md

வடசென்னை

nc

Advertisment

வடசென்னையில் தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.பி. கலாநிதி வீராசாமியும், அ.தி.மு.க. சார்பில் மனோ, பா.ஜ.க. சார்பில் பால்கனகராஜ், நா.த.க. சார்பாக அமுதினி எனக் களத்தில் இருந்தாலும், இங்கு அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.விற்குமிடையேதான் போட்டி நிலவுகிறது. சென்றமுறை கலாநிதி வீராசாமி 61 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற போதும், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத ஆதங் கம் தொகுதிக்குள் இருக்கிறது. ஆனாலும் அதைத்தாண்டி, மோடி ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியிலிருப்பதை கணக்கில்கொண்டு களம் காண்கிறார். இதில் தி.மு.க. கொளத்தூரில் பலமாக இருந்த போதும் மற்ற பகுதிகளில் சற்று சுணக்கமாக இருப்பதாகக் கூறப்படு கிறது. அந்த இடங்களைக் குறி வைத்து அ.தி.மு.க. வாக்குகளைக் கவர்ந்திழுக்கிறதாம். அ.தி.மு.க. வேட்பாளர் மனோ ஏற்கெனவே காங்கிரஸ் பிரமுகராக இருந்த காலத்திலிருந்தே ராயபுரம் மனோ எனத் தொகுதிக்கு பரிட்சயமானவராக இருந்துவருகிறார். அதேபோல, கொடுங்கையூர் குப்பை மேடு, குடிநீர் பிரச்சனை, மாசுக் கட்டுப்பாடு, திருவொற்றியூர் ஆயில் பிரச்சனை போன்றவற்றுக்கு தீர்வு காண்பதாகக்கூறி வாக்கு சேகரிக்கிறார். மேலும், பா.ஜ.க. பால்கனகராஜ், அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளைக் கணிசமாகக் கவர்வதும், நாம் தமிழர் கட்சியின் அமுதினி கனிசமான வாக்குகளை, குறிப்பாக இளைஞர்களின் வாக்குகளைப் பிரிப்பதும் அ.தி.மு.க.வுக்கே சாதகமாக அமையும் என அக்கட்சி எதிர்பார்க்கிறது. தி.மு.க.வில் அரசின் சாதனை, அமைச்சர் சேகர்பாபு, மா.செ. ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.க்களின் களப்பணி தி.மு.க.வை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது.

-அ.அருண்

மத்திய சென்னை

Advertisment

cc

தமிழகத்தில் இஸ் லாமியப் பெருமக்களும் வடஇந்தியர்களும் நெருங்கி வாழும் தொகுதிகளில் வித்தியாசமான தொகுதி மத்திய சென்னை. இந்தத் தொகுதியில் தி.மு.க. சார்பில் தயாநிதி மாறன், தே.மு.தி.க.வின் தலைவர்களில் ஒருவரான பார்த்தசாரதி, பா.ஜ.க. சார்பில் வினோஜ் பி.செல்வம், மற்றும் நாம் தமிழர் கார்த்திகேயனும் போட்டியிடு கின்றனர். பிரதமர் மோடி இத்தொகுதி வேட்பாளரை ஆதரித்துப் பேசினார். வட இந்திய மக்கள் அதிகம் வசிக் கும் பகுதிகளில் இந்தியில் பிரச்சாரம் நடை பெறுகிறது. ஆனால், இந்தியில் பிரச்சாரம் நடைபெறும் இப்பகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் அமைப்பு ரீதியாகப் பலம் பெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் அ.தி. மு.க.வால் ‘பூத் கமிட்டி கூட முழுமையாகப் போட முடியவில்லை. இஸ்லாமியர்கள் மத்தியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பிரச்சாரம் எடுபடவில்லை. ஒருபக்கம் இந்திப் பிரச்சாரம், மறுபக்கம் உருது மொழிப் பிரச்சாரம், ஆங்காங்கே தெலுங்கு மொழி பிரச்சாரம் என வேட்பாளர்கள் வித்தியாசமாக பிரச்சாரம் செய்தாலும் தி.மு.க. மா.செ. சேகர்பாபு, வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் தி.மு.க. கூட்டணியினர் பிரச்சாரத்தில் முன்னே நிற்கிறார்கள். தே.மு.தி.க. பார்த்தசாரதி களத்திலேயே இல்லை. பா.ஜ.க. வினோஜ் பி.செல்வம் இந்தி பேசும் பகுதிகளில் மட்டும் தலையைக் காட்டுகிறார். தி.மு.க. தனது கள வேலைகளால் மற்ற கட்சிகளைவிட அதிக வாக்கு வித்தி யாசத்தில் வெற்றியை நோக்கி முன்நிற்கும் தொகுதி இது.

-தாமோதரன் பிரகாஷ்

தென்சென்னை

sc

வி.ஐ.பி. தொகுதியான தென்சென்னையில் தி.மு.க.வின் தமிழச்சி, பா.ஜ.க.வின் தமிழிசை, அ.தி.மு.க.வின் ஜெயவர்த்தன், நாம் தமிழர் கட்சியின் தமிழ்ச்செல்வி ஆகியோர் களத்தில் நிற்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்திலும், களப்பணியிலும் தொடக்கத்திலிருந்தே தி.மு.க., அ.தி.மு.க. டாப் கியரில் சென்றன. ஆனால், பா.ஜ.க.வில் ஏகத்துக்கும் சுணக்கம். பா.ஜ.க.வின் பொறுப்பாளர் கரு.நாக ராஜன், மாவட்டத் தலைவர்கள் காளிதாஸ், சாய்சத்யன் ஆகியோர் தமிழிசைக்கு ஒத்துழைக்காததால், தமிழிசையே நேரடியாக களத்திலிறங்க, கடைசி 5 நாட்களில் பா.ஜ.க.விலும் செம வேகம். இதனால் மும்முனை போட்டியில் தணலாகக் கொதிக்கிறது தென்சென்னை. கூட்டணி பலம், பண பலம், கட்சி வாக்குகள், அமைச்சர் மா.சு.வின் களப்பணி ஆகியவை தி.மு.க.வுக்கு வலிமை. தமிழிசைக்கு பிராமணர் வாக்குகளும், பா.ம.க. வாக்குகளும் பலம். ஜெயவர்த்தனுக்கு மீனவர் சமூக வாக்குகளும் கட்சி வாக்குகளும் வலிமையை கொடுக்கிறது. கரன்சி கட்டுகளை மூன்று கட்சிகளுமே உடைக்கின்றன. 20 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் இந்த முறை 60 சதவீத வாக்குகள் (12,00,000) பதிவாக வாய்ப்பு. தொகுதியிலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் குறைந்தபட்ச வாக்குகள் முறையே சோழிங்கநல்லூரில் 1.50 லட்சம், 1 லட்சம், 75,000; சைதாப்பேட்டையில் 85,000, 30,000, 20,000; விருகம்பாக்கத்தில் 50,000, 30,000, 25,000 ; தி.நகரில் 30,000, 20,000, 50,000; மயிலாப்பூரில் 30,000, 25,000, 40,000; வேளச்சேரியில் 40,000, 30,000, 35,000 வாக்குகளை பெறுகிறார்கள். நாம் தமிழர் கட்சி 6 தொகுதிகளிலும் 1 லட்சம் வாக்குகளை வாங்குகிறது. பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் இரண்டாவது இடத்துக்கு சொற்ப வாக்குகளில் முட்டி மோதும் நிலையில், சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றியை உறுதி செய்கிறார் தி.மு.க.வின் தமிழச்சி.

-இளையசெல்வன்

திருவள்ளூர்

tv

திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதி யில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. கூட்டணி யில் தே.மு.தி.க.விற்கு திருவள்ளூர் ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் பொன். பாலகணபதி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெகதீஸ் சந்தர் போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பொன்.பால கணபதி இத்தொகுதியைச் சார்ந்தவர் அல்ல என்பதும், அவர் தென்மாவட்டத்தில் பெரும்பான் மை சமூகமான தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும் பின்னடைவு. இத்தொகுதியில் மிகக்குறைவாகவே இச்சமுதா யத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். வேகமான பிரச் சாரம் இருந்தாலும், கணிசமான வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. தே.மு.தி.க. வேட் பாளரான நல்லதம்பி தொகுதிக்கு அப்பாற்பட்டவர். பணப்பசை இல்லாதவர். அ.தி.மு.க.வில் இரு முறை முன்னாள் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த வேணுகோபா லுக்கு ஒதுக்கியிருந்தால் போட்டி கடினமாக இருந்திருக்கும். அ.தி. மு.க.வுக்கு ஒதுக்கப்படாததால் ஏமாற்றத்தில் இருக்கும் தொகுதி. அ.தி.மு.க.வினரின் கணிசமான வாக்குகள் பிரிய வாய்ப்புள்ளது. நாம் தமிழர் ஜெகதீஸ் கௌரவமான வாக்குகளைப் பெறக்கூடும். இத்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதில் தி.மு.க. தரப்பில் சற்று அதிருப்தி யிருந்தாலும் காங்கிரஸ் வேட் பாளரான சசிகாந்த் இத்தொகுதியில் பரிச்சயமான வர். எதிர்த்து நிற்கும் மற்ற இரு வேட்பாளரும் பலமிழந்துள்ளதால் இவருக்கு வெற்றி எளிதாகக் கிடைத்துவிடும். மேலும் எம்.எல்.ஏ.வும் மேற்கு மா.செ.வுமான சந்திரனின் களப்பணியும் கைகொடுக்கும். திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் காங்கிரஸ் முந்துகிறது.

-அரவிந்த்

ஸ்ரீபெரும்புதூர்

si

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இருமுனைப் போட்டிதான் நடக்கிறது. பா.ஜ.க. -பா.ம.க. கூட்டணியில் ஜி.கே. வாசனின் விசுவாசியான வேணு கோபாலுக்கு ஒதுக்கப்பட்டாலும் கணிசமான வாக்குகளை மட்டுமே பெறுவார். இத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளரான சிட்டிங் எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கும், அ.தி.மு.க.வின் அப்பகுதியில் பிரபலமான பூவை.ஞானத்தின் மகன் டாக்டர் பிரேம்குமாருக்கும் போட்டி நிலவுகிறது. தி.மு.க.வின் டி.ஆர்.பாலு, தொகுதிக்கு பரிட்சயமானவர். மேலும், இத்தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதியிலும் தி.மு.க. கூட்டணியினரே உள்ளனர். இப்பகுதியிலுள்ள தி.மு.க.வின் வாக்கு வங்கி, மாவட்ட செயலாளர் அன்பரசனின் ஆதரவு, தாம்பரம் பகுதியில் டி.ஆர்.பாலுவின் விசுவாசியான எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவோடு டி.ஆர்.பாலு களத்தில் முந்துகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பிரேம் குமாரை வேட்பாளராக அறிவித்தபோதே அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. எனினும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பு என்பதால் எதிர்ப்புகள் போகப் போக அடங்கின. அவர் தொகுதிக்கு அப்பாற்பட்டவராக இருந்தாலும், பூவை ஞானம், மதுரவாயல், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் மூலமாகவும், கட்சி ரீதியாகவும் அறிமுகமானவர் என்பதாலும், இரட்டை இலைக்கான வாக்கு வங்கி இவரைத் தூக்கிப் பிடிக்கும். பெரும் பணப்பசை இருந்தாலும், தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவோடு ஒப்பிடுகையில், மலைக்கும் மடுவுக்குமான போட்டியாக இருப்பதால், இத்தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

