கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும், தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது. இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான். அதை செல்வகுமாரிடம் கொடுத்து தனது பினாமிகள் பெயரில் சசிகலா ஆவணங்களாக மாற்றினார். அதை அவர் கொடநாட்டில் வைத்திருந்ததை செல்வகுமாரும் மேனேஜரும் வேலுமணியிடம் சொல்கிறார்கள். எடப்பாடி, அதை கொடநாட்டிற்குள் எளிதாக சென்றுவரும் சஜீவன் மற்றும் கனகராஜ் மூலம் ஒரு கொள்ளை டிராமாவை கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூலம் அரங்கேற்றி கைப்பற்றினார்கள்.
முன்பு சசிகலா, செல்வகுமாரிடம் கொடுத்து மாற்றியதைப் போலவே கனகராஜ் கொடநாட்டிலிருந்து கொண்டுவந்து தந்த ஆவணங்களை செல்வ குமார் அமைச்சர்களின் பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். அதனால் சசிகலா மட்டுமல்ல யார், யாருக்கெல்லாம் செல்வ குமார் சொத்துக்களை மாற்றிக் கொடுத்தாரோ அந்த ஐந்து மாஜி அமைச்சர்களும் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள் என்கிறது மேலதிக விசாரணையை மேற்கொள்ளும் போலீஸ் மற்றும் அரசுத் தரப்பைச் சேர்ந்தவர்கள்.
செல்வகுமார் கடந்த பத்தாண்டுகளாகவே கோவை மண்டலத்தில் அசைக்க முடியாத செல்வாக்குடன் ஆட்டம் போட்டார். அவர் வைத்ததுதான் சட்டம் என அவருக்கு எதிராக ஏகப்பட்ட பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் புகார் கடிதங்களுடன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை அணுகிவருகிறார்கள்.
பத்திரப்பதிவுத்துறை செயலாளரான ஜோதிநிர்மலா ஐ.ஏ.எஸ்., செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். செல்வகுமார் மற்றும் அவருக்கு வேண்டியவர்களும்- அ.தி.மு.க. கால அமைச்சர்களின் சொத்துக்களை இருமுறை மாற்றி பதிவு செய்ய உதவியவர்களுமான மாவட்ட பதிவாளர்கள் எட்டு பேர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி முடிவெடுத்திருக்கிறார் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.
செல்வகுமார் மீது விசாரணை நடத்துங்கள் என முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதால் செல்வகுமார் மீது முதல்கட்டமாக அவர் சேர்த்துள்ள வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் குறித்து வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை தயாராகி வருகிறது. அதைத் தொடர்ந்து கொடநாடு கொலை வழக்கில் அவர் கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனுடன் சேர்ந்து புதிய குற்ற வாளியாக்கப்படுவார் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
கொடநாடு வழக்கில் அனைத்து விவரங்களையும் ஆரம்பம் முதல் புலன் விசாரணை செய்துவரும் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம், கனகராஜ் எப்படி இறந்தார் என்பதை ஆய்வு செய்தது. கனகராஜை மோதி கொன்ற கார், சேதமான புகைப்படங்களை ஆராய்ந்த டீம், ஒரு சாதாரண மோட்டார் சைக்கிள் மோத லில் ஒரு கார் எப்படி இவ்வளவு சேதமாகும் என்பதை சந்தேகக் கண்ணோடுதான் பார்க் கிறார்கள்.
இதில் கனகராஜின் சகோதரர் தனபால் சொல்வதை போலீசார் நம்பவில்லை. கனகராஜ் இறந்தவுடன் தனபாலன் நடவடிக்கைகளில் சந்தேகத்திற்கிடமான பல விஷயங்கள் இருந்தன. அவர் புதிதாக நிறைய சொத்துகள் வாங்கியுள்ளார். பல சமயம் புத்தி பேதலித்தது போல நடிக்கிறார். கனகராஜின் மனைவி கலைவாணிக்கும் தனபாலுக்கும் இடையே முட்டல் மோதல்கள் இருக்கிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு தரப்படும் எந்த அரசு தொகையும் கனகராஜ் குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை. அனாதையாகிப் போன கலைவாணியால், கனகராஜ் விபத்து வழக்கை கடந்த நான்கு வருடமாக நடத்த முடியவில்லை.
பொதுவாக சாலை விபத்து நடந்தால் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் தங்கள் சொந்தச் செலவில் வழக்கை நடத்துவார்கள். இழப்பீடு தொகை வரும்பொழுது அதில் குறிப்பிட்ட சதவிகிதம் வழக்கு நடத்திய தொகையாக எடுத்துக்கொள்வார்கள். அப்படி யாரும் கனகராஜின் மரண வழக்கை நடத்த முன்வரவில்லை. ஏனென்றால் இறந்தது யார்? என்ன விபத்து என்பது பற்றி சேலம் மாவட்ட போக்குவரத்து போலீசார் முறையாக வழக்குப் பதியவில்லை என்கிறார்கள் சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள்.
