எல்லோரையும் கட்சியில் இணைக்கவேண்டும் என்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கையை நிராகரித்ததோடு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் எல்லோரையுமே கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. செங்கோட்டையன் வகித்த புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் இந்த பொறுப்புகளிலிருந்தும் நீக்கியிருக்கிறார்.
பதிலுக்கு "எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப் பட்ட கால அவகாசம் பத்து நாள் முடியட்டும். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள்' என செங்கோட்டையன் தரப்பி லிருந்து "சஸ்பென்ஸ்' வைக்கப்பட்டி ருக்கிறது.
தொடர்ந்து செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 2000-க்கும் மேற்பட்டோர் "எங்களையும் கட்சியிலிருந்து விலக்குங்கள்' என ராஜினாமா கடிதங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வருகிறார்கள்.
10 மாதங்களுக்கு முன்பே செங் கோட்டையன் தலைமையில் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழகன் ஆறு பேரும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய அனைவரையும் கட்சியில் இணைக்கவேண்டும் என பேசினார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி எந்த பதிலையும் கூறாதது பற்றியும் வெளிப்படையாகக் கூறினார் செங்கோட்டையன்.
இவர்கள் ஆறு பேரிடமும், "உங்களுக்கு அவர்கள் மீது "பிரியம்' இருந்தால் நீங்கள் தாராளமாக ஓ.பி.எஸ்.' அணிக்குச் சென்றுவிடுங்கள். எனக்கு அவர்களை கட்சியில் சேர்க்க விருப்பமில்லை' என அப்போதே கூறியிருக்கிறார் எடப்பாடி. அதற்கு செங் கோட்டையன், "நமது கட்சிக்கு கொங்கு மண்டலத் தில் உள்ள பலம், டெல்டா, தென்மாவட்டங்களில் இல்லை. 30 முதல் 32 சதவீத வாக்குகள் நிலையாக வைத்திருந்தோம். ஆனால் இப்போது வெறும் 20 முதல் 22 சதவீத வாக்குகளுக்குள் சுருங்கிவிட்டோம். தென்மாவட்டங்களில் 10 முதல் 12 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. யோசித்து முடிவெடுங்கள்''’என அப்போதைக்கு கூறிவிட்டு வந்துள்ளனர்.
இந்த முன்னெடுப்புக்கு தலைமை தாங்குகிற செங்கோட்டையனின் பவரை பறித்தால் வேறு யாரும் இதுபற்றி யோசிக்கமாட்டார்கள் எனத் திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டை யனுக்கு எதிராக உள்ளூர் அணியை கோபி, அந்தியூர் பகுதியிலேயே உருவாக்கினார். செங்கோட்டையனுக்கு குடைச்சல் தரும் பல சம்பவங்கள் நடைபெற்றன. வருகிற சட்டமன்றத் தேர்தலில் கோபி தொகுதியில் செங்கோட்டையனுக்கு சீட் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருப் பது வெளிப்படையாகவே தெரியவந்தது.
இவை ஒருபுறமிருக்க, அ.தி.மு.க. வாக்கு வங்கியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாகவுள்ள பா.ஜ.க. டெல்லி தலைமை, எல்லோரையும் கட்சியில் இணைத் தால்தான் மொத்த வாக்குகளும் நமது அணிக்கு கிடைக்கும் என செங் கோட்டையனை களத்தில் இறக்கி விட்டுள்ளது.
இந்த கோரிக்கைக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவராவிட்டால் அ.தி.மு.க. செங்கோட்டையனின் தலைமையில் இருக்கவேண்டும் என்பது பா.ஜ.க.வின் திட்டம். செங்கோட்டையனின் பின்னணியில் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மூவரும் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட ஒருசிலரே எடப்பாடியின் விசுவாசிகளாக உள்ளனர். வருகிற 17-ஆம் தேதி தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் திட்டமிடப் பட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்திருக்கிறார். ஆனால் "செங்கோட்டையனின் கருத்துக்களை பரிசீலிக்கலாம்' என்ற அளவிலாவது எடப் பாடி பழனிச்சாமியிடமிருந்து பதில் வந்தால்தான் இந்த சுற்றுப்பயணம் நடைபெறும். இல்லையேல் அதற்கான வாய்ப்பில்லை என்று தங்கமணி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி ஏன் தன் நிலையிலிருந்து இறங்கிவராமல் இப்படி பிடிவாதம் பிடிக்கிறார் என அ.தி.மு.க. சீனியர்கள் சிலரிடம் கேட்டபோது... "நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தபோது அப்போது அமைச்சர்களாக இருந்த எல்லோரும் அவரவர் சம்பாதித்ததை அவர்களே வைத்துக்கொண்டார்கள். அந்த சுதந்திரத்தை நான் கொடுத் தேன். ஆனால் கட்சியை வழிநடத்த இதுவரை 2000 கோடி ரூபாய் செலவழித் துள்ளேன். இப்படி 2000 கோடி ரூபாய் செலவழித்து கட்சியை என் கையில் வைத் திருக்கிறேன். வேண்டுமென் றால் எல்லோரையும் கட்சியில் இணைக்கிறேன். 2000 கோடி ரூபாயை கொடுத்துவிடுங்கள்'' எனக் கூறுகிறார் எடப்பாடி.
இந்த 'டீல்' பா.ஜ.க. தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி கட்சிக் காக செலவழித்த தொகை அவருக்கு செட்டிலானால்... சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. இணைக்கப்படுவார்கள் என்கிறார்கள்.
இந்நிலையில் அபா.ஜ.க. முக்கிய தலைவர்களை ரகசிய மாக சந்திப்பதற்காக, ஹரித் துவார் அயோத்தி ராமர் கோயில் செல்வதாகக் கூறி 8-ஆம் தேதி திங்கட்கிழமை காலை விமானம்மூலம் டெல்லி சென்றார் செங்கோட் டையன். திங்கள் மாலையி லிருந்து செவ்வாய் காலை வரை பலரையும் சந்திக்கும் செங் கோட்டையன், செவ்வாய் பிற்பகல் மீண்டும் கோபி திரும்புகிறார்.
செங்கோட்டையன் கெடு வருகிற 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பத்தாம் தேதியிலிருந்து ஓரிரு நாட்களுக்குள் எடப்பாடி பழனிச்சாமியுடன் நெருக்கமாக உள்ள வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் இவர்களிட மிருந்து எடப்பாடிக்கு எதி ரான மாறுபட்ட குரல் வெளி வரத் தொடங்கும் என்கிறார் கள் செங்கோட்டையன் தரப்பினர். அதேபோல் அ.தி. மு.க. சீனியர்களான தம்பி துரை, கே.பி.முனுசாமி ஆகி யோரும் எல்லோரையும் கட்சியில் இணைக்கவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்த உள்ளார்களாம்.
எடப்பாடி- செங்கோட் டையன் இருவரில் யார் தரப்பின் கை ஓங்கப்போகிறது எனப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
__________
மீண்டும் மன்னார்குடி தரப்பு கோலோச்ச வேண்டாம்!
சசிகலா வகையறாக்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கவேண்டுமென சொன்ன செங்கோட்டையனை அதிரடியாக நீக்கி அறிக்கை வெளியிட்டார் எடப்பாடி. இந்த நிலையில் எடப்பாடிக்கு நெருக்கமாக உள்ள அந்த டெல்டா அ.தி.மு.க நிர்வாகி நம்மிடம், "ஜெ. மறைவுக்கு முன்புவரை அ.தி.மு.க.வின் அதிகார மையமாகச் செயல்பட்டது மன்னார்குடி. ஜெ அதிகாரமிக்கவராக வெளியேதெரிந்தாலும் உண்மையில் மொத்த அதிகாரமும் மன்னார்குடி வகையறாக்களிடமே இருந் தது. ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியதை சாதகமாக்கிக்கொண்டு படிப்படியாக மன்னார்குடி வகையறாக்களை வெளியேற்றிய எடப்பாடி, அ.தி.மு.க.வில் அவர்களது செல்வாக்கு இல்லாமல் மாற்றினார். இதனால் கொதிபபடைந்த மன்னார்குடி வகையறா, எடப்பாடி முக்குலத்தோரை ஒதுக்கிவிட்டதாக ஒரு புரளியை கிளப்பிப் பார்த்தது. பலனில்லை. அதனால் மீண்டும் அ.தி.மு.க.விற்குள் நுழைய வழி தேடித்தான் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணியை ஏவினர்.
மன்னார்குடி வகையறாக்களை சேர்த்தால் மன்னார்குடி மீண்டும் அ.தி.மு.க. அதிகார மையமாக மாறும். மறுபடியும் அவர்கள் காலில் விழவேண்டிய நிலைதான் வரும். அதனால் அவர்களை சேர்க்கமுடியாது என்ற மனநிலையில் உள்ள எடப்பாடி, மன்னார்குடிக்காக பேசிய செங்கோட்டையனைத் தூக்கியடித்திருக்கிறார்.
-இரா.பகத்சிங்
_______________
பழனிச்சாமியை அப்செட்டாக்கிய எது....?
"கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கவேண்டும். 10 நாள் கெடு' என எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த அடுத்த நாளே கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் செங்கோட்டையன். எடப்பாடியை அப்செட்டாக்கி உடனே முடிவெடுக்க தூண்டியது எது.?
செங்கோட்டையன் கெடுகுறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எடப்பாடி பழனிச்சாமி. அதைப் பற்றி கண்டும்காணாமல் இருந்துவிட்டார். ஆனால், தேனியில் சுற்றுப்பயணத்தில் நடந்த விஷயங்கள்தான் அவரை பிரஷர் ஏற்றி நீக்கம்வரை கொண்டுசென்றது.
"தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக தேனி, திண்டுக்கல்லில் பயணம் செய்து வந்தார்.
5-ஆம் தேதியன்று செங்கோட்டையன் கெடுவிற்கு பிறகு, நடந்த தேனி சுற்றுப் பயணத்தின்போது கம்பம் பிரச்சாரத்திற்கு சென்ற நிலையில் அனுமந்தம்பட்டியிலும், போடிக்குச் சென்றபோது சங்காரபுரம் மற்றும் பொறியியற்கல்லூரி அருகிலும் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு நெருக்கடி கொடுக்கும்விதமாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், கருப்புக்கொடிகளுடன் கத்தி கோஷம்போட்டனர். இது எடப்பாடிக்குப் பிடிக்கவில்லை. அதனையும் தாண்டி திண்டுக் கல்லுக்குச் சென்ற நிலையில் பிரச்சார வாகனத்தின் விளக்கை அணைத்துவிட்டு செல்லும் நிலை எடப்பாடி பழனிச்சாமிக்கு. இதனால் கடுப்பானவர் முனுசாமியை திண்டுக்கல்லுக்கு அவசர அவசரமாக வரவழைத்தார்.
முந்தின நாளே விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் திண்டுக்கல் தனியார் ஹோட்டலுக்கு வந்திருந்த நிலையில், சனிக்கிழமை காலையில் வந்துசேர்ந்தனர் வேலுமணி, ஓ.எஸ்.மணியன், முனுசாமி உள்ளிட்டோர். இவர்களுடன் உள்ளூரிலிருந்த நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் சேர்ந்துகொள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ரகசியக் கூட்டம் துவங்கியது. "அவர் கட்சியின் சீனியர். இப்பொழுது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினால் அனு தாபம்தேட வாய்ப்புண்டு. பதவியி லிருந்து மட்டும் நீக்கிவிடுங்கள். அவராக கட்சியை விட்டுப் போகட் டும். தலைமையை எதிர்த்து பேசி வருகிறவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தது போல் இருக்கும்' என்றிருக்கின்றார் கே.பி.முனுசாமி. அதன்படியே கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டது" என்றார் நிர்வாகி ஒருவர்.
விஷயம் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காக சேலத்திலிருந்து உமாபதி எனும் டைப்பிஸ்ட்டை வரவழைத்து அறிக்கையை தயார்செய்து வெளி யிட்டது எடப்பாடி தரப்பு.
-நாகேந்திரன்