-அரவிந்த்

காஞ்சிபுரம்

kanci

காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக செல்வம், அ.தி.மு.க. வேட்பாளராக பெரும் பாக்கம் ராஜசேகர், பா.ம.க. சார்பாக ஜோதிவெங்கடேசன், நாம் தமிழர் கட்சியில் சந்தோஷ் குமார் போட்டியிடுகின்றனர். இவர்களில் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. சிட்டிங் தி.மு.க. எம்.பி. செல்வம் தொகுதியில் அறியப்பட்டவர். மா.செ. சுந்தரின் முழு ஆதரவுடன் உடன்பிறப்புக்களோடு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கிறார். பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தியதில் அப்பகுதி மக்களின் கோபத்தால் வாக்குகள் குறைய வாய்ப்புள் ளது, மற்றபடி காஞ்சிபுரம் கிராமப் பகுதிகளிலும், உத்தரமேரூர், மதுராந்தகம், திருப்போரூர், செங்கல்பட்டு பகுதிகளிலும் முன்னிலை வகிப்பார். கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவும் தூக்கி நிறுத்தும். அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜ சேகர், தொகுதிக்கு அப்பாற்பட்டவராக இருந்தாலும், அ.தி.மு.க. வாக்கு வங்கியைக் கொண்ட செய்யூர், மதுராந்தகம், காஞ்சிபுரம் டவுன், பிள்ளையார் பாளையம் பகுதிகளில் முன்னிலை வகிப்பார். பெரும் செல்வந்தர் என்பதால் பணத்தை இறைத்து கடும் போட்டியை ஏற்படுத்துகிறார். மேலும் மீனவ வாக்கு கள், பா.ம.க.வின் அதிருப்தி வாக்குகள் இவருக்கு வலுச் சேர்க்கும். இரட்டை இலை கட்சி ஓட்டு இவருக்கு கை கொடுக்கும். பா.ம.க. ஜோதிவெங்க டேசன், திருவள்ளூரிலிருந்து வந்து போட்டி யிடுவதாலும், பெரிதாக பண பலம் இல்லாத தாலும், இங்கே செல்வாக்கு குறைவாக உள்ளது. நாம் தமிழர் கட்சியின் சந்தோஷ்குமாருக்கு பரவலாக வாக்கு வங்கி இருப்பதால், பா.ம.க. வேட்பாளரோடு மூன்றாமிடத்துக்கான போட்டியில் இருக்கிறார். இத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செல்வம் முந்துகிறார்.

-அரவிந்த்

கோவை

kk

"எந்தெந்தப் பகுதி களில் தி.மு.க.விற்கு வாக்கு எண்ணிக்கை குறைகின்றதோ, அந்தப் பகுதிகளுக்கு சொந்தமான வார்டு செயலாளர், பகுதி கழக செயலாளர், மா.செ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும். மாநகரப் பகுதியில் வாக்கு எண்ணிக்கை குறைந்தால் மேயருக்கும் இதே கதிதான்'' என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எச்சரித்து கழக நிர்வாகிகளை முடுக்கிவிட்ட நிலையில், வெற்றிக்கோட்டைத் தொடுகின்றார் கோவை தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார். சமூக வலைத்தளங்களில் மாஸ் காட்டுவதையும், "தாமரைக்கு ஓட்டு போடுங்க... வங்கியில் ரூ.1 லட்சம் லோன் வாங்கிக்கோங்க, திரும்ப செலுத்த வேண்டாம்!' என்ற பொய்ப் பிரச்சாரத்தையும் நம்பியே பா.ஜ.க. வேட்பாளர் களத்திலிருக்கிறார். பல இடங்களில் வாக்குச் சாவடிக்கான முகவரே இல்லை. இறுதிக் கட்டத்தில் அரவக்குறிச்சி சிவக்குமாரையே நம்பியிருக்கிறார். தொழிலதிபர்களை நம்பியிருக்கும் இவர், இரண்டு லட்சம் வாக்குகளை மட்டுமே பெறுவார். பா.ஜ.க.வை கவர்வதற்காகவே சிங்கை ராமச்சந்திரனை அ.தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்கியுள்ளார் மாஜி வேலுமணி. தாமரைக்கட்சி வேட்பாளருக்கு பயந்து, சிங்கை ராமச்சந்திரனுடன் ஒரு நாள்கூட வேலுமணி பிரச்சாரம் செய்யவில்லை. இங்கே அ.தி.மு.க.வுக்கு இரண்டாமிடம். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கலாமணி, பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தி.மு.க.வின் வெற்றி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியால் வந்த வெற்றியாக இருக்கும். செந்தில் பாலாஜியின் கரூர் ஆட்கள் களமிறங்கி வேலை பார்த்து வருவதால் தி.மு.க. இங்கு முதலிடம் பெறும். தாமரைக்கட்சியே மூன்றாமிடம்தான் பெறும் என்கின்றது கள நிலவரம்.

-நாகேந்திரன்

pollபொள்ளாச்சி

முன் திட்டமிடுதல், தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றங்களில் அ.தி.மு.க. ச.ம.உ.க்கள் குறிப்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் களப்பணி ஆகியவற்றாலும், சிட்டிங் எம்.பி. மீதான அதிருப்தி, தி.மு.க.விலுள்ள கோஷ்டி பூசல் ஆகியவற்றால் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க., அ.தி.மு.க.வுக்கே கடும்போட்டி என்கிறது கள நிலவரம். தி.மு.க.வின் சாதனை மற்றும் தி.மு.க.வினரின் கடைசிநேர களப்பணி தன்னை கரையேற்றிவிடும் என வேட்பாளர் ஈஸ்வரசாமி நம்பிக்கையோடு உள்ளார். சிட்டிங் எம்.பி. சண்முகசுந்தரம் கடந்த முறை வெற்றிபெற்ற பிறகு கிணத்துக்கடவு பகுதிக்குட்பட்ட கரடி வாவி, மயிலேறிபாளையம் மற்றும் செட்டிப்பாளையம் பகுதிக்கு இன்று வரை நன்றி தெரிவிக்காததை எண்ணி ஆதங்கப்படுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்த வாக்குகளை கவருவதில் பா.ஜ.க. மும்முரம் காட்டுவது தனிக்கதை. அ.தி.மு.க. வேட்பாளராக அறி விக்கப்பட்டிருக்கும் கார்த்திகேயே னுக்கு இது சொந்த ஊர் என்பது பலம். முன்னரே திட்டமிட்டபடி வேலுமணி யோசனையில் வார்டு வாரியாக, பணத்தை வாரியிறைத்து அடிமட்ட வேலைகளை முடித்து வைத்து பட்டுவாடாவிற்காக மட்டும் காத்திருக்கின்றது. இதே வேளையில், "நானும் இருக்கின்றேன்' என சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கில் சுற்றி வருகின்றார் பா.ஜ.க.வின் வசந்தராஜன். இது இப்படியிருக்க, உளவுத்துறை குறிப்பின்படி கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் சிந்துலிப்பு, கரடிவாவி, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் செங்காண்டி புதூர், ஜமுக்கான்டி மற்றும் தூங்காவி பகுதிகளில் "தேர்தல்ன்னா என்ன..?' என கேட்குமளவிற்கு அப்பகுதி மக்களுக்கு கட்சி சின்னமும், வேட்பாளர் களும் தெரியாததுதான் வேதனை. மேலும், தி.மு.க.வில் பூத் கமிட்டி மிகவும் பலவீனமாக உள்ளது. இங்கு தி.மு.க., அ.தி.மு.க.வுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

-நாகேந்திரன்

திருப்பூர்

tir

திருப்பூர் தொகுதியில் தற்போது சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன், தி.மு.க. கூட்டணி சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார். ஏறக்குறைய 16 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் சுமார் 30,000 வடமாநில தொழிலாளர்கள் வாக்கும் உள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி பெருந் துறை சுப்பிரமணிக்கு நெருக்கமான அருணாச்சலம் வேட்பாளர். பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் நிர் வாகியான முருகானந்தமும், நாம் தமி ழர் சார்பில் சீதாலட்சுமியும் களமிறங்க நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. நேரடிப் போட்டி இந் திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அ.தி.மு.க.வுக்கும்தான். சுப்பராயனுக்கு பலமே தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும்தான். ஈரோடு அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதனோடு, திருப்பூர் எம்.எல்.ஏ. செல்வராஜ் ஆகியோர் இடைவிடாது பணியாற்றி பெருவாரி யான ஆதரவைச் சம்பாதித்திருக்கிறார்கள். வைட்ட மின் "ப' விசயத்தில் தி.மு.க.வே செலவு செய்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் அருணாச்சலத்துக்கும் கருப்பணன், கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார் என அ.தி.மு.க. நிர்வாகிகள் போட்டிபோட்டு வேலை செய்கிறார்கள். வைட்டமின் "ப' வும் அ.தி.மு.க. தரப்பில் தாராளமாக புழங்குகிறது. பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்தம் கவுண்டர், வன்னியர் சமூக ஓட்டுகள் தனக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கிறார். இச்சமுதாய வாக்குகள் தி.மு.க. கூட்டணிக் கும் சாதகமாக இருப்பதே நிஜ நிலவரம். தனித்து களமாடும் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி சுறுசுறுப்பாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். கடந்த 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் ஜவுளித் தொழில் நசிவு, வேலையிழப்பு, வருமான இழப்பு என லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை பிரச்சாரத்தில் எடுத்துவைக்கும் வேட்பாளர் சுப்பராயன் முன்னிலையில் உள்ளார்.

-ஜீவாதங்கவேல்

நீலகிரி

nil

தி.மு.க. சார்பில் ஆ.ராசா, அ.தி.மு.க. சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன் மற்றும் பா.ஜ.க. சார்பில் எல்.முருகன் ஆகியோரே நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் பிரதான வேட்பாளர்களாக வாக்கு சேகரித்து வருகின்றனர். துவக்கத்தில் அ.தி.மு.க. பற்றி பேச்சு எதுவும் இல்லாததால், அதனை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு ராஜ்யசபா எம்.பி. பதவி இருப்பினும் எனக்கான வெற்றி வாய்ப்பு இங்கு இருக்கின்றது என பா.ஜ.க. எல்.முருகன் களத்திலிறங்க தி.மு.க., பா.ஜ.க. போட்டியாக உருமாறியது. எடப்பாடி பழனிச்சாமியின் ஊட்டி, காரமடை விசிட்டுக்கு பின் அ.தி.மு.க.வும் கவனத்தைப் பெற்றது. நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட கோவில்களுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான "முடி காணிக்கை' வழங்கியதும், தேயிலைக்கு சரியான விலை நிர்ணயம் மற்றும் படுகர் இனத்தவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பேன் எனவும் உறுதி கூறியதும், நரேந்திரமோடியின் விசிட்டும் எல்.முருகனுக்கு பலம் சேர்த்தது. ரூ.100 கோடி வைட்டமினும், நீலகிரி மாவட்டத்தின் கட்சி வாக்குகளோடு மேட்டுப்பாளையம், அவிநாசி பகுதியிலுள்ள அருந்ததியர்களின் குறிப்பிட்ட சதவிகித வாக்குகளும், படுகர் சமூகத்தின் குறிப்பிட்ட சதவிகித வாக்குகளுமாக சேர்த்து இரண்டாமிடத்தையே எல்.முருக னின் தாமரைக்குப் பெற்றுத் தரும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். எந்த மலை மாவட்டத்திலும், மலைப்பகுதிகளிலும் இல்லாத ஒன்றாக ஊட்டியில் 700 படுக்கை வசதி கொண்ட மருத்துவக்கல்லூரியை தொகுதிக்கு கொண்டு வந்தது ஆ.ராசாவிற்கு பலம். அது போக, முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியின் அவிநாசி பிரச்சாரமும், கட்சிக்கென உள்ள வாக்குகள், தாயகம் திரும்பிய மக்களின் வாக்குகள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் மற்றும் படுகர்கள் சமூக வாக்குகளும் ராசாவை வெற்றிக்கோப்பையை ஏந்த வைக்கின்றன.

