தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், அனைத்து சமூகத்தினருக்கும் சம நீதி, சமூக நீதி கிடைப்பதற்கான இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம், நீதிக்கட்சி காலம் தொடங்கி மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. தொடர்ச்சியான செயல்பாட்டின் பலனாக 1989 தி.மு.க ஆட்சியில் 60% என்ற நிலையை அடைந்தது. அதற்கு உச்சநீதிமன்றத்தால் சட்டச் சிக்கல் வந்தபோது, 1994ம் ஆண்டு, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அதனைப் பாதுகாக்கின்ற வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசியல் சட்டத்தின் 9வது அட்ட வணையில் இணைக்கப்பட்டது.
இதன்மூலம் பிற்படுத்தப்பட் டோருக்கு 50 சதவிகிதமும், தாழ்த்தப் பட்டோருக்கு 18 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற 69% இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிராவிலுள்ள மராத்தா சமூகத்திற்கு வழங்கப் பட்டுள்ள இட ஒதுக்கீட்டை உச்சநீதி மன்றம் ரத்து செய்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவிலுள்ள மராத்தா சமூகத்தினருக்கு 2018-ம் ஆண்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 16% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டுவரப் பட்டது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் வழங்கப்பட்டுள்ள மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 66 சதவிகிதமாக உயர்ந்தது. மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம், மராத்தா சமூகத் தினருக்கு கல்வியில் 13%, வேலை வாய்ப்பில் 12% அளவுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாமென்று தீர்ப் பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக, 1992-ம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப் படையில் பல்வேறு மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன. இந்திரா சஹானி வழக்கில், மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு, 50 சதவிகிதத்தை மிகாமல் இருக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருந்தது. எனவே, தற்போது 66 சதவிகிதமாக உயர்ந்திருப்பதால் மராத்தா சமூகத்துக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதி களைக் கொண்ட அமர்வு, 1992-ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் வெளியிட்ட தீர்ப்பையே உறுதிசெய்தது. இதனை மறுபரிசீலனை செய்யவே முடியாதென்றும், மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது, அரசியல் சாசனத்துக்கே எதிரானது என்றும் அழுத்தந்திருத்தமாகக் கூறியது.
மேலும், 102-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில், சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் மாற்றங்கள் செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகக் குறிப்பிட்டது. மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் இந்த மாற்றம் நடைபெறுமென்றும், மாநிலங்கள் ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியுமென்றும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான பட்டியலை மாநில அரசுகள் திருத்த முடியாதென்றும் தீர்ப்பில் கூறியது.
இத்தீர்ப்பில், இரண்டு நீதிபதிகள் மட்டும், மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்குமே அதிகாரமிருப்பதாக தீர்ப்பை அளித்தனர். உச்சநீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளின் இந்த தீர்ப்புதான் தற்போது, சமூக நீதிக்கான மாநிலமான தமிழகத்தின் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாது காக்க வேண்டுமென்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டார். மேலும் சிலரோ, 69 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கக்கூடிய சட்டம், அரசியலமைப்பில் உள்ள 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருப் பதால் அதை உச்சநீதி மன்றம் கேள்வி கேட்க இயலாதென்றும் கூறுகின்றனர்.
இத்தீர்ப்பின் தாக்கம் குறித்து, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதியிடன் கேட்டபோது, "மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் இரண்டு கருத்துக்களை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. முதலாவது, 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு அதிகரிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. ஆனால், நாம் ஏற்கனவே 50 சதவிகிதத்துக்கும் மேல் இட ஒதுக்கீட்டைப் பெற்றுவருகிறோம். எனவே இதனை அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இனி புதிதாக எந்தவொரு மாநிலத்திலாவது இட ஒதுக்கீடு செய்யப்படும்போது இந்த அளவுகோலைக் கணக்கில்கொள்வார்கள். எனவே நம்முடைய 69% இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாக எந்த அச்சுறுத்தலும் இருப்பதாக நான் கருதவில்லை.
இதில் உச்சநீதிமன்றம் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளது. 102-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 342(ஆ) விதியின்படி, இனிமேல், பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை மாநிலங்களால் வரையறுக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏதேனுமொரு ஜாதியை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்க மாநில அரசு விரும்பினால், அந்த விவரத்தை மத்திய அரசுக்கு அனுப்பி, குடியரசுத்தலைவர் ஒப்புதலோடு நாடாளுமன்றத்தால் முடிவெடுக்கப்பட வேண்டுமென்று அப்பிரிவு கூறுகின்றது.
இந்த சட்டத்திருத்தத்தை 2017-ம் ஆண்டில் கொண்டுவந்தபோதே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எங்களுடைய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைவரும், மாநில உரிமையைப் பறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். எதிர்ப்புக்குப் பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் தாவர்சந்த் கெலாட், "மத்திய அரசின் பட்டியலுக்கு மட்டுமே இது பொருந் தும். மாநில அரசின் உரிமையை இது பாதிக்காது. எனது வார்த்தையை நீங்கள் உறுதியாக நம்பலாம்" என்றார். தற்போது உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பில், 3 நீதிபதிகள், இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று தீர்ப்பளித்துள்ளார்கள். எனவே மத்திய அரசாங்கம்தான் இனி இந்த இட ஒதுக்கீட்டுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும். அந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சியெடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைப் பாதுகாக்கும். இதைத் தவறவிட்டால், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்குவது முழுக்க மத்திய அரசின் கைக்குச் சென்றுவிடும். மாநில அரசிடம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் என்ற ஒன்றே இருக்காது.
அப்படியான சூழல் வந்தால், எதிர்காலத்தில், மத்திய அரசிடம் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் அடிப்படையில், எந்த மாநிலத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோரும், எந்த மாநிலத்திலும் இந்த இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைக்குச் செல்லமுடியும். அப்படி வரும்போது, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 50 சதவிகிதமாகவும், மத்திய அரசிடம் இந்த இட ஒதுக்கீடு 27 சதவிகிதமாகவும் இருக்கும் சூழலில், மற்ற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் நிலை ஏற்படலாம்.
இதனால் தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணி வாய்ப்பு கேள்விக்குறி யாகும். இன்னொரு பக்கம், இந்தியா முழுவதுமே ஒரே மாதிரியாக 27% இட ஒதுக்கீடு தான் பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு சட்டம் இயற்றலாம். இதனால் ஏற்படும் பாதகங்களை மனதில்கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றவேண்டும்'' என்றார்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் நிலைப்பாடு சமூக நீதிக்கு எதிரானதாகவே இருந்துவருகிறது. அதேநேரம், முற்பட்ட பிரிவினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்தை ஒரே நாளில் மத்திய அரசு நிறைவேற்றியது. எனவே, மத்திய அரசின் இத்தகைய போக்கை கவனத்தில்கொண்டு இதுவிஷயத் தில் தமிழக அரசு விரைவாகச் செயல்பட்டு 69% இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றுவதன் மூலம், தமிழகம் என்றைக்கும் சமூக நீதிக்கான மண் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
-தெ.சு.கவுதமன்