ரண்டாம் உலகப்போர் முடிவுற்ற சமயத்தில் அரசியல், ஆன்மீகம், மதம் என எந்த பாகுபாடும், பிரிவினைவாதமும் இல்லாமல் மனித இனம் அமைதியாக வாழ, ஒரு சர்வதேச நகரத்தை உருவாக்கவேண்டும் என புதுவை அரவிந்தர் ஆஸ்ரமத்தின் அன்னை (மிர்ரா அல்பசா) முடிவுசெய்து, யுனெஸ்கோ உதவியுடன் 1968-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஆரோவில் நகரம் கட்டு மானம் தொடங்கப்பட்டது. ஆரோவில் நகருக்காக மாத்ரி மைந்தரை மையமாக வைத்து அதனைச் சுற்றியுள்ள நிலங்கள் ஸ்ரீஅரவிந்தர் சொசைட்டி பெயரில் நன்கொடைகள் மூலமாக வாங்கப்பட் டது. அரவிந்தர் ஆஸ்ரமத்தின்கீழ் ஆரோவில் இருந்தது. 1973-ல் அன்னை இறந்தபின் ஆரோவில் நிர்வாகம் தொடர்பாக அரவிந்தர் ஆஸ்ரமம் -ஆரோவில் நிர்வாகக் குழுவுக்கிடையே பிரச்சனை யாகி விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. இதனால் 1980-ஆம் ஆண்டு ஆரோவில் அவசர சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. 1988-ல் ஆரோவில் பவுண்டேஷன் ஆக்ட் கொண்டுவரப் பட்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ஆரோவில் கொண்டுவரப்பட்டது. 

Advertisment

ஆரோவில் பவுண்டேஷனை வழிநடத்த, நிர்வாகம் செய்ய மூன்று கமிட்டிகள் உள்ளன. அவை சர்வதேச ஆலோசனை கமிட்டி, கன்வீனிங் போர்டு, ரெசிடென்ஸியல் போர்டு. சர்வதேச ஆலோசனை கமிட்டியின் பணி என்பது ஆரோவில்லை எப்படி மேம்படுத்துவது, உலக மக்கள் ஒற்றுமைக்காக என்ன செய்வது என ஆலோசனைகள் சொல்லும். கன்வீனிங் போர்டு என்பது மத்திய அரசு, சேர்மன், 6 உறுப்பினர்கள் மற்றும் இரண்டு அரசு அலுவலரை நியமிக்கும். இவர்களும் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ரெசிடென்ஸியல் கமிட்டி எனப்படும் குடியிருப்பு வாசிகளின் கமிட்டி சொல்வதை கேட்டுத்தான் செயல்படவேண்டும். இவர்களுக்குதான் ஆரோவில் மீதான முழு அதிகாரமும் உள்ளது என்கிறது சட்டம். 

pondy1

இந்த குழுவில் ஆரோவில்வாசிகள் அனை வரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒர்க்கிங் கமிட்டி என 7 பேரை தேர்வுசெய்வார்கள். இவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக் கூடாது, எப்படி செய்யவேண்டும் என முடிவு செய்வார்கள். இந்த கமிட்டியின் கீழ் நிதி மற்றும் சொத்து நிர்வாகக் குழு, நகர மேம்பாட்டுக் குழு, நில பாதுகாப்புக் குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்களில் யார், யார் இருக்கவேண்டும் என்பதை குடியிருப்புவாசிகள் மட்டுமே தேர்வு செய்வார்கள். ஆரோவில் நிர்வாகத்தின் கீழ் 12 பள்ளிகள், 2 மருத் துவ சென்டர்கள், நான்கு பல் மருத்துவ கிளினிக்குகள் உள்ளன. யோகா, மசாஜ் சென்டர்கள், கடைகள், தொழிற் சாலைகளும் உள் ளன. ஆரோவில் அமைப்புக்கு நன் கொடையாக வந்த நிலங்கள், வாங்கிய நிலங்கள் என சுமார் 5,200 ஏக்கர் உள்ளது. 