-நாகேந்திரன்

தர்மபுரி

dh

தர்மபுரி நாடாளு மன்றத் தொகுதியைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. என மும் முனைப்போட்டியே நிலவுகிறது. தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி .மு.க. 3 தொகுதிகளையும் பா.ம.க. 3 தொகுதிகளையும் கைப்பற்றி யிருக்கிறது. இதில் ஒரு சட்டமன்றத் தொகுதிகூட தி.மு.க. கூட்டணி வசம் இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித் தனி அணியாகக் களம் காண்பது இரு அணிக்குமே பலவீனம். தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியைத் தீர்மானிப்பதில் வன்னியரின் 35 சதவிகித ஓட்டுக் களும், ஆதிதிராவிடரின் 25 சதவிகித ஓட்டுக்களும், கொங்கு வேளாளர் சமூகத்தின் 15 சதவிகித ஓட்டுக்களும் முக்கிய பங்கு வகிக்கும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என வலம் வந்து கொண்டிருக்கிறார். சீமானின் தம்பிகள் வெற்றிலிதோல்வி பற்றி கவலையின்றி வாக்குச் சேகரிப்பில் மும்முரம் காட்டுகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 47 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க. வெற்றி பெற்றது. இந்தமுறை வன்னியர்களின் 35% வாக்குகளை முடிந்தவரை முழுமையாக வாங்கிவிட்டால் வெற்றி நிச்சயம் என பா.ம.க வேட்பாளர் சவுமியா களம் காண்கிறார். மூன்று கட்சி வேட்பாளர்களும் வன்னியர் என்பதால் அது அவ்வளவு சுலபம் இல்லை. அ.தி.மு.க. மா.செ.வான அன்பழகன், அவரது விசுவாசியான அசோகனுக்கு சீட் வாங்கிக் கொடுத்ததால் அதிருப்தியில் இருந்தவர்கள் உள்ளடி வேலையில் ஈடுபடுவது பின்னடைவே. தி.மு.க. கூட்டணி பலமாக இருக்கிறது. தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி மக்கள் மத்தியில் அறிமுகமானவர். வி.சி.க.வின் வாக்குகள் பெரிதும் சிதறாமல் கிடைப்பதும், கழகக் கண்மணிகளின் சோர்வுதட்டாத பிரச்சாரமும், கட்சிப் பணிகளும் வேட்பாளர் வெற்றி மணியோசை கேட்கத் துணைசெய்யும்.

-அ.அருண்

கிருஷ்ணகிரி

kk

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கிடையே மும்முனைப் போட்டி என நினைத்திருக்க, வீரப்பன் மகள் வித்யா ராணியை நிறுத்தி, நாம் தமிழர் கட்சி மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் பா.ம.க. கட்சியில் மா.செ.வாக இருந்து அ.தி.மு.க.வில் இணைந்தவர். அவர் நாயுடு சமூகத்தை சார்ந்தவர் என்பதால் வன்னியர் சமூக வாக்கு ஓரளவே கிடைக்கும். அ.தி.மு.க.வின் கே.பி முனுசாமி, வீரப்பன் மகளுக்கு மறைமுக ஆதரவு கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் 2.4 சதவிகித நாம் தமிழர் வாக்கோடு வன்னியர் சமூக வாக்குகளும் சாய்வதால் கவனத்துக்குரிய வேட்பாளராகியிருக்கிறார். ஜெயப்பிரகாஷ் தன்னிடமுள்ள வைட்டமின் "ப' மூலமும், அ.தி.மு.க. விசுவாச வாக்குகள் மூலமும் ஆட்டத்தைத் தனக்குச் சாதகமாக்கப் போராடுகிறார். தி.மு.க. கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் வேட்பாளரான கோபிநாத் ஏற்கனவே ஓசூர் மக்கள் மத்தியில் பரீட்சயமானவர். முன்பு எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். தி.மு.க. மா.செ. மதியழகன், கூட்டணிக் கட்சிகள் வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகள் பலத்தால் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தொடக்கத்தில் இத்தொகுதியைக் கேட்டு கிடைக்காத வருத்தத்திலிருந்த தி.மு.க.வினரின் அலட்சியம் இவருக்கு பிரச்சினையாக இருந்தது. அதைச் சரிசெய்து தற்போது வெற்றிப் பாதையை நோக்கி ஸ்டியரிங்கை திருப்பியதால், அவரது வாகனம் அனைவரையும் முந்திச் சென்றுகொண்டி ருக்கிறது.

-அ.அருண்

இராமநாதபுரம்

rm

இராமநாதபுரம் தொகுதியில், ஓ.பி.எஸ். வாங்கும் ஒவ்வொரு ஓட்டும் அ.தி.மு.க.வை தோல்வியடையச் செய்து, தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியை வெற்றிபெற வைக்கும் என்கின்றனர் கள நிலவரம் அறிந்தவர்கள். தொகுதியில் பெரும்பான்மையாக இருப்பது முக்குலத்தோர், இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின மக்களே. நவாஸ்கனியைத் தவிர்த்து, அ.தி.மு.க.வின் ஜெயம்பெருமாளும், பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ்.ஸும் தேவர் சமூகத்தினை சார்ந்தவர்கள். இதே வேளையில், தேவர் திருமகனாருக்கு மண்ட பங்களும், மருதிருவருக்கு மரியாதை யும் அரசு தரப்பில் செய்து கொடுத்து வாக்குகளை தன் பக்கம் ஈர்த்துள்ளது தி.மு.க. கடந்த தேர்தல்களில் புதிய தமிழகம் இத்தொகுதியில் 90 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றதால், தேவேந்திர குல வேளாளர்களின் ஆதரவு தங்களுக்கே என்கிறது அ.தி.மு.க. தரப்பு. பா.ஜ.க., அ.ம.மு.க. கட்சிகளின் ஆதரவு வாக்குகளும், தங்கள் சமூக வாக்குகளும் கரை சேர்க்குமென்ற நம்பிக்கையில் ஓ.பி.எஸ். நிற் கிறார். எனினும், தேனியிலிருந்து ஆட்களை வரவழைத்து பணி செய்வதால் உள்ளூர் பா.ஜ.க.வினர் ஓ.பி.எஸ்.ஸிடமிருந்து விலகியே இருக்கின்றனர். ஓ.பி.எஸ்.ஸை மூன்றாமிடத்திற்கு தள்ள வேண்டு மென்று ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் வரிந்துகட்டுவதும் ஓ.பி.எஸ்.ஸுக்கு பின்னடைவே. இமானுவேல் சேகரனார் நினைவு மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி தேவேந்திர குல வேளாளர் பக்கம் நாங்கள் இருக்கின்றோம் என்கிறது தி.மு.க. இதுவும் தி.மு.க. கூட்டணி வேட் பாளருக்கு ப்ளஸ். இதனால் ஏணி வெற்றிக்கோட்டை தொட்டுள்ளது.

-நாகேந்திரன்

சிவகங்கை

siva

சிவகங்கை நாடாளு மன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம் பரம், அ.தி.மு.க. வேட் பாளராக சேவியர்தாஸ், இன்னொரு பக்கம் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி கழகத்தின் தேவநாதன். "மைலாப்பூர் பெர்மனெண்ட் பண்ட்' எனும் நிதி நிறுவனத்தின் மூலம் பல கோடிகளை ஏமாற்றிவிட்டு இங்கு பா.ஜ.க. சின்னத்தில் வேட்பாளராக களமிறங்கி யுள்ளார் தேவநாதன் என் கின்ற தகவல் கிராமந்தோறும் சென்றிருக்க, வேட்பாளரை எரிச்சலடைய வைத்திருப்பதுதான் நிஜம். "ஜெயிச்சா எம்.பி., தோத்தால் மா.செ' என்கின்ற கணக்கில் அ.தி.மு.க. வேட்பாளர் சேவியர்தாஸ் சுற்றி வர, எப்படியும் ஜெயிக்க வைச்சு அனுப்பிவிடுவோம் என்கின்ற மனநிலை மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாத னுக்கு. வலுவான கட்டமைப்பு, பா.ஜ.க. இல்லா ததது, சாதி பலம் போன்றனவற்றின் கீழ் இயங் கும் வேட்பாளர் சேவியர்தாஸுக்கு செல்கின்ற இடமெல்லாம் வரவேற்பு கூடிவருகின்றது. "வலுவான கூட்டணி பலம், சிறு பான்மையினர் ஆதரவு போன்றவை கார்த்தி சிதம்பரத்திற்கு தெம்பைக் கொடுக்கின்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் கண்டிப்பாக தொகுதிக்காக செய்திருப்பார். இருந்தாலும் அவருடைய தகுதிக்குட்பட்டு நலத்திட்டங்களை தொகுதிக்குள் கொண்டு வந்திருக்கின்றார். களத்தில் அமைச்சர்கள் தீவிரமாக பணியாற்றுவதால் வெற்றி காங் கிரஸ் வசமே. இருப்பினும் கடைசிநேர கவனிப்புக்களால் அ.தி.மு.க. முன்னுக்கு வரலாம். இருப்பினும் கடும் போட்டி என்கின்றது கள நிலவரம்.

-நாகேந்திரன்

திருச்சி

trichy

திருச்சி தொகுதியில், தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. வேட் பாளர் துரை வைகோ, அ.தி.மு.க. சார்பில் கருப்பையா, பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில், துரை வைகோ, கருப்பையாவிற்கு இடையில்தான் இருமுனைப் போட்டி நடக்கிறது. அ.ம.மு.க. வேட்பாளர் தன் பங்கிற்கு வாக்குகளைப் பிரிப்பார். அதேபோல் ராஜேஷ், திருவெறும்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்குகளைப் பிரிப்பார். எனவே இத்தொகுதியில் இன்றைய நிலைமையில் இழுபறியே நீடிக்கிறது. அதற்கு காரணம், ஆரம்பத்தில் பெரிய ஆர்வம் காட்டாத தி.மு.க. கூட்டணி, கடந்த சில நாட்களாகத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு அமைச்சர்களும் மாறி மாறி துரை வைகோவிற்காக தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதைவிடத் தீவிரமாக அ.தி.மு.க. கருப்பையா ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். எனவே இவர்கள் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் துரை.வைகோ வெற்றி பெறுவதற்கு போராடவேண்டிய நிலை உள்ளது. அதிலும் கடந்த முறை இந்தத் தொகுதி யில் வெற்றிபெற்ற திருநாவுக்கரசரைப் போல 4 லட்சம் வாக்குகள் வித்தி யாசமெல்லாம் வராது. சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவார்கள். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை பணம் தான் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும்.

