மன மயக்கத்தால் விளையும். நன்மை தீமை என்ற இருவினைகளையும் கடந்தது என்று கருதப்படுவது’ என்று தெளிவாக வரையறுக்கிறார். பின்னர், அதன் பொருள்புரிந்து தெளிவுபெற்றவர்கள், விருப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாக மாட்டார்கள்’ என்று உரை வழங்கி அறிவுலகை மகிழ்விக்கிறார்.
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247)
-என்னும் குறளுக்கு, ‘பொருளற்றவர்களுக்கு நிகழ்கால உலகம் எப்படி இன்பமற்றுப் போய்விடுமோ, அப்படியே அருட்சிந்தை அற்றவர்களுக்கு எதிர்கால உலகம் இன்பமற்றுப் போய்விடும்’ என்று, அறிவின் ஒளி தொட்டு எழுதுகிறார் நம் உரையாசிரியர். அவ்வுலகம் என்பதற்கு வேறு ’காதுகுத்துக் கதைகளைச்’ சொல்லாமல், எதிர்கால உலகம் என்று பொருளுரைப்பதிலும், வைரமுத்தின் கொள்கை உரம் சுடர்கிறது.
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும். (346)
-இக்குறளுக்கு ‘தனக்கு உரியதல்லாத உடம்பைத் தானென்றும், தன்னோடு உடன்வராத பொருளைத் தனதென்றும் கருதுகிற அக மயக்கத்தை, அறுத்தவன், வானம் கடந்து உயர்ந்து நிற்கும் புகழ்பெறுவான்’ என்று கவித்துவமாக உரை எழுதுகிறார் கவிஞர்.
இக்குறளில் வரும் ’வானோர்க்கு உயர்ந்த உலகம்’ என்ப தற்கு ’தேவர்க்கு மேலாகிய உலகம்’ என்று மணக்குடவரும், ’வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம்’ என பரிமேலழக ரும், இவர்களின் தடம் ஒற்றியே இன்னும் பலரும் பொருள் காண்கிறார்கள். இவர்களிடமிருந்து வேறுபட்டு, ’வானம் கடந்து உயர்ந்து நிற்கும் புகழ்’ என்று, உரையாசிரியரான வைரமுத்து, வாழ்வியலை உயர்த்துகிறார்.
அறத்துப்பாலிலும் பொருட் பாலிலும் பேரறிஞராய் அறியப் பட்ட வள்ளுவர், இன்பத்துப் பாலில் பெருங்கவிஞராக, பேருருவம் காட்டுகிறார்’ என்று ரசனையுடன் கைத்தட்டும் கவிஞர்,
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. (1221)
-என்னும் குறளுக்கு, பரிமேலழகர், கலித் தொகையில் வரும் ’வாலிழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்பொழுதாக, மாலைப்பொழுது காட்டப் பட்டதை, தன் உரைக்குத் துணையாக அழைத்துக் கொள்கிறார். நம் கவிஞரோ, மணந்தோம். ஆனால் கூடும் துணையின்றிப் பிரிந்திருக்கிறோம். இவ் வேளை பார்த்து வருகிறாயே. உன் பெயர் என்ன? மாலைப்பொழுதா? இல்லை, எங்கள் உயிரை உண்டு முடிக்கும் அந்திமக் காலமாகிய அந்திக் காலமா?
நீயாவது வாழ்வாயாக’-என உரை என்னும் பெயரில் ஓர் ஓரங்க நாடகத்தையே உணர்ச்சி ததும்ப நடத்திக்காட்டுகிறார். பிரிந்திருக்கும் காதலர்களை நோக்கி வரும் ’அந்திக் காலமும் அந்திமக் காலம் தான்’ என்னும் கவிஞரின் சொல் விளையாட்டு சொக்க வைக்கிறது. மேலும், ’நீயாவது வாழ்வாயாக’ என்பதன் மூலம், நாங்கள் வாழவில்லை என்கிற அந்தக் காதல் தலைவியின் அடர்ந்த தன்னிரக்கக் குரலையும் இந்நூற்றாண்டில் எதிரொலிக்கச் செய்து, குறளின் பொருளுக்கு மேலும் பொருள் கண்டிருக்கிறார் கவிஞர்.
கவித்துவம், சுவை, அழகியல், செறிவு, ஆராய்ச்சி, கோட்பாடு என கவிஞரின் உரை, பல வகையிலும் மேம்பட்டு இயங்கி இன்பத்தைப் பெருக்குகிறது. இது, வள்ளுவரை மட்டு மல்லாது, கவிப்பேரரசு வைரமுத்தையும் நம் மனதின் தீராப் பக்கங்களில் அழுத்தமாய் எழுதத் தொடங்குகிறது.
-தமிழ்நாடன்
வள்ளுவர் மறை வைரமுத்து உரை
விலை: ரூ.250
வெளியீடு:
சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்,
32, டைகர் வரதாச்சாரி சாலை,
முதல் குறுக்குத்தெரு, கலாசேத்ரா காலனி,
பெசன்ட் நகர், சென்னை-90
96770 89466