லோ தலைவரே, தனது அரசியல் எதிரிகளை புலனாய்வு அமைப்புகள் மூலம் தீவிரமா குறிவைக்கும் மோடி அரசின் நடவடிக்கைகள் எல்லா மாநிலத்திலும் வேகமெடுத்திருக்குது.''

""ஆமாம்பா, கேரளாவின் மார்க்சிஸ்ட் முதல்வர் பினராய் விஜயன், பா.ஜ.க.வின் இப்போதைய டார்கெட்டில் சிக்கியிருக்காரே?''

rang

""உண்மைதாங்க தலைவரே, கேரளாவில் இருக்கும் பினராய் விஜயனின் இடது முன்னணி சி.பி.எம். அரசு, தலித்துகளை அர்ச்சகராக் கியது முதல், காய்கறி களுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்ததுவரை பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி, அங்குள்ள மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பிடிச்சிருக்கு. ஆனா, தங்கக் கடத்தல் விவகாரம் மூலம் பினராய் அரசுக்கு சிக்கல்கள் தொடங்குச்சு. ஐக்கிய அமீரகத்துக்கான தூதரகம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், கேரள அரசின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைதானாங்க.''

Advertisment

""அதிலிருந்து நிறைய விவகாரம் கிளை பிரிச்சிக் கிளம்புதே?''

""உண்மைதாங்க தலைவரே, தங்கக் கடத்தல் விவகாரத்தை விசாரித்து வந்த நிலையில்தான், போதைப் பொருள் நெட் ஒர்க் ஒன்றையும் அமலாக்கத்துறை கண்டு பிடித்தது. பெங்களூரில் போதை கேங் ஆசாமியான முகமது அனூப் என்பவன் பிடிபட, அவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடைப்படையில் கேரள அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறியைக் கைது செய்திருக்கிறது அமலாக்கத்துறை. பினீஷுக்கும் முகமது அனூப்பிற்கும் இடையில் கோடிக் கணக்கில் டிரான்சக்ஷன் நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கு. இதையொட்டி அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணனையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர இருக்கும் அமலாக்கத்துறை, டெல்லியின் சிக்னலால் இந்த விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயனையும் சிக்கவைக்கும் வகையிலேயே விசாரணையை நகர்த்துகிறதாம்.''

""இந்த கூத்துக்கு நடுவே கேரள வீட்டுவசதி வாரிய ஊழல் விவகாரமும் பூதமாய்க் கிளம்புதே?''

Advertisment

""உண்மைதாங்க தலைவரே, தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைதாகி விசாரணை வளையத்தில் இருக்கும் ஸ்வப்னாவிடம் விசாரித்த போது, போகிற போக்கில் அவர், கேரள வீட்டுவசதி வாரியம், லைவ் என்ற பெயரில் தொடங்கிய 20 கோடி ரூபாய்த் திட்டத்திலும் 9 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததுன்னு சொல்லப் போக, அதையும் அதிரடியாய் விசாரித்த அமலாக்கத்துறை கேரள தலைமைச் செயலகத்தில் இருக்கும் இரண்டு உயர் அதிகாரிகளை டார்கெட் செய்திருக்கிறதாம். இதிலும் பினராய் விஜயனைச் சேர்க்கும்படி மேலே இருந்து சொல்லப்பட, அவருக்கு எதிராக வாக்குமூலம் பெறும் முயற்சிகள் நடக்குதாம். கேரளாவில் இருக்கும் சீனியர் அரசியல்வாதிகளோ, மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலான நல்லாட்சியைக் கொடுத்து வந்த பினராய், தன்னருகே இருக்கும் மனிதர்களைச் சரியானபடி தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டார். அவர்களோட சுயநலம்தான் அப்பழுக்கற்ற பொதுவுடைமை வாதியான கேரள முதல்வருக்கு நெருக்கடியை உண்டாக்கிடிச்சின்னு சொல்றாங்க.''

""தனக்கு எதிரா நடக்குற சதியை புரிஞ்சிக்கிட்ட பினராய் விஜயன், கேரள அரசின் அனுமதியில்லாமல் சி.பி.ஐ. விசாரிக்க தடை போட்டிருக்காரு.''

