"அவுகளுக்கு நான் உண்மையாக வாழ்ந்தேன். இருந்தாலும் அவரோட சந்தேக புத்தியால் இப்ப உசிர விடப் போறேன். அவுகளுக்காக கொலை செய்ய துணிஞ்சிட் டீங்க. நான் செத்துப் பொணமானாலும் இந்த ஊரை அழிக்காமால் விடமாட்டேன். ஒத்த சனமும் மிஞ்சாது'' என பத்தினிப் பெண் ஒருவர் சாபமிட்டதால் ஊரே வீழ்ந்து வெறிச்சோட, ஆளே இல்லாத அந்த ஊரில், சாரட் வண்டி கொண்ட ராசகுமாரனாக, ஒத்தை ஆளாக வலம் வருகின்றார் 72 வயது முதியவர் ஒருவர்.
தூத்துக்குடியிலிருந்து 17 கி.மீ. தூரம் தாண்டி நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால் வடக்கிலும் பாதை இருக்கிறதென வழி காட்டுகின்றது அந்த தார்ச்சாலை. கிராமத்தினை இணைக்கும் அந்த தார்ச்சாலையில் செக்காரக்குடி, நடுச்செக்காரக்குடி, மேல செக்காரக்குடி மற்றும் கீழ செக்காரக்குடியாக நான்கு வழி பிரிவுகளை காண்பித்தது. "இங்க கிராமத்தில் ஒத்தையாளாய் ஒருவர் இருக்கிறாராமே..?'' என கேள்வி எழுப்பினால், "பரதேசி நாயக்கரை தேடி வந்தீகளா? இப்படி மேற்காலே போங்க'' என வழியை காண்பிக்க... மேற்கு நோக்கி 3 கி.மீ. பெயர்க்கப்பட்ட சரளைக்கல் பாதையின் வழியே சென்றால் பாதையின் முடிவில் இருக்கின்றது நாம் தேடிவந்த சாபத்தால் வீழ்ந்த ஜமீன் கிராமமான மீனாட்சிபுரம்.
மயான அமைதியையும் தாண்டி வண்டுகளின் ஒலி காதை பிளக்க, ஊரின் வலப்புறத்தில் அழிந்து போன பள்ளிக்கூடமும், வேப்பமரத்து இசக்கி அம்மன் பீடமும் முகப்பிலேயே வரவேற்கின்றது. ஊரில் கோபுரம் மாதிரி ஓட்டு வீடுகள், தாழ்வான ஓட்டு வீடுகள், சுண்ணாம்பு சுவர் வீடுகள், காரை வீடுகள், மச்சு வீடுகள் என 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உருக்குலைந்து கதவில்லாமல், சன்னலில்லாமல் அநாதையாக நிற்கும் அந்த வீடுகளுக்கு 'நாங்கள் இருக்கின்றோம்' என காட்டுச் செடிகளும், கருவை மரங்களும் அடைக்கலம் கொடுத்து வீட்டை நிறைத்துள்ள மானாவாரி பயிர்களை விளைவித்த வயல்காடுகளோ காற்றாலையை நிரப்பியுள்ளது. இருப்பினும் "இந்த வறட்சியும், பத்தினியின் சாபமும் என்னை என்ன செய்யும்..? இது என் மனைவி வாழ்ந்த வீடு.. இதில்தான் நான் மடிவேன். ஊரைவிட்டு வெளியேற மாட்டேன்' என தனது பிடிவாதத்தால் மக்களே இல்லாத அந்த ஊரின் மத்தியில் வசிக்கின்றார் அந்த 72 வயது முதியவரான கந்தசாமி.
மேற்கு வாசல் கொண்ட வீட்டில் இரு பக்கத்திலும் முண்டுக்கல்லால் கட்டப்பட்டு, பெயர்ந்து விழும் இரண்டு திண்ணைகள். நிலை வாசலின் அருகிலேயே அவருடைய பாது காவலர்களாக இரண்டு நாய்கள், ஒரு பூனை காவல் காக்க, தலையணை, விரிப்பைக் கொண்டு அழுக்கு சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் கந்த சாமியின் வீட்டினுள்ளே எட்டிப் பார்த்தால், கொதிக்கும் சோறு, அரிந்து குழம்பிற்காக தயாராயிருக்கும் வெங்காயம், தக்காளி என அடுக்களையை தாண்டி போனால் வீட்டின் நடுவில் நினைவுச் சின்னமாக தொங்கவிடப் பட்டிருக்கின்றது இரட்டை மாடுகள் பூட்டப்படும் பந்தய சாரட் வண்டி. அருகிலேயே இவரது சிம்மாசனமான பிளாஸ்டிக் நாற்காலி.
