ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு, அந்நாட்டின் கல்வி வளமே அடிப்படை. இதை உணர்ந்த மத்திய அரசு 2009-ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின்படி நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இடங்களை இலவசமாக ஒதுக்கவேண்டியது கட்டாயம். தமிழகத்தில் மொத்தம் 20,000 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 3,500 பள்ளிகள் அங்கீகாரம் பெறாதவை, 10,000 பள்ளிகள் அங்கீகாரம் பெற்றவை. 6,500 பள்ளிகள் அங்கீகாரத்திற்காக காத்திருப்பு பட்டியலில் இருப்பவை. எனவே இவற்றில் 5000 பள்ளிகளில் மட்டுமே 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கத் தகுதியானவை என அரசு பரிந்துரைத்துள்ளது. அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5000 பள்ளிகளுக்கு ஏன் விதிவிலக்கென தெரியவில்லை?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/reservationinschools.jpg)
இதற்கான சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக வருமானச் சான்று, சாதிச் சான்று, பிறப்புச்சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் படிவங்களை தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் தேர்வுசெய்து அந்தந்த மாவட்ட சி.இ.ஓ.க்கு அனுப்பும். அவர் அனைத்துப் பள்ளிகளுக்கும் 25 சதவீத இடங்களுக்கான மாணவர்களைப் பிரித்துக் கொடுப்பார். அப்படி முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரை செய்த குழந்தைகளுக்கான கட்டணத்தை அரசு அந்த ஆண்டு இறுதியில் வழங்கும். இதற்காக இந்த 5 ஆயிரம் பள்ளிகள் 1,21,000 பேருக்கு இடம்தரவேண்டும். மொத்தம் 90,000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அப்படி தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான பட்டியலை அந்தந்த பள்ளியின் விளம்பரப்பலகையில் மாணவர்களின் பெயரோடு எழுதி ஒட்டவேண்டும் என்பது விதியாகும். ஆனால் பல பள்ளிகள் அதைச் செய்ய மறுக்கின்றன.
சென்னையில் தொடங்கி கன்னியாகுமரிவரை எந்த தனியார் பள்ளியும் கல்வி உரிமைச் சட்டத்தை சரியான முறையில் செயல்படுத்துவதில்லை. விதிமுறைப்படி அவரவர் கிராமங்களிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிற்குள் இருந்தால்தான் அந்த குழந்தைக்கு அந்த பள்ளியில் சீட் கொடுக்கப்படும். இதுபோன்ற பல காரணங்களைச் சொல்லி பல குழந்தைகளுக்கு இடம்தர மறுத்துவிடுகின்றனர். மாறாக, கட்டணம் தந்து படிக்கவரும்போது, அதைவிடவும் தொலைவிலிருந்து வரும் குழந்தைகளுக்கும் இடம்தருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/reservationinschools1.jpg)
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்களைச் சேர்ப்பதற்கே இத்தனை பிரச்சனைகள் என்றால், அப்படி பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்கள் போதிய அளவிற்கு தேர்ச்சி பெறமாட்டார்கள் என்று தெரிந்தால் அந்த மாணவர்களை தேர்வு எழுதவிடுவதில்லை. இதன் காரணமாக இந்தாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தவர்கள் 9,59,618. தேர்வு எழுதியவர்களோ 9,37,849 பேர்தான். மீதமுள்ள 21,769 பேர் எழுதவே வரவில்லை. இத்தனை ஆயிரக்கணக்கான நபர்களுக்கு தேர்வு நெருக்கத்தில் உடல்நலமில்லாமல் போய்விட்டதா… அல்லது தேர்வெழுதி என்ன ஆகப்போகிறது என விரக்தியாகிவிட்டதா?
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறனிடம் இதைப்பற்றி கேட்கும்போது, ""இலவசக் கல்வி பெறுபவர்களைத் தேர்வுசெய்வதே சரியாக நடக்கவில்லை. தமிழக அரசு ஆண்டுதோறும் சுமார் 1.25 லட்சம் மாணவர்களைத் தனியார் பள்ளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்து வருவதோடு ரூ. 100 கோடிக்கு மேல் பணமும் தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தொகையாக வழங்கப்பட்டுவருகிறது. ஆனால் 25% இடஒதுக்கீடு எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. பதிலாக அரசுப் பள்ளிகள் மூடும் அபாயம்தான் ஏற்பட்டுள்ளது. இந்த 25 சதவீத மாணவர்களை அரசுப் பள்ளிகளிலே சேர்த்து அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை சீர் செய்யவேண்டும்''’என்றார் ஆதங்கமாக.
தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி இயக்குநர் கண்ணப்பனோ, ""தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான பணியில் இருக்கிறேன். நீங்கள் கேட்பது தொடர்பாக துணைஆய்வாளரான பிரபாதான் பார்க்கிறார்''’என்று நழுவினார். பிரபாவிடம் கேட்டபோது “""குலுக்கல் 6-ஆம் தேதி வியாழனன்றே முடிந்துவிட்டது. 7-ஆம் தேதியே அனைத்து மாவட்ட சி.இ.ஓ.க்களும் அந்தந்த பள்ளிகளிடம் லிஸ்ட் கொடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் லிஸ்ட் ஒட்டியும்விட்டார்கள்''’என்றார். "கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் படிப்பதற்குத் தேர்வான மாணவர்களின் முழுமையான லிஸ்ட் கிடைக்குமா' என்றதற்கு ""கம்ப்யூட்டர் சிஸ்டம் சரியில்லை, எங்களால் இப்போது எடுக்க முடியாது'' என்று நழுவினார்.
என்னதான் நடக்கிறது கட்டாயக் கல்வி உரிமைக்கான இடஒதுக்கீட்டில்?… எல்லாம் மர்மமாகவே இருக்கிறது.
தற்போது கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தைப் பாதியாகக் குறைத்திருக்கிறது தமிழக அரசு. ஏற்கனவே வழங்கிய கட்டணத்துக்கே ஏழை மாணவர்களை பாராமுகமாக நடத்திய பள்ளிகள், இனி என்னவெல்லாம் செய்யுமோ?
-அ.அருண்பாண்டியன்
படம்: ஸ்டாலின்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-06-14/reservationinschools-t_0.jpg)