"அந்த ஓர் ஆட்கொணர்வு மனு பல வில்லங்கங்களை வெளிப்படுத்தும்' என்கிறார்கள் போலீசாரே. சென்னையை சேர்ந்த சுஜிதா என்பவர் தனது கணவர் அருள்பிரகாஷை கண்டு பிடித்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றதில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

epsdeal

Advertisment

அந்த மனுவில், "கோபால அமுல்யாஜோதினி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் என் கணவரை வளசரவாக்கம் போலீஸார் சட்டவிரோதமாக கைது செய்து வைத்திருக்கிறார்கள் என்றும், ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்யும் தன் கணவர் மீது வந்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட வளசரவாக்கம் ஸ்டேஷனின் 7 பேர் தன் வீட்டுக்கு நள்ளிரவில் வந்து, கணவனைத் தேடிப் பார்த்துவிட்டு, தன்னையும் தன் குழந்தை கள், குடும்பத்தினரையும் மிரட்டி, செல்போன், கார் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றதுடன், தன்னை ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று, இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் முன்னிலையில் விசாரணை நடத்தி, தன்னைத் தாக்கி, பேப்பர்களில் கையெழுத்து வாங்கியதாகவும், பின்னர் ஸ்பெஷல் டீம் போலீஸ் மூலம், தன்னுடைய கணவர் 4 நாட்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டு, சட்டவிரோத காவலில் இருப்பது பற்றியும் தனது கணவரை ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டி ருக்கிறார்.

இந்த ஹேபியஸ் கார்பஸ் மனு, நீதிபதி பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு 14-ந்தேதி விசாரணைக்கு வந்ததையடுத்து, வளசரவாக்கம் போலீசார் அவசரம் அவசரமாக பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் எஃப்.ஐ.ஆரை மட்டும் தாக்கல் செய்திருக்கிறார்கள். சுஜிதாவை நாம் தொடர்புகொண்டபோது, தன் கணவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா?ன்னு கூட தெரியவில்லை என்பதை பதற்றத்துடன் தெரிவித்தார்.

நம் தொடர் விசாரணையில், சுஜிதாவின் கணவர் அருள்பிரகாஷ், சென்னை உயர்நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் உதயகுமாரை தொடர்பு கொண்டு பேசியதாக ஒரு தகவல் கிடைத்தது.

Advertisment

உதயகுமாரை தொடர்புகொண்டு நாம் விசாரித்தபோது,”"ஒரு நாள் இரவு, தன் பெயர் அருள்பிரகாஷ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, மனைவி சுஜிதாவை போலீஸார் டார்ச்சர் பண்ணுவதாகச் சொன்னார். மறுநாள் காலையில் சுஜிதாவிடம் ஃபோனில் பேசியபோது, விலாவாரி யாகச் சொன்னார். அதன்பிறகு அருள்பிரகாசிட மிருந்து எந்த ஃபோனும் வரவில்லை. அவரது ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது. விவகாரத்தை விசாரித்தபோது, சென்னை ஆழ்வார்திருநகர் சிந்தாமணி விநாயகர் கோவில் தெருவில் வந்தே மாதரம் அபார்ட்மெண்டின் தரைத்தளத்தில் கோபாலன் அமுல்யாஜோதினி என்பவருக்கு ஒரு ப்ளாட் இருக்கிறது. இந்த ப்ளாட்டில் கடந்த மாதம் ஒரு திருட்டு நடந் திருக்கிறது. ரகசியமாக விசாரிக்குமாறு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து வளசரவாக்கம் போலீஸாருக்கு வந்த உத்தரவையடுத்து, அமைக் கப்பட்ட தனிப்படையினர் மணி என்பவர் உட்பட சிலரை மடக்கிப் பிடிக்கின்றனர். அவர்களிடம் விசாரித்ததில்தான், அருள்பிரகாஷ், கிறிஸ்டோபர் ஆகியோரை பிடிக்கின்றனர். இவர்களிடமிருந்து சில கோடி ரூபாயைக் கைப்பற்றுகிறது போலீஸ். மீதி பணத்தைக் கேட்டு, டார்ச்சர் செய்கிறார்கள். ஒரு வாரமாகியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை. ஹேபியஸ் கார்பஸ் விசாரணைக்கு வருவதை அறிந்ததும், எஃப்.ஐ.ஆர், போட்டு, சுமார் 10 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர்'' என்றார்.

