புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சந்தா மற்றும் நிர்வாகப் பங்குத்தொகை 76 கோடி ரூபாயை, அரசின் கணக்கில் செலுத்தாமல் சேலம் மாநகராட்சி ஏமாற்றி வந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக பணப்பலன்கள் கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு, 1.4.2003 முதல் சி.பி.எஸ். எனப்படும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் 10 சதவீத சந்தா தொகை அவர்களின் ஓய்வுக்கால பலன்களுக்காகப் பிடித்தம் செய்யப்படும். அவர்கள் பணியாற்றும் நிர்வாகத்தின் தரப்பிலும், அதேபோல 10 சதவீதத் தொகை அவர்களின் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை மாதந்தோறும் கருவூலங்கள் மூலம் அரசின் கணக்கிற்குக் கொண்டு செல்லப்படும். ஆனால், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் சி.பி.எஸ். திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட கணிசமான தொகை, அரசின் கணக்கிற்குச் செலுத்தப்படாமல் உள்ளதாகத் தணிக்கைத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக தலைமை தணிக்கை இயக்குநர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஆறு மாதத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப் பட்டது. அரசின் கணக்கிற்கு செலுத்தப் படாமல் நிலுவையிலுள்ள சி.பி.எஸ். பங்குத் தொகை விவரங்களை சமர்ப்பிக்கும்படியும், நிலுவையை உடனடியாக செலுத்தும்படியும் தணிக்கை இயக்குநர் உத்தரவிட்டார்.
கடந்த 2024, செப்டம்பர் முடிய மதுரை, கோயம்புத்தூர், சேலம், வேலூர், ஈரோடு, திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், கரூர், சிவகாசி, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய 14 மாநகராட்சி நிர்வாகங்கள், சி.பி.எஸ். திட்டத்தின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த 39.03 கோடி ரூபாய், நிர்வாகப் பங்குத் தொகை 68.67 கோடி ரூபாய் என மொத்தம் 107.71 கோடி ரூபாயை அரசின் கணக்கிற்கு செலுத்தாமல் நிலுவையில் வைத் திருப்பது தெரிய வந்துள்ளது.
இவற்றில், அதிகபட்சமாக சேலம் மாநகராட்சி நிர்வாகத் தரப்பிலிருந்து மட்டும் 76.80 கோடி ரூபாய் அரசின் கணக்கில் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இதில் நிர்வாகப் பங்குத்தொகை நிலுவை மட்டும் 47.10 கோடி ரூபாய். இந்தப் பட்டியலில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் தான் மிக மிக மோசமான செயல்பாட்டில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதற்கு அடுத்ததாக, ஈரோடு மாநகராட்சி 7.39 கோடி ரூபாய், தஞ்சாவூர் 6.85 கோடி ரூபாய், திண்டுக்கல் 6.27 கோடி ரூபாய், புதுக்கோட்டை 4.90 கோடி ரூபாய், சிவகாசி 2.35 கோடி ரூபாயும் பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை பிடித்தம் செய்த பின்னரும் அரசுக்குச் செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றன. இதர ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிகள், பேரூராட்சி நிர்வாகங்கள் செலுத்த வேண்டிய நிலுவையையும் கணக்கிட்டால் 200 கோடி ரூபாயைத் தாண்டும்.
இது தொடர்பாக சேலம் மாநகர பொறியியல் பிரிவு அடிப்படை பணியாளர்கள் நலச்சங்கத் தலைவர் லட்சுமணன் நம்மிடம் பேசினார். "சேலம் மாநகராட்சி நிர்வாகம், சி.பி.எஸ். திட்டத்தில் பிடித்தம் செய்த பல கோடி ரூபாயை அரசின் கணக்கிற்குச் செலுத்தாமல் பொது நிதிக்கு மாற்றம் செய்துகொண்டு, வெவ்வேறு பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இது, அரசு விதிகளுக்குப் புறம்பான செயல் மட்டுமின்றி, ஊழலுக்கும் வழிவகுக்கிறது. ஒரு கணக்கின் தலைப்பில் வைக்கப்பட்ட நிதியை, வேறு தலைப்புக்கு மாற்ற வேண்டுமானால், அரசிடம் முன்அனுமதி பெற வேண்டும். இந்த நடைமுறையையும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் மீறியிருக்கிறது.
