ஒருநாளை நாம் துவங்கும்போதே டீயுடன்தான் துவங்குகிறோம். ஜென் பௌத்த குருக்கள், விழிப்புணர்ச்சிக்கு தங்கள் சீடர்களுக்கு தேநீர் விருந்தளிப் பார்கள். அத்தகைய தேநீர், பால் விலையேற்றம், தேயிலைத்தூள் விலை, விலைவாசி ஏற்றத்தால் பத்திலிருந்து பன்னிரண்டு ரூபாய் வரை விற்கப்படுகிறது. மாறாக, கோவை சுற்றுவட்டாரத்தில் 5 ரூபாய் டீக்கடைகளை அதிகம் காணமுடிகிறது. அதெப்படி அவர்களால் மட்டும் 5 ரூபாய்க்கு கொடுக்க முடிகிறது.
டீத்தூளுக்கு பெயர் பெற்ற நீலகிரி மாவட்டத்து சமூக ஆர்வலப் பெண்மணி ஒருவர் "எல்லாம் கலப்பட டீத்தூள் தயவால்தான்...' என்கிறார்.
""எல்லா உணவுப் பொருட் களிலும் கலப்படம் செய்யும் மனிதர்கள் நம் சமூகத்தில் பெருகிவிட்டார்கள். டீத்தூளில் கலப்படம் என்பது முன்பும் நடந்ததுதான். ஆனால் தேயிலை வாரிய அதிகாரிகளே இதன் பின்னணியில் இருப்பதுதான் கவலையை அதிகரித்திருக்கிறது. அரசு நிர்ணயப்படி 4 கிலோ இலையை அரைத்தால் 1 கிலோ டீத்தூள் கிடைக்கும். கால் கிலோ டீ கழிவு கிடைக்கும். டீத்தூளின் விலை அதன் திடம், நிறம், சுவையை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. டீத்தூள் ஆர்தடாக்ஸ், சி.டி.சி. என இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.
நீலகிரியின் ஆர்தடாக்ஸ் டீக்கு புவிசார் அந்தஸ்து கிடைத்துள்ளது. அதனால் இதில் கலப்படம் செய்ய வாய்ப்பில்லாத நிலையில் சி.டி.சி. என்ற முறையில்தான் கலப்படம் சாத்தியப்படுகிறது.
விவசாயிகளின் நலனுக் காகவும், தொழிற்சாலைகளுக் கான விதிமுறைகளை வகுத்தளிக்கவும் குன்னூரில் தேயிலை வாரிய அமைப்பை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அமைப்பு விவசாயிகளுக்கு ஏற்கனவே சரிவர மானியம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
டீக்கழிவு ஆன்லைன் மூலமாகத்தான் ஏலம்விடப்படுகிறது. அதை தேயிலை வாரியம் கட்டுக்குள் வைத்திருக்கிறது. உர உரிமம் வாங்கியிருக்கும் சில விஷக்கிருமிகள் அசாமிலும், தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் கிடைக்கும் டீக்கழிவை வாங்கி ஆர்.சி. டீத்தூள்களை உற்பத்தி செய்கின்றன. இதைக் கண்டறிந்து கலப்பட டீத்தூள்களை தடுக்கவேண்டிய வாரியம் இந்த கலப்படக்காரர்களுக்கு துணைபோகிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் உர உற்பத்தி யாளர்களின் தகவல்களையும், டீக்கழிவு வாங்குபவர்களின் பட்டியலையும் வாரியத்திடம் கேட்டேன். அவர்கள் அளித்த பட்டியலில் இருந்த பல உர உற்பத்தியாளர்களின் முகவரிகள் பொய்யாகவே இருந்தன.
அன்னூர் சிவஸ்ரீ அக்ரீ புராடக்ட்ஸ், மேட்டுப்பாளை யம் க்ரீன் எர்த், மதுரை ஒமேகா கோகோபீட்ஸ், இடுக்கி சந்திரா என்டர்பிரஸைஸ், பாலக்காடு ஆசங க்ரீன் மவுண்டன் புராடக்ட் கோ உள்ளிட்ட 16 கம்பெனிகள் போலியானவை.
இதைவிட மோசம், டீ கழிவின் கணக்குகளுக்கு தன்னிடம் தகவல் இல்லையென்று வாரியத்தின் டைரக்டராய் இருக்கும் ஹரிபிரசாத் பதிலளித்திருப்பது. ஆர்.சி. தொழிலில் லாபம் அதிகம் என்பதால் சில ஏஜெண்டுகளை வைத்து வாரிய அதிகாரிகளே டீ தொழிற்சாலை நடத்துகிறார்கள். அந்த ஆர்.சி. கலப்பட தூளில்தான் 5 ரூபாய் டீ தயாரிக்கப்படுகிறது. கலப்பட தூளினால் தயாரிக்கப்படும் டீயை அருந்துபவர்களுக்கு வயிற்றுக் கோளாறுகள், கிட்னி பெயிலியர் போன்ற பிரச்சினைகள் வரும்.
தேயிலை வாரியத்தின் டைரக்டர் ஹரிபிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் இதே இடத்தில் பத்திருபது வருடங்க ளாக வேலை செய்வது எப்படி? மேட்டுப்பாளையம் குட்டையூர் மாதேஸ்வரன் மலையருகே நின்றுகொண்டிருந்த தேயிலைக் கழிவு லாரியொன்று சமீபத்தில், உணவுப் பாதுகாப்பு அதிகாரி களால் மடக்கிப்பிடிக்கப்பட்டது. தேயிலைத் தூள் கலப்படம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டதும், அதற்கு தேயிலை வாரிய அதிகாரிகள் துணை போவதையும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். அதனால் இப்போது வாரிய அதிகாரிகள் பலர் வி.ஆர்.எஸ். கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வாரியத்தில் நடைபெறும் மோசடியைத் தடுக்க உடனடியாக சி.பி.ஐ. அல்லது தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி விசாரிக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும். அப்போதுதான் நீலகிரி தேயிலையின் புகழ்மீது படியும் கறை அகலும்'' என்கிறார் அந்த சமூக சேவகி.
தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜியிடம் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் பேசினோம். “""தேயிலை வாரியத்தைப் பொறுத்தவரை யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுப்போம். குற்றச்சாட்டு கள் குறித்து விசாரணை நடக்கிறது. தரமற்ற தேயிலை உற்பத்தியின் காரணமாக தென்னிந்திய தேயிலைத் தூளின் சராசரி விலை குறைந்துவருகிறது .
ஆய்வுக்குப் பின் விதிமீறலில் ஈடுபட்ட தரமற்ற தேயிலை தயாரிக்கும் தொழிற் சாலைகள் என சொல்லப்பட்ட 18 தொழிற்சாலைகளுக்கு ஷோக்காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஒரு வாரம் காலக்கெடு அறிவித் திருக்கிறோம். உண்மை இருக்கும் பட்சத்தில் யாரானாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''“என்கிறார் உறுதியாய்.
வேற எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு டீயைக் குடிச்சுட்டு ப்ரெஷ்ஷா தீர்வை யோசிக்கலாம்.… டீயிலேயே கலப்படம்னா, எதைக் குடிச்சுட்டு அதுக்கு தீர்வை யோசிக்கிறது?
-அருள்குமார்