கனகராஜ் மரணச் செய்தி அவரது குடும்பத்திற்கு எப்படி சொல்லப்பட்டது என்பதுதான் கொடநாடு வழக்கை விசாரிக்கும் போலீசாரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கனகராஜ் இறந்தவுடன் அங்கே அவரது உறவினர் ரமேஷ் என்பவர் ஆஜராகி யுள்ளார். அவர் ஏன் மிகச் சரியாக விபத்து நடந்த இடத்திற்கு வரவேண்டும் என்கிற சந்தேகத்திற்கு பதில் இல்லை. அவர் கனகராஜின் செல்போனை எடுத்து கனக ராஜின் மனைவிக்கு, கனகராஜ் இறந்துவிட்டதாக அறிவிக் கிறார். அதன்பிறகு அந்த செல் போன் காணாமல் போகிறது.
போலீசார், ரமேஷிற்கு நடந்த விபத்தின் பின்னணி பற்றித் தெரியும் என்கிறார்கள். கனகராஜ் விபத்து என்பது செட்டப்பே. ஒரு சாதாரண மோட்டார் சைக்கிள் மோதினால் காரில் இவ்வளவு பாதிப்பு வராது. கனகராஜ், விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு இதே பகுதியில் எடப்பாடியை நீக்கிவிட்டு நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர், இதேபோல் விபத்து ஒன்றில் கொல்லப் பட்டார். அப்போது எடப்பாடியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்தார். அதன் பின் சசிகலா உதவியுடன்தான் மறுபடியும் மா.செ. ஆனார் எடப்பாடி, என பழைய கனக ராஜின் பின்னணிகளையும் போலீசார் விவரிக்கின்றனர் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
மொத்தத்தில்... சசிகலா, எடப்பாடியுடன் மாஜி மந்திரிகள், கொடநாடு மேனேஜர், பத்திரப்பதிவு அதிகாரி செல்வகுமார், கனகராஜின் உறவினர் ரமேஷ் என ஏகப்பட்ட பேர் விசாரணைக்குள் ளாகிறார்கள். இவர்களில் யார், யார் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்பதை இப்போது சொல்ல முடியாது என்கிறது காவல்துறை.
___________________________________________________
முதலில் தெனாவெட்டு அப்புறம் கப்சிப்
கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனை 7-ந் தேதி விசாரணைக்கு அழைத் திருந்தனர் போலீசார் . புதுசா என்னைய என்ன விசாரிக்கப் போறீங்க? என கொஞ்சம் தெனாவட்டாகத்தான் பேசினார் நடராஜன் என்கிறார் போலீசார் ஒருவர்.
05-06-2017 அன்னைக்கு கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரத்திடம் சொன்னதையே புது விசாரணையிலும் சொல்லியிருக்கிறார் நடராஜன். மேனேஜர்னாலும், கொடநாடு பங்களாவை நிர்வகிக்கும் பொறுப்பு என்னிடம் கிடையாது. ஆனால் பங்களாவின் வெளிப்புறச் சாவி மட்டும் என்னிடம் இருக்கும் டிரைவர் கனகராஜ் கொடநாடு எஸ்டேட் பணியாளர் இல்லை. அம்மா வரும்போது பேசியது உண்டு. மற்றபடி, போனில்கூட பேசியதில்லை.
சம்பவம் நடந்த அன்று கொடநாடு எஸ்டேட் பங்களா வின் உள் அறைக்கதவுகளின் சாவி என்னிடம் இல்லாததால் பங்களாவின் எந்தப் பொருள் திருட்டுப் போனது என்பது எனக்குத் தெரியாது. பங்களாவில் யார் தங்குவார்கள் என்ற விவரமும் எனக்குத் தெரியாது. அம்மா இங்கே வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, போயஸ் கார்டன் பணியாளர்கள் இங்கே வந்து பங்களாவை சுத்தம் செய்வார்கள். கனகராஜ் மற்றும் சயான் பற்றி பேச்சு வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும்தான் நான் தெரிந்துகொண்டேன். எதற்காக கொள்ளை நடந்தது என்பது எனக்குத் தெரியாது என அப்போது சொன்னதையே இப்போதும் சொல்லியிருக்கிறார் நடராஜன்.
இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தனது வாக்குமூலத்தில்... பங்களாவின் உள் அறை சாவியை மேனேஜர் நடராஜனிடம் வாங்கி திறந்து பார்த்தபோதுதான் ஹால் மற்றும் மாடியில் உள்ள இரண்டு கதவுகளின் தாழ்ப்பாழ்கள் உடைக்கப் பட்டிருப்பதைக் கண்டேன் என் கிறாரே போலீசார் கேட்டதற்கு, மேனேஜர் நடராஜன் வாயைத் திறக்கவில்லை .
மேற்பார்வை பார்த்தேன் என்று சொன்னால் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பதை சொல்ல வேண்டும் என்பதால், மேற்பார்வை பார்க்கவில்லை என்னும் தப்பிக்கும் வார்த்தைகளை சொல்கிறீர்கள் அப்படித்தானே? என்ற கேள்விக்கு ரொம்ப கப்சிப் ஆகிவிட்டாராம் நடராஜன்.
-அ.அருள்குமார்