ராஜீவ் கொலை வழக்கில் 1991 முதல் சிறைப்பட்டிருக்கும் எழுவரை விடுதலை செய்ய வேண்டுமென முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பியது. அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் வைத்துள்ளார் கவர்னர். இந்நிலையில் உலகம் முழுவதிலுமிருந்து எழுவர் விடுதலை தொடர்பான அரசின் தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவு எடுக்க வேண்டுமென கோரிக்கை கடிதம் அனுப்பி வருகின்றனர்.

7persons

"எழுவரை விடுதலை செய்யுங்கள்' என்கிற கோரிக்கையை முன்வைத்து சிவகங்கையில் இருந்து சென்னை கவர்னர் மாளிகையை நோக்கி சைக்கிள் பேரணி தொடங்கிய தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 7 இளைஞர்கள் நவம்பர் 18-ந் தேதி காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்தனர். 7 பேர் விடுதலை எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த ஒருமணி நேரத்தில் 3 மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் இருந்து கவர்னரின் ஒப்புதலுடன் கருணை அடிப்படையில் அ.தி.மு.க. பிரமுகர்கள் மூவரை விடுதலை செய்து அதிர்ச்சியைத் தந்தனர்.

Advertisment

1991-1996 ஜெ. ஆட்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு முக்கியமானது. இந்த வழக்கில் ஜெ. குற்றவாளியென 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடினர் அ.தி.மு.க.வினர். தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கல்விச் சுற்றுலா முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்தக் கல்லூரிப் பேருந்தை நிறுத்தி பேருந்து மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்தனர் தர்மபுரி அ.தி.மு.க. பிரமுகரான ராஜேந்திரன் தலைமையிலான அ.தி.மு.க.வின் முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர்.

3persons

தீவைக்கப்பட்ட பேருந்துக்குள் தவித்த வேளாண் மாணவிகளாக நாமக்கல் கோகிலவாணி, சென்னை ஹேமலதா, விருத்தாசலம் காயத்ரி ஆகிய மூவரும் துடிதுடிக்க உயிரோடு எரிந்து, கருகிப் பலியாகினர். 16 மாணவிகள் காயத்தோடு உயிர் தப்பினர். தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் 31 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வலிமையான ஆதாரங்கள், கண்ணால் பார்த்த சாட்சிகள் இருந்ததால் 2007 பிப்ரவரி 15-ந் தேதி சேலம் நீதிமன்றம் முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மற்றவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அந்த தண்டனையை 2007-ல் உயர்நீதிமன்றம் பின்னர் உறுதி செய்தது. மேல்முறையீட்டில் தூக்குத்தண்டனையை 2010-ல் உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாக குறைத்தது.

கடந்த 18 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்தார்கள் என்கிற காரணத்தை குறிப்பிட்டு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இந்த மூவரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை செய்தது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை. அதை திருப்பி அனுப்பினார் கவர்னர் பன்வாரிலால் புரோகித். இரண்டு வாரத்துக்கு முன்பு அதே தீர்மானத்தை மீண்டும் கவர்னருக்கு அனுப்பியது தமிழக அமைச்சரவை. சட்டப்படி இரண்டாவது முறையாக அனுப்பும் தீர்மானத்தை கவர்னரால் மறுக்க முடியாது என்பதால் அதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ளார் புரோகித்.

இந்த விவகாரத்தை ரகசியமாக டீல் செய்தன தமிழக அரசும், கவர்னர் மாளிகையும்! ""கவர்னர் கையெழுத்திட்ட கடிதம் கிடைத்ததும் அதை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. மூலம் வேலூர் மத்திய ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் ஆண்டாளுக்கு அனுப்பியது அரசு. "அ.தி.மு.க.வினர் மூவரும் வெளியே செல்வது யாருக்கும் தெரிவிக்கக்கூடாது' என்கிற உத்தரவும் சேர்ந்தே வந்துள்ளது. நவம்பர் 19-ந் தேதி காலை மூவருக்கு மட்டும் தகவலை பாஸ் செய்த அதிகாரியொருவர், "மதியம் 12 மணிக்கு வெளியில போகலாம்' என்றுள்ளார். அதன்படி மதியம் 12:10-க்கு சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள் அதிகாரி ஒருவர் ஏற்பாடு செய்த காரில் அவர்கள் கிளம்பி தர்மபுரிக்குச் சென்றனர். வழியில் அவர்களது குடும்பத்தாரும் சேர்ந்துகொண்டனர்'' என்றார் நம்மிடம் பேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவர்.

Advertisment

tharmapuri-incident

இதுபற்றி கூடுதல் தகவல் பெற வேலூர் மத்திய ஆண்கள் சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாளின் செல்போன் மற்றும் லேண்ட்லைனுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோதும், போனை எடுக்கவேயில்லை. வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. அலுவலகம் மட்டும் "மூவர் விடுதலை' என்பதை உறுதி செய்தது.

வேறு ஒரு வழக்குக்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த மூவருடன் சிறையில் இருந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் நம்மிடம், ""சாதாரண செல்போன் எப்போதும் கையில் வச்சிருப்பாங்க. உள்ளருந்தே லட்சக்கணக்கில் வட்டிக்கு பணம் தந்துக்கிட்டு தினமும் சாயந்தரமானா "வட்டி ஒழுங்கா வருதா'ன்னு தங்களோட ஆட்களிடம் விசாரிச்சிக்கிட்டு இருந்தாங்க. அவுங்ககிட்ட பேசும்போது, நெடுஞ்செழியன், முனியப்பன் இரண்டு பேரும் பினாமி பேர்ல கல்குவாரி எடுத்து நடத்திக்கிட்டு இருக்குறது தெரிஞ்சது. ஜெயில்ல இருக்கறதாவே அவுங்க பீல் பண்ணல'' என்றார். சிறையில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஒரு குட்டியானை அளவுக்கு கண்காணிப்பு கேமரா கண்களில் சிக்காமல் வெளியே கொண்டு செல்லப்பட்டது'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேர் விடுதலையாக வேண்டும் என்றால் அவர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களாக வேண்டுமோ!

-து. ராஜா