வெற்றி ஒன்றுதான் ராகுலின் இலக்கு. பா.ஜ.க. ஆட்சியை அகற்ற என்னென்ன வியூகங்கள் உண்டோ அத்தனையும் அவர் கவனத்தில் உள்ளது. அதனால்தான் தி.மு.க. வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்றி புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்த ராகுல், அவருக்கு உதவியாக வசந்தகுமார், டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகிய நால்வரை செயல் தலைவர்களாக நியமித்தார். இரண்டுநாள் கழித்து, மோகன் குமாரமங்கலத்தை 5-வது செயல்தலைவராக அறிவித் திருக்கிறது காங்கிரஸ் தலைமை.
இது குறித்த விவாதங்கள் வேகமெடுத்துள்ள நிலையில், காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலரிடம் விவாதித்தபோது, ""பெரும்பான்மை சமூகத்தினருக்கு கட்சியில் வாய்ப்புகளை கொடுப்பதும், அந்த சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பதும் மோடி-அமீத்ஷாவின் கடந்த கால தேர்தல் வெற்றி வியூகம். அதே பாணியைத்தான் தற்போது ராகுல் கையிலெடுத்திருக்கிறார்.
திருநாவுக்கரசரை மாற்றுவது என முடிவெடுத்த நிலையில் புதிய தலைவராக புதிய முகத்தை கொண்டு வருவது பற்றி ஆலோசித்தார் ராகுல். கே.எஸ்.அழகிரியை பரிந்துரைத்தார் ப.சிதம்பரம். கே.எஸ்.அழகிரி, யாதவர் என்பதால் பெரும்பான்மை சமூகத்தினரின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட, "பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த நான்குபேரை செயல் தலைவர்களாக நியமிக்கலாம்' என யோசனையையும் ப.சி. தெரிவித்துள்ளார். ராகுலும் இதே வியூகத்தில் இருந்ததால், ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
அதனையடுத்தே, நாடார் சமூகத்திலிருந்து வசந்தகுமார், தலித் சமூகத்திலிருந்து டாக்டர் ஜெயக்குமார், வன்னியர் சமூகத்திலிருந்து டாக்டர் விஷ்ணுபிரசாத், தேவர் சமூகத்திலிருந்து மயூரா ஜெயக்குமார் என 4 செயல்தலைவர்களை தேர்வு செய்து அறிவித்தனர். இதனால் பிற சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர். குறிப்பாக, "தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகமாக கொங்கு வேளாள கவுண்டர்கள்தான் இருக்கிறார்கள். அந்த கொங்கு மண்டலத்தில் தேவர் சமூகத்தை சேர்ந்த மயூரா ஜெயக்குமாருக்கு வாய்ப்பளிப்பது எப்படி சரியாகும்' என ராகுலுக்கு மின்னஞ்சல் பறந்தது.
இதனைத்தொடர்ந்து நடந்த ஆலோசனையில்தான் கொங்கு வேளாள கவுண்டரான மோகன்குமாரமங்கலத்தை 5-வது செயல்தலைவராக நியமித்திருக்கிறார் ராகுல். எனினும், செயல்தலைவர்களில் முதலியார், நாயுடு, முஸ்லிம் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் ராகுலுக்கு போயிருக்கிறது. இந்த நிலையில், "முஸ்லிம் மற்றும் பெண்கள் பிரதிநிதியாக குஷ்புவை நியமிக்கலாம்' என ராகுலிடம் சிலர் பரிந்துரைத்துள்ளனர். அதனால், இன்னும் ஓரிரு செயல்தலைவர்கள் நியமிக்கப்படலாம்''‘’ என்கிறார்கள் அழுத்தமாக.
செயல் தலைவர்களுக்கான தேர்தல் பணிகளை ஒதுக்குவது பற்றிய செயல் திட்டம் குறித்தும் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், அகமதுபடேல், முகுல்வாஸ்னிக், சஞ்சய்தத் உள்ளிட்டவர்களோடு நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார் ராகுல்காந்தி.
அதில், நாடார் சமூகம் பெரும்பான்மையாக உள்ள தென் தமிழகத்தை வசந்தகுமாரிடமும், வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள வட தமிழகத்தை விஷ்ணுபிரசாத்திடமும், கொங்கு வேளாளர்கள் அதிகமுள்ள கொங்கு மண்டலத்தை மோகன்குமாரமங்கலத்திடமும், முக்குலத்தோர் அதிகமுள்ள மாவட்டங்களை மயூரா ஜெயக்குமாரிடமும், தமிழகம் முழுவதுமுள்ள தலித் பிரதிநிதிகளை ஒருங்கிணைக்கும் பணியை டாக்டர் ஜெயக்குமாரிடமும் ஒதுக்குவதற்கான முதல்கட்ட ஆலோசனை நடந்து முடிந்திருக்கிறது. தன்னிடம் வாழ்த்துப்பெறுவதற்காக வந்த கே.எஸ்.அழகிரியிடமும் செயல்தலைவர்களிடமும் இத்தகைய தேர்தல் பணிகள் குறித்து விவரித்துள்ளார் ராகுல்காந்தி.
"கடந்த 2014 எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்ட நிலையில் கன்னியாகுமரியில் இரண்டாவது இடம் பிடித்தவர் வசந்தகுமார், அவருக்கு தனி செல்வாக்கு உள்ளது. அதுபோல வடமாவட்டங்களில் விஷ்ணுபிரசாத்துக்கு பலம் உள்ளது. இருவரைத் தவிர மற்றவர்களால் அவர்கள் சார்ந்த சமூகத்தினரை காங்கிரசுக்கு ஆதரவாக மடை மாற்ற முடியுமா?' என்கிற கேள்வியை எழுப்பி, "செயல் தலைவர்களின் எண்ணிக்கையை குறைக்காவிட்டால், தேவையற்ற அதிருப்திகள் அதிகரிக்கும்'‘என ராகுலுக்கு கடிதம் அனுப்பியபடி இருக்கிறார்கள் கதர்சட்டையினர்.
இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்காக அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் 17 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டி, திருநாவுக்கரசர் தலைமையில் 35 பேர் கொண்ட பிரச்சார கமிட்டி, தங்கபாலு தலைமையில் 36 பேர் கொண்ட விளம்பர கமிட்டி, பீட்டர் அல்ஃபோன்ஸ் தலைமையில் 35 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்பு கமிட்டி, கே.ஆர்.ராமசாமி தலைமையில் 6 பேர் கொண்ட தேர்தல் நிர்வாக டீம் என கிட்டத்தட்ட 150 பேர்களை உள்ளடக்கிய குழுக்களை அறிவித்திருக்கிறார் ராகுல்காந்தி.
இது குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட தலைவர்கள், ""தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரியையும் சேர்த்து 7 சீட்டுகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்படவிருக்கிறது. 7 சீட்டுக்கு 6 கமிட்டிகள் அமைத்திருக்கிறார்கள். எல்லா கமிட்டியிலும் எல்லா தலைவர்களும் இருக்கிறார்கள். சத்தியமூர்த்திபவனுக்கே வராதவர்கள், உடல்நிலை காரணமாக செயல்பட முடியாதவர்கள், தொண்டர்களோடு தொடர்பில்லாதவர்கள் என பலரையும் கமிட்டியில் இணைத்துள்ளனர். தலைவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் கமிட்டியில் இடம்பிடித்தது எப்படின்னு ஆராய்ந்தால் அதில் நடந்துள்ள கூத்துகள் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது''’ என்கிறார்கள்.
-இரா.இளையசெல்வன்