உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ள பிரியங்கா காந்தி, சில தினங்களுக்குமுன் செய்தியாளர் களைச் சந்தித்தபோது, "அடுத்த ஆண்டு உத்தரப்பிர தேசத்தில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், 40% இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளோம்" என்று பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு, இப்போது உத்தரப்பிரதேச அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.
யோகி ஆதித்யநாத் ஆட்சியைக் கைப்பற்றிய, கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்திலுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் வெறும் 7 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸால் வெல்ல முடிந்தது. அதன் வாக்கு சதவிகிதம் வெறும் 6.25% மட்டுமே. பா.ஜ.க., சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், அப்னாதளம் (சோனிலால்) ஆகிய கட்சிகள் காங்கிரஸைவிட அதிக எண்ணிக்கையிலான சீட்டுகளை வென்றிருந்தன. வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனாலும், இரண்டாவது இடத்தையாவது பிடித்தால்தான் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி உயிர்ப்புடன் இருக்க வாய்ப்புள்ளது. வரவுள்ள உ.பி. தேர்தல், அவர்களுக்கு வாழ்வா சாவா பிரச்சனை.
தற்போதுள்ள அரசியல் சூழலில், யோகி ஆதித்யநாத்தின் ஆட்சிக்கு 50:50 என்ற அளவில் ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. எனினும், ஆட்சியைத் தக்கவைக்க, 50% ஆதரவே யோகிக்குப் போது மானதாக இருப்பதால், அவர் மிகவும் நம்பிக்கையோடும் தெம்போடும் இருக்கிறார். அதோடு, ராமர் கோவில் கட்டப்படுவது, அதிகார பலம், பண பலம் ஆகியவை யோகிக்கு நம்பிக்கையூட்டு கின்றன. அதேவேளை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலும், தலித்துகள், இஸ்லாமியர்கள்மீதான வன்முறைகளும், கொரோனா வைச் சரியாக எதிர்கொள்ளாததும் யோகிக்கு எதிராக இருக்கின்றன.
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தலித்துகள், இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியைப் பங்கிட்டுக்கொள்வது, காங்கிரசுக்குப் பின்னடைவாக உள்ளது. எனவே பிரியங்காகாந்தி, தனது அரசியல் உத்தியை, மக்களை நோக்கிச்செல்லும் எளிமையான அரசியலாக மாற்றிக் கொண்டு கிராமங்களை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளார். கிராமத்து மக்களுக்காகக் குரலெழுப்புவதில் தீவிரம் காட்டுகிறார். அவரது பாட்டி இந்திராகாந்தியை நினைவுபடுத்தும் முக வசீகரம், பிரியங்காவின் ஸ்பெஷாலிட்டி.
கடந்த 2019-ல், உத்தரபிரதேசம், உன்னாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் எரித்து கொலை செய்த கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா, பெண்களுக்குப் பாதுகாப்பளிக்காத யோகி அரசைக் கடுமையாகச் சாடினார். அதேபோல,ஆக்ராவில் போலீஸ் காவலில் கைதியின் மர்ம மரணம் தொடர்பான விவகாரத்தில், அக்குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்ற பிரியங்காகாந்தி கைது செய்யப்பட்டபோது, அவரோடு செல்பி எடுத்த பெண் போலீசுக்கு எதிராக யோகி அரசு நடவடிக்கை எடுத்தபோது எதிர்த்துக் குரலெழுப்பினார்.
சமீபத்தில், உத்தரப்பிரதேசத்தின் லகிம்பூர்கேரியில் மத்திய அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டிய விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கவந்த பிரியங்காகாந்தி, 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, அதன்பின்னர் குடும்பத்தினரைச் சந்தித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இவரது தொடர்ச்சியான அதிரடியால் காங்கிரஸ் மீதான நம்பிக்கை சற்று உயர்ந்தாலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் பஞ்சாயத்துகளால் அக்கட்சி மீதான மதிப்பு சரிவடைவதைத் தடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை தத்தளிக்கிறது. எனவே காங்கிரஸின் தனித்துவத்தைக் காட்டுவதற்காக, பெண் வேட்பாளர் களுக்கு 40% இட ஒதுக்கீடு என்ற அதிரடியை பிரியங்கா அறிவித்துள்ளார்.
"பெண்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அவர்கள் முன்னேற்றம் காண வேண்டும். இந்த முடிவு உத்தரப்பிரதேசத்தின் பெண்கள் நலன் சார்ந்தது'' என்று காரணம் தெரிவித்தார். இவரது அறிவிப்பை, காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "இதற்குமுன் யாரும் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்ட தில்லை. வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு. இது இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை'' என்று புகழ்ந்தார்.
எதிர்க்கட்சிகளோ, "இது வெறும் அரசியல் ஸ்டண்ட்' என்று விமர்சிக்கிறார்கள். "இதே அறிவிப்பை பஞ்சாப் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தேர்தல் களத்தில் பிரியங்கா அறிவிப் பாரா?' என்று கேள்வியெழுப் பியபோது, "நான் உத்தரப்பிர தேசத்துக்கு மட்டுமே பொறுப்பாளர். எனவே இந்த மாநிலத் துக்காக மட்டுமே நான் பேசமுடியும்'' என்று புத்திசாலித் தனமாகச் சமாளித்தார். 40% பெண் வேட்பாளர்கள் எனும் போது, கிட்டத்தட்ட 160 வேட்பாளர்களை பெண்களாக நிறுத்தவேண்டியிருக்கும். இதிலும் கட்சிக்குள் பெரும் பிரச்சினை ஏற்படக்கூடும். அதையெல்லாம் எப்படிச் சமாளித்து, தேர்தலைச் சந்தித்து, பெண்களின் வாக்குகளைக் கவரப்போகிறார் என்பதில்தான் பிரியங்காவின் அரசியல் சாமர்த்தியம் தெரியப்போகிறது.
வரவுள்ள தேர்தல் காங்கிர சுக்கு மட்டுமல்ல, பிரியங்காவுக்கு மான சோதனைக்களமாகும்!
-ஆதவன்