இதுபோன்ற நிர்வாகச் சீர்கேட்டினால் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வுக்கால பணப்பலன்களை சேலம் மாநகராட்சி நிர்வாகம் தருவதில்லை. இதில் நானே நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கிறேன். நான் ஓய்வு பெற்றபோது, 240 நாட்கள் ஈட்டிய விடுப்பு மற்றும் 90 நாட்கள் தனிப்பட்ட ஈட்டா விடுப்புக்கான பணப்பலன்களை மட்டும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
சேலம் மாநகராட்சி பொறியியல் பிரிவில் சி.பி.எஸ். திட்டத்தில் பணியாற்றிவரும் 473 பேரில், 50 ஊழியர்கள் பணிக்காலத்தில் இறந்தே விட்டனர். 60 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக செட்டில்மெண்ட் தராமல் இழுத்தடித்து வருகின்றனர். இதே நிலைதான் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாநக ராட்சிகளிலும் நிலவுகிறது.'' என்கிறார் லட்சுமணன்.
இது ஒருபுறம் இருக்க, உள்ளாட்சி நிறுவனங்கள் செலுத்தவேண்டிய நிர்வாகப் பங்குத்தொகையை (சி.பி.எஸ். எம்ப்ளாயர் கான்ட்ரிபியூஷன்), மாநில நிதி ஆணைய மானியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று உள்ளாட்சி அமைப்பு களின் நிர்வாகப் பிரதிநிதிகள் தணிக்கைத் துறைக்கு யோசனை தெரிவித்துள்ளனர். ஒருவேளை, இந்த யோசனைக்கு அரசு ஒப்புக்கொண்டால், ஒரு கட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகப் பங்குத் தொகை, அரசுக்கு வராமலேயே போய்விடும் அபாயமும் உள்ளது என எச்சரிக்கிறார்கள் தணிக்கை அலுவலர்கள்.
தணிக்கைத்துறை அலு வலர்களிடம் கேட்டபோது, ''ஊழியர் ஒருவர் ஓய்வுபெறுகிறார் எனில், அவருக்கு அன்றைய நாளிலேயே ஓய்வுக்கால பணப்பலன்களை கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் அரசு விதி. ஆனால், சேலம் மாநகராட்சி நிர்வாகம் இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்வதே இல்லை. ஊழல் மற்றும் முறைகேடுகளின் மொத்த உருவமே சேலம் மாநகராட்சிதான். சி.பி.எஸ். திட்டம் மட்டுமின்றி, கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் செலுத்துவதற்கான கடன் நிலுவை, இ.எஸ்.ஐ., பி.எப்., சந்தா, தொழில் வரி என ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்ததன் மூலமும், தொழிலகங்களிடமிருந்து வசூலித்த வகையிலும் கிடைத்த பல நூறுகோடி ரூபாயை உரிய அமைப்புகளுக்குச் செலுத்தாமல், சேலம் மாநகராட்சி நிர்வாகம் ஏமாற்றி வருகிறது.''
இது தொடர்பாக, சேலம் மாநக ராட்சி ஆணையர் இளங்கோவனிடம் கேட்டதற்கு, ''நான் இங்கு ஆணையராக பொறுப்பேற்று சில நாட்கள்தான் ஆகின்றன. சி.பி.எஸ். திட்டத்தின் கீழ் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையை இனி மாதந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அரசுக் கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கப் படும்'' எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
"சொல்வதைத்தான் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம். அதுதான் திராவிட மாடல் அரசு' எனப் பெருமிதமாகக் கூறிவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்கள் முழுவதும் கிடைக்கவும்; உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் நிதிசார் முறைகேடுகளைக் களையவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.