"எனக்கு இரண்டு பெண், இரண்டு ஆண் என நான்கு மக்கள். அத்தனை பேரையும் கட்டிக் கொடுத்தாயிற்று. என் மகனுக தான் என்னைப் பாத்துக்கிறானுக. இரண்டுபேரும் டிரைவராக வேலை பார்க்கிறார்கள். இதில் சின்னவன் மட்டும் அவ்வப்போது வந்து பாத்துக்குவான். மாசம் ஆனால் ரூ.1500 கொடுப்பான். பக்கத்துல செக்காரக் குடிக்கு போய் ரேசன் அரிசி, ஏதாவது காய் வாங்கி வந்து வைச்சுக்குவேன். மூணு நாளைக்கு ஒருமுறை சோறு பொங்கி, குழம்பு வைச்சுடுவேன். அதுதான் மூனு நாளைக்கும் ஒரு தடவை போடுகின்ற டீயை இரண்டு வேளைக்கு சுட வைச்சு குடிப்பேன். அதுபோக ஒரு நாளைக்கு இரண்டு பீடிக் கட்டுதான் என் செலவுல வரும். ஷோக்காலியான ஆளுங்க நான். பந்தய மாடு ஓட்டுவதில் என்னை ஜெயிக்க சுத்துப்பட்டுல ஆளே கிடையாது. அதனால் எனக்கு ஊர்கள் தோறும் நண்பர்கள் உண்டு. எனக்கென்று வண்டி இருந்தாலும் பக்கத்து ஊருக்காரங்களுக்காகவும் வண்டி ஓட்டி பரிசை வாங்கிக் கொடுப்பேன். எங்களுக்கென விவசாயம் இருந்தாலும் ஆரம்பத்தி லிருந்தே நான் வண்டிமாடு மட்டும்தான் ஓட்டுவேன். வேலைக்குப் போகமாட்டேன். பொண்டாட்டி வீரலட்சுமியும் கண்டுக்கமாட்டாள். அவ போனதுக் குப் பிறகு இந்த ஊரைவிட்டு வெளியேறுவதற்கு மனசு கிடையாது. ஊர் மக்களும் தண்ணீர் இல்லை என ஊரை காலி செய்துட்டுப் போயிட்டாங்க. எனக்கு விருப்பம் கிடையாது. வருஷத்துக்கு ஒரு முறை துர்க்கையம்மன், மாரியம்மன் கோவிலின் வைகாசி மாச கொடைக்கு வருவாங்க..! இடிஞ்சு போன அவங்க வீட்டுக்கு முன்னாடி பந்தலைப் போட்டுட்டு இருந்து சாமியை கும்பிட்டுட்டு கிளம்பு வாங்க." என்கிறார் பரதேசி நாயக்கரான கந்தசாமி.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐம்பது குடும்பங்களுக்கும் மேலாக வாழ்ந்து வந்த அந்த கிராமத்தில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1135 மக்கள். இன்று ஒரே ஒருவர். ஊரின் வீழ்ச்சிக்கு குடி தண்ணீர் இன்மை, மழைபொழிவு இன்மை மற்றும் காற்றாலை நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு என காரணிகள் பல இருந்தாலும் இன்னும் அருகிலுள்ள ஊர்மக்கள் நம்புவது பத்தினிப் பெண் சாபமே என்கின்றனர்.
இது குறித்து பரதேசி நாயக்கரிடம் கேட்டால், "உண்மைங்க... சுற்றியுள்ள கிராமங்களில் இது ஜமீன் கிராமமாக இருந்தது. வளமையாக இருந்த இந்த கிராமத்தில் எம் வீட்டிற்கு மேற்கு பக்கம் நாகமணி நாயக்கர் வீடு உண்டு. மூன்று மாடி அடுக்குகள் கொண்ட பெரிய காரை வீடு. அவர் இங்கேயுள்ள பாண்டியபுரம் புதூர் ரயில் நிலையத்திலிருந்து தினசரி தூத்துக்குடிக்கு வேலை விஷயமாக போய்ட்டு வருவார். காலையில் ஆறரை மணிக்கு போறவர் சாயங்காலாம் 5 மணிக்குத் தான் வருவார். இடையில் குறி சொல்ற ஒருத்தனுங்க பேச்சைக் கேட்டு அவரு பொண்டாட்டி கோவிந்தம்மாள் மீது சந்தேகம் வந்தது.
நாளடைவில் சந்தேகம் வலுக்கவே, தன்னுடைய பண்ணையில் வேலை பார்க்கின்ற மூன்று ஆட்களை கூப்பிட்டு அந்தம்மாவை கொலை செய்ய சொல்லிட்டாரு. இவனுங்களும் அந்தம்மாவை கொன்று போட்ட நிலையில், உயிர் போகும் தருவாயில் "நான் பத்தினி தான். உங்க அய்யாவுக்கு உண்மையாக இருந்தேன். ஆனால் சந்தேகத்துல என்னை கொல்ல சொல்லிட்டாரு. நான் செத்துப் போனாலும் இங்க தான் சுத்தி வருவேன். நீங்களும் இந்த ஊரும் நல்லா இருக்காது. ஒருத்தரும் வாழமுடியாது''ன்னு சாபம் விட்டுச்சு. அத்தோடு அவ்வளவுதான். ஊரிலிருந்து ஒவ்வொருத்தரும் ஊரைவிட்டு போயிட்டாங்க. அந்த சாபம்தான் மக்களை வாழவிடாமல் செய்வதாக இருந்தாலும், எம் பெண்டாட்டி வாழ்ந்த இந்த வீட்டில் என்னுடைய இறுதிச்சடங்கும் நடக்கணும்'' என்கிறார் தீர்க்கமாக.
படங்கள்: விவேக்