மீண்டும் ஒரு சமூகநீதிப் போர்க்களத்தை நோக்கித் தள்ளப்படுகிறது தமிழ்நாடு. மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராக மற்றொரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், தாக்கல் செய்யப்பட்ட மனுவை அண்மையில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

reservationமண்டல் கமிஷன் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பின்படி 50%க்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக்கூடாது. ஆனால், இந்தியாவில் மண்டல் கமிஷன் அமலாவதற்கு முன்பே தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில், 69% இடஒதுக்கீடு அமலுக்கு வந்துவிட்டது. இதையடுத்து, ஜெ.ஆட்சியில் 69%க்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின் 31-சி பிரிவின்படி, உரிய திருத்தங்கள் செய்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76-வது திருத்தமாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, 9-ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு, உரிய பாதுகாப்பு உருவாக்கப்பட்டது. எனினும், 69% இடஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலேயே உள்ளது.

69% அளவுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கேற்ப மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. கணக்கைக் கேட்கிறது உச்சநீதிமன்றம். அதற்கான விவரம் மாநில அரசிடம் போதுமானதாக இல்லை.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதை மாநில ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்திவருகிறார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அண்டை மாநிலங்களில் இத்தகைய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, இதற்கென நிதி ஒதுக்கீடு செய்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, புள்ளிவிவரத்தைத் தாக்கல் செய்தால்தான் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க முடியும் என்பது ராமதாஸின் நிலைப்பாடு.

Advertisment

ஜெ. ஆட்சியில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் ஆலோசனைகளை வழங்கி, அதற்கான சட்ட வரைவுகளை முன்னெடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் தி.க.தலைவர் கி.வீரமணி. இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க, வரும் 29-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது தி.க.

""69 சதவிகித இட ஒதுக்கீட்டினை எதிர்க்கும் வழக்கை சட்டப்படி உச்சநீதிமன்றம் அனுமதித்திருக்கவே கூடாது; போட்ட வழக்கினையே -அது விசாரணையில் தள்ளுபடி செய்துவிட்ட பிறகு, மீண்டும் போட்டு கோர்ட்டுகளின் மதிப்புமிகு நேரத்தை வீணடிக்கக் கூடாது என சட்டத்திலேயே உள்ளது. எனவே இதை தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அத்துடன், அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ள அம்சத்தை நீதிமன்றம் விசாரிக்க முடியாது'' என்கிறார் கி.வீரமணி.

"நீட் தேர்வு போல அ.தி.மு.க. அரசு கோட்டை விட்டுவிடக்கூடாது' என்கிறார் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். சமூகநீதி சக்திகள் களம்காணத் தயாராகின்றன. மத்திய-மாநில அரசுகளின் நிலை இன்னும் தெளிவாகவில்லை.

Advertisment

-கீரன்