Advertisment

ஆரோவில்லில் தற்போது 64 நாடுகளைச் சேர்ந்த 3000 பேர் ஆரோவில்வாசியாக வசிக்கின்ற னர். ஆரோவில்லைச் சுற்றி சுமார் 20,000 வெளி மாநில, வெளி நாட்டினர் வசிக்கின்றனர். யார் ஒரு வரும் அவ்வளவு சுலபமாக ஆரோவில்வாசியாகி விட முடியாது, அதற்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஆரோவில் அமைதியில் லாமல் இருக்கிறது, திட்டமிட்டு பழிவாங்கப்படு கிறார்கள், சர்வதேச நகரத்தை சர்வநாசமாக்கி வருகிறார்கள் என நம்மிடம் வேதனையை வெளிப் படுத்தினர் ஆரோவில்வாசிகள். என்ன பிரச்சனை என நாம் நேரடியாகச் சென்று விசாரித்தோம். 

2018-ஆம் ஆண்டு ஆரோவில் 50-வது ஆண்டு விழாவுக்கு பிரதமர் மோடி ஆரோவில் வந்தார். அதன்பின் அமித்ஷா வந்தார். பின்னர் அமித்ஷா மகன் வந்தார். 2021, ஜூலை மாதம் குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜெயந்தி ஆரோவில் பொறுப்புச் செயலாளராக நியமிக்கப் பட்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் கன்வீனர் கமிட்டியின் சேர்மனாக தமிழ்நாடு கவர்னர் நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் 5 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதற்கு முன்பு மாநில கவர்னர்களை சேர்மனாக நியமித்ததில்லை. 

இவர்கள் பொறுப்புக்கு வந்ததும் 2021 டிசம்பர் மாதம் முதலில் ஆரோவில்லின் இயற்கையை அழிக்கத் துவங்கினார்கள். 50 ஆண்டு களாக மரங்கள் நட்டு வனப்பகுதியாக்கப்பட்டது. இயற்கை விவசாயம், குப்பைகளைக் கொண்டு பொருட்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தது. இவர்கள் வந்ததும் எதுக்கு மண் ரோடாவே இருக்கு எனச்சொல்லி சிமெண்ட் சாலை அமைக்கப்போகிறோம் என மரங்களை வெட்டினார்கள். சாலை அமைக்கத் தடையாக இருக்கிறது என சில குளங்கள் மூடப் பட்டன. இதனை ஆரோவில்வாசிகள் எதிர்த்த போது, போலீஸைக் கொண்டுவந்து மிரட்டத் துவங்கினார்கள். சட்டவிதிப்படி ரெசிடென்ஸி கமிட்டி சொல்வதைத்தான் செய்யவேண்டும் என்கிற விதியை முற்றிலும் தகர்த்து கன்வீனிங் போர்டு விரும்பியதை செய்யத்துவங்கியது. இதுகுறித்து பசுமை தீர்ப்பாயத்தில் புகாரளித் தோம், அவர்கள் மரங்கள் வெட்ட தடை விதித்தார்கள். அந்த தடையை மீறி இப்போதும் மரங்கள் வெட்டப்பட்டே வருகின்றன. 

Advertisment

2022ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பவுண்டேஷன் நிர்வாகத்தை எதிர்த்து ஒரு வழக்கு போட்டது, ரெசிடென்ஸி கமிட்டிக்குதான் அனைத்து அதிகாரங்களும் என தீர்ப்பு வந்தது. அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் கள். ஆரோவில்வாசிகள் அமைதியை நாடி இங்கே வந்து தங்கியிருப்பவர்கள், அரச அதிகாரத்தை எதிர்த்து எங்களால் போராடமுடியவில்லை என்கிறார்கள். 

நம்மிடம் பேசிய ஆரோவில் ஒர்க்கிங் கமிட்டி செய்தித்தொடர்பாளராக இருந்த பாலமுருகன், "ஆரோவில்லைச் சுற்றி யுள்ள இரும்பை, பொம் மையார் பாளையம், திருச்சிற்றம்பலம், ராயப் புதுப்பாக்கம், மாத்தூர், பூந்துறை, கோட்டக்குப்பம் போன்ற கிராமங்களிலும், புதுவை- திண்டிவனம் சாலை, புதுவை -மயிலம் சாலைகளிலும் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆரோவில் நிர்வாகத் துக்குச் சொந்தமாக உள்ளன. இதில் 60% இடங்கள் ஆரோவில் பவுண்டேஷன் பெயருக்கு பலரும் தானமாக வழங்கிய இடங்கள். மீதி இடங்கள் பவுண்டேஷன் சொந்தமாக வாங்கியது. பவுண் டேஷன் பெயரிலுள்ள எந்த இடத்தையும் விற்க சட்ட விதியில் இடமில்லை. அதற்கு பதில் இடங் களை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளும் வகையில் விதி உள்ளது. அதாவது, ஆரோவில் பகுதிக்குள் தனியார் நிலங்கள் இருந்தால் அதை அவர்கள் விற்பதாக இருந்தால் முதலில் ஆரோவில் நிர்வாகத் தை அணுகுவார்கள். காரணம், மார்க்கெட் மதிப் பைவிட கூடுதல் தொகைதந்து அந்த இடத்தை நிர்வாகம் வாங்கிக்கொள்ளும். பணம் வேண்டாம் என்பவர்களுக்கு, ஆரோவில் எல்லையை கடந்து தூரமாக உள்ள இடத்தினை சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அவர்களுக்கு மாற்றித் தரப்படும். 

pondy2

ஆரோவில் இடத்தை வெளிநபருக்கு கைமாற்றித்தருவதாக இருந்தால் அந்த இடத்தின் மதிப்புக்கு ஈக்வலாக அதாவது நாங்கள் ஒரு ஏக்கர் தந்தால், அவர்கள் 5 ஏக்கர் தரவேண்டும், அப்படித்தான் இடத்தைத் தந்து இடத்தைப் பெற்றுவந்தது. 2021-க்கு பின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. 

தற்போது ஒரு ஏக்கர் இடத்தை வெளிநபர்கள் தந்தால் பதிலுக்கு இவர்கள் ஒரு ஏக்கரைத் தருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 18 இடங்கள் பரிமாற்றம் நடந்துள்ளது. சுமார் 42 ஏக்கர் நிலங்கள் தனியாரிடமிருந்து ஆரோவில் நிர்வாகம் வாங்கியுள்ளது. அவற்றில் 3 இடங்கள் மட்டுமே சந்தை மதிப்பில் கைமாறியுள்ளன. மீதியுள்ள 15 இடங்களை அரசு வழிகாட்டி மதிப் பில் தனது இடத்தினைத் தந்துவிட்டு மார்க்கெட் மதிப்பில் தனியார் இடத்தை வாங்கியுள்ளது. பவுண்டேஷன் தனியாருக்கு தந்த இடங்கள் எல்லாம் தேசிய, மாநில நெடுஞ்சாலை களின் ஓரமுள்ள நிலங்கள். அதற்குப் பதிலாக வாங்கிய நிலங்கள் கரடுமுரடான இடங்கள். சர்வே எண் 199/10, தனியாருக்குச் சொந்த மான 94 சென்ட் இடத்தை 2017-ல் 5.85 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்கள். அந்த இடத்துக்கு அருகிலுள்ள 199/11 என்கிற ஆரோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தை 2023-ல் ஒரு ஏக்கர் 5 லட்சத்துக்கு வித்திருக்காங்க. அதேபோல் 2017-ல் புதுவை -கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலையில் சாலையை விரிவாக்கம் செய்ய நிலங்களை அரசு கையகப்படுத்தியது, சுங்கச் சாவடி அருகே ஆரோவில்லுக்குச் சொந்தமான இடத்துக்கு ஒரு சதுரஅடிக்கு 125 ரூபாய் தந்தார் கள். மீதியுள்ள இடங்களை தற்போது கைமாற்று கிறது ஆரோவில் நிர்வாகம். ஒரு சதுர அடி தெற்குப் பகுதியில் 7 ரூபாய்க்கும், வடக்குப் பகுதி யில் உள்ளதை 16 ரூபாய் எனவும் கணக்கிட்டுத் தந்துவிட்டு, அதற்குப் பதிலாக மாற்று இடங்களை வாங்கியுள்ளது. இப்படித்தான் 18 இடங்களின் பரிமாற்றமும் நடந்துள்ளது. இதனால் ஆரோவில் பவுண்டேஷனுக்கு சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு நட்டம். இதன்மூலமாக பலர் கொல் லைப்புறமாக லாபமடைந்துள்ளதாக சந்தேகிக் கிறோம். இதுகுறித்து பிரதமர் முதல் மாவட்ட ஆட்சியர்வரை புகாரளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை''’என்றார் கொதிப்போடு. 

ஆரோவில்வாசிகளை ஆன்ட்டி இந்தியன் என முத்திரை குத்தி உ.பி. மாடலில் வீடுகளை இரவில் புல்டோசர் கொண்டு இடித்து, வெளி நாட்டினரை, உள்நாட்டினரை துரத்துகிறார்கள் என பகீர் கிளப்புகிறார்கள். ஏன் இப்படி?  

(அடுத்த இதழில் தொடரும்...)

-தமிழ்குரு