-துரை.மகேஷ்

பெரம்பலூர்

pp

பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு, இத்தொகுதிக்கு புதியவராக இருந்தாலும், இளம் வேட்பாளராக உள்ளார். அதே சமயம் ஏற்கெனவே இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாரிவேந்தர், 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மீண்டும் இந்தத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் அ.தி.மு.க. சார்பில் சந்திரமோகன் போட்டியிடுவதால், இந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டி நடக்கிறது. தி.மு.க. அமைச்சர், எப்படியும் தன் மகனை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். பாரிவேந்தர் எம்.பி.யாக இருந்த சமயங்களில் அவர் நலத்திட்டங்களைச் செயல்படுத்திய கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, "நான் எம்.பி.யாக இருப்பதால் தான் உங்களுடைய தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முடிகிறது' என வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்காளர்களுக்கான பணத்தையும் வாரிக் கொடுத்துவருகிறார். மற்றொரு பக்கம் சந்திரமோகன் மிகவும் பரிட்சயமான முகம் என்பதால் அவரும் தன்னுடைய பங்கிற்கு வாக்குகளைப் பிரிப்பார். இந்த முறை பாரிவேந்தருக்கும், அருண் நேருவிற்கும் தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே இவர்களில் இளம் தலைமுறைக்குத் தான் இந்த முறை வாய்ப்பளிக்க வேண்டும் என்ற மனநிலையில் வாக்காளர்கள் இருப்பதால், அருண் நேரு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

-துரை.மகேஷ்

கரூர்

kk

கரூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தங்கவேல், பா.ஜ.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கருப்பையா மற்றும் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 54 வேட்பாளர் களுடன், தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது. இத்தொகுதியில் சிட்டிங் எம்.பி.யாக ஜோதிமணிக்கும், பா.ஜ.க. வேட்பாளர் செந்தில்நாத னுக்கும் தான் நேரடிப்போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர், பெயரளவில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளராகவே கருதப்படுகிறார். பா.ஜ.க. வேட்பாளர் முன்பு அ.தி.மு.க.வில் இருந்தவர். தொகுதிக்கு நன்கு பரிட்சயமானவர். ஜோதிமணி மீது இதுவரை எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் எழுந்ததில்லை. அதேபோல் பாராளுமன்றம் நடக்கும் தேதிகளைத்தவிர மற்ற நாட்களில் பெரும் பாலும் தொகுதியில் வலம் வந்து மக்களைச் சந்தித்துள்ளார். பா.ஜ.க.விற்கு எதிரான பல போராட்டங்களில் பங்கேற்றுக் குரல் கொடுத்துள்ளார். பொது மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு கண்டுள்ளார். இதெல்லாம் அவருக்கு வெற்றி வாய்ப்பைத் தேடித் தருவதாக அமைந்துள்ளது. இருமுனைப் போட்டி நிலவினாலும், கரூர் பாராளுமன்றத் தொகுதி மீண்டும் காங்கிரஸ் கைவசம் செல்வது உறுதியாகிவிட்டது. கடந்த முறை வெற்றி பெற்றது போல இந்த முறையும் சில லட்சங்களுக்குக் குறையாமல் வாக்குகள் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-துரை.மகேஷ்

திண்டுக்கல்

dd

திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தம், அ.தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முகமது முபாரக், பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா மற்றும் நாம் தமிழர் கட்சியில் கைலைராஜன் உள்ளிட்டோர் போட்டியிடு கிறார் கள். இதில் சி.பி.எம்., எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர்களுக்கிடையே தான் போட்டியே. பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெயரளவில்தான் களத்தில் இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. எஸ்.டி.பி.ஐ. வேட்பாளருக்கு, இரட்டை இலை விசுவாசிகளும் ர.ர.க்களும் வாக் களிப்பார்களே தவிர, இஸ்லாமிய சமூகத்தினர் வாக்குகள் பெரிதாக விழ வாய்ப்பில்லை என்கிறார்கள். அ.தி.மு.க. மாஜிக்களான சீனிவாசனும், விஸ்வநாதனும் பிரச்சாரத்துக்கு உடன் வந்தபோதிலும், கடந்த தேர்தலைவிட சற்று கூடுதலாக முபாரக் வாக்கு வாங்கலாமே தவிர வெற்றியெல்லாம் எட்டாக்கனிதான். சி.பி.எம். வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்களான ஐ.பி.யும், சக்கரபாணியும் தீவிரமாக ஓட்டு வேட்டையாடுவது, தி.மு.க. கோட்டையான திண்டுக்கல்லில் செங்கொடியை பரவசமாகப் பறக்கச்செய்கிறது. களத்தில் செயல்படும் நிர்வாகிகளை வீடு வீடாக பிட் நோட்டீஸ் கொடுக்க வைப்பது, கண்காணிப்புக் குழு அமைத்து தேர்தல் பணிகளை முடுக்குவது எனத் திட்டமிட்டு தேர்தல் பிரச்சாரத்தை முன் னெடுக்கிறார்கள். கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியைவிட இத்தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டுமென்ற இலக்கோடு செயல்படும் தி.மு.க.வின் வேகத் துக்கு மற்றவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. சச்சிதானந்தத்தின் வெற்றி உறுதி செய்யப்படுவ தோடு, உதயசூரியனால் செங் கொடிக்கு நிரந்தர அங்கீகாரமும் கிடைக்கப் போகிறது!

-சக்தி

சிதம்பரம்

ff

சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க. வேட்பாளராக செந்துறை முன்னாள் ஒன்றிய சேர்மன் தாமரைப்பூண்டி சந்திரகாசன், பா.ஜ.க. வேட் பாளராக கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சிராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த முறை திருமா வெற்றிபெற தினகரன் கட்சி பிரித்த ஓட்டுக்களே காரணம். இந்த முறை அந்த வாக்குகள் பா.ஜ.க. கூட்டணிக்கு கிடைக்கும். பா.ம.க. 2014ல் தனித்துப் போட்டியிட்டு 2,79,000 வாக்குகள் பெற்றதால், இம்முறை வெற்றி பெறும் நம்பிக்கையிலிருக்கிறார் கார்த்தியாயினி. இம்முறையும் தி.மு.க.வுக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் தி.மு.க.வினரின் பிரச்சாரத்தில் சற்று சுணக்கம் காணப்படுகிறது. சிறுபான்மை யினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கே விழுவது திருமாவுக்கான பலம். மேலும், 2019ல் திருமா 3,219 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது தி.மு.க., கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் அமைப்புகளும் கூட்டணியிலிருப்பதால் வெற்றி பெறும் தன்னம்பிக்கையோடிருக்கிறார். இம்முறை பட்டியலின மக்களின் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கும் பிரிய வாய்ப்புள்ளதால், அக்கட்சி வேட்பாளரும் வெற்றிக்கான எதிர்பார்ப்பில் இருக்கிறார். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு தி.மு.க. முயற்சிக்கவில்லை என்ற திண்ணைப் பிரச்சாரம், வன்னிய கிராமங்களில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராகக்கூடும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் பெறும் முனைப்பிலிருக்கிறார். நான்கு முனைப் போட்டியில், கூட்டணிக்கட்சியினர் கடுமையாக உழைத்தால் இம்முறையும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் திருமா வெற்றிபெற வாய்ப்புள்ளது.

-எஸ்.பி.எஸ்.

கடலூர்

cc

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஷ்ணுபிரசாத், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து, பா.ம.க. வேட்பாளர் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆசிரியர் சங்கத் தலைவர் மணிவாசகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நான்குமுனை போட்டியில், காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் வாக்குகள் சற்று அதிகரிக்கக்கூடும். இந்த ரேசில் விஷ்ணுபிரசாத், தங்கர்பச்சான், சிவக்கொழுந்து மூவரும் நீயா? நானா? என ஒருவரை ஒருவர் முந்தப் பார்க்கிறார்கள். தே.மு.தி.க. வேட்பாளர் சிவக் கொழுந்தை ஆதரித்து எடப்பாடி, பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்து சென்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டா லின் பிரச்சாரம் செய்துள்ளார். விஷ்ணுபிரசாத் ஆரணி தொகுதியைச் சேர்ந் தவர். எனவே அவர் வெற்றிபெற்றால் அவரைச் சந் திப்பது கடினம். மண்ணின் மைந்தரான தங்கர்பச்சா னுக்கு வாக்களியுங்கள் என கிராமம்தோறும் பா.ம.க.வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்தும் மண்ணின் மைந்தன்தான். அ.தி.மு.க.வின் பலம் குறையவில்லை என்பதை நிலைநிறுத்த அக்கட்சியினர் பம்பரமாகச் சுழன்று தேர்தல் வேலை செய்துவருகிறார்கள். பா.ம.க.வின் நிலையான வாக்கு வங்கியோடு, பா.ஜ.க.வின் கவர்ச்சி தன்னை கரைசேர்க்கும் என்ற நம்பிக் கையோடு பிரச்சாரத்தில் உள்ளார் தங்கர்பச்சான். எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சி.வி. கணேசன், இருவர் ஆதரவுடன் கூட்டணி பலம் தன்னை வெற்றி பெறவைக்கும் என்றிருக்கிறார் விஷ்ணுபிரசாத். மும்முனைப் போட்டி யிலுள்ள கடலூர் தொகுதியில் யார் வெற்றிபெற்றாலும் குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெறமுடியும். வாக்காளர்களுக்கான இறுதிநேரக் கவனிப்புகள் வாக்காளர் களிடம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். வெற்றி ஊசலாட்டத்தில்.…

-எஸ்.பி.எஸ்.

கள்ளக்குறிச்சி

kk

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக இருக்கிறார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பதவியில் இருந்தபோது கட்சியினருக்கு பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது. இதனால் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டதுமே கட்சி நிர்வாகிகளை அழைத்து, இதுவரை உதவிகள் செய்யாததற்காக மன்னிப் புக் கேட்டதோடு, தனக்கு ஒத்து ழைக்குமாறு கேட்டுக்கொண்டிருக் கிறார். ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி இந்த மூன்று தொகுதிகளும் குமரகுருவுக்கு சவாலாக இருக்குமெனத் தெரிகிறது. தி.மு.க. வேட்பாளர் மலையரசனுக்கு, தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மிகப்பெரும் பலமாக உள்ளது. எந்த அதிருப்தியும் இல்லாத புதுமுக வேட்பாளர் என்ப தால் இம்முறை அவருக்கு வாய்ப்பளிக்கலாமென்ற எண்ணம் வாக்காளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது மேலும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவ லிங்கம், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகியோரின் செல்வாக்கும் மலையரசனுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரமும் வலுச் சேர்க்கிறது. பா.ம.க. வேட்பாளர் தேவதாஸ், பா.ஜ.க.வினரோடு சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். தேச நலன் சார்ந்து பா.ஜ.க. வினரோடு கூட்டணியிலிருப்பதை எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசபாண்டியனும் கட்சித் தொண்டர்களுடன் வீதி வீதியாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளருக்காக அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதர வும் சேர்ந்து, தி.மு.க. வேட்பாளர் வெற்றிக் கோட்டை நோக்கி சென்றாலும் போட்டி கடுமையாக உள்ளது.

