இத்தனை ஆண்டுகளாகியும் அந்த மர்மம் விளங்கவில்லை. இன்றைய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி அதிகாலை நடைபயிற்சிக்காக திருச்சி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. போலீஸ் தேடிய போது, காவிரிக் கரையோரமாக திருவளர்ச்சோலை என்ற இடத்தில், கை, கால்களை இரும்புக் கம்பியால் கட்டி, வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். திருச்சி மட்டுமல்ல, தமிழ்நாடு அரசியல் களமே அதிர்ந்தது.
இந்த வழக்கை முதலில் கையில் எடுத்த திருச்சி காவல்துறை சுறுசுறுப்பாக பணியாற்றி குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் பல்வேறு தரப்புகளிடம் விசாரணைகளை நடத்தியும் கொலையாளிகள் யார்?, ராமஜெயம் எதற்காக கடத்தி கொலை செய்யப்பட்டார்? என்பதற்கான எந்தவித தடய மும் சிக்கவில்லை. இந்தநிலையில் கொலையுண்ட ராமஜெயத்தின் மனைவி லதா, சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறோம். எனவே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என கூறி இருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதிக்குள் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது. பின்னர் திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 2018 ஜனவரி மாதம் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், ராமஜெயம் கொலை தொடர்பான முதல் கட்ட விசா ரணையைத் தொடங்கினர். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் திரட்டப்பட்ட ஆவணங் களைக் கொண்டு கடந்த 2018 மார்ச் மாதம் 2-ம் கட்டமாக விசாரணை நடத்தினர். ஆனால், சி.பி.ஐ. போலீசார், விசாரணை தொடர்பான ரகசியங்களை வெளியில் கசிய விடவில்லை. எனவே, கொலை வழக்கில் முன்னேற்றம் ஏதும் ஏற் பட்டதா?, கொலையாளிகள் அடையாளம் தெரிந்து விட்டதா?, கொலைக்கான காரணம் என்ன? என்பதை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.
இதற்கிடையில் ராம ஜெயம் இறந்துகிடந்த அதே திருவளர்ச்சோலை சாலையில் கடந்த 1-ஆம் தேதி 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண்பிணம் கிடப்பதாக, ஸ்ரீரங்கம் காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கழுத்தோடு கை, கால்கள் இணைத்து கட்டி வைக்கப்பட்டு, அழுகிய நிலையில் ஒரு பிணத்தைக் கைப்பற்ற அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்டதற்கான முகாந்திரம் அதிகம் இருப்பதாக வந்த தகவலையடுத்து பதற்றம் சற்று தணிந்தது.
இந்நிலையில், ராமஜெயம் கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வந்த வழக்கை தமிழக போலீசாரிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் ராம ஜெயத்தின் சகோதரர் ரவிச் சந்திரன் வழக்கு தொடர்ந் துள்ளார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.
சி.பி.ஐ. விசாரணையில் குறைபாடு இல்லை. எனவே, இந்த கொலை வழக்கை மீண்டும் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகளின் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கலாம். அதில் தமிழக அதிகாரிகளையும் இடம்பெறச் செய்யலாம் என்று கூறினார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புலன் விசாரணைக்கு தமிழக போலீசார் உதவத் தயாராக உள்ளதாக பதில் அளித்தார். மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு காவல்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள் என்றும் அதற்கான பட்டியல் விரைவில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அன்றைய ஆட்சி மாற்றம், அதிகார பலம், காவல்துறைக்கு இடப்பட்ட கட்டளைகள் எனப் பலவும் சுழன்றடித்த ராமஜெயம் கொலை மர்மம், 9 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்தின் காரணமாக கவனம் பெற்றிருக்கிறது. உண்மைக் கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன, எப்படித் திட்டமிடப்பட்டது, யார் யார் அதன் மூளை போன்ற மர்மங்கள் எப்போது தெளிவாகுமோ?
_______________
அண்மையில் காலமான நமது நக்கீரன் கோவை நிருபர் அருள்குமார் அவர்களின் இல்லத்திற்கு கடந்த 6-ஆம் தேதி சென்ற நமது ஆசிரியர், நிருபர் அருள்குமாரின் துணைவியார் நிர்மலாவிடம் கிராஜூவிட்டி நிதியை வழங்கியதுடன், அருள்குமாரின் இரு மகன்களான தமிழ்மதி, இளஞ்சித்திரனின் படிப்புக்கான உதவித் தொகையையும் வழங்கினார். ஆசிரியருடன் மனித உரிமை போராளியான சீனியர் அட்வகேட் ப.பா.மோகன், நக்கீரன் ஈரோடு நிருபர் ஜீவா தங்கவேல் ஆகியோரும் உடனிருந்தனர்.