ஞாயிற்றுக்கிழமையில் அமைச்சரவைக் கூட்டம் கூட்டி, 7 பேர் விடுதலைக்கான தீர்மானத்தை எடப்பாடி அரசு நிறைவேற்றியது, பிரதமர் மோடிக்கு அரசியல் நெருக்கடியை அதிகரிக்கச் செய்திருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

7person

நம்மிடம் பேசிய பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்களுக்கு நெருக்கமானவர்கள், ""நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவைப் பெற பல்வேறு அரசியல் வியூகங்களைத் திட்டமிட்டு வருகிறார் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா. இதில், 7 பேரின் விடுதலை குறித்த விசயமும் அலசப்பட்டிருந்தது.

Advertisment

தேர்தல் நெருக்கத்தில் இதை கையிலெடுக்க முடிவு செய்திருந்தனர். 7 பேரின் விடுதலைக்கு உதவி செய்து, தமிழர்களின் ஆதரவைப் பெறுவதும், அதன்மூலம் தமிழ்த் தேசியத் தலைவர்களின் அரசியலை தேர்தல் நேரத்தில் பலகீனப்படுத்துவதும்தான் வியூகத்தின் ஒரு பகுதி. நேரடி அரசியலில் ஈடுபடாத தமிழ்த் தேசிய தலைவர்கள் சிலர், தேர்தல் நேரத்தில் மோடியை சந்தித்து 7 பேரின் முன்விடுதலையை வலியுறுத்தும் நிகழ்வை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசிய தலைவர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடித்திருந்தோம். அதேசமயம், இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அரசியல் செய்திடக்கூடாதுங்கிறதுக்காக, 7 பேரின் விடுதலைக்கு எதிரான சட்டச் சிக்கல்களை காட்டி உச்சநீதிமன்றத்தில் அதிகாரிகளின் பதில் மனு மூலம் எதிர்ப்புத் தெரிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

modi-eps

Advertisment

இப்படிப்பட்ட சூழலில்தான், 7 பேரின் முன்விடுதலை தொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் போட்டு கவர்னருக்கு பரிந்துரைத்து விட்டனர். தற்போது, 7 பேரின் விடுதலையை காங்கிரஸ் கட்சியும் ராஜீவ் குடும்பமும் எதிர்க்காத நிலையில், எதிர்மறை முடிவுகளை மத்திய அரசு எடுத்தால் அது பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

மாறாக, கவர்னர் மூலம் பாசிட்டிவ்வான முடிவை எடுத்தாலும் அரசியல் பலன் பா.ஜ.க.வுக்கு கிடைக்காது. அ.தி.மு.க.வுக்கே அட்வான்டேஜ். இந்த நெருக்கடியை மோடிக்கு ஏற்படுத்தியுள்ளது எடப்பாடியின் அமைச்சரவை'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அவசரம், அவசரமாக தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை தொடர்புகொண்ட மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், ""மத்திய அரசின் கருத்துகளை அறியாமல் 7 பேரின் விடுதலை குறித்து எவ்வித முடிவும் எடுக்க வேண்டாம். கேபினெட்டை கூட்டும் முடிவில் இருந்தால் அதனை கைவிடுமாறு முதல்வருக்கு அறிவுறுத்துங்கள்'' என சொல்லப்பட்டதை எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு சென்றார் கிரிஜா. இதனைத் தொடர்ந்து அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார் எடப்பாடி.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "ஒரு நல்ல வாய்ப்பை உச்சநீதிமன்றமே நமக்கு கொடுத்திருக்கிறது. அதனால் அமைச்சரவையை கூட்டி அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும்' என அமைச்சர்கள் சி.வி.சண்முகமும், ஜெயக்குமாரும் வலியுறுத்த, தங்கமணியும் வேலுமணியும் அதனை ஆமோதித்துள்ளனர்.

அப்போது, ""எனக்கும் இதில் மாற்றுக் கருத்து இல்லை. சட்ட வல்லுநர்கள் கூட, அரசியல் காரணங்கள் இல்லையெனில் ஏழு பேரை விடுவிப்பதில் எந்த சட்டச்சிக்கலும் வருவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் சொல்கிறார்கள்'' என விவரித்த எடப்பாடி, தலைமைச்செயலாளர் மூலம் டெல்லி வைத்த அழுத்தங்களை தெரிவித்திருக்கிறார். அதனைக்கேட்டு கோபமான அமைச்சர்கள், "இனியும் டெல்லிக்கு பயப்படுவதா? ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதில் குறியாக இருக்கிறது மத்திய அரசு. அது எப்போது வேணாலும் நடக்கலாம். அதற்கேற்பத்தான், அமைச்சர் வீட்டிலும் டி.ஜி.பி. வீட்டிலும் ரெய்டு நடத்துகிறார்கள்.

modi-eps

ரெய்டுகள் மூலம் நம்மை மிரட்டும் அவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியக் கூடாது. 7 பேர் விடுதலையில் சாதகமான முடிவை நாம் எடுப்பது, அரசியல் ரீதியாக நமக்கு பலன் கொடுக்கும். அதேசமயம், மோடி அரசுக்கு செக் வைக்கவும் முடியும். அமைச்சரவையின் முடிவை டெல்லியின் சொல் கேட்டு கவர்னர் ஏற்க மறுத்தாலோ, முடிவெடுப்பதில் காலதாமதம் செய்தாலோ அது சட்டச் சிக்கலாக மட்டுமல்ல, பா.ஜ.க. மீதுதான் தமிழர்களின் கோபமாக திரும்பும். இந்த நெருக்கடியை நாம் உருவாக்க வேண்டும். அதனால், உடனடியாக கேபினெட்டைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம்' என அமைச்சர்கள் எல்லோருமே சொல்ல, காலதாமதம் செய்யாமல் கேபினெட்டை கூட்டி முடிவெடுத்தார் எடப்பாடி'' என பின்னணிகளை விவரித்தனர் அமைச்சர்களோடு தொடர்புடையவர்கள்.

7 பேர் விடுதலையானால் அரசியல் ரீதியாக யாருக்கு ஆதாயம் என்பதில் பா.ஜ.க.வின் கணக்குகளை உடைத்து, மோடியுடன் மோதியுள்ளார் எடப்பாடி என்கிறது உளவுத்துறை வட்டாரம்.

-இரா.இளையசெல்வன்