"எடப்பாடி பழனிசாமிதான் கொடநாடு வழக்கில் ஏ1 குற்றவாளி. ஜெயலலிதாவின் பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஏன் குரல் கொடுக்கவில்லை?'' எனக் கேள்வியெழுப்பி, கிடப்பில் கிடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை முன்வைத்து அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்.

Advertisment

316 நபர்களிடம் தனிப்படையினர் மறு விசாரணை நடத்திய நிலையில், கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பல்வேறு கட்டங்களாக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் களுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வாகன விபத்தில் இறந்த முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜுடன், அப்பொழுது வெளிநாட்டில் இருந்து பேசியது யார்? தொடர்ந்து 7 முறை பேசியது யார்? என்பதனை மட்டும் லீடாகக் கொண்டு, அதனை கண்டறிவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு இண்டர்போல் போலீசாரின் உதவியை நாடினர். ஆனால் இண்டர்போல் போலீசார் இதுவரை எந்தத் தகவலும் அளிக்கவில்லை.

Advertisment

eps-son2

"மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் 24.4.2017ஆம் தேதி, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும், எஸ்டேட் பங்களாவிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் இந்த சம்பவத்தை திட்டமிட்டு நடத்திய தாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கண்டறியப் பட்ட நிலையில், அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதுபோல், கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ் என்ற இளைஞர், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவரின் மனைவி, அவரது மகள், மற்றும் கொடநாடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் என மொத்தம் 6 நபர்கள் சந்தேகமான முறையில் மரணமடையவே, கொலை, கொள்ளைச் சம்பவத்தில் என்ன நடந்தது? என்பதனை வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே, அந்த வி.வி.ஐ.பி.க்காக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது மக்கள் அனைவருக்கும் சந்தேகம் வந்தது'' என்றார் வழக்கின் பாதையில் பயணித்த அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கிணற்றில் போடப்பட்ட கல் போல் வழக்கு இருந்த நிலையில், தி.மு.க..ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. அப்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்ததும் அடுத்த கட்டத்திற்கு விசாரணை முன்னேறியது. பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுவரை 245 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தின்போது வெளிநாடுகளிலிருந்து 7 முறை செல்போன் மூலம் கனகராஜிடம் பேசிய தகவல் கண்டறியப் பட்டது. இதற்காக சேலம் நீதிமன்றத்திலிருந்து சி.பி.ஐ. உதவியுடன் இண்டர்போல் போலீசாருக்கு  நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. 

Advertisment

eps-son1

"துவக்கத்திலிருந்து கூறுகின்றோம். இந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்ப வம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சில அமைச்சர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு சம்பவம். ஓம்பகதூர் கொலை நடக்கவில்லை யென்றால் இந்த சம்பவம் வெளியில் தெரிந்திருக் காது. அங்கு இருப்பவை என்னென்ன? என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்கும் மட்டுமே தெரியும். ஒன்று மட்டும்தான் எங்களுடைய கேள்வியே? ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதலமைச்சராக வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தான் முதலமைச்சராக இருப்பதற்கே காரணம் அ.தி. மு.க.வும், ஜெயலலிதாவும் என்பதனை எப்படி மறந்து போனார்? கொடநாடு தன்னுடைய தலைவி வீடு என்பதனை மறந்தா போனார் பழனிச்சாமி? சம்பவம் நடந்தபோது அக்குவேறு, ஆணிவேறாக ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கக்கூடாதா என்ன? அது தவிர்த்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொருவராக சந்தேக மரணம் அடையும்வரை அமைதி காத்தது ஏன்? இதுதான் பழனிச்சாமி மீது சந்தேகம் வரக்காரணம்'' என்றார் தர்மயுத்த அ.தி.மு.க.வின் நீலகிரி மாவட்டச் செயலாளரான பாரதியார்.