""தலைவரே.. தமிழ்நாட்டுக்கு வர்றேன். இங்கே தி.மு.கவை ஜெயிக்க விடக்கூடாதுங்கிறதுதான் பா.ஜ.க.வின் முதல் எய்ம். அதை முறியடிப்பதில் மு.க.ஸ்டாலின் தீவிரமா இருப்பதால், ஐ-பேக் டீம் பல ஆலோசனைகளைக் கொடுத்திருக்குது. "விடியும் வா'ங்கிற திட்டம் மூலமா மாநில முழுவதும் உள்ள 20 லட்சம் பேரின் முகவரியைத் திரட்டி, அவர்களுக்கு ஸ்டாலின் கையெழுத்துடன் கூடிய கடிதம் அனுப்பும் வேலைகள் ஆரம்பிச்சாச்சு. செப்டம்பர் 30ந் தேதி தொடங்கிய இந்த திட்டம், ஒரு மாதத்தில் ஒரு லட்சம் பேரிடம் போய்ச் சேர்ந்திருக்குது. லெட்டரைப் பார்த்த பலர் ஸ்டாலினுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறாங்களாம்.''

""தி.மு.கவை டார்கெட் பண்ணுற பா.ஜ.கவின் வேல் யாத்திரைக்கு அ.தி.மு.க. செக் வைக்கப் பார்க்குதுன்னு கமலாலயத்தில் கொந்தளிப்பாமே?''

""தலைவரே, நவம்பர் 6ல் திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6 அன்று திருச்செந்தூரில் நிறைவடையும் வரையில் ஒரு மாத காலம் வேல் யாத்திரையை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் பா.ஜ.க தலைவர் முருகன். ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் செந்தில்குமார், பா.ஜ.க.வின் இந்த யாத்திரை, சட்டம் ஒழுங்குப் பிரசினையை ஏற்படுத்தும். அதனால் தடை விதிக்கனும்னு டி.ஜி.பி. திரிபாதியிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார். இதற்கிடையே கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பா.ஜ.க முருகன், எடப்பாடி அரசு தங்கள் யாத்திரைக்கு அனுமதி கொடுக்கலைன்னு புகார் சொல்ல, இதுபற்றி டி.ஜி.பி. யிடம் கேட்டிருக்கிறது ராஜ் பவன். டி.ஜி.பி.யோ, இந்த விவகாரத்தை கவனிக்கும் உள்துறையிடமிருந்து எந்தவித தகவலும் வரவில்லைன்னு தெரிவித்து விட்டதால், நவம்பர் 4 வரை அனுமதி கிடைக்காததால் அ.தி.மு.க மேலே கோபமா இருந்தது பா.ஜ.க தரப்பு.''

""ராஜ்பவன் நடவடிக்கை பற்றி உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவிச்சிருக்கே?''

""பொதுவா, கவர்னர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்கள் மீது கருத்து சொல்வதை நீதிமன்றங்கள் தவிர்ப்பது வழக்கம். ஆனால், 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதாவுக்கு, தமிழக கவர்னர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வந்த நிலையில், மனசாட்சியோடு கவர்னர் நடந்து கொள்ளனும்னு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகக் குரல் கொடுத்தது. அதேபோல, இப்போது ராஜீவ்காந்தி வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதி மன்றம் தனது பொறுமை இழப்பை அப்பட்டமா வெளிப்படுத்தியிருக்கு.''

rang

""கவனிச்சேம்ப்பா...''

""29 ஆண்டுகளுக்கு மேலா சிறையிலிருக்கும் 7 தமிழர்களையும் விடுதலை செய்யனும்னு, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியும், கடந்த 2 ஆண்டுகளாக அதைக் கிடப்பிலேயே போட்டு வச்சிருக்கார் கவர்னர். சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி அழுத்தங்கள் தரப்பட்ட போதும், அவர் அசரலை. இந்த நிலையில், தனது ஆயுள் தண்டனையை ரத்து செய்யனும்னு 7 பேரில் ஒருவரான பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். இந்த வழக்கை 3-ஆம் தேதி விசாரித்த நீதியரசர்கள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோஹி அமர்வு, இந்த நேரத்தில் எங்கள் அதிகார வரம்பைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனாலும், மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் வைத்திருப்பது அதிருப்தியை அளிக்கிதுன்னு தெரிவிச்சிருக்கு. ராஜீவ் கொலை வழக்கின் முழு பின்னணியை விசாரிக்கும் பல்நோக்கு குழு அமைப்பின் ரிப்போர்ட்டுக்காக காத்திருப்பதற்கும், ஏற்கனவே தண்டனை பெற்று விட்ட பேரறிவாளனை விடுதலை செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லைன்னு சொல்லி, க்ரீன் சிக்னல் கொடுத்திருக்குது. இதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறாராம் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்.''

