மோடி அரசுக்கு புதிய தொரு தலைவலி உருவாயிருக்கிறது. குஜராத்தை தலைமையாகக் கொண்ட ஏ.பி.ஜி. ஷிப்யார்டு நிறுவனம் பல்வேறு வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ.22,842 கோடி கடன்வாங்கி மோசடி செய் திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. நீரவ் மோடியின் 14,000 கோடி ரூபாய் கடனே இதற்குமுன் வங்கிகளில் கடன் வாங்கிச் செய்த பெரிய மோசடியாக இருந்தது. அதைப் பின்னுக்குத் தள்ளி ஏ.பி.ஜி. ஷிப்யார்டு மோசடி நம்பர் 1 இடத்துக்கு வந்திருக்கிறது.

ஏ.பி.ஜி. ஷிப்யார்டு நிறுவனம் ஒரு கப்பல் கட்டும், கப்பல் பழுது பார்க்கும் நிறுவனமாகும். 1985-ல் குஜராத்தின் அகமதாபாத்தில் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனம் ஆரம்பகட்டத்தில் கப்பல் கட்டுமானத்துக்கென அறியப்பட்ட பிரபலமான நிறுவனமாகவே திகழ்ந்துவந்துள்ளது. கிட்டத்தட்ட 165 கப்பல்களைக் கட்டியிருக்கும் நிறுவனம், அவற்றில் 45 கப்பல்களை ஏற்றுமதியும் செய்திருக்கிறது. சர்வதேச அளவில் கப்பல் கட்டும் தொழிலில் மரியாதை பெற்ற நிறுவனமாகத் திகழ்ந்த, இந்நிறுவனத்துக்கு 2008 பொருளாதார நெருக்கடியின்போது சிக்கல் எழுந்திருக்கிறது.

scam

Advertisment

2008 முதல் நெருக்கடியில் சிக்கிய இந்நிறுவனம், அதிலிருந்து மீண்டுவர வங்கிகளைத் தேடித் தேடி கடன்வாங்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் மீண்டுவர முடியாத நிலைக்குச் சென்ற நிறுவனம், ஒரு வங்கியில் வாங்கிய கடனை அடைக்க இன்னொரு வங்கியில் கடன் என திவால் நிலைக்குச் சென்று ஒருகட்டத்தில், பரிவர்த்தனை கணக்கு விவரங்களில் போலி வரவு-செலவுப் பதிவு, ஒரு தேவையைக் குறிப்பிட்டுக் கடன் வாங்கி, தனது இன்னொரு நிறுவனத்தின் சேவைகளுக்குப் பயன்படுத்துதல், பொருட்களை வாங்கப் பயன்படுத்துதல், சிங்கப்பூரிலுள்ள நிறுவனத்தின் பங்குகளை 43.5 மில்லியன் டாலரில் வாங்கியிருப்பது உள்ளிட்ட மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 5 ஆண்டுகளில் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் வைத்திருக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, எல்.ஐ.சி. என திக்கெட்டும் கைநீட்டியிருக்கிறது இந்நிறுவனம்.

விவகாரம் வெடித்ததும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்தக் கடன்கள் அனைத்துமே காங்கிரஸ் காலகட்டத்தில் வாங்கப்பட்டவை'' என அவசரமாகவும் பதட்டமாகவும் பதிலளித்துள்ளார். ஆனால் மோடி ஆட்சிக்காலம் தொடங்கி ஏழாண்டுகள் கடந்துவிட்டது. 2019 ஜனவரியில்தான் எஸ்.பி.ஐ. வங்கி இந்த மோசடியைக் கண்டறிந்திருக்கிறது. புகார் கொடுத்தது டிசம்பரில்தான். இடையில் இத்தனை மாத தாமதங்கள் ஏன்?…எஸ்.பி.ஐ. வங்கியைத் தொடர்ந்து வரிசையாக மற்ற வங்கிகளும் புகார் கொடுக்க ஆரம்பித்தன. அதை சி.பி.ஐ. கையிலெடுத்து வழக்குப் பதிந்தது 2020 டிசம்பரில்தான். மோசடியை அடையாளம் காண ஏன் இத்தனை தாமதமென எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்புகின்றன.

cc

Advertisment

2012-ல் ஏ.பி.ஜி. ஷிப்யார்டின் கணக்குகளைத் தணிக்கை செய்த எர்னஸ்ட் & யங் கம்பெனிதான், கடன் கொடுத்த காரணத்துக்காகச் செலவழிக்காமல் கடனை வேறுவழிகளில் செலவழித்தல், நிதியை தவறாகப் பயன்படுத்தல், குற்றம்சாட்டும்படியான நம்பிக்கை மீறல் போன்ற செயல்களில் இந்நிறுவனம் ஈடுபட்டிருப்பதை அடையாளம்கண்டு சொல்லியது. தவிரவும், இந்நிறுவனம் வங்கிகளில் கடன் வாங்கிய பணத்தை 60 இந்திய நிறுவனங்கள் மற்றும் 38 வெளிநாட்டு நிறுவனங்களின் வழியாக மடைமாற்றியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வழக்குப் பதிந்த கையோடு, சி.பி.ஐ. சூரத், மும்பை, புனே உள்ளிட்ட இந்நிறுவனத்தின் 13 அலுவலகங்களில் சோதனையிட்டு பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது. நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ரிஷி கமலேஷ் அகர்வால், முன்னாள் செயல் இயக்குநர் சந்தானம் முத்துசுவாமி, இயக்குநர்கள் அஸ்வினி குமார், சுஷில் குமார், ரவி விமல் நெவாட்டியா ஆகியோரின் பெயரையும் இந்த மோசடி விவகாரத்தில் இணைத்ததுடன் தேடப்படும் நபர்களாகவும் அறிவித்திருக்கிறது.

கிட்டத்தட்ட எட்டாண்டுக் காலம் இந்த மோசடி கண்டுபிடிக்காமல் போனது எப்படி? இந்திய வங்கிகளின் பணம் மோசடியாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது எப்படி? திடீரென இந்த மோசடி வெளிச்சத்துக்கு வர என்ன காரணம்? 2019-லேயே எஸ்.பி.ஐ. வங்கி புகார் செய்திருந்தும் 2022, பிப்ரவரி 7-ஆம் தேதி வரை முதல் தகவலறிக்கை பதியத் தாமதமானது ஏன்? இந்த மோசடியிலாவது சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடு தப்பும்முன் கைதுசெய்யப்படுவார் களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஏற்கெனவே விஜய் மல்லையா, மெகுல் சோக்ஸி, நீரவ் மோடி போன்றோர் பெருந்தொகையை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியிருக்கின்றனர். அப்படியிருக்க முன் அனு பவங்களின் அடிப்படையிலா வது, தனது அரசின் நற்பெயரைக் காப்பாற்ற அதுபோல் இன்னொரு மோசடிக்கு இடம்தராமல் விழிப்புடனிருக்காமல் ஏமாந்துவிட்டு, நிதியமைச்சரோ, எட்டாண்டுகளுக்கு முன்னிருந்த அர சின்மேல் மொத்தப் பழியையும் நகர்த்துகிறார்.

இன்றைய இந்தியாவின் பிரச்சினைகளுக்கு நேற்றைய நேருவின் கோட்டில் இப்போதும் சேறு பூசிக்கொண்டிருக்கும் ஒரு அரசின் நிதியமைச்சர், வேறு எந்த மாதிரியான பதில்களைக் கூறிவிடப் போகிறார்!