-எஸ்.பி.எஸ்.

விழுப்புரம்

vv

விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பானை சின்னத்தில் மீண்டும் சிட்டிங் எம்.பி. ரவிக்குமார் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் காந்தலவாடி பாக்கியராஜ், பா.ம.க. சார்பில் முரளிசங்கர், நாம் தமிழர் கட்சி சார்பில் திரைப்பட இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நான்குமுனை போட்டியில் உள்ளது விழுப்புரம் தொகுதி. கடந்த முறை வெற்றி பெற்றதுபோல் தற்போது ரவி குமாருக்கு சுலபமான வெற்றி கிடைக்காது. எனவே அவர் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோரின் வழிகாட்டு தலின்படி கடுமையான பிரச் சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இத்தொகுதி, அ.தி.மு.க. வலிமையாக உள்ள தொகுதி. மேலும், தே.மு.தி.க. அதன் கூட்டணியில் உள்ளது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தே.மு.தி.க., அ.தி.மு.க. தொண்டர்கள் அவரவர் கட்சிக்கு இந்த முறை வாக்களிப்பார்கள் என்ற நிலை உள்ளதாகக் கூறுகின்றனர். எம்.பி. ரவிக்குமார் கடந்த ஐந்து ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படி பிரதான திட்டங்கள் எதையும் தொகுதிக்கு கொண்டுவர வில்லை என்ற பேச்சு தொகுதி மக்களிடம் உள்ளது. அதைச் சரிசெய்வதற்கு முயற்சி செய்துவருகிறார். அ.தி.மு.க. பாக்கியராஜ் அறிமுக வேட்பாளர். இவருக்கு பலம் சி.வி. சண்முகம். பாக்யராஜ் வெற்றிபெற கட்சியினரை முடுக்கிவிட்டுள்ளார். பா.ம.க. வேட்பாளர். முரளிசங்கர் போட்டியிலிருந்தாலும் பிரதான போட்டி வி.சி.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இடையேதான். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் முன்பைவிட கூடுதலான வாக்குகளைப் பெறுவார். தற்போதைய நிலவரப்படி மீண்டும் ரவிக்குமார் வெற்றிபெறுவதற்கு இன்னும் கடுமையான உழைப்பு தேவை.

-எஸ்.பி.எஸ்.

நாகப்பட்டினம்

nn

நாகப்பட்டினம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ் பிரச்சாரம் செய்யுமிடங்களில், "நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க! கட்சி மீட்டிங்கில் மாதிரி இங்கேயும் ஒரு பாட்டு பாடுங்க'' என கேட்பதும், இவரும் பாடி முடித்ததும், "வெற்றிபெற்றால் நீங்கள் கேட்டதைச் செய்வேன். எனக்கு ஓட்டுப் போட்டுடுங்க'' எனச் சொல்வதுமாக, கலகலப்பாயிருக்கிறது இவரது பிரச்சார உத்தி. இவருக்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து வாக்கு சேகரிப்பது இவரது பலம். அ.தி.மு.க. வேட்பாள ரான சுர்ஜித் சங்கருக்கும் தொகுதிக்கும் பெரிதும் தொடர்பில்லாதது அவரது பிரச்சாரத் திலேயே வெளிப்படுகிறது. மாஜி ஓ.எஸ்.மணியனை மட்டுமே நம்பியதால், மற்றொரு மாஜியான காமராஜின் ஒத்துழைப்பு இவருக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் எஸ்.ஜி.எம்.ரமேஷ், "அரசியலுக்கு நான் புதுசு இல்ல, என்னோட அப்பா மிகப்பெரிய அரசியல்வாதி. கம்யூனிஸ்டுகளிடம் நேர்மை இல்லை. அதனால்தான் பா.ஜ.க.வில் இணைந்து போட்டியிடுகிறேன்'' எனக்கூறி வாக்கு சேகரிக்கிறார். எனினும், பிரச்சாரத்திற்கு போகுமிடமெல்லாம் ரமேஷுக்கு கண்ணிவெடியாக மக்கள் வெடிப்பது அவரை ஆத்திரமடையச் செய்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் கோவையைச் சேர்ந்த கார்த்திகா போட்டியிடுகிறார். அவரிடம், "நீங்க கோயம்புத்தூரிலிருந்து இங்க வந்திருக்கீங்க. ஏற்கெனவே நின்றவங்க சரியில்லைன்னு அர்த்தமா?'' எனக் கேட்பதற்கு பதில் தர இயலாமல் திகைக்கிறார். தொகுதி முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட், தி.மு.க., வி.சி.க., இஸ்லாமியர்களின் ஆதரவால் கதிர் அரிவாளுக்கான அனலே வீசுகிறது.

-க.செல்வகுமார்

மயிலாடுதுறை

mm

மயிலாடுதுறை தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் புதுமுகமான சுதாவுக்கு காங்கிரஸ் கட்சியினர் முழு ஆதர வளிக்கத் தயங்கினாலும், முதல் வரின் வேண்டுகோளுக்கிணங்க, தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக்கட்சி யினர் ஆரவாரத்தோடு அவரை கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்று வாக்கு சேகரிக்கிறார்கள். கிராமப்புற மக்களிடம், "எனக்குன்னு குடும்பம் கிடையாது. இத்தொகுதி யில் சாகும்வரை இருப்பேன். உங்க வீட்டுப்பெண்ணாக நினைத்து ஜெயிக்க வைங்க'' எனக்கேட்பதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளரான மயிலாடுதுறை மா.செ. பவுன்ராஜனின் மகன் பாபு. மகனுக்காக பவுன்ராஜ் ஒவ்வொரு ஜமாத்திற்கும் சென்று, "எம்புள்ளைய உங்க பிள்ளையா நினைத்து ஓட்டுப்போடுங்க'' என வாக்கு சேகரித்தார். தேர்தல் நெருங்க நெருங்க, பூம்புகார் தவிர மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வாக்குகளைத்தாண்டி எதுவும் கிடைக்காதென்பதாலும், வன்னியர்களின் வாக்குகளும் பா.ம.க.வுக்கு செல்லுமென்பதாலும் வெற்றிக்கான நம்பிக்கை குறைந்துபோனது. பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாள ரான ம.க.ஸ்டாலின், அனைத்துக் கட்சியிலு முள்ள வன்னியர்களின் வாக்குகளைப் பெற்று விடும் நம்பிக்கையோடு, மாற்றுக் கட்சியிலிருக்கும் சமுதாயத் தலைவர்களுக்கும் சால்வை அணிவித்து ஆதரவு திரட்டுகிறார். இதனால் தனது சமுதாய வாக்குகளுடன் மூன்றாமிடம் நிச்சயமென்ற நம்பிக்கையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள், கடலோர மக்க ளையும், இளைஞர்களையும், நடுநிலையாளர் களையும் சந்தித்து, "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், நிச்சயம் மாற்றத்தை கொண்டு வருவேன்'' எனக்கூறி களமாடிவருகிறார். கடந்த தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை பெறக்கூடும். நான்கு முனைப் போட்டியில், கடந்த தேர்தலைவிடக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை முந்து கிறார் காங்கிரஸின் சுதா.

-க.செல்வகுமார்

தஞ்சாவூர்

tt

தஞ்சாவூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான முரசொலி, அனைத்து நிர்வாகி களையும் அரவணைத்து, தமிழக அரசின் நலத் திட்டங்களை எடுத்துக்கூறி தொகுதி முழுவதும் சுற்றி வந்துவிட்டார். முதலமைச்சரின் வருகைக்குப் பிறகு முரசொலி பிரச்சாரம் மேலும் விறுவிறுப்படைந்துள்ளது. கலைஞரின் முதல் பிள்ளை என்று மு.க.ஸ்டாலின் சொன்ன முரசொலி, களத்தில் முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க.வின் கருப்பு முருகானந்தம், மாஜி வைத்திலிங்கத்தின் ஆதரவு, அ.ம.மு.க.வால் கிடைக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கி, கே.கே.செல்வகுமாரால் கிடைக்கும் முத்தரையர் வாக்கு வங்கியோடு, கடைசி நேர கரன்சி பாசனத்தால் வெற்றிபெறும் நம்பிக்கையிலிருக்கிறார். ஆனால் அவரது எதிர்பார்ப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பி.சிவநேசனோ, 'நான் சீட்டு கேட்கல, ஆனால் கட்சித் தலைமை கொடுத்தது. அதைத் தட்டாமல் போட்டியிடுகிறேன்' என்றதோடு, அ.தி.மு.க.வின் கூட்டணி பலத்தை நம்பி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹுமாயூன் கபீர், சீமானின் தம்பிகளுடன் களமாடிவருகிறார். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், எங்களுக்கான வாக்குகளை நாங்கள் பெறுவோம்' என்ற முழக்கத்துடன் பிரச்சாரத்தில் இருக்கிறார். பா.ஜ.க.வின் அதிகப்படியான கரன்சி பாசனம் இருந்தாலும், தி.மு.க.வின் ஓரளவு கரன்சி பாசனமும் கூட்டணிக் கட்சிகளின் பலமும் உதயசூரியனைத் தக்கவைத்துக்கொள்ளும்.

-இரா.பகத்சிங்

நாமக்கல்

nama

நாமக்கல் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. மாதேஸ்வரன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வில் தமிழ்மணி போட்டியிடுகிறார். எண்ணெய் ஆலை, லாரி டிரான்ஸ்போர்ட் எனப் பசையுள்ள பார்ட்டியான தமிழ்மணி, கடந்த ஓராண்டாகவே தேர்தல் வேலைகளைச் செய்து வருகிறார். இவரை எப்படியும் வெற்றி பெற வைக்க மாஜி தங்கமணி தீயாக வேலை செய்கிறார். பணபலம், இரட்டை இலை சின்னம், சமுதாய பலத்தால் வெற்றிபெறலாமென நம்புகிறார் தமிழ்மணி. இம்முறையும் கொ.ம.தே.க. வெற்றியைத் தக்கவைக்க, தி.மு.க. கிழக்கு மா.செ. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் பம்பர மாய்ச் சுழல்கிறார்கள். பட்டியல் சமூகத்தினரின் வாக்குகளைக் கவர, வி.சி.க., ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகளுடன், அந்தந்த சமுதாயப் பிரமுகர் களைச் சந்தித்துப்பேசி வருகின்றனர். மகளிர் இலவசப் பேருந்து, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் ஆளும்தரப்புக்கு சாதகமாக உள்ளன. பா.ஜ.க. தரப்பில் போட்டியிடும் கே.பி.ராமலிங்கம், ராசி புரம், நாமக்கல்லில் கணிசமாக உள்ள நாட்டுக் கவுண்டர் சமூகத்தினரின் வாக்கு களைக் கவர்ந்தபோதும், டெபா சிட் பெறுவது கடினம் என்கிறார் கள். நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் கனிமொழி, நானும் வேட்பா ளர்தான் எனப் பத்தோடு பதினொன் றாகவே களத்தில் இருக்கிறார். கடந்த 2019 தேர்தலைப் போல அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் கொ.ம.தே.க. வெற்றி பெறாத போதும் உதயசூரியன் சின்னம், சமுதாய பலம், வலுவான கூட்டணி மற்றும் பண பலத்தால் வெற்றிபெற்றுவிடலாம் என நம்புகிறது. இருந்தாலும் கொ.ம.தேக., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