""இந்த நிலையில், கவர்னர் பன்வாரிலால் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தாரே?''

""7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக விவாதிக்கத் தான் இந்த அழைப்புன்னு டெல்லியிலிருந்து சொல்றாங்க. எடப்பாடியும் இதுபற்றி விசாரிச்சதோடு, தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர்களிடமும் விவாதித்திருக்கிறார். 7 பேர் விடுதலையில் கவர்னரை வைத்து அரசியல் விளையாட்டை ஆடிவரும் மோடி அரசு, உச்சநீதிமன்றத்தின் இந்த விமர்சனத்துக்கெல்லாம் உடனடியாக ரியாக்ஷன் காட்டாது. தேர்தல் நெருக்கத்தில், அவர்களை விடுவிப்பதன் மூலம் அரசியல் லாபத்தை அடைய முடியுமான்னுதான் பா.ஜ.க. யோசிக்கும்னு வழக்கறிஞர்கள் சொல்லியிருக்காங்க.''

""ரஜினியை ஆடிட்டர் குருமூர்த்தி சந்திச்சதா செய்தி வருதே?''

""அரசியல் வருகை-உடல்நலன் குறித்த ரஜினி பெயரிலான அறிக்கை, அது நான் இல்லை- அதில் உள்ளது என் சம்பந்தப்பட்டது தான்ங்கிற ரஜினியின் ட்வீட், அவரை அரசியலுக்கு வரச்சொல்லும் ரசிகர்களின் பெயரிலான போஸ்டர்கள்னு ரஜினி இப்பவும் ஹாட் டாபிக்தான். அதனால, ரஜினி வீட்டுக்குப் போயிருக்காரு குரு மூர்த்தி. எதற்கும் குழம்பாமல் உங்கள் அரசியல் கட்சியைத் தொடங்கிடுங்க. செலவைப் பத்தியெல்லாம் நீங்க யோசிக்க வேணாம்னு திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கார். ரஜினியோ, தன் நிலையையும் குடும்பத்தினரின் அக்கறையையும் எடுத்துச் சொல்லியிருக்காரு. 96 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டா, ஆண்டவனாலக் கூட தமிழகத்தைக் காப்பாத்த முடியதுன்னு வாய்ஸ் கொடுத்தீங்களே, அதேபோல், தேர்தல் நேரத்தில் இந்து மத விரோதியான தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டால் தமிழகத்தைக் காப்பாத்த முடியாதுன்னு வாய்ஸ் மட்டும் கொடுங்கன்னு கேட்டிருக்கிறார். ரஜினியோ, அரசியலிலேயே இல்லாத நான் எதுக்கு வாய்ஸ் கொடுக்கனும்ன்னு சொல்லிட்டாராம்.''’

""பா.ஜ.க.வின் சீனியரான ஹெச் ராஜாவும், புதிய வரவான நடிகை குஷ்புவும் அதிருப்தியில் இருக்காங்களாமே?''

rang

""தேசியச் செயலாளர் பதவி பிடுங்கப்பட்டதில் காற்றுபோன பலூனாகிவிட்டாராம் ஹெச்.ராஜா. உத்தர பிரதேசத்திலிருந்து தன்னை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கனும்னு இவர் வச்ச கோரிக்கையை பா.ஜக. தலைமை கன்சிடர் பண்றதுக்குள்ளேயே, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் நிராகரிச்சிட்டாராம். அதேபோல் தேசிய மகளிரணி பதவிங்கிற டீலுடன் பா.ஜ.க.வில் இணைந்த குஷ்புவுக்கும் ஏமாற்றம். அந்தப் பதவியில், வானதி சீனிவாசனை பா.ஜ.க. தலைவர் நட்டா நியமிச்சிட்டாரு. இதனால குஷ்புவும் அப்செட்டாம். தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி வேணும்ன்னா வாங்கித் தர்றோம்ன்னு சிலர் அவரிடம் ஆறுதலாப் பேச, காங் கிரஸிலும் இதே பதவியில் தான் இருந்தேன்னு எரிச்சலாயிட்டாராம்.''

