தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நெல்லுக்கான அரவை கூலியை உயர்த்தித் தருவதாக தனியார் ரைஸ்மில் உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கான பணத்தை கையூட்டு பெற்றுக் கொண்டு கொரோனாவை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிவருவதாக அமைச்சர் காமராஜ் மீது புகார் வாசிக்கிறார்கள் ரைஸ்மில் உரிமையாளர்கள். நமக்கு கிடைத்த இந்தத் தகவலோடு விசாரணையில் இறங்கினோம்.
பெயரோ, புகைப்படமோ தவிர்த்துவிட வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் நம்மிடம் பேசினார் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த பெரும் விவசாயியும் ரைஸ்மில் உரிமையாளருமான ஒருவர், ""அமைச்சர் காமராஜ் இரண்டாவது முறையாக அதே துறையில் இருப்பதால், அவருக்கு அனைத்துமே அத்துப்படி. அதோடு அமைச்சரான ஆரம்ப காலத்தில் டி.என்.சி.எஸ்.சி. சத்தியமூர்த்தி என்பவர் மூலம், எங்கெங்கு யார், யாரை அமர்த்தவேண்டும், எப்படி கரன்சியை கறக்கவேண்டும் என திட்டமிட்டு, அவருக்கு வேண்டியவர்களை அரசு அதிகாரத்தில் நியமித்தார்.
சத்தியமூர்த்தி, டி.டி.வி. தினகரன் அணிக்குச் சென்றுவிட்டதால் அந்த வேலையை தற்போது டி.என்.சி.எஸ்.சி.யில் இருந்து ஓய்வுபெற்ற மூத்த அதிகாரியும், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சிவபுண்ணியத்தின் சம்பந்தியுமான பிச்சக்கண்ணுவும், அமைச்சரின் உதவியாளர் பாரதியும், அமைச்சரின் மூத்த மகன் இனியனுமே எல்லா வற்றையும் பார்த்துவருகின்றனர். ரைஸ்மில் உரிமையாளர் சங்கத்திலும்கூட பெரும்பாலானவர்கள் அவருக்கு வேண்டியவர்களே இருக்கி றார்கள்.
விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் துவங்கி, அதை குடோனிலோ, பட்டியலிலோ அடுக்கி அரவைக்கு கொடுத்து, அந்த அரிசி ரேஷன் கடைக்கு சென்று மக்களுக்கு போகும்வரை எல்லா இடங்களிலும் பல்வேறு தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அத்தனையிலும் அமைச்சருக்கு சேரவேண்டியது சரியாகச் சென்றுவிடும். உதாரணமாக நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள், பட்டியல் எழுத்தர்கள், மற்ற உதவி எழுத்தர்களுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளத்தில் அவர்களால் எப்படி வேலை செய்ய முடியும். ஆக நாற்பது கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் கையூட்டு வாங்கும்போதே லஞ்சம் துவங்கிவிடுகிறது. அதேபோல டிரான்ஸ்போர்ட், டெண்டர் என பல தளங்களிலும் தவறு நடக்கிறது'' என்றவர்,
""தமிழகம் உள்ளிட்ட 520 ரைஸ்மில்லுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல், அரவைக்காக செல்கிறது. குவின்டால் அரிசிக்கு 20 ரூபாய் அரவைக் கூலி. 100 கிலோ நெல் கொடுத்தால் 65 கிலோ அரிசியாக கொடுத்துவிட வேண்டும். தவிடு, குருணை உள்ளிட்டவை ரைஸ்மில்லுக்கே சேர்ந்துவிடும். அமைச்சர், அதிகாரிகளுக்கு வழங்கவேண்டியதைக் கொடுத்தால்தான் நெல் தொடர்ந்து அனுப்புவாங்க.
அதனாலத்தான் கையைப் பிடிக்கும் நட்டமானாலும் வேறு வழியில்லாமல் மில் இயங்கவேண்டும் என்பதால் நேர்மை யாக ஓட்டுபவர்கள் மிகக்குறைவு. ஆனால் அமைச்சரோடும், அதிகாரிகளோடும் தொடர்பு வைத்துக்கொண்டு ரேஷன் அரிசியை வாங்கி கணக்குக்கு அனுப்பிவிடுவார்கள். டெல்டா மாவட்டங்களில் தற்போதுள்ள தண்ணீர் பிரச்சனைகளால் மிகக் குறைந்த வயதுடைய சன்ன ரக நெல்லையே சாகுபடி செய்து, அதை கொள்முதல் நிலையத்தில் நன்கு சுத்தம் செய்தே கொடுக்கிறார்கள். அதில் கிடைக்கும் தரமான அரிசியை வெளிமார்க்கெட் டுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, அதற்குப் பதிலாக ரேஷன் அரிசியை வாங்கி சுழற்சிமுறையில் கணக்குக்கு கொடுத்துவிடுவாங்க. இது பல அதிகாரிகளுக்கும் தெரியும், அவர்களின் தொடர்பில்லாமல் செய்யவே முடியாது.
சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக அரவைக்கூலி 20 ரூபாயாகவே இருக்கு. அதனை உயர்த்தித் தரவேண்டும் என்கிற கோரிக்கையைத் தொடர்ந்து வைத்துவருகிறோம். ஆனால் அமைச் சர் செவிசாய்க்கவேயில்லை. ரைஸ்மில் வைத்திருக்கும் அமைச்சருக்கு வேண்டியவர் ஒருவர் மூலம் அமைச்சரிடம் இதுகுறித்து பேசப் பட்டது. பெரிய மில் 3 லட்சம், சின்ன மில் 1 லட்சம் என அமைச்சர் தரப்பில் கேட்கப் பட்டதாம், ரைஸ்மில் உரிமையாளர்கள் தரப்பு மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம் ஐந்து கோடி ரூபாயை கொடுத்து கூலியை உயர்த்தித் தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதற்குள் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டதால் அதனை காரணம் காட்டி சிலகாலம் தள்ளிவைத்தார். தற்போது அமைச்சரிடம் கேட்கும்போதெல்லாம் இன்னும் ஒவ்வொரு மில்லும் மூன்றிலிருந்து ஐந்து லட்சம் கொடுக்கவேண்டும் என்று கூறி பிடிவாதமாக அரவைக் கூலியை உயர்த்த மறுக்கிறார். பெரிய அளவிலான மில் ஓனர்கள் கொடுக்கமுடியும் எங்களை போன்ற சாதாரணமான சின்ன மில் வைத்திருப்பவர்களால் முடியுமா?'' என்கிறார் விவரமாக.
இதுகுறித்து தமிழ்நாடு அரவைமில் உரிமையாளர் சங்கத்தின் முக்கிய பொறுப் பாளர்களில் ஒருவரான மன்னார் குடி அடுத்துள்ள சேரங்குலம் இமயம் என்கிற இமயவீரனிடம் கேட்டோம், ""பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரவைக்கூலி 20 ரூபாயாகத்தான் இருக்கிறது, தொடர்ந்து கோரிக்கை வைத்தோம், உயர்த்துவதாக கூறியிருக்காங்க, கொரானாவால் அந்த பணி தடைப்பட்டுக் கிடக்கிறது. மற்றபடி நீங்கள் கேட்பதுபோல எதுவும் கொடுக்கவும் இல்லை, அவரும் வாங்கவும் இல்லை'' என்கிறார்.
உணவு அமைச்சர் காமராஜை தொடர்பு கொண்டோம், போனை எடுத்தவர் நீண்ட நேரமாகவே பேசாமல் இருந்துவிட்டு கட் செய்துவிட்டார். மீண்டும் தொடர்பு கொண்டபோது எடுக்க மறுத்துவிட்டார். அவர் எப்போது பேச விரும்பினாலும் அவரது கருத்தைப் பதிவிட நக்கீரன் தயாராக உள்ளது.
- க.செல்வகுமார்