டலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கழுதூர், அரியநாச்சி கிராமப்  பகுதிகளில் அரியநாச்சியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடும் பணியில் கழுதூரைச் சேர்ந்த சின்னப் பொண்ணு, கனிதா, பாரிஜாதம், சிவக்குமாரின் மனைவி ராஜேஸ்வரி, தவமணி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதியம் சுமார் ஒரு மணியளவில் பலத்த இடி மின்னலுடன் மிகக் கனமழை பெய்தது. வேலை செய்துகொண்டிருந்த பெண்கள்மீது இடிமின்னல் தாக்கியுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே ராஜேஸ்வரி, கனிதா, பாரிஜாதம், சின்னப்பொண்ணு ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர்.

Advertisment

மின்னல் தாக்கியதில் தவமணியின் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்ட நிலையில் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சி.வி.கணேசன் சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்தவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் சென்னையிலிருந்து இரவோடு இரவாகப் புறப்பட்டு அதிகாலை 3 மணியளவில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தவமணியை சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு அவரது மருத்துவச் செலவிற்காக நிதியுதவி வழங்கினார். 

Advertisment

அங்கிருந்து புறப்பட்டு நேரடியாக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி, கனிதா, சின்னப்பொண்ணு, பாரிஜாதம் ஆகியோரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறினார். 

அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரும் இறுதிமரியாதை செலுத்தினர். இந்த தகவலறிந்து விரைந்து செயல்பட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் அரசு சார்பாக நிவாரண நிதி அறிவித்தார். மருத்துவமனை வளாகத்திலேயே உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் அறிவித்த ஐந்து லட்ச ரூபாயை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் செலுத்தியதற் கான ஆவணங்களை வழங்கினார் அமைச்சர். உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினரது இறுதிச் சடங்கு செலவிற்காக அமைச்சர் கணேசன் தனது சொந்தச் செலவில் தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கினார். 

Advertisment

இந்தியா மட்டுமின்றி ஆசியா முழுவதுமே மழை, வெள்ளம்போன்ற இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகிவருகிறது. அதனால் மழை, வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். இதற்காக இதுபோன்ற நேரங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திவருகிறது. வழக்கத்துக்கு மாறான இடி, மின்னல் காணப்படும் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும்.

-எஸ்.பி.எஸ்.