eps-deal

தொடர்ந்து அவர், “"சென்னை நுங்கம்பாக் கத்தில் "பல்ஸ் டெலி சிஸ்டம்' என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார் இலங்கைத் தமிழரான கோபாலப் பிள்ளை. இவரது நிறுவனத்தில் ஜி.எம்.மாக இருக்கிறார் கிறிஸ்டோபர். இந்த திருட்டு திட்டத்தை போட்டுக்கொடுத்தாக அருள்பிரகாஷ், கிறிஸ்டோபரை கை காட்டியுள்ளனர். அருள்பிர காஷ் கிடைக்கவில்லை. கிறிஸ்டோபர் சிக்குகிறார். போலீஸ் பாணியில் விசாரிக்க... "எங்க நிறுவனத் தின் ஓனர் கோபாலபிள்ளையும், முன்னாள் சி.எம்.மின் (எடப்பாடி பழனிச்சாமி) தனிச் செயலாளராக இருந்த கிரிதரனும் நண்பர்கள்.

கோபாலபிள்ளையின் மனைவி அமல்யா ஜோதினி பெயரிலுள்ள 4 பெட்ரூம் கொண்ட வந்தே மாதரம் ப்ளாட்டினை இரண்டு இரண்டு பெட்ரூமாக 2 போர்ஷன் பிரித்திருந்தார் கோபால பிள்ளை. அந்த 2 பெட்ரூமில் பல 100 கோடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்து சில கோடிகளை திருடினால் யாருக்கும் தெரியாது என நினைத்தும் சில நண்பர்களை ஏற்பாடு செய்து அனுப்பினேன். இப்படி மாட்டிக்கொள்வார்கள் என தெரியவில்லை'' என போலீஸ் விசாரணையில் சொல்லியிருக்கிறார் கிறிஸ்டோபர்.

கோபாலபிள்ளை ஏற்கனவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4 கோடிகளை ஏமாற்றிய ஒரு வழக் கில் சிறை சென்றவர். முன்னாள் முதல்வர் எடப் பாடி பழனிச்சாமிக்கு ஆல் இன் ஆலாக இருந்த கிரிதரனும் கோபாலபிள்ளையும் நண்பர்கள். அந்தத் தொடர்பில் ரூ.300 கோடி கறுப்புப் பணத்தை பதுக்கி வைப்பதற்காகவே வந்தே மாதரம் ப்ளாட்டை கோபாலன் பயன்படுத்தி வந்துள்ளார். கிறிஸ்டோபர் உதவியாக இருந்திருக்கிறார். தேனை எடுத்தவர் புறங்கையை நக்கும் ஆசையில், பணத்தைத் திருட முயற்சித்திருக்கிறார்.

திருட்டு விவரம் அறிந்து பதறி வந்த அமுல்யா ஜோதினியும் கோபாலபிள்ளையும், ஹாலில் இருந்து நாலரைக் கோடி ரூபாய் காணாமல் போயிருப்பதை தெரிந்துகொண்டனர். 2 பெட்ரூமும் உடைக்கப்படவில்லை. இதனை யடுத்து கிரிதரனுக்கு தகவல் தந்துள்ளார் கோபாலன். மீதமிருந்த பல நூறு கோடிகளை கவனமாக இடம் மாற்றிவிட்டு, 4 நாள் கழித்து போலீசில் இருக்கும் தனது நண்பர் மூலம் இதனை ரகசியமாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்.

eed

அமுல்யா ஜோதினி பெயரில் திருட்டுப் பற்றி புகார் தரப்பட்டு, விசாரணையைத் தொடங்கி யிருக்கிறது போலீஸ். கோடிகள் விவகாரமும் விசாரணையில் தெரிந்ததால், ரகசிய கஸ்டடியில் விசாரணை நடந்துள்ளது. சுஜிதாவின் ஆட்கொணர்வு மனுவால், 22-ந் தேதிக்குள் முழுமையான ரிப்போர்ட்டை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனையடுத்து, ஏற்கனவே வீட்டுக்கு அனுப்பி வைத்த குற்றவாளி களில் மணி உள்ளிட்ட 5 பேரை மறுநாளே (15.12.2021) கைது செய்து பூந்தமல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறது போலீஸ் ‘’ என்று விரிவாகப் பேசினார் உயர்நீதிமன்ற அட்வகேட் உதயக்குமார்.