-இளையராஜா

சேலம்

salem

சேலம் நாடாளுமன்றத் தொகுதி யில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நா.த.க. என நான்குமுனைப் போட்டி என் றாலும், ஆளும் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையில் மட்டுமே நேரடிப் போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி அறி விக்கப்பட்டபோதே, பாதி வெற்றி உறுதி செய்யப்பட்டதாக பரவலாகப் பேசப்பட் டது. ஆனால், தி.மு.க.வில் நிலவும் உட் கட்சி பூசல்களால் டி.எம். செல்வகணபதி யின் வெற்றி அத்தனை எளிதல்ல என்பதே கள நிலவரம். டி.எம்.எஸ். தனக்கென ஒரு அணியை உருவாக்கி பிரச்சாரத்திற்குச் சென்றுவருகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷ், அரசியல் குடும்பத்திலிருந்து வந்தாலும் அவருக்கு இதுதான் முதல் தேர்தல் களம். இரட்டை இலை சின்னம், ஓமலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணியின் ஆதரவு, கரன்சி பலம் ஆகியவை பிளஸ் பாயிண்ட். பா.ஜ.க. கூட்டணியிலுள்ள பா.ம.க. தரப்பில் அண்ணாதுரை போட்டியிடு கிறார். அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆளும்தரப்பு, எடப்பாடி தரப்பினரின் 'கவனிப்புகளால்' மயங்கிவிட்டதால், மாம்பழத்துக்கு டெபாசிட்கூட தேறாது என்கிறார்கள். தர்மபுரியில் போட்டியிடும் சவுமியா அன்புமணியின் வெற்றிக்காக மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள அ.தி.மு.க. வாக்காளர்கள் உதவுவார்கள், அதற்குப் பதிலாக சேலம் நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. தொண்டர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றும் டீல் போட்டுள்ளனர். நா.த.க. வேட்பாளர் மனோஜ்குமாரும் தன் பங்குக்கு வாக்குகளைத் திரட்டிவருகிறார். பழுத்த அரசியல் அனுபவம், தொகுதி முழுக்க அறியப்பட்ட முகம், கரன்சி பட்டுவாடா, தி.மு.க. கூட்டணி பலம் காரணமாக டி.எம்.செல்வகணபதி எப்படியும் கரையேறிவிடுவார்.

-இளையராஜா

ஈரோடு

erode

ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கே.இ. பிரகாஷ், அ.தி.மு.க. வேட் பாளராக அசோக்குமார், தமிழ் மாநில காங்கிரஸின் விஜயகுமார், நாம் தமிழர் கார்மேகன் என நான்கு வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் நேரடிப் போட்டி தி.மு.க. - அ.தி.மு.க.வுக்குதான். அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் வேட்புமனு தாக்க லின்போதே தனக்கு 600 கோடி சொத்து உள்ளதாகக் கணக்குக் காட்டி பலரையும் அதிரவைத்தார். பா.ஜ.க.வில் இருந்த அசோக்குமார் சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து விலகி எடப்பாடி பழனிச் சாமியைச் சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார். தாராளமாக செலவழிக்க நான் தயார் என்று எடப்பாடியிடம் வாக்குறுதி கொடுத்து சீட் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ் சிறுவயது முதலே தி.மு.க.வின் மாணவர், இளைஞர் அமைப்பு என கட்சியில் பொறுப்புகளைப் பெற்று தற்போது இளைஞரணி மாநில துணைச்செயலாளராக உள்ளார். செலவு செய்ய தி.மு.க. தரப்பு தடுமாறிவந்த நிலையில், அதன் முழுப் பொறுப்பை யும் ஏற்றுக்கொண்ட அமைச்சர் சு.முத்துசாமி, எவ்வித சுணக்கமும் காட்டாமல் தாராளமாக நடந்துகொண்டார். செலவைப் பார்த்துக்கொண்டதோடு முழு உழைப்பையும் கொடுத்தார். அதேபோல் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோரும் காங்கேயம், தாராபுரம் தொகுதி களில் தி.மு.க. வாக்குகளைச் சேகரித்தனர். நாட்கள் நெருங்க நெருங்க அ.தி.மு.க. வேட்பாளர் எல்லாம் அக்கவுண்டில் இருக்கிறது. அதை இப்போது எடுக்க முடியாதபடி ஒரு பிரச்சனையிருக்கிறது எனக் கூற, முன் னாள் அமைச்சர்கள்தான் முடிந்தவரை செலவு செய் கிறார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை, அரசின் திட்டங் களால் பயன்பெறும் மக்கள், தொகுதி முழுக்க வேட்பாள ரின் பிரச்சாரம், மூன்று அமைச்சர்களின் உழைப்பு என தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ் பிரகாசமாகத் தெரிகிறார். நாம் தமிழர் மூன்றாமிடமும், பா.ஜ.க. அணியில் உள்ள த.மா.கா. நோட்டாவுடனும் போட்டி போடுகிறது.

-ஜீவாதங்கவேல்

திருவண்ணாமலை

tm

திருவண்ணாமலை தொகுதியில், தொடக்கத்தில் ஜோலார்பேட்டை, திருவண்ணா மலை, கீழ்பென்னாத்தூர் தொகுதிகளில் பிரச்சாரத்தில் தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை ஓரளவு பின்தங்கியிருந்தார். கடைசிக்கட்டத் தில் அதைச் சரிக்கட்டி மின்னல் வேகத்தில் பாய்ச்சலை நடத்தினர். அ.தி.மு.க. வேட்பாளர் கலியபெருமாளுக்கு கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாதது, தேர்தல் பணியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாதது, கோஷ்டிப் பூசல் போன்றவற்றால் தி.மு.க.வுடன் போட்டிபோட முடியாமல் பின்தங்கிவிட் டார். பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு சொந்தக் கட்சியிலும் ஆதரவில்லை, கூட்டணிக் கட்சியான பா.ம.க.விடமும் ஆதரவில்லை. மாநில அமைப்புச்செயலாளர் கேசவவிநாயகம் நேரடியாகத் தொகுதிக்கு வந்து சமாதானம் செய்தும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தேர்தல் செலவுக்கு கட்சி தந்த பணத்தை தங்களுக்குள் ஒதுக்கிக்கொள்ளத் திட்ட மிட்டதைப்போல, தேர்தல் பணி எப்படி செய்வதென்றும் திட்டமிட்டிருந்தால் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுடன் போட்டி போட்டிருக்கலாம். தொகுதியிலுள்ள பட்டியலின சமூக வாக்குகள், முதலியார் சமுதாய வாக்குகள், சிறுபான்மையினரின் வாக்குகள் தி.மு.க.வுக்கு பெரும் பலமாக உள்ளன. தி.மு.க., வாக்காளர்களுக்கு 500 ரூபாயும், அ.தி.மு.க. 300 ரூபாயுமாக பட்டுவாடா செய்தன. தி.மு.க. வேட்பாளரின் கடந்த 5 ஆண்டுகால செயல்பாடுகள், மாநிலத்தை ஆளும் தி.மு.க.வின் சாதனைகள், தேர்தல் அறிக்கை போன்றவற்றின் மூலமாக தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரைக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இரண்டாவது இடத்தை அ.தி.மு.க. வேட்பாளரும், மூன்றாவது இடத்தை பா.ஜ.க. வேட்பாளரும் பெறுகின்றனர்.

-ராஜா

வேலூர்

vellore

தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை அறிவிக்கும் முன்பே கட்சித் தலைமை முக்கிய நிர்வாகிகள் சிலரை அழைத்து, "உங்க சண்டையை ஒதுக்கிவைங்க, அவர் வெற்றி பெறுவதற்கான வேலைகளை செய்ங்க'' என உத்தரவிட்டது. மகனுக்காக தி.மு.க. பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் களமிறங்கி அதிருப்தியாளர்களை சமா தானம் செய்தார். அப்படி யிருந்தும் தேர்தல் களத்தில் வேலூர், குடியாத்தம், வாணியம்பாடி தொகுதிகளில் சிலர் சாதிப் பாசத்தோடு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு மறைமுகமாக வேலை செய்கின்றனர். பிரச் சாரத்துக்கு வந்த அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதியை, வேலூர் மாநகர கவுன்சிலர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, கட்டிப்பிடித்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தது தி.மு.க. வேட்பாளரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அ.தி.மு.க.விலோ, திடீரென கட்சிக்குள் நுழைந்து வேட்பாளரானது, நிர்வாகிகளை, தொண்டர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. இரண்டு பணக்கார வேட்பாளர்களுக்கு இடையே சிக்கிக்கொண்டு பணம் செலவழிக்க முடியாமல் தவிக்கிறார். பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக அ.தி.மு.க.விலுள்ள சாதிப் பிரியர்கள் தேர்தல் பணியை பட்டும்படாமல் செய்கின்றனர். மோடி வந்தால் தொகுதி நிலைமை மாறும் என நினைத்தார் வேட்பாளர். அது பொய்யாகிப்போனது. இத்தொகுதியில் வெற்றி பெறப்போவது தி.மு.க. அல்லது பா.ஜ.க. தான் என்பதால் அ.தி.மு.க. இரண்டாம் இடத்தைப் பிடிக்க மோதுகிறது. ஓட்டுக்கு ஆயிரம் என தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வழங்க, அ.தி.மு.க.வோ 500 தருகிறது. தொகுதியிலுள்ள 3 லட்சம் இஸ்லாமிய வாக்குகள், 2 லட்சம் பட்டியலின கிருஸ்தவ வாக்குகள் தி.மு.க.வுக்கு செல்லும் நிலையில் இருப்பதால் தி.மு.க. வெற்றிப் படிகளில் ஏறுகிறது.

-ராஜா

ஆரணி

arani

ஆரணி தொகுதி யில் தி.மு.க. வேட் பாளராக வடக்கு மா.செ. தரணிவேந்தன் களத்தில் உள்ளார். தீவிரமாகக் களப்பணி செய்தாலும், செய்யார் தொகுதியில் சிப்காட் விரிவாக்க விவகாரத்தில் விவசாயிகளை கைது செய்தது, 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைக்கச் செய்தது போன்றவை தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக 20 கிராமங்களில் எதிரொலிக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரன், பணத்தை தாராளமாகச் செலவு செய்கிறார். அ.தி.மு.க.வில் கோஷ்டிச் சண்டை வெளிப்படையாக நடந்தாலும் தேர்தல் களத்தில் தங்களது தொகுதிகளில் அதிக வாக்கு வாங்கி மற்றவர்களுக்கு தனது பலத்தைக் காட்டவேண்டும் எனத் தீவிரமாக வேலை செய்வது, அ.தி.மு.க. வேட்பாளருக்கு பலமாக உள்ளது. அ.தி.மு.க. ஒரு ஓட்டுக்கு 300 என பிக்ஸ் செய்து, 80 சதவீத ஓட்டுக்கு பணத்தை பிரித்தளித்த நிலையில், 50 சதவீதமே வாக் காளர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. தி.மு.க.வில் வாக்காளர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்ட பணம் 90 சதவீதமாக உள்ளது. வந்தவாசி, செய்யார், செஞ்சி, மயிலம் தொகுதியில் பா.ம.க. இளைஞர்கள், தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு கடும் சவாலாக உள்ளனர். இரண்டு கட்சிகளுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் கணேஷ்குமார் செலவு செய்தாலும், வாக்குக்கு பணமில்லை என்பதால், அதை எதிர்பார்ப்போரின் வாக்குகளைப் பெற இயலாமல் பின்தங்குகிறார். களத்தில் தி.மு.க. முதலிடத் திலும், இரண்டாம் இடத்துக்கு அ.தி.மு.க. - பா.ம.க. இடையே போட்டி நிலவினாலும் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கிறது.

