கடவுள் இரங்கினாலும் கவர்மெண்ட் இரங்காது என்பது பசுமைவழிச் சாலை திட்டத்துக்குத்தான் பொருத்தம்.
சேலம்- சென்னை எட்டுவழிச் சாலைக்கு எதிராக ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பொங்கல்வைத்து அம்மனிடம் கோரிக்கை மனு வழங்குவது, கறவை மாடுகளின் கொம்புகளில் கருப்புக்கொடி கட்டுவதென விதவிதமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் மற்றும் போலீசார் காட்டும் கெடுபிடி குறையவே இல்லை.
எட்டுவழிச் சாலைக்காக நிலம் பறிக்கப்படும் விவசாயிகளின் குமுறல்களுக்கு சற்றும் செவிமெடுக்காத சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, காவல்துறையினரின் துணையோடு விவசாயிகளிடமிருந்து நிலத்தை அடித்துப் பிடுங்காத குறையாக ஆர்ஜிதம் செய்து முடித்தார். விளைநிலத்தில் ஒவ்வொரு 25 மீட்டர் தூரத்திற்கும் 70 மீட்டர் அகலத்துக்கு அளந்து முட்டுக்கற்கள் நடப்பட்டுவிட்டன.
அளவீடுக்காகச் செல்லும்போது விளைநிலத்தில் திபுதிபுவென பூட்ஸ் கால்களுடன் குதித்தோடுகின்றனர் போலீசார். இது கையகப்படுத்தலுக்கு எதிராக யாரும் பேசிவிடாமல் உளவியல்ரீதியாக அச்சுறுத்தத்தான். நில அளவீடு முடிந்தநிலையில் கடந்த சில நாட்களாக ட்ரோன் கேமராமூலம் ஒவ்வொரு சர்வே எண்ணுக்குட்பட்ட நிலத்திலும் என்னென்ன பயிர்கள் விளைந்துள்ளன, என்ன வகை மரங்கள், எத்தனை மரங்கள், முட்டுக்கற்கள் பாதுகாப்பாக உள்ளனவா என அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக 21 லட்சம் முதல் அதிகபட்சமாக 9.04 கோடி வரை இழப்பீடு கிடைக்குமென்றார். முதிர்ந்த தென்னை மரங்களுக்கு அதிகபட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்தார். திருவண்ணாமலையில் தென்னைக்கு ரூ 80 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு குறித்த அறிவிப்பு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாறுபடுவது விவசாயிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 30-ஆம் தேதி விமானத்தில் சேலம் வந்திறங்கிய எடப்பாடி பழனிச்சாமி, ""தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2.50 கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கேற்ப புதிய எட்டுவழிச் சாலை போடவேண்டிய அவசியமேற்பட்டுள்ளது'' என்றார்.
அது உண்மைதானா? தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளை ஆய்வுசெய்தோம். அதில் 1-4-2017-ஆம் தேதி நிலவரப்படி 1,19,63,437 மோட்டார் சைக்கிள்களும், 28,71,938 ஸ்கூட்டர்களும், 51,51,927 மொபட்டுகளும் என மொத்தம் 1,99,87,302 வாகனங்கள் பதிவுபெற்றுள்ளன. இவற்றுடன் கார்கள் 2162106, ஜீப்புகள் 45983, டிராக்டர்கள் 276017 உள்ளிட்ட இதர வாகனங்களையும் சேர்த்தால் மொத்தம் 2 கோடியே 26 லட்சத்து 10 ஆயிரத்து 704 வாகனங்கள் உள்ளன.
ட்ரான்ஸ்போர்ட் பட்டியலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 30507, சிற்றுந்துகள் 4218, ஒப்பந்த போக்குவரத்து வாகனங்களான ஆட்டோ ரிக்சாக்கள் 251056, சரக்கேற்றும் லாரிகள் 255706, நேஷனல் பர்மிட் லாரிகள் 88971, இலகுரக வாகனங்கள் 236124 உள்பட மொத்தம் 12 லட்சத்து 34 ஆயிரத்து 360 வாகனங்கள் பதிவுபெற்றுள்ளன.
சரக்கேற்றும் வாகனங்களின் எண்ணிக்கை மொத்தமே 6,70,530 என்றுள்ள நிலையில், இதற்காக பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமைவழிச்சாலை தேவையா என்ற கேள்வியெழுகிறது. முதல்வர் சொன்ன இரண்டரைக் கோடி வாகனங்கள் என்பது இருசக்கர வாகனங்களையும் சேர்த்துதானா?
சென்னை- சேலம் பசுமைவழி விரைவுச்சாலையால் பயண தூரம் 277.3 கிலோமீட்டராகவும், பயண நேரம் 2 மணி 15 நிமிடங்களாகவும் குறைகிறது என்றும் முதல்வர் அளந்துவிடுகிறார். இப்போதுள்ள சேலம்- உளுந்தூர்பேட்டை -சென்னை இடையிலான பயணதூரம் 334 கிலோமீட்டர். புதிதாக அமையவுள்ள பசுமைவழிச்சாலை, சென்னையைத் தொடுவதற்குமுன் படப்பையிலே முடிந்துவிடுகிறது.