""மு.க.அழகிரியையும் வசப்படுத்திவிட்டதாக பா.ஜ.க. தரப்பில் டாக் அடிபடுதே?''

""அழகிரி உடனடியா ஓ.கே சொல்லாததால, திரிஷா இல்லேன்னா நயன்தாராங்கிற மாதிரி, அப்பா இல்லேன்னா மகன்ங்கிற மூவ் மேற்கொள்ளப்பட்டிருக்காம். மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியிடம் பா.ஜ.க. தரப்பில், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவில் உங்க குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் இருக்காது. யோசிக்காம எங்க பக்கம் வாங்க. தென் மண்டலத்தைக் கவர் பண்ணுற மாதிரி பதவி கொடுக்கறோம். ஓ.பி.எஸ். மகன் மாதிரி உங்களுக்கும் எல்லாம் செய்வோம்னு சொல்லியிருக்குது. துரை தயாநிதியும் இதுபற்றி யோசிக்க ஆரம்பிச் சிருக்கதாகவும், அவங்கப்பா மனசையும் மாத்துவாருன்னும் பா.ஜ.க. தரப்பில் சொல்றாங்க.''

alagiri

""நானும் ஒரு முக்கிய மான தகவலைப் பகிர்ந்துக்கறேன். எதிர்கட்சியினரை புலனாய்வு அமைப்புகள் மூலம் சங்கடப்படுத்தும் பா.ஜ.க. தரப்பு, தங்கள் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வினரையும் விட்டுவைக்க விரும்பவில்லை. அதனால் தமிழக அமைச்சர்கள் பலரின் ஊழல் ரெக்கார்டுகளையும் அது கைவசம் திரட்டி வச்சிருக்கு. அதே போல் எடப்பாடிக்கும் மூத்த அமைச்சர்களுக்கும் நெருக்கமான அ.தி.மு.க எம்.எல்.ஏ.க் கள் சிலரையும் கண்காணித்து, அவர்களின் ரகசிய முதலீடு களைப் பற்றிய விபரங்களையும் விறுவிறுப்பாகச் சேகரிக்குது. இதன் அடிப்படையில், விரைவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வருமான வரித்துறையின் அதிரடிப் பாய்ச்சல் இருக்குமாம்.''

_________

இறுதிச் சுற்று

நக்கீரன் செய்தியால் நடவடிக்கை!

நக்கீரன் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திய தமிழக நெடுஞ்சாலைத் துறை ஊழல்களைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையின் செயலாளர் கார்த்திக் ஐ.ஏ.எஸ்.ஸால் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் தென்காசி கோட்டப் பொறியாளர் சுந்தர்சிங், உதவி கோட்டப்பொறியாளர் பிரபாகரன் பிரின்ஸ், உதவி பொறியாளர் செல்வன், சங்கரன் கோவில் உதவி கோட்டப் பொறியாளர் மெரிலின்கிறிஸ்டல், உதவி பொறியாளர் வைரமுத்து ஆகிய 5 இன்ஜினியர்களும் அதிகாரிகளும் 3-ந்தேதி இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

டெண்டர் பேக்கேஜ் நெம்பர் 10,17,18 ஆகிய மூன்று பணிகளுக்கான மொத்த மதிப்பு 18 கோடி. கடந்த 27.5.2020-ல் இந்த பணிகளுக்கு டெண்டர் அறிவிக்கப்படுகிறது. ரீ-டெண்டர் ஆனால், 1.10.2020-ல் ஒப்பந்தம் போடப்படாமல் அந்த டெண்டரை கேன்சல் செய்துள்ளது நெடுஞ்சாலைத்துறை. டெண்டர் கேன்சல் செய்யப்பட்டிருப்பதால் ரீ டெண்டர் விடப்பட வேண்டும். ரீ டெண்டருக்கு நிதித்துறையின் டெண்டர் ஆணையத்திடம் ஒப்புதல் பெறாமல், துவக்கியிருக்கிறார்கள் அதிகாரிகள். இந்த ஊழல் விவகாரம், நக்கீரன் மூலம் அம்பலமாகும் என்பதையறிந்தே துறையின் செயலாளர் கார்த்தி, துறையின் முதன்மை இயக்குநர் கோதண்டராமனிடமிருந்து அவசரம் அவசரமாக அறிக்கைபெற்று சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதுமுள்ள 41 கோட்டங்களிலும் தென்காசி பாணி ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன.

-இளையர்