-ராஜா

அரக்கோணம்

aa

களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் படுவேகமாக ஓட்டு கேட்கின்றனர். குக்கிராமங்கள் வரை சென்று ஓட்டுக் கேட்டு தனக்கான ஆதரவைத் திரட்டினார் தி.மு.க. ஜெகத்ரட்சகன். "பணக்கார வேட்பாளரான ஜெகத்ரட்சகனுக்கா உங்கள் வாக்கு?'' என்கிற கேள்வியை முன்வைத்து பா.ம.க. வேட்பாளர் பாலு செய்த பிரச் சாரம் தொகுதிக் குள் பெரிதாக எதிரொலித்தது. சிறுபான்மை சாதியை சேர்ந்த அ.தி.மு.க. வேட் பாளர் விஜயனுக்கு சரியான வரவேற்பு கிடைக்காது என தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் நினைத்தனர். எதிர்பார்ப்புக்கு மாறாக அ.தி.மு.க.வுக்கு வரவேற்பு உள்ளது. தொகுதியிலுள்ள 50 சதவீத வன்னியர் வாக்குகள் ஜெகத்ரட்சகனுக்கு சாதகமாக உள்ளன. அவ்வாக்குகளைப் பெறுவதில் பா.ம.க. வேட் பாளர் பாலு பின்தங்குகிறார். அதேபோல் பட்டியலின சமூக வாக்குகளை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டும் பங்கிட்டுக்கொள்கின்றன. இஸ்லாமிய வாக்கு கள் அ.தி.மு.க.வை விட தி.மு.க. பக்கம் பலமாகவுள்ளது. இதனைக் கலைக்க கடைசி நேரம் வரை நா.த.க. நஸ்ரின் தரப்பு முயற்சித் தது. இங்குள்ள களம் நான்கு முனைப் போட்டியாக இருந்தாலும், தி.மு.க. - அ.தி.மு.க. இடையே தான் போட்டி. தி.மு.க.வின் வெற்றி இத்தொகுதியில் பிரகாசமாக உள்ளது.

-து.ராஜா

நெல்லை

nn

நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க.வின் ஜான்சிராணி என மும்முனைப் போட்டி. நெல்லையைப் பொறுத்தவரை, பா.ஜ.க.வின் கூட் டணிக் கட்சிகள் பலனில்லாது வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமே என்றளவிலிருக்கிறது. இந்து மற்றும் கிறிஸ்தவ நாடார் சமூக மக்களை மெஜாரிட்டியாகக் கொண்ட நெல்லை எம்.பி. தொகுதியில் நயினார் முக்குலத்தோர் சமூகம் சார்ந்தவர். அவர் சார்ந்த சமூக வாக்குகள், கரன்சி களின் உதவியை நம்பியிருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளரான ஜான்சிராணி, களப்பணியைவிட கட்சியின் இரட்டை இலையே தனக்கான ஆயுதம் என்ற நம்பிக்கை யிலிருக்கிறார். இலைத் தரப்பின் முக்கிய நிர்வாகிகள் களத்தில் தென் படாதது பின்னடைவே. கரன்சிக்குக் காய்ச்சல் என்பதால் அன்றாடம் தன் பேக்கரி நிறுவனத்திலிருந்து ஒன்றரை லட்சம்வரை கைவைக்கவேண்டிய நெருக்கடியி லிருக்கிறாராம். யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்று முழுவீச்சில் பரப்புரையைக் கொண்டுசெல்கிற காங்கிரஸ் வேட்பாளரான ராபர்ட் புரூஸுக்கு தோள் கொடுப்பவர்கள் கூட்டணியான தி.மு.க.வின் உ.பி.க்களே. அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் ஒரு துணை கமிட்டி அமைத்து முழுவீச்சில் களமாடிவரு கின்றனர். நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் பா.சத்யா, இளைஞர்களின் வாக்குகளையே நம்பியிருக்கிறார். கை வேட்பாளர் நாடார் சமூகம் என்றாலும், அனைத்துத் தரப்பினரை யும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். கூட்டணி பலம், ராகுல் பிரச்சாரம் போன்றவை காங்கிரசுக்கு கை கொடுக்கும் என நம்புகிறார்கள். இருந்தாலும் கடைசி நேரத்தில் நயினாரின் பண விளையாட்டு நடந்தால்... போட்டி கடுமையாக இருக்கும்.

-பி. சிவன்

தென்காசி

tenkassi

தென்காசி தொகுதியில் தி.மு.க.வின் சூரிய வேட்பாளர் ராணிஸ்ரீகுமார், அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, பா.ஜ.க. கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான்பாண்டியன் மூவரும் களம்காண்கின்றனர். தனித் தொகுதியான தென்காசி களத்திலிருக்கிற மூன்று வேட் பாளர்களுமே பட்டியலின சமூக மக்களின் வாக்குகளையே குறிவைக்கின்றனர். ஆனாலும் தி.மு.க. வேட்பாளர் தவிர்த்து மற்ற இரண்டு வேட்பாளர்களுமே தொகுதி சாராத இறக்குமதி வேட்பாளர்கள் என்ற பார்வை இருக்கிறது. அனுபவசாலியும் அறிந்த வேட்பாளருமான புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி, பிரச்சாரம், தொகுதி செலவினம் போன்ற வகைகளில் அ.தி.மு.க.வைச் சார்ந்தே இருக்கிறார். பரப்புரைக்காகச் செல்லும் டாக்ட ருடன் கூட்டணி இலைத் தரப்பினரே உடன்செல்கின்ற னர். தொகுதியை வளப்படுத்துவேன், வளர்ச்சிப் பணிகளைக் கொண்டுவருவேன் என்ற பிரச்சாரங்களோடு நிலைமைக்கேற்ப கரன்சியை அவிழ்க்கிறாராம். இலை வேட்பாளரைப்போலவே பா.ஜ.க. அணி தாமரை வேட்பாளர் ஜான்பாண்டியன் பட்டியலினப் பிரிவின் வாக்குகளைக் குறிவைத்தாலும் கௌரவமான வாக்குகளைப் பெறுவதற்கு பிற சமூக வாக்குகளையே நம்பி யிருக்கிற சூழல். அதற்காக பல தரப்பு முக்கியப்புள்ளிகளை நேரில்சென்று பார்த்து ஆதரவு திரட்டுகிறார். இன்றைய மக்களை வாட்டுகிற ஜீவாதார மான அடிமட்டக் கட்டமைப்பு இளைஞர்களை மீட்டெடுக்கிற வேலைவாய்ப்பு, தொழில்வளம் போன்றவைகளுக்கு அவரிடம் தீர்வான வாக்குறுதி கிடையாது. வைட்டமின் ப”வுக்கு பா.ஜ.க. வையே நம்பி அடியெடுத்து வைக்கிற நிலையிலிருக்கிறார். தி.மு.க.வின் வாக்கு வங்கி, நலத்திட்டங்கள் போன்றவை சூரிய வேட்பாளரை முன்னணிக்குக் கொண்டுவரு கின்றன. சூரியன் பிரகாச மாகவே தெரிகிறது தொகுதியில்.

-பி.சிவன்

தூத்துக்குடி

tt

தலைவரின் மகள் என்கின்ற பந்தா இல்லாமல் மக்களோடு மக்களாக நெருக்கம் காட்டுவது கனிமொழிக்கு ப்ளஸ்ஸே. அதுவும் வெள்ள சீரழிவின்போது, தான் பெண்ணாக இருந்தும், ஆணுக்கு இணையாக போட்டி போட்டி மக்களை காத்தவர் என்கின்ற இமேஜ் கனிமொழிக்கு உண்டு. மாநகரத்தைப் பொறுத்தவரை அறிவியல் பூங்கா, நடைபயிலுவோர்களுக்கு பூங்கா உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார். தி.மு.க.வின் பிரம்மாண்ட வெற்றி என்பது தூத்துக்குடியில் எளிதாவது குறிப்பிடத்தக் கது. இது இப்படியிருக்க அ.தி.மு.க. தரப்பில் வேட்பாளரோ, முன்னாள் அமைச்சர்களோ தொகுதி யில் வேலை செய்வதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. தொகுதிக்கு சொந்தக்காரர் என்றாலும், அறிமுகமில்லாத வேட்பாளர் சிவசாமி வேலுமணி. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி தொகுதிகளில் கனிசமான வாக்குகளை வாங்கி கொடுத்தால் நமக்கு சீட் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் சண்முக நாதனும், கடம்பூர் ராஜூவும் குறிப்பிட்ட தொகுதியில் போட்டி போட்டு வேலை செய்கின்றனர். பா.ஜ.க. கூட் டணியில் இல்லாததால் சிறுபான்மை யினர் வாக்குகளும், இரட்டை இலைக்கான அடிப்படை வாக்கு களும் தங்களுக்கு கிடைக்கும் என நம்புகின்றது அ.தி.மு.க. தரப்பு. குறிப் பாக, காயல்பட்டிணம், மணப்பாடு, ஆலந்தலை, நாசரேத் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கும் என்கின்றனர். த.மா.கா.வின் எஸ்.டி.ஆர். விஜயசீலன் நம்பியிருப்பது என்னவோ பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை மட்டுமே. எனினும், வேட்பாளர் கிறிஸ்தவ நாடார் என்பதால் பா.ஜ.க.வின் அடிப்படைவாதி கள் வேட்பாளரை புறக்கணிக்கின்றனர். கடைசிநேரக் கவனிப்புகள் எதுவாக இருப்பினும், தூத்துக்குடியில் தி.மு.க.வின் பிரம்மாண்ட வெற்றியை யாராலும் தடுக்க இயலாது.

-நாகேந்திரன்

விருதுநகர்

vv

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் கம் தாகூர், கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கியை மொத்தமாக அறுவடை செய்கிறார். மெஜாரிட்டி யான முக்குலத்தோர் வாக்குகளில் குறிப் பிட்ட சதவீதம், ஜாதிப் பாசத்துடன் இவரை ஆதரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இரண்டு தடவை எம்.பி.யாக இருந்தும் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் அதிருப்தியும் அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளில் வெளிப்பட்டுள்ளன. பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கி தங்களிடம் நெருங்கி உரையாடும் பாஜக வேட்பாளர் ராதிகா ஒரு நடிகையாகவும் இருப்பதால், பெண் வாக்காளர்கள் குஷி யாகின்றனர். தேர்தல் களத்தில் கிராமங்கள் வரை ஊடுருவி வலிமையாகப் பிரச்சாரம் செய்ததில் முதலிடத்தில் இருப்பவர்கள் ராதிகாவும் சரத்குமாரும்தான். கேப்டனின் மகன் என்பதால், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். இத்தொகுதியின் அ.தி.மு.க. வாக்கு வங்கி, ஜெயலலிதா இருந்தவரையிலும் வலுவாக இருந்தது. அது மிகவும் சரிந்துவிடாத அளவுக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா போன்றோர் இழுத்துப்பிடித்து வைத்துள்ளனர். விஜயபிரபாகரனை வெற்றிபெறச் செய்வது அக்கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அனுபவ அரசியல்வாதியான மாணிக் கம் தாகூருடன் மோதும் குட்டி கேப்டன் பாசமுகம் காட்டி கவர் கிறார். வெற்றி வேட்பாளர் விஜயபிரபாகரனே என்ற நம்பிக்கை தொகுதி முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஆனால், ஆளும்கட்சியின் பணப்பட்டுவாடாவுக்கு முன்னால் அத்தனையும் அமுங்கிவிடும். மாணிக் கம் தாகூருக்கு சாதகமான சூழலே நிலவுகிறது.