படப்பையிலிருந்து சென்னைக்கு செல்ல 37 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெருக்கடியில் கடக்கவேண்டும். இதனையும் சேர்த்தால் சேலம்- சென்னை பயணதூரம் 314.3 கிலோமீட்டராக ஆகிறது. ஆக, பசுமைவழிச்சாலையால் மிச்சமாவது வெறுமனே 19 கிலோமீட்டர் மட்டுமே. இந்தத் தொலைவைக் குறைப்பதற்குத்தானா மக்களின் வரிப்பணம் பத்தாயிரம் கோடியை விரயமாக்குகிறார் முதல்வர்?
இது ஒருபுறமிருக்க, சேலம் மாவட்ட நிர்வாகம், நிலம் கையகப்படுத்திய விவசாயிகளின் வீடுகளுக்கு வருவாய்த்துறை ஊழியர்களை நேரடியாக அனுப்பி, குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் எத்தனை பேர், ஆண், பெண் எத்தனை பேர், அவர்களின் படிப்பு, வேலை விவரங்களைச் சேகரித்துவருகின்றது.
கடந்த ஜூன் 29-ஆம் தேதி இந்த விவரங்களைச் சேகரிக்க வருவாய்த்துறை பெண் ஊழியரொருவர் குள்ளம்பட்டி பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள விவசாயிகள் அவரைக் கேள்விமேல் கேள்விகேட்டு விரட்டியடித்தனர். சில நாட்களுக்கு முன்பு சேலத்தை அடுத்த உடையாப்பட்டியில் தனியார் வேலைவாய்ப்புக் கூட்டம் நடந்தது. அந்த முகாமில் ஹட்சன் டெய்ரி, போத்தீஸ், சென்னை சில்க்ஸ், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை நேரடியாக நியமனம் செய்தன.
நிலம் கொடுக்கும் விவசாயிகளின் வீடுகளில் படித்த பிள்ளைகள் இருந்தால் அவர்களை இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும்படி உதவியாளர்கள் மூலம் வி.ஏ.ஓ. சொல்லியனுப்பியுள்ளார். மின்னாம்பள்ளியைச் சேர்ந்த வீரமணி, விஜயா ஆகியோர் இதுபற்றிக் கூறுகையில், ""எங்களோட எட்டு ஏக்கர் நிலம் பறிபோகுதுங்க. எட்டுவழிச்சாலை வேணுங்கிறவங்க வெட்கம் மானமிருந்தா இனி நிலத்துல விளைஞ்சதை திங்கக்கூடாது. உடையாப்பட்டி போயி பார்த்தா சின்னச் சின்ன ஜவுளிக்கடைங்க ஆளெடுக்க வந்திருக்காங்க. அய்யாயிரம்… ஆறாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு கொத்தடிமையா அனுப்பப் பார்க்குறாங்க''’என்கிறார்கள்.
குள்ளம்பட்டியைச் சேர்ந்த சித்ராவோ, ""விவசாய நிலத்தை நம்பிதான் பையனை பி.ஏ. படிக்கவெச்சேன். மகளை கல்லூரிக்கு அனுப்பியிருக்கோம். எங்க பிள்ளைங்களுக்கு நல்ல வேலை வாங்கித் தர எங்களுக்குத் தெரியும். இந்த அரசாங்கம் சொல்றதையெல்லாம் நாங்க கேள்விகேட்காம ஏத்துக்கணும்னு அடிமைமாதிரி நடத்தப் பாக்குது. தீக்குளிச்சு செத்தாலும் சாவோமே தவிர, நிலத்தைத் தொடவிடமாட்டோம்''’என்றார்.
""நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு குடும்பத்துல ஒருத்தருக்கு அரசு வேலை கொடுத்தா பரவாயில்லை. அஞ்சாயிரத்துக்கும், ஆறாயிரத்துக்கும் தனியார் வேலை யார் கேட்டா… நான் என் பிள்ளைகளை அனுப்பலை''’என்கிறார் அதே பகுதியைச் சேர்ந்த செல்வி.
நிலம் எடுப்பதற்கு எதிராக குள்ளம்பட்டி விவசாயிகள் பெரியாண்டிச்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து கோரிக்கை மனுக்கொடுத்தும், கறவை மாடுகளின் கொம்பில் கருப்புக் கொடிகட்டியும் போராடினர். இப்படியெல்லாம் போராடக்கூடாது என காரிப்பட்டி காவல்துறையினர் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
நில எடுப்புக்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரிடம் கேட்டபோது, ""நில எடுப்புச் சட்டம் பிரிவு 3-ஏ-ன்படி 21 நாட்களுக்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம். ஆட்சேபணை மனுக்கள்மீது ஜூலை 6, 10, 13- ஆம்தேதிகளில் வெவ்வேறு பகுதிகளில் விசாரணை நடக்கும். விசாரணை முடிவுகள் கெசட்டில் வெளியிடப்பட்டு, யார் யாருக்கு எவ்வளவு இழப்பீடு என அறிவிக்கப்படும்''’என்கிறார்.
நசுக்கியோ, நயவஞ்சகமாகவோ பசுமைவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது எடப்பாடி அரசு. அதற்கு மௌனமாகத் துணைபோகிறது மத்திய அரசு.
-இளையராஜா