முன்னதாக, கைது செய்யப்பட்ட ஆட்களை வைத்து வழக்கை முடிக்கலாம் என்கிறது சி.பி.சி.ஐ.டி. ஆனால், மேலும் சிலரை விசாரிக்க வேண்டுமென்று குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட தீபு, சதீஷன் மற்றும் சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் குறிப்பிட்டபடி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் உறவினர் இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளிரம்பா, அ.தி.மு.க. நிர்வாகி சஜீவன், அவரது தம்பி சுனில், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் மின்வாரிய எஞ்சினியர் ஆகியோரை விசாரிக்கலாம் என்றது நீதிமன்றம்.  

"சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பிறகே விசாரிக்கலாம் என்பதில்தான் தொய்வு ஏற்பட்டுள்ளது. கொலை, கொள்ளை சம்பவம் எதற்காக நடந்தது? என்பது குறித்தான சரியான மோட்டிவ் இல்லை. அந்த பங்களாவின் அனைத்து இடங்களும் சஜீவனுக் குத்தான் அத்துப்படியான ஒன்று. மாவட்டத்திலேயே மின்சாரம் தடைப்பட்டாலும் அந்த பங்களாவில் மின்சாரம் தடைப்படாது. அப்புறம் ஏன் அத்தகைய பொழுதில் மின்சாரம் தடைப்பட்டது? ஓம்பகதூர் கொலை ஒரு விபத்தே! அதுபோல் கனகராஜுக்கு வந்த போன் யாரிடமிருந்து? இந்த அடிப் படையில் தான் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றோம்'' என்றார் வழக்கறிஞர் ஒருவர்.

குற்றவாளிகளாகக் கருதப் படுபவர்களுக்கு ஆஜராகும் வழக்கறிஞர் விஜயனோ, "செங் கோட்டையன் கூற்றை கவனமாக பார்க்க வேண்டும். அவர் சாதாரண நபர் கிடையாது. முதல்வர் வேட்பாளராக அறியப் பட்டவர். தெளிவான, வெளிப் படையான விசாரணை இருந்தால் மட்டுமே இன்னும் பல உண்மைகள் வெளிவரும்'' என்கிறார் அவர்.

இது இப்படியிருக்க, "கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது பொள்ளாச்சி வழக்கில் யார் குற்றவாளியாக இருந்தாலும், அவர்கள் எப்பேர்ப்பட்டவர்கள் என்றாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரச்சாரம் செய்தேன். அதுபோலவே தற்போது தீர்ப்பு வந்தது. சட்டமன்றக் கூட்டத்தில் கூட அ.தி.மு.க. ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி என்று பேசினேன். பொள்ளாச்சி வழக்கைப் போல கொடநாடு  கொலை கொள்ளை வழக்கிலும் இதேபோல தீர்ப்பு விரைவில் வரும்'' என நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை மீண்டும் நினைவு கூர்கின்றனர் நீலகிரி மாவட்ட மக்கள்.

"சம்பவத்திற்கு முன்பும் பின்பும் சம்பவத்தின் மூளையாகக் கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு வெளிநாட்டிலிருந்து 7 அழைப்புகள் வந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. கூறுகின்றது. அந்த அழைப்புகள் யாரிடமிருந்து? என்பதனை அறியத்தான் சி.பி.சி.ஐ.டி. காத்திருக்கின்றது. அது கனகராஜுக்கு வந்த அழைப்புகள். சென்ற அழைப்புகளோ நண்ஞ்ய்ஹப் ஆல்ல் மூலமாக சென்றிருக்கின்றது என்பதனையும் கண்டறிந்திருக்கின்றது சி.பி.சி.ஐ.டி. முழுக்க என்கிரிப்டட் அடிப்படையில் செயல்படும் ஆல்ல் என்றாலும் இதுகுறித்தும் விசாரித்து வருகின்றது. இந்த அழைப்புகள் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன்குமாரை நோக்கியே சுழல்வதும், எடப்பாடி பழனிச்சாமியின் மனசாட்சியான சேலம் பிரமுகரை நோக்கிச் சுழல்வதும்தான் வழக்கில் அடுத்த பிரளயம் வெடிக்கச்செய்ய வாய்ப்பிருக்கின்றது'' என்கின்றார் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர்.

-வேகா

eps-son-box