-ராம்கி

தேனி

teni

தேனி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி, அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் பெரும்பான்மையாகவுள்ள முக்குலத்தோர் வாக்குகள், தங்க.தமிழ்செல்வ னுக்கும், டி.டி.வி.க்குமாக பிரிய வாய்ப்புள்ளது. கட்சி ரீதியாகவுள்ள முக்குலத்தோர் சமூகத் தினர் எப்போதும்போல சூரியனுக்கு வாக் களிக்கக்கூடும். அதேவேளை, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்துவந்த முக்குலத்தோர் வாக்குகளில் பெரும்பான்மை டி.டி.வி.க்கு செல்லக்கூடும். இதைத் தாண்டி, பணத்தை இறைத்து வெற்றிபெறும் நோக்கில் டி.டி.வி. இருந்தாலும், ஆர்.கே.நகரில் வாக்காளர் களை ஏமாற்றியதுபோல் இங்கே ஏமாற்ற முடியாதென்ற பேச்சும் மக்களிடம் இருக்கிறது. அ.தி.மு.க. தரப் பிலும் மக்களை கவனிக்க விருப்பதால், இரட்டை இலைக்கான வாக்குகள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு புதிய தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் ஓரளவு கிடைக்கக் கூடும். இம்முறை அ.தி.மு.க. வாக்கு வங்கியும் பிளவுபட்டுள்ளதால் தி.மு.க. வேட்பாளருக்கு சாதகமாகக்கூடும். தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஆதரவும் வேட்பாளருக்கு மிகப்பெரிய பலம். மேலும், பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம் பகுதியிலுள்ள பெரும்பான்மையான முஸ்லீம் ஓட்டுக்களும், கவுண்டர் சமூக வாக்குகளும் சூரியனுக்கு சாதகமாக இருக்கிறது. வி.சி.க. வாக்குகளும் சூரியனுக்கே கைகொடுப்பதால் இத்தொகுதியில் சூரியன் உதிப்பது உறுதி யாகிறது.

-சக்தி

மதுரை

dd

மதுரை தொகுதியில் அ.தி.மு.க. வாக்கு வங்கி அதிகமிருக்கும். தொகுதி மறுசீரமைப்பால் அ.தி.மு.க. வின் ஓட்டு வங்கி கொஞ்சம் சரிவடைந்தபோதிலும், டாக்டர் சரவணனின் பணபலம் அ.தி.மு.க. நிர்வாகி களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. மதுரை மேற்கு, வடக்கு, தெற்கிலுள்ள முக்குலத்தோரின் வாக்குவங்கிகளால் இங்கெல்லாம் சரவணனின் கை ஓங்குகிறது. தினகரன் ஆதரவாளர்களும்கூட சத்தமில் லாமல் சரவணனுக்காக வேலை செய்கிறார்கள். மதுரை தொகுதியில் போட்டியிடும் சிட்டிங் எம்.பி. சு.வெங்கடேசன், பிரச்சாரத்தில் படுவேகமாக செயல்படுகிறார். முழுக்க முழுக்க தி.மு.க.வை நம்பியே இருக்கிறார்கள் என்பது களத்தில் தெரிகிறது. தி.மு.க. வில் அமைச்சர் மூர்த்தியும், மாவட்ட செயளாளர்கள் மணிமாறனும், தளபதியும் போட்டிபோட்டுக்கொண்டு கூட்டம் சேர்ப்பதில் ஆரம்பித்து, பணப் பட்டுவாடா வரை கச்சிதமாகப் பார்த்துக்கொள்கின்றனர். மதுரை கிழக்கு, வடக்கிலுள்ள யாதவர் சமூகத்தினரின் பெரும் பான்மை தி.மு.க.வின் ஓட்டுவங்கி யாகவே உள்ளது. மதுரை மத்தியிலும் யாதவர், பிள்ளைமார், முஸ்லிம் ஓட்டுக் கள் அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் ஆதரவில் அப்படியே கிடைக்கக்கூடும். மேலும், முதல்வர் ஸ்டாலினின் பிரச் சாரம், உதயநிதியின் பிரச்சாரம் மிகப் பெரிய பூஸ்ட்டாக உள்ளது. கூடுதலாக, கம்யூனிஸ்ட் தலைவர்களும், கூட்டணிக் கட்சியினரும் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க. இராம.சீனி வாசனோ, விருதுநகரைக் குறிவைத்த சூழலில் மதுரை கிடைத்ததால் முதலில் தடுமாறியவர், தற்போது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். சவுராஷ்டிரா மக்களின் வாக்குகளை பெரிதும் நம்பியுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் சத்தியாதேவிக்கு ஆதரவாக சீமானின் பிரச்சாரம் ஓரளவு வாக்குகளைப் பெற்றுத்தரக்கூடும். அ.தி.மு.க.வின் டாக்டர் சரவணன் கடும் போட்டி யளிப்பதால், கூட்டணி பலத்துடன் கடந்த முறையை விடக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை எட்டுகிறார் சு.வெங்கடேசன்.

-அண்ணல்

கன்னியாகுமரி

jj

நாட்டின் கடைக்கோடி தொகுதியான கன்னியாகுமரி யில் சிட்டிங் எம்.பி.யான காங்கிரஸின் விஜய்வசந்த் கூட்டணிக் கட்சிகளின் பலம், கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கியால் ஆரம்பத்தி-ருந்தே முன்னே சென்றுகொண்டிருக் கிறார். கிளை, ஒன்றியம், நகரம் என தி.மு.க.வினரின் தீவிர பிரச்சாரம் விஜய்வசந்துக்கு பூஸ்ட்டாக உள்ளது. பா.ஜ.க. பொன்.ராதா கிருஷ்ணன் தொகுதியிலுள்ள பெரும்பான்மையான இந்துக் கள் ஓட்டுக்களை நம்பிக் களமிறங்குகிறார். அ.தி.மு.க. வின் பசி-யான் நசரேத், நாம் தமிழர் கட்சியின் மரியம் ஜெனிபர் இருவரும் மீனவர்கள் ஓட்டை கணிச மாக பிரித்தால் பொன்.ராதாகிருஷ்ணனின் கணக்குக்கு இடைஞ்சல்தான். என்னுடைய கடைசி தேர்தல் என்று அனுதாப வாக்குகளை அள்ளமுயல்கிறார். அ.தி.மு.க. பசி-யான் நசரேத், தளவாய் சுந்தரத்தின் இறுகிய பிடியிலே இருப்பதால் அக்கட்சியினர், அவரிடம் நெருங்கமுடியாத அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால் அ.தி.மு.க.வினரே தங்களின் வாக்குகளை யாருக்குச் செலுத்த வேண்டுமென்று யோசிக்கிறார்கள். அ.தி.மு.க.வி லுள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ வாக்குகள் மாற்றுக் கட்சிக்கு போகக்கூடிய நிலை உள்ளது. மீனவ வாக்குகள் தன்னைத் தூக்கி விடும் என நம்பியிருக்கிறார் பசி-யான். ஆனால் மீனவ வாக்குகள் பா.ஜ.க., அ.தி.மு.க.வைவிட தி.மு.க. பக்கமே கணிசமாகச் சாயுமெனத் தெரிகிறது. நாம் தமிழர் மரியம் ஜெனிபர், மீனவ கிராமங்களிலுள்ள இளைஞர்கள், கனிம வளக் கொள்ளைக்கு எதிரான மக்களின் கணிசமான வாக்குகளை வாங்குவார். தற்போது விஜய் வசந்த்தின் வலையில் கணிசமான கனம் தெரிகிறது.

-மணிகண்டன்

புதுச்சேரி

dd

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர் பட்டிய-ல் காங்கிரஸ் வேட்பாளராக வைத்தி-ங்கமும், பா.ஜ.க. வேட்பாளராக நமச்சிவாயமும், அ.தி.மு.க. வேட்பாளராக தமிழ்வேந்தனும் பிரதான வேட்பாளர்களாக களத்திலுள்ளனர். இருப்பினும் போட்டி என்பது இரண்டா மிடத்திற்கே. வன்னியர் சமுதாயம், 5 முறை எம்.எல்.ஏ., அமைச்சராக இருந்தாலும் எளிதில் அணுகக்கூடியவர் என்கின்ற பலமான பின்னணியுடன் பா.ஜ.க. வேட்பாளராக களம் காண்கின்றார் புதுச்சேரி உள்துறை, கல்வித் துறை அமைச்சரான நமச்சிவா யம். தொகுதியில் எவ்வித அடிப்படைக் கட்டமைப்பும் இல்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.க., நாடாளுமன்றத் தேர்த-ல் புதுச்சேரி முதல்வரான என்.ஆர்.காங்கிரஸின் தலைவரை மட்டுமே சுற்றிவருகிறது. புதுச்சேரி அரசின் சாதனைகள், பா.ம.க. கூட்டணி மற்றும் தன்னிடமுள்ள மிதமிஞ்சிய பணம் அத்தனையும் தன்னை கரைசேர்க்கும் என்கின்ற நம்பிக்கையிலேயே வலம் வருகின்றார் பா.ஜ.க.வின் நமச்சிவாயம். கடலோரப் பகுதி முழுவதும் விரவிக்கிடக்கும் மீனவ சமூக வாக்குகள் அனைத்தும் தன்னை கரை சேர்க்கும் என்கிற நம்பிக்கையில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார் தமிழ்வேந்தன். முதல்வர் ரங்கசாமி ஆட்டுவிக்கப்படும் பொம்மை. ஆட்டுவிப்பது பா.ஜ.க.வே! மாநில நிதிக்குழு பட்டிய-ல் புதுச்சேரியை இணைப்பது போன்ற வித்தியாசமான பிரச்சார யுக்திகள் பா.ஜ.க.வையே பதம் பார்க்கின்றன. இதனால், அ.தி.மு.க. பெறும் ஒவ்வொரு வாக்குகளும் பா.ஜ.க.வை பின்னுக்குத் தள்ளுவதிலேயே குறியாய் இருக்கின்றது என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள். இதே வேளையில், "எங்களுக்கு போட்டியில்லை. நான் சார்ந்திருக்கின்ற கூட்டணியில் தி.மு.க., இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் என்னை கரையேற்றும் என்பதில் எள்ளளவும் பயமில்லை. இரண்டாமிடம் எடுப்பதில்தான் போட்டியே. அந்த போட்டி என்பது அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் மட்டுமே'' என்கின்றது காங்கிரஸ் தரப்பு.

-நாகேந்திரன்