சேலம் -சென்னை 8 வழிச்சாலை பற்றி பேசும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் "இந்த சாலை திட்டத்திற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பு எங்கே இந்தத் திட்டம் கைவிடப்படும் நிலைக்குப் போய்விடுமோ என்கிற பயத்தை ஏற்படுத்தியுள்ளது' என கவலையோடு தெரிவிக்கிறார்கள்.

இந்தச் சாலை பற்றி ஆராய்ந்து மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிக்கை தந்துள்ள பீட்பேக் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், "இந்தச் சாலைக்கு பசுமைவழிச் சாலை என பெயர் வந்ததற்கு காரணம் இந்தச் சாலைமுழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதுதான்' என்கிறது.

edappadi

சென்னை நகரின் வெளிவட்டச் சாலையில், வண்டலூரில் தொடங்கும் இந்தச் சாலை 2 கி.மீ. தூரம் வரை வண்டலூர்- ஒரகடம் -வாலாஜாபாத் நகராட்சிக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலை 48-ல் பயணிக்கிறது. அதன்பிறகு கரசங்கால் என்கிற கிராமத்திற்குள் நுழைந்து விவசாய நிலங்களில் பயணிக்கிறது. அதன்பிறகு விவசாய நிலங்கள், குளங்கள், ஏரிகள், பாலாறு என விவசாயத்துடன் தொடர்புடைய பகுதிகள் வழியே செல்லும் இந்தச் சாலை 60ஆவது கி.மீ.ரில் காஞ்சி மாவட்டத்தில் பெருநகரி என்கிற கிராமத்தை அடைகிறது. அங்கிருந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்களை தவிர்க்க 3,000 மீட்டர் வளைந்து செல்கிறது. அதேபோல் 160 முதல் 170 கி.மீ. வரும் திருவண்ணாமலை -செங்கம் பகுதியில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களை தவிர்ப்பதற்காக வளைந்து செல்கிறது. அதேபோல் திருவண்ணாமலையில் உள்ள அணத்தமலை வனப்பகுதியைத் தொடாமல் செல்ல.. மறுபடியும் சாலை வளைந்து செல்கிறது. அதேபோல் நாரதப்பட்டு -கரிமலப்பாடி கிராமங்கள் வரும் வன நிலங்களை தவிர்க்க விளைநிலங்களில் சாலை அமைக்கப்படுகிறது.

Advertisment

அதேபோல் இந்தச் சாலை சேலத்தைத் தொடும்போது வரும் ஜருகு மலை மலைத்தொடரை தவிர்க்க வன பூமியை சேதப்படுத்தாமல் இருக்க... 3 இடங்களில் சுரங்கம் அமைக்கப்பட்டிருப்பதாக பீட்பேக் இன்ஃப்ரா நிறுவனம் கூகுள் எர்த் இமேஜ் அடிப்படையில் உருவாக்கிய ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

edappadiசேலம் மாநகரத்தில் மட்டும்தான் நகர்ப்புற வீடுகள் அமைந்துள்ள பகுதியில் செல்லும் சாலை என குறிப்பிடும் இந்த நிறுவனத்தின் ரிப்போர்ட் மற்றெந்த இடத்திலும் வீடுகளைப் பற்றி குறிப்பிடவில்லை. அங்கங்கே சிதறிக்கிடக்கும் வீடுகள் என கிராமங்களைப் பற்றிச் சொல்லுகிறது. அதே நேரத்தில் இந்தச் சாலை விவசாய நிலங்கள் மீது அமைக்கப்படும் பசுமைவழி என டாம்பீகத்தோடு சொல்கிறது.

சேலத்திற்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் 2 அல்லது 4 வழிச் சாலைகளாக உள்ளன. வாலாஜாபேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வரை செல்லும்வரை மட்டுமே 6 வழிச் சாலையாக இருக்கிறது. 266 கி.மீ. விவசாய நிலங்களையும் வெறும் 11 கி.மீ. வரை வன நிலங்களையும் கைப்பற்றி பசுமை வழிச் சாலையாக இந்தச் சாலை அமைக்கப்படுகிறது என பெருமையாக குறிப்பிட்டுள்ளது அந்த நிறுவனம். இந்த 266 கி.மீ. சாலைக்காக 2791 ஹெக்டேர் (6698 ஏக்கர்) விவசாய நிலங்களும், அதில் உள்ள 1141 வீடுகளும் கையகப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் 104 மாட்டுக்கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு மொத்தமாக 2606 கோடி ரூபாய் இழப்பீடாகத் தரலாம் என அந்த ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

Advertisment

"என்னதான் நீங்கள் பணம் கொடுத்தாலும் எங்கள் உயிருக்கும் மேலான விவசாய நிலத்தின் மீது கைவைப்பது நியாயமா?' என தங்களை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயலும் விவசாயிகள் மீது கை வைக்காமல் தமிழகத்தில் சாலை திட்டத்தை நிறைவேற்ற முடியாதா? என விவசாயிகள் முன்வைக்கும் கேள்விக்கு ஃபீட்பேக் இன்ஃப்ரா நிறுவனம் கொடுக்கும் அறிக்கையிலேயே பதில் இருக்கிறது. "திண்டிவனம்-திருச்சி ஆகிய ஊர்களுக்கு அந்த வழியே செல்லும் என்.ஹெச்.182 என்கிற சாலைகளை விரிவாக்கம் செய்யத்தான் முதலில் முடிவு செய்யப்பட்டது. இந்தச் சாலை விரிவாக்கத்துடன் மதுரவாயல் -தாம்பரம் (என்.ஹெச்.32) துவரங்குறிச்சி -மதுரை, (என்.ஹெச்.38), பத்மநாவன்-கன்னியாகுமரி (என்.ஹெச்.66), தஞ்சாவூர் -திருச்சி (என்.ஹெச்.83), சேலம் பை-பாஸ், இப்பொழுதுள்ள சென்னை-சேலம் சாலையில் சில விரிவாக்கத் திட்டங்கள் என மொத்தம் 70 சாலைகளைத்தான் பாரத்மாலா என்கிற சாலை திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்தது. அதில் திண்டிவனம்-திருச்சி இடையே என்.ஹெச்.182-ல் 205 கிலோமீட்டருக்கு அமைக்கத் திட்டமிட்டிருந்த விரிவாக்கத்தைதான் சென்னை-சேலம் பசுமைவழிச் சாலையாக மாற்றினார்கள்' என அந்த நிறுவனம் அளித்த ரிப்போர்ட்டிலேயே குறிப்பிடுகிறது.

நிர்மலா சீதாராமன் கடந்த மார்ச் மாதம் திருச்சி, கோவை, ஓசூர், சேலம் ஆகிய நகரங்களில் இந்திய ராணுவ தொழிற்சாலைகள் அமையும் என அறிவித்தார். அதில் அவர் குறிப்பாக திருச்சியையும் கோவையையும் மையப்படுத்தி அறிக்கை வெளியிட்டார். ஓசூர் நகரில் விமான உதிரிப்பாக தொழிற்சாலைகள் அமையும் என ஜி.எம்.ஆர். நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் சென்னை திருவிடந்தையில் நடந்த ராணுவ கண்காட்சியிலும் இந்த அறிவிப்புகள் தொடர்ந்தது.

nirmalasitaram

அதன் தொடர்ச்சியாகத்தான் திண்டிவனம் -திருச்சி இடையே என்.ஹெச். 182 சாலையை விரிவாக்கம் செய்ய 205 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதை நிதின் கட்கரி, எடப்பாடி ஆகியோர் இணைந்து சென்னை-சேலம் பசுமைவழிச் சாலையாக மாற்றினார்கள் என்கிறது மத்திய அரசு வட்டாரம். இந்தச் சாலைக்கு விவசாயிகள் மத்தியில் எழுந்துவரும் கடுமையான எதிர்ப்பைக் கண்டு நிதின்கட்கரி மிரண்டுவிட்டார். நிதின்கட்கரி டெல்லியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை அழைத்து "சென்னை-சேலம் சாலைத்திட்டம் நல்ல திட்டம் என செய்தி வெளியிடுங்கள்' என கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்துதான் சேலம் கலெக்டர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பொதுமக்களைச் சந்திக்க வேண்டும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சேலம் பசுமைவழிச் சாலை திட்டம் தொடர்பாக எச்சரிக்கை என செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

""ஃபீட் பேக் இன்ஃப்ரா நிறுவனம் மத்திய அரசுக்கு கொடுத்த அறிக்கையில் விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அவர்களது, ஒத்துழைப்பை பெற்றால் மட்டுமே இந்தச் சாலைத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதை விட்டுவிட்டு எதிர்ப்பவர்களைச் சிறையில் தள்ளுங்கள் என எங்கேயும் சொல்லவில்லை. இவையெல்லாவற்றையும் மறைத்து அண்டப்புளுகு புளுகி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் எடப்பாடி தேவையில்லாத கைதுகளைச் செய்ததால் விவகாரம் இப்பொழுது வில்லங்கமாக மாறியுள்ளது'' என்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள்.

-தாமோதரன் பிரகாஷ்