சம்பந்தப்பட்ட வந்தே மாதரம் அபார்ட்மெண்டிற்கு சென்று நாம் விசாரித்தோம். திருடு போனதாக போலீஸ் விசாரித்துச் சென்றதை அப்பகுதி மக்கள் சொன்னார்கள். வந்தே மாதரம் அப்பார்ட்மெண்ட்ஸுக்கு எதிரே ஒரு ப்ளே ஸ்கூல் இருக்கிறது. அங்கு மட்டும் கேமரா இருந்தது. ஸ்கூல் நிர்வாகத்திடம் விசாரித்தபோது, "சி.சி.டி.வி. பதிவுகளை போலீஸ் எடுத்துச் சென்று விட்டது'' என்றனர்.

இதனையடுத்து, கோபாலனிடம் விசாரிப்பதற் காக அவரது அலுவலகம் சென்று, "கோபாலன் இருக் கிறாரா?' என செக்யூரிட்டி யிடம் விசாரித்தபோது, "இருக்கிறார்' என சொல்லி, உள்ளே அனுப்பிவைத்தார். உள்ளே ரிஷப்சனில் நாம் விசாரிக்க, அவர் யாரிடமோ ஃபோனில் பேசினார். அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்த ஒருவர், "கோபாலனும் அவரது மனைவியும் ஹாஸ்பிட்டலுக்கு போயிருக்காங்க'' என்றார். "கோபாலன் இருப்பதை செக்யூரிட்டி உறுதி செய்கிறார். நீங்க இல்லைன்னு சொல்றீங்க?'' என கேட்டபோது, அவரால் பதில் சொல்ல முடியவில்லை. "கம்பெனியின் எம்.டி. உஷா ராகவனை பாருங்கள்'' என்றார்.

உஷாவிடம், "திருட்டு பற்றி கோபாலனிடம் விவரங்கள் கேட்க வேண்டும்'' என்றோம். பதறியவர், "கோபாலன் ஹாஸ்பிட்டலுக்கு சென்றிருக்கிறார்'' என்றார். கிறிஸ்டோபர் லீவில் இருப்பதாகச் சொன்னார். ரகசிய கஸ்டடி பற்றிக் கேட்டபோது எதுவும் பேசவில்லை.

இதனையடுத்து கிரிதரனை சந்தித்து இதுகுறித்து கேட்டபோது,’"கோபாலனுக்கும் எனக்கும் பழக்கமில்லை. என் அண்ணன் பையன் அவரிடம் வொர்க் பண்றான். 300 கோடி ரூபாய் பணமா? அவ்வளவு பணம் என்கிட்டே இருந்துச்சுன்னா, நான் எதற்கு அரசாங்க வேலையில இருக்கப் போகிறேன். நான் அப்பழுக்கற்ற அரசு ஊழியன்''’என்று ஒரேயடியாக மறுத்தார்.

போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, "அமுல்யா ஜோதினி என்பவர் கொடுத்த புகாரில், அந்த ஃப்ளாட்டில் ஒரு போர்சனை எனது ஊழியர்களும் மற்றொரு போர்சனை குடும்ப நண்பரான உஷா ராஜகோபாலன் மகன் பரணி வேலனும் பயன்படுத்தி வந்தோம். அவர்களின் வணிக பயன்பாட்டுக்காக வைத்திருந்த 4 கோடியே 50 லட்சமும், 30 சவரன் நகைகளும் திருடு போனதாக புகாரில் சொல்லியிருக்கிறார். பணத்தை இழந்ததாகச் சொல்லப்படும் உஷாராஜகோபாலன் தரப்பிலிருந்து புகார் கொடுக்கப்படவில்லை'' என்கிறார்கள் போலீசார்.

கோடிகளுடன் சில பல டாகுமெண்டுகளும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளது. கிறிஸ்டோபரும் அருள்பிரகாசும் வெளியே வந்தால், மறைந்துள்ள அனைத்து பூதங்களும் வெளியே வரும். தி.மு.க. அரசின் காவல்துறை அந்த பூதங்களை வெளியே கொண்டுவருமா என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கிறது.