டந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாகக் கூறி, ஊழல் அதிகாரிகளைக் கண்டித்து, அத்துறையைச் சேர்ந்த மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டப் பொதுப்பணித்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினரும், அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் நம்மிடம், "யானைக்கு அல்வா வாங்கிய கணக்குதான்... அரசுக்கு 25%, அதிகாரிகளுக்கு 30% போக மீதியில் காண்ட்ராக்ட்காரர்களின் கமிஷன்... இதற்கு கைமாறாக 10 வேலைகளுக்கான டெண்டர் எடுத்தால், இரண்டை மட்டும் முடித்துக்கொடுத்தால் போதும்... இதுதாங்க ஊழல் பார்முலா!

cc

கடந்த 4 வருடத்தில், 13 மாவட்டத்தையும் கட்டி ஆண்ட கண்காணிப்புப் பொறியாளர் மா.சுகுமாறனை வைத்து, வேலுமணி, எடப்பாடி பழனிசாமியின்கீழ் ரூ.4,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இதனைத் தீவிர விசாரணை செய்தால் எல்லா ஊழலும் தெரியவரும். தற்போது, சுகுமாறனின் சொத்து மட்டுமே 400 கோடி ரூபாயைத் தாண்டும். ஆட்சி மாறினாலும், ரெய்டுகள் நடந்தாலும், இவரை மட்டும் விட்டுவைத்திருப்பதும், பணியில் தொடர்வதும் ஆச்சர்யத்தை அளிக்கிறது. சுகுமாறனின் மீது, சில பெண் அரசு ஊழியர்களே பாலியல் புகாரும் கொடுத்துள்ளனர். எனவேதான் இவர்மீது துறைரீதியிலான விஜிலன்ஸ் விசாரணை வேண்டுமென்று போராடுகிறோம்" என்றனர்.

பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தின் செயலாளர் வரத முனீஸ்வரன் நம்மிடம், ”"தமிழ்நாடு நீர்வளத்துறையின் 13 மாவட்டங்கள், கண்காணிப்பு பொறியாளரான சுகுமாரனின் கண்ட்ரோலில்தான் இருந்தது. நீர்வளத்துறை, பொதுக் ccகட்டிடத்துறை, மருத்துவத்துறை கட்டிடங்கள், இந்த 13 மாவட்டங்களிலுள்ள ஆறுகள், நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய், குளம், ஓடை, கால்வாய் போன்ற அனைத்தும் இவரின் கட்டுப்பாட்டில் வருகிறது. இவருக்குமேல், தலைமை பொறியாளர்கள், சிறப்பு தலைமை பொறியாளர்கள் இருந்தாலும், எடப்பாடி அ.தி.மு.க.வின் கடைசி 4 வருடங்களில் அதிகாரச்சாட்டை சுகுமாரனின் கைகளில்தான் இருந்தது.

Advertisment

மணல் அள்ளுவதற்கு ஆற்றில் 4 அடி வரைதான் தோண்ட வேண்டும் என்றால், 20 அடி முதல் 30 அடிவரை தோண்ட விடுவது, பொதுத்துறைக் கட்டிடங்களில் மராமத்து பண்ணுவதாக ரூ.2 லட்சம் மட்டும் செலவழித்துவிட்டு, கடந்த 10 வருடத்தில் 2 கோடி ரூபாய்வரை கணக்கு காட்டியுள்ளனர். கடந்த நான்கு வருடங்களில் 15க்கும் மேற்பட்ட தடுப்பணை டெண்டர் விடப்பட்டிருந்தாலும், எவ்வளவு தொகைக்கு, யாருக்கு விடப்பட்டது, எப்படி விடப்பட்டது, பணி முடிக்கப்பட்டதா என்பது குறித்த எந்த விவரமும் முழுமையாகத் தருவதில்லை. இதுகுறித்து ஆர்.டி.ஐ.யில் கேட்டும் சரியான பதில் தரப்படவில்லை. கடந்த 10 வருடமாக எந்த அதிகாரியும் பணிமாற்றம் செய்யப்படவில்லை. முடிந்த அளவுக்கு சுருட்டு, ஒத்துழைக்காதவர்களை விரட்டு என்பதுதான் இவரின் தாரக மந்திரம்" என்றார்.

சங்கத்தின் தலைவர் ரவிசந்திரனோ, "சார், குடிமராமத்துப் பணியில் வேலை செய்யாமலேயே அதிகாரிகள் இணைந்து கொள்ளையடித்துவந்தனர். டெண்டர் குறித்த விவரங்களை வெளிவிடுவதில்லை. இதுகுறித்து கேள்வியெழுப்பும் ஊழியர்களைப் பழிவாங்குவார். அமைச்சர்களைக் கைக்குள் போட்டு, டெண்டர் வெளியிட்டு, பணியைச் செய்யாமலேயே கூட்டுக்கொள்ளை அடிப்பார். தற்போது ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. இவரைத் தட்டிக்கேட்ட சங்கத்து நிர்வாகிகளின் பதவி உயர்வுக்குக் கையெழுத்திடாமல் பழிவாங்குகிறார். சமீபத்தில் ரூ.25 கோடியில் கட்டப்பட்டு, உடைப்பெடுத்த விழுப்புரம் தளவானை தடுப்பணையே இந்த ஊழலுக்குச் சாட்சி. அடுத்ததாக, இவர்மீது இரண்டு பெண் ஊழியர்கள் தைரியமாக பாலியல் குற்றச்சாட்டு வைத்துள் ளார்கள். இப்படிப்பட்டவரை எதிர்த்தே போராட்டம்'' என்றார்.

ccமேலும், நிலையூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துராமன், "மதுரை கப்பலூர் அருகே உள்ள கூத்தியார்குண்டு கிராமத்தில், நிலையூர் கண்மாயை நம்பி 3,000 ஏக்கர் விளைநிலம் இருக்கு. இந்த கண்மாய் நிரம்பி மறுகாலாகி, சொக்கநாதபட்டி கம்புகுடி, கப்பலூர் உலகநேரி சென்று, விருதுநகர் வரை செல்கிறது இதில் பாசன வசதி பெறும் 542 ஏக்கர் நிலம் தற்போது 100 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. இந்த கண்மாயை ஆக்கிரமித்து, 1,500 வீடுகள், பெரிய பெரிய கார்ப்பரேட் ஐ.டி.நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளை, விதியை மீறி பட்டாவுடன் கட்டியுள்ளனர். இதனால் ஆற்றுத் தண்ணீரை விவசாயத்திற்குத் திறக்கவிடாமல், இங்கிருக்கும் ஐ.டி. நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தடுத்து வருகின்றனர்.

Advertisment

தண்ணீர் திறந்துவிட்டால் அனைத்து ஆக்கிரமிப்புக் கட்டிடங்களும் மூழ்கிவிடக்கூடும் என்பதால், சுகுமாறனின் தயவால் தடுத்துவரு கின்றனர். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், கண்காணிப்பாளரையும் சேர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். இவரது ஊழல்களைக் கண்டித்து, மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம் எல்லாம் நடத்தி விட்டோம். தற்போது மதுரை கலெடரிடம் புகார் கொடுக்க வந்திருக்கோம்'' என்றார்.

இதுகுறித்து விசாரிக்க, நீர்வளத்துறை கண்காணிப்பாளர் மா.சுகுமாறனை, அவரது எண்ணில் பலமுறை தொடர்பு கொண்டும், எடுக்கவில்லை. எனவே அவரது அலுவலகத்திற்குச் சென்று, உதவியாளரிடம், "நக்கீரனில் இருந்து வருகிறோம்'' என்றதும், உள்ளே சென்றவர், "சார் முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறார், பார்க்க முடியாது'' என்று சொல்லவும்... வெளியேறினோம்.

ஆட்சி மாற்றம் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமென்றால், ஊழல்வாதிகளைக் களையெடுப் பதில் எவ்விதத் தயக்கமும் கூடாது.