ட்டு வழிச்சாலைக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

8wayroad

சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக 20 கிராமங்களில் 248 ஹெக்டேர் பரப்பளவு நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. இதில் அரசு புறம்போக்கு மற்றும் வனப்பகுதி நிலம் நீங்கலாக 186 ஹெக்டேர் நிலம் தனியார் பட்டாதாரர்களுக்குச் சொந்தமானது. இவற்றில் 95 சதவீத நிலம் இருபோகம் விளையக்கூடியவை. நில அளவீடுக்காக அதிகாரிகள் சென்ற இடமெல்லாம் விவசாயிகள் தரையில் படுத்துப் புரண்டும், மண்ணெண்ணெய் கேன்களுடன் தற்கொலைப் படையாகவும் மாறி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில்தான் சேலம் மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக நில எடுப்பு ஆட்சேபணை மனுக்கள் மீதான சட்டப்பூர்வ விசாரணை நடத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலரும், நில எடுப்பு அதிகாரப்பூர்வ அதிகாரியுமான சுகுமார் ஒவ்வொரு நில உரிமையாளரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

Advertisment

rto-sugumarஜூலை 6-ம் தேதியன்று குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், வெள்ளியம்பட்டி, ராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 169 பட்டாதாரர்களிடம் விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது. விசாரணைக்கு வந்த விவசாயிகள் கருப்பு பட்டை அணிந்து, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்க மாட்டோம் என்று எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதைப் பார்த்து வருவாய்த்துறை அதிகாரிகள் ரொம்பவே ஆடிப்போனார்கள். அன்று மொத்தம் 101 பட்டாதாரர்களிடம் மட்டுமே விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. அதுவும் பெயரளவில் மட்டுமே.

ஜூலை 10-ம் தேதி நடந்த விசாரணை கூட்டத்திற்கு ஆச்சாங்குட்டப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், அரமனூர், குப்பனூர், மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 203 விவசாயிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 30 விவசாயிகள், இந்த விசாரணை முறையில் நம்பிக்கை இல்லை என்று கூறி வெளிநடப்பு செய்துவிட்டனர். பலர் விசாரணை அரங்கத்திற்கே வரவில்லை. இதனால் அன்று 105 பேர்களிடம் மட்டுமே விசாரணை நடத்தி முடித்தனர்.

மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட சட்டப்பூர்வ விசாரணை ஜூலை 13-ல் நடந்தது. அன்று உடையாப்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி, எருமாபாளையம், நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், பூலாவரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 237 விவசாயிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. அவர்களில் 111 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பலர் இந்தக் கூட்டத்தையும் புறக்கணித்தனர்.

Advertisment

""விசாரணைக்கு ஆஜரானவர்களிலும் 8 சதவீதம் பேர் மட்டுமே நிலம் கொடுக்க வெளிப்படையாக சம்மதம் தெரிவித்துள்ளனர். அதிலும் சந்தை மதிப்புக்கு இணையாக இழப்பீடு கொடுப்பதாக இருந்தால் மட்டுமே நிலம் கொடுப்போம் என்ற நிபந்தனையுடன் விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் நிலம் கொடுக்க விருப்பம் இல்லை என்று கைப்பட எழுதிக் கொடுத்துள்ளனர். இந்தளவுக்கு எதிர்ப்பு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' என்கிறார் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரி ஒருவர்.

8wayroad1"எதிர்ப்பு தெரிவிப்போரின் ஆட்சேபணை மனு மற்றும் விசாரணைக்கு ஆஜராகாதவர்களின் கருத்துகளை எப்படி பதிவு செய்வீர்கள்?' என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

""நிலம் கொடுக்க விருப்பம் இல்லை என்று சொல்லி இருந்தாலும், விசாரணைக்கே ஆஜராகாமல் போயிருந்தாலும் அவர்களின் "கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது' என்று பதிவு செய்து விடுவோம். அதேநேரம் பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவது எந்தக் காரணத்தைக் கொண்டும் பாதிக்கப்படாது.

இன்னொன்று... மறுவாழ்வுக்காக 3000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்குள்தான் இழப்பீடு, பிழைப்பு ஊதியம் உள்ளிட்ட செலவினங்களை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.

எட்டு வழிச்சாலை பயணத்தில் அடுத்து என்ன? என்பது குறித்து சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரிடம் கேட்டோம்.

""சட்டப்பூர்வ விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. அடுத்து, கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் துல்லிய அளவீடு நடந்து வருகிறது. இன்னும் 20 நாள்களில் இந்தப் பணிகள் முடிந்து விடும். நிலத்தை சப்-டிவிஷன் செய்த பிறகு அதுபற்றி அரசு இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்பிறகு, நில உரிமையாளர்களுக்கு எவ்வளவு இழப்பீடு கிடைக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படும். அதற்காக மீண்டும் ஒருமுறை பட்டாதாரர்களிடம் விசாரணை நடத்தப்படும். நிலத்தின் உரிமையாளர் பெயருக்கு இழப்பீடு வழங்கப்படும்'' என்றார் சுகுமார்.

கடந்த காலங்களில் 70 சதவீத மக்கள் ஒரு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில் அந்தத் திட்டம் கைவிடப்படும். ஆனால், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு ஏறத்தாழ 90% பேரிடம் கடும் எதிர்ப்பு நிலவும் நிலையிலும்... நில எடுப்பில் தீவிரம் காட்டுவது செங்கோல் முறைமைக்கு அழகல்ல.

-இளையராஜா

_______________

எதற்காக இந்தத் திட்டம்?

nalakannu

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, சேலத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கும் ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ஏரிக்காடு போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளை ஜூலை 15-ம் தேதி மாலையில் சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்குப் பிறகு அவரை நாம் சந்தித்தோம்...

""சேலம் மாவட்டத்தில் கஞ்சமலையில் இருக்கும் இரும்புத்தாது உலகத்தரமானது. தேம்ஸ் நதிக்கரையில் பாலம் கட்டுவதற்கும், மன்னர்களுக்கு ஆயுதங்கள் செய்யவும் சேலம் மாவட்டத்தில் இருந்துதான் இரும்பு எடுத்து பயன்படுத்தப்பட்டு உள்ளது.

சேட்டிலைட் மூலம் நிலம் அளவீடு செய்வது என்பதுகூட வெறுமனே முட்டுக்கல் நடுவதற்காக மட்டும் அல்ல. பூமிக்கு அடியில் உள்ள கனிம வளங்களை கண்டறிய வசதியாகத்தான் இந்தத் தொழில்நுட்பத்தை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன. இதில் இருந்தே எதற்காக இந்த திட்டம் என்பது தெளிவாக புரிகிறது'' என்றார் நல்லகண்ணு.