"தொட்டால் பூ மலரும்' என்பது’படகோட்டி படத்தில் எம்.ஜி.ஆரும் சரோஜோதவியும் பாடும் பாடல். புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய வீட்டில் குடியேறியவர்களோ, “"தொட்டால் சுவர் உதிரும்'’ என்கிறார்கள். சுரண்டினாலோ...…விரலால் பிடித்து இழுத்தாலோ உதிருமென்றால் அதன் பெயர் சுவரா?
சென்னை கூவம், அடையார், பக்கிங்காம் கால்வாய் அருகே வசித்து வந்தவர்களை தமிழ்நாட்டு குடிசை மாற்று வாரியம் மூலம் இடம்பெயரச் செய்து புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியமர்த்தியது முந்தைய அ.தி.மு.க அரசு. குடிவந்து சில மாதங்கள்கூட ஆகாத நிலையில், இந்தக் கட்டடங்கள் உதிரத் தொடங்கியிருப்பது அங்கே குடியிருப்பவர்களை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.
தொட்டாலே உதிரும் தரமற்ற கட்டடம் கட்டியதில் தொடர்புடைய, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களை ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஆய்வுசெய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தரமற்றுக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை பி.எஸ்.டி. இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் கட்டித்தந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 864 மற்றும் 1056 வீடுகள் கொண்ட இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டத் திட்டமிட்டு 2018-ஆம் ஆண்டு தொடங்கி 2021 வரை கட்டப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தக் கட்டடங்களை அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். ஆய்வுசெய்து தரமானதாகவும், உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
புதிதாக கட்டப்பட்ட இந்தக் குடியிருப்புக்கு குடி வந்தவர்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக ஆணி யடிப்பது, துளையிடுவது போன்ற பணிகளை மேற்கொண்ட போது சிமிண்ட் உதிர்ந்து கொட்டத்தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து சந்தேகம் தெரிவித்து அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர். இந்நிலையில் குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் ஆகியோர் புளியந் தோப்பு குடியிருப்புகளை நேரில்சென்று ஆய்வுசெய்தனர்.
தரமற்ற கட்டடம் கட்டப்படுவதை முறையாக கண்காணிக்காமல் இருந்ததாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகளான உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன் இருவரும் 2021, ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் டி பிளாக்கின் எட்டாவது மாடியில் வசித்துவரும் பாலச்சந்தர் கூறுகையில், "ஆணி அடித்தால் மணல் கொட்டுகிறது. சுவரில் விரிசல் விழுகிறது. அதுமட்டும் இல்லாமல் லிப்ட் ஒர்க்காகவில்லை, தண்ணீரும் வரவில்லை. இதனால் கீழிருந்து எட்டாவது மாடிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு கடினமாக இருக்கிறது. நிலநடுக்கம், பூகம்பமெல்லாம் வந்தால் இந்த கட்டடம் என்னவாகுமோ என்ற அச்சத்தில்தான் இருந்துவருகிறோம்''’என்றார்.
புனிதாவோ, “"அரசு வீடு கிடைத்த சந்தோசத்தில் வந்தோம். வந்த சில நாட்களிலே சுவரின் லட்சணம் பயத்தை உண்டாக்குது. செல்ஃபில் வைத்திருந்த பொருளை எடுக்கலாம்னு ஸ்டூல் போட்டு ஏறி செல்ஃபை பிடித்தால் பெயர்ந்து விழுது. இந்த வீட்டை நம்பி இரவில் படுக்கலாமா எனத் தெரியவில்லை''’என்றார்.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் ஜெயராமன் கூறுகையில், “"ஐ.ஐ.டி ரிப்போர்ட் கொடுப்பதற்கு முன்பாகவே இவர்கள் இடிந்த இடத்தைப் பூசுவது தவறானது. அது ஆதாரத்தை மறைக்கும். இந்த குடிசைமாற்று வாரியம் தொடர்புடைய அமைச்சர், ஒப்பந்ததாரர், அதிகாரிகள், தரச்சான்று அளித்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு போடவேண்டும். மட்டுமல்லாமல் திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களிலும், தமிழகம் முழுவதும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தரமற்ற வகையில் கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவையனைத்தையும் விசாரித்து ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்றார்.
அரசுப் பணிகளை ஒப்பந்தமாகப் பெறுபவர்கள், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷன் தருவது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. ஆனால் கமிஷன் தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும் போது, ஒப்பந்ததாரர் தனது லாபத்தை ஈடுகட்ட தரத்தில் செய்துகொண்டே செல்லும் சமரசம், அதன் பயனாளி களின் தலையில் வந்து விடிந்துவிடுகிறது என்கிறார்கள் ஒப்பந்தப் பணி களில் அனுபவமுள்ள கான்ட்ராக்டர்கள். இந்தக் குடியிருப்பைக் கட்டித் தந்த ஒப்பந்ததாரர் வி.எஸ்.தென்னர சிடம் அப்போதைய அமைச்சர் ஓ.பி. எஸ். பணியை அவருக்கே ஒதுக்க, 40 சதவீதம் கமிஷன் கேட்டுப்பெற்ற தாகவும் அதை மூடிமறைப்பதற்காக பி.எஸ்.டி. நிறுவனம் தரமற்ற எம்.சாண்ட். பி சாண்ட் மண் கொண்டு புளியந்தோப்பு கட்டடத்தை கட்டியதாலும் இந்த பிரச்சனை எழுந்துள்ளது என்கிறார்கள் கமிஷன் விவகாரங்களின் நெளிவுசுளிவுகள் அறிந்தவர்கள்.
இதற்கிடையில் பி.எஸ்.டி. கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான தென்னரசு, இந்த பிரச்சனை எழுந்ததும், கட்டடம் தரமாகவே கட்டப் பட்டுள்ளதாக ஊடகங்களில் விளம்பரம் செய்துள்ளதுடன், நிறுவனம் மேல் கூறப்பட்டுள்ள புகாரையும் மறுத்துள்ளார். கொரோனா காலத்தில் இந்தக் கட்டடத்துக்கு இயந்திரங்களை எடுத்துச்சென்றதால் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி சமாளிப்பதோடு, உடைந்த சுவர், உதிர்ந்த பூச்சு போன்றவற்றை முறையான அனுமதியின்றி பூசிமெழுகும் வேலையிலும் இந்நிறுவனம் இறங்கியுள்ளது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.
தவிரவும், திட்டமிட்டதைவிட செலவுகள் அதிகரித்ததால், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வீடுகள் ஒதுக்கப்பட்ட ஒவ் வொருவரிடமிருந்தும் கூடுதலாக 1.5 லட்சம் கேட்டுள்ள நிலை யில், தொட்டால் உதிரும் லட்சணத்தில் கட்டப்பட்டுள்ள வீடு களுக்கு கூடுதலாக பணம் தரவேண்டுமா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த கட்டடம் கட்டுவதில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமியிடமும் சில சமூக நல அமைப்புகள் புகார் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ரகசிய விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் அதில் முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் எனவும் தெரியவருகிறது.
________________________
நொறுங்கிய கட்டுமானங்கள்!
விழுப்புரம்-கடலூர் மாவட்டம் தென்பெண்ணையாற்றில் தளவானூர், எனதிரிமங்கலம் இடையே ரூ25.35கோடி செலவில் கட் டப்பட்ட தடுப்பணை 19.9.2020 அன்று திறக்கப்பட்டது. 25.01.2021ல் பெய்த கன மழையில் அந்தத் தடுப்பணை உடைந்துவிட்டது. ஒப்பந்ததாரர் தரமில்லாமல் கட்டியதால்தான் மதகு அடித்துச்சென்றது என பொதுப்பணித்துறை பதிலளித்துள்ளது. செங்கல்பட்டு வாயலூர் பாலாற்றில் கட்டப்பட்ட தடுப்பணையிலிருந்து நீர்க் கசிவு என புகார் எழுந்துள்ளது. கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணியை, மற்றொரு கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து பி.எஸ். தென்னரசு இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன் ரூ141.76 கோடிக்கு ஆறு பணிகளுக்கான டெண்டர் எடுத்து, கட்டுமானப் பணிகளை செய்து வருகின்றது. நாமக்கல் ஆட்சித் தலைவர் வளாகத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளில் இரண்டாவது தளத்தின் பணிகள் 30.10.2020 ஆம் தேதி அதிகாலை இடிந்துவிழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
பி.எஸ். கன்ஸ்ட்ரக்சன் பணிகள் குறித்து இதுபோல பல்வேறு புகார் எழுந்த நிலையிலும், தமிழகம் முழுவதும் ரூ 550 கோடி மதிப்பிலான பணிகள் அந்நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த பத்தாண்டுகளில் இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அவற்றினை தர ஆய்வு